தங்க மோதிரம் எதற்கு? தனியார்மயத்தை நிறுத்து!

அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்புச் சிக்கல்களைத் தீர்க்காமல், ஒரு கிராம் தங்க மோதிரம் கொடுத்து மக்களின் நம்பிக்கையை வாங்க முடியுமா?

தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி அன்று தவெக தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை அறிவித்திருக்கிறது. “தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்” என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் எனவும், தவெகவின் வழிகாட்டிகளில் ஒருவரான அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15, 2026 அன்று முதலமைச்சரால் இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.  

இந்த அறிவிப்பு வெளியான உடனேயே, “தமிழர் பண்பாட்டை உயர்த்திப் பிடிக்கிறது”, “தாய் மாமன் சீர் கொடுத்து குழந்தைகளை வரவேற்கும் அரசு” எனக் கூறி ஊடகங்கள் அனைத்தும் இதனை வரவேற்று எழுதின. அதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் தமிழ்நாடே கடனில் தத்தளிக்கிறது, என வெள்ளை அறிக்கை வெளியிட்டு விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய முடியாது என தவெக அரசு கூறியிருந்தது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு மட்டும் நிதி எங்கிருந்து வந்தது, என யாரும் கேள்வியெழுப்பவில்லை.

தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழ்நாட்டில் பிறக்கும் எல்லாக் குழந்தைக்கும் தங்கமோதிரம் தருவதாகக் கூறியவர்கள், தற்போது அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைக்கு மட்டும் என இந்தத் திட்டத்தைச் சுருக்கிவிட்டனர். ஏன் என்று கேட்டால், இதன் மூலம் அரசு மருத்துவமனைகளை நோக்கி மக்களை ஈர்ப்பதற்காக இவ்வாறு செய்வதாக அரசு விளக்கம் அளிக்கிறது.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 7.8 இலட்சம் பிரசவங்கள் நடக்கின்றன. அவற்றில், மாநில அரசின் கீழ் செயல்படும் அனைத்து அரசு சுகாதார கட்டமைப்புகளிலும் சேர்த்து ஆண்டுக்கு 4.2 இலட்சம் பிரசவங்கள் நடக்கின்றன. மீதமுள்ள 3.6 இலட்சம் பிரசவங்கள் தனியார் மருத்துவமனைகளில்தான் நடக்கின்றன. அரசு மருத்துவமனைகளில் இலவச மருத்துவத்தை தவிர்த்துவிட்டு இலட்சக் கணக்கில் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளை மக்கள் நாடுகின்றனர்.

தனியார் மருத்துவமனைக்கு பணம் கொடுத்து பிரசவம் பார்க்க வசதியில்லாதவர்கள்தான் வேறுவழியின்றி அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். போதுமான மருத்துவர்கள் இல்லாமல் இயங்கும் அரசு மருத்துவமனைகளில், ஒவ்வொரு முறை சிகிச்சைக்குச் செல்லும் போதும், பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருப்பது, மருத்துவமனையில் போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருப்பது, சுத்தமாகவும் சுகாதாரமாகவும் மருத்துவமனைகள் பேணப்படாமல் இருப்பது, அவசர வசதிகள் இல்லாமல் பிரசவத்தின் போது சிக்கல் ஏற்பட்டால், ஆபத்துக் காலங்களில் அலைக்கழிக்கப்படுவது போன்ற குறைபாடுகளின் காரணமாக அரசு மருத்துவமனைகளை மக்கள் புறக்கணிக்கிறார்கள்.

ஆனால் மக்கள் ஏன் புறக்கணிக்கிறார்கள் என்ற காரணத்தை விட்டுவிட்டு தங்க மோதிரம் கொடுத்து அவர்களை அரசு மருத்துவமனைக்கு வரும்படிச் செய்யப்போவதாகக் கதையளக்கின்றனர்.

இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவக் கல்லூரிகளும் சிறப்பான சுகாதாரக் கட்டமைப்பும் தமிழகத்தில் தான் உள்ளதாகப் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். ஆனால், சமீபத்திய Sample Registration System (SRS), National Family Health Survey (NFHS-5) மற்றும் மாநில அரசுகளின் தரவுகளைப் பார்க்கும்போது, மகப்பேறு மருத்துவத்தில் அண்டை மாநிலமான கேரளாவோடு ஒப்பிடும்போது தமிழ்நாடு பின்தங்கியுள்ளது.

கேரளாவில் குழந்தை இறப்பு விகிதம் (Infant Mortality Rate – IMR) 1000 உயிர்களுக்கு 8 உயிர்களாகவும், அதுவே தமிழ்நாட்டில் 1000 உயிர்களுக்கு 11 உயிர்களாகவும் உள்ளது. அதாவது, ஒரு வயதிற்குள் குழந்தை இறப்புகள் விகிதம் கேரளாவில் குறைவாக உள்ளது.

கேரளாவில் சராசரி ஆயுட்காலம் (Life Expectancy) 75.1 ஆண்டுகளாகவும், அதுவே தமிழ்நாட்டில் 73.4 ஆண்டுகளாகவும் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ளவர்களை விட சுமார் 1.5 முதல் 2 ஆண்டுகள் வரை கேரள மக்கள் அதிக நாட்கள் உயிர்வாழ்கிறார்கள்.

கேரளாவில் தாய் இறப்பு விகிதம் (Maternal Mortality Ratio – MMR) ஒரு இலட்சம் பிரசவத்தில் 30 தாய்மார்கள் – கர்ப்பம், பிரசவம் அல்லது பிரசவத்திற்குப் பிந்தைய 42 நாட்களுக்குள் – உயிரிழக்கின்றனர். அதுவே தமிழ்நாட்டில் 35 தாய்மார்கள் உயிரிழக்கின்றனர்.

முதன்மை மற்றும் சமூக சுகாதார கண்காணிப்பு (Primary & Community Health Care) என்பது, நோய் வந்த பிறகு சிகிச்சை அளிப்பதை விட, நோய் வராமல் தடுப்பது, கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோயாளிகளை தொடர்ந்து கண்காணிப்பது ஆகியவற்றை மையமாகக் கொண்ட சுகாதார அமைப்பாகும். நிதிப்பற்றாக்குறைகளைக் காரணம்காட்டி, இந்த சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடோ அல்லது பணியாளர்களை நியமிப்பதோ இல்லை. அதனால், செவிலியர்கள் போராட்டத்தில் அனைவருக்கும் வேலை தராமல், ஒரு சிறு பகுதியினருக்கே அரசு வேலை கொடுத்தனர்.

அதேவேளையில், தமிழ்நாட்டை “இந்தியாவின் மருத்துவச் சுற்றுலா [Medical tourism] இடமாக மாற்றுகிறோம்” என்ற பெயரில், அண்டை நாடுகள்/மாநிலங்களிலிருந்து வரும் பணக்காரர்களின் உயர் மருத்துவ சிகிச்சைக்காக தனியார்/கார்பரேட் மருத்துவமனைகளை ஊக்குவிப்பதற்கான திட்டங்களுக்கே முன்னுரிமை தருகின்றனர்.

தமிழ்நாட்டில் தற்காலிக செவிலியர்கள் செய்யும் அதே வேலையைத்தான் நிரந்தர செவிலியர்களும் செய்கிறார்கள். இருந்தும், நிரந்தர செவிலியர்களுக்கான ஊதியத்தில் [55,000 ரூபாய்] மூன்றில் ஒரு பங்கே தற்காலிக செவிலியர்களுக்கு ஊதியமாகக் கொடுக்கப்படுகிறது. ஒப்பந்த அடிப்படையிலேயே மருத்துவர்களையும் நியமனம் செய்கின்றனர். மாதாமதம் ஊதியம் வழங்கக்கோரி மருத்துவர்களும் போராடுகின்றனர்.

இலவச மருத்துவச் சேவைகளுக்குப் பதிலாக, காப்பீட்டை மையப்படுத்திய மருத்துவச் சேவைக்கே முக்கியத்துவம் தருகின்றனர். அரசு மருத்துவமனைகள் அரசு-தனியார் கூட்டு அடிப்படையிலேயே நடத்தப்படுகின்றன. எனவே, இதுவரை தமிழ்நாட்டை ஆண்ட திமுக, அதிமுக அரசாங்கங்களைப் போலவே, தற்போதைய தவெக அரசாங்கமும் பொது சுகாதாரக் கட்டமைப்பை புறக்கணிக்கிறது.

தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்தினை நடைமுறைப்படுத்த ஆண்டுதோறும் 755.83 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணத்தை சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தினால் அரசு மருத்துவமனைகளில் இருக்கும் பல சிக்கல்களைச் சரி செய்ய முடியும். தரமான மருத்துவ வசதிகளைச் செய்து தர முடியும். அதன் மூலம் மக்கள் மத்தியில் அரசு மருத்துவமனைகள் குறித்த கண்ணோட்டத்தை மாற்றி, பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைகளுக்கு வருபவர்களது எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.

விஜயின் அரசு அதனைச் செய்யாமல் வெற்று விளம்பரத்திற்காக கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி, அதனை மிகப்பெரிய சாதனையாகப் பிரச்சாரம் செய்கிறது. இது போன்ற வாச்சவடால்களும், வெற்று முழக்கங்களும் தமிழ்நாட்டு மக்களுக்குப் புதிதல்ல. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை யாருடைய பிறந்த நாளில் தொடங்கிவைக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்களோ அதே அண்ணாத்துரை தான் இதற்கெல்லாம் வழிகாட்டி. தