அடையாள அட்டை சர்ச்சைக்கு அப்பால் :
APAAR-இன் உண்மை முகம்

கடந்த வாரம், தமிழ்நாட்டின் வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், பள்ளி மாணவர்களுக்குப் புதிய அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று அறிவித்தார். மாணவர்களின் சாதி குறித்த தகவல்களும் அந்த அட்டையில் இடம்பெறும் என்று அவர் கூறியது, பல்வேறு தரப்பினரிடமிருந்தும் மிகப்பெரிய எதிர்ப்பைச் சந்தித்தது.   பள்ளி மாணவர்களின் சாதி அடையாளத்தை அடையாள அட்டையில் சேர்ப்பது பரவலாகக் கண்டிக்கப்பட்டது. இது குறித்த சர்ச்சைகள் பெரிய அளவில் வெடித்த பிறகு, அந்தத் தகவல்கள் கியூஆர் குறியீடுகளாக மட்டுமே அட்டையில் இடம்பெறும் என்றும், […]

கடந்த வாரம், தமிழ்நாட்டின் வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், பள்ளி மாணவர்களுக்குப் புதிய அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று அறிவித்தார். மாணவர்களின் சாதி குறித்த தகவல்களும் அந்த அட்டையில் இடம்பெறும் என்று அவர் கூறியது, பல்வேறு தரப்பினரிடமிருந்தும் மிகப்பெரிய எதிர்ப்பைச் சந்தித்தது.  

பள்ளி மாணவர்களின் சாதி அடையாளத்தை அடையாள அட்டையில் சேர்ப்பது பரவலாகக் கண்டிக்கப்பட்டது. இது குறித்த சர்ச்சைகள் பெரிய அளவில் வெடித்த பிறகு, அந்தத் தகவல்கள் கியூஆர் குறியீடுகளாக மட்டுமே அட்டையில் இடம்பெறும் என்றும், மாணவர்களின் சாதி நேரடியாக அட்டையில் எழுதப்படாது என்றும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும், எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் இந்தப் பிரச்சினையை அடையாள அட்டையில் சாதியைக் குறிப்பிடுவது என்பதாக மட்டுமே சுருக்கிவிட்டன.

இந்த அடையாள அட்டை கொண்டுவருவதற்கான உண்மையான நோக்கத்தை அமைச்சர் வெளியிட்ட செய்திகள் தெளிவாக விளக்குகின்றன. தமிழ்நாட்டில் படிக்கும் மாணவர்களின் அனைத்துத் தகவல்களையும் ஒருங்கிணைத்து ஒரு தரவுத்தளத்தை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதில் மாணவர்களின் கல்விச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவை ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும். மாணவர்களுக்கு ஒரு கியூஆர் குறியீடு வழங்கப்படும்; இதன் மூலம் இந்தத் தரவுகளை அணுக முடியும்.

இந்தத் திட்டம், ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையின் (NEP) கீழ் கொண்டுவரப்பட்ட ‘ஆப்பார்’ (APAAR – Automated Permanent Academic Account Registry) திட்டத்தின் மறுவடிவமாகும். ‘ஒரு மாணவன், ஒரு அடையாள அட்டை’ என்ற இந்தத் திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் தகவல்களை ஒன்றிணைத்து எளிதாக அணுகும் வகையில் தொகுத்து வைப்பதே இதன் நோக்கம்.

பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என்று கூறிய திமுக அரசுதான் இந்த ஆப்பார் திட்டத்தை வேறு வடிவில்  – ஒருங்கிணைந்த அடையாள அட்டை என்ற பெயரில் கொண்டுவருவதற்கான வேலைகளை முதலில் முன்னெடுத்தது. தற்போது தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் தவெக அரசு  அதனைத் தொடர்ந்து அமல்படுத்த போகிறது.

மாணவர்களின் தரவுகளையும் சான்றிதழ்களையும் ஒரே இடத்தில் சேமித்து வைப்பது, அரசு கூறுவது போல, மாணவர்களின் வீணான அலைச்சலைக் குறைத்து எளிமையாக்குவதற்குத்தானே இதில் என்ன தவறு இருக்கிறது என்று நாம் நினைக்கலாம்.

ஆனால், புதிய கல்விக் கொள்கையின் கீழ் கொண்டுவரப்பட்ட இந்த ஆப்பார் திட்டத்தின் முதன்மை நோக்கமே கல்வியைத் தனியார்மயமாக்குவதுதான். தற்போது, மாணவர்களின் மதிப்பெண்கள், அவர்களின் குடும்ப வருமானம், சாதிப் பின்புலம் போன்றவை தனியார் கல்வி நிறுவனங்களுக்குத் தெரியாது. இந்தத் தரவுத்தளத்தை உருவாக்குவதன் மூலம், மாணவர்களின் பொருளாதார நிலை, கல்வித் திறன், மதிப்பெண் விவரங்கள், அவர்கள் தேர்ந்தெடுக்கும் படிப்புகள் ஆகிய அனைத்தையும் ஒரு தனியார் நிறுவனம் எளிதாக அறிந்துகொள்ள முடியும். இதன் மூலம், அவர்கள் பள்ளியில் பயிலும்போதே அந்த மாணவர்களை அணுகி, தங்கள் பக்கம் ஈர்த்துக்கொள்ள முடியும். இது தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இது மட்டுமே இதன் நோக்கம் அல்ல. மாணவர்களின் ஒவ்வொரு செயல்பாட்டையும் – அவர்களின் ஆரம்பக் கல்வி முதல் உயர்நிலைப் பள்ளி, பின்னர் உயர்கல்வி வரையிலான பயணத்தில் அவர்களின் திறமை, பள்ளி வருகை, பெற்ற மதிப்பெண்கள், மேலும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கூட – இந்த அமைப்பில் பதிவு செய்ய முடியும். சுருக்கமாகச் சொன்னால், மாணவர்களை அரசின் கண்காணிப்பின் கீழ் வைப்பதற்கு இந்த ஆப்பார் மிகவும் உதவியாக இருக்கும்.

கல்வித் தனியார்மயம் தீவிரமடைந்துவரும் இந்தச் சூழலில், மாணவர்கள் மிகப்பெரிய அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். சமீபத்தில் நடந்த நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி குளறுபடி போன்ற சம்பவங்களுக்குப் பிறகு, மாணவர்கள் தங்களின் ஜனநாயக உரிமைகளுக்காக வெளியில் வந்து போராடத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, சிபிஎஸ்சி ஊழலை அம்பலப்படுத்தியது வெறும் 17 வயதான 12-ஆம் வகுப்பு மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் இத்தகைய ஜனநாயக முயற்சிகளையும் போராட்டங்களையும் முளையிலேயே நசுக்குவதற்கு இந்த ஆப்பார் உதவும்.

நீங்கள் இந்த அரசுக்கு எதிராகப் பேசினாலோ, போராடினாலோ, எழுதினாலோ, மாணவர்கள் குற்றவாளிகளாகச் சித்தரிக்கப்படுவார்கள். இந்த ஆப்பார் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டுமல்ல; மாணவர்கள் தங்கள் கல்விக்குப் பிறகு வேலைக்குச் செல்லும்போதும் இந்த விவரங்கள் தேவைப்படும். அந்த வகையில், ஒரு சிறு தவறு செய்தாலும் அது பதிவாகி, உங்கள் வாழ்க்கையையே கேள்விக் குறியாக்கிவிடும் என்ற அச்சம் மாணவர்களிடையே விதைக்கப்படும். இதனால் மாணவர் செயல்பாடுகளும் ஜனநாயக முயற்சிகளும் முடக்கப்படும் – அதற்குத்தான் இந்த ஆப்பார் பயன்படும்.

“மாணவர்கள் பற்றிய தகவல்கள் தனியாருக்கு வழங்கப்படாது, ஆப்பாரைப் பயன்படுத்தி மாணவர்களைக் கண்காணிக்க மாட்டோம்” என்று அரசு ஆதரவாளர்கள் உறுதியாகக் கூறுகிறார்கள். ஆனால், இவற்றை நம்ப முடியாது. ஏனெனில், நம் கண்முன்னே இதற்கு ஆதாரமாக ஆதார் இருக்கிறது.

ஆதார் அடையாள அட்டை கொண்டுவரப்பட்டபோது, “இது ஒரு இந்தியனின் அடையாளத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படும், தனியாருக்கு வழங்கப்படாது” என்று உறுதியளித்தார்கள். உச்ச நீதிமன்றத்திலேயே பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்தார்கள். ஆனால், நடந்தது என்ன? குழந்தை பிறப்பு முதல் இறந்தவர்களை இடுகாட்டில் அடக்கம் செய்வது வரை அனைத்திற்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுவிட்டது. வங்கிக் கணக்குகள், வருமான வரி விவரங்கள், பள்ளியில் சேர்வது, வேலைக்குச் சேர்வது என ஒரு மனிதனின் அனைத்து நடவடிக்கைகளும் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த ஆதாரில் சேமிக்கப்பட்டுள்ள விவரங்களை அரசு தனியார் நிறுவனங்களுக்குத் தடையின்றி வழங்கி வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டு, ஜியோ சிம் கார்டு வாங்கச் சென்றால், உங்கள் கைரேகை பதிவு செய்யப்பட்டு, உங்களின் முழு விவரங்களையும் ஜியோ நிறுவனம் எடுத்துக்கொள்ள முடிகிறது.

இன்றைய டிஜிட்டல் பொருளாதாரத்தில், தரவு (Data) என்பது வெறும் தகவல் அல்ல; அது புதிய மூலதனமாக (New Capital) மாறியுள்ளது. உலகின் மிகப்பெரிய நிறுவனங்களான கூகுள், அமேசான், மெட்டா போன்றவை பொருட்களை உற்பத்தி செய்வதைவிட, மக்களைப் பற்றிய தரவுகளைச் சேகரித்து, பகுப்பாய்வு செய்து, அதன்மூலம் இலாபம் ஈட்டுகின்றன. யார் என்ன படிக்கிறார்கள், என்ன வாங்குகிறார்கள், எதை விரும்புகிறார்கள், எவ்வளவு செலவு செய்ய முடியும் போன்ற தகவல்களே இன்றைய டிஜிட்டல் சந்தையின் அடிப்படை வளமாக உள்ளன.

அதேபோல், மாணவர்களின் கல்வி, சமூக, பொருளாதார விவரங்கள் அனைத்தும் ஒரே மையத் தரவுத்தளத்தில் சேமிக்கப்படும்போது, அது வெறும் நிர்வாக வசதிக்கான கருவியாக மட்டும் இருக்காது. எந்தப் பகுதிகளில் எந்த வகையான மாணவர்கள் அதிகம் உள்ளனர், யாருக்கு எந்தப் பாடங்களில் திறமை உள்ளது, யார் எந்தப் படிப்பைத் தேர்வு செய்கிறார்கள், எந்தச் சமூகப் பின்னணியைச் சேர்ந்தவர்கள் எந்தத் துறைகளில் செல்கின்றனர் போன்ற தகவல்கள், கல்விச் சந்தையை விரிவுபடுத்த விரும்பும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும், திறன் மேம்பாட்டு நிறுவனங்களுக்கும், எடுடெக் (EdTech) நிறுவனங்களுக்கும் மதிப்புமிக்க வணிகத் தரவாக மாறும் அபாயம் உள்ளது. அதனால்தான், புதிய கல்விக் கொள்கையின் கீழ் தரவுகளை மையப்படுத்தும் முயற்சிகள், கல்வியைச் சந்தைமயமாக்கும் கொள்கைகளுடன் இணைந்து நகர்கின்றன.

புதிய கல்விக் கொள்கை, அரசின் நேரடி கல்விப் பொறுப்பைக் குறைத்து, தனியார் முதலீட்டிற்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் அதிக வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்தோடு முன்னெடுக்கப்படுகிறது. இத்தகைய சூழலில், மாணவர்களின் ஒருங்கிணைந்த தரவுத்தளம் என்பது வெறும் நிர்வாகச் சீர்திருத்தம் அல்ல; தனியார்மயக் கல்விச் சந்தை இயங்குவதற்குத் தேவையான தகவல் உள்கட்டமைப்பாக மாறுகிறது. சந்தையில் பொருட்களை விற்க வாடிக்கையாளர்களின் தரவுகள் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் கல்வியை வணிகமாக்கும் நிறுவனங்களுக்கு மாணவர்களின் தரவுகளும் முக்கியமான வளமாகின்றன. எனவே, APAAR போன்ற திட்டங்களை, புதிய கல்விக் கொள்கையின் சந்தைமய நோக்கங்களிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது.

எனவே, இந்தப் பிரச்சினையை வெறும் “அடையாள அட்டையில் சாதி இடம்பெறுகிறதா, இல்லையா?” என்ற அளவுக்குச் சுருக்கிப் பார்க்க முடியாது. இங்கே நாம் எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வி, மாணவர்களின் வாழ்நாள் முழுவதுமான கல்வி மற்றும் சமூகத் தகவல்களை யார் சேகரிக்கிறார்கள், யார் கட்டுப்படுத்துகிறார்கள், அவை எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதே. கல்வியை ஒரு அடிப்படை உரிமையாக அல்லாமல், சந்தைப் பொருளாக மாற்றும் புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாகவே APAAR போன்ற திட்டங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். மாணவர்களின் தரவுகள் மீது அரசும் கார்ப்பரேட் நிறுவனங்களும் கட்டுப்பாட்டைப் பெறும் ஒவ்வொரு நடவடிக்கையும், கல்வித் தனியார்மயத்தையும் அரசின் கண்காணிப்பையும் வலுப்படுத்தும் திசையிலேயே நகர்கிறது. ஆகவே, மாணவர்களின் தனியுரிமையையும், ஜனநாயக உரிமைகளையும், பொதுக் கல்வியையும் பாதுகாக்க விரும்பும் அனைவரும் இந்தத் திட்டங்களை எதிர்த்து நிற்பது அவசியமாகிறது.

  • சந்திரன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன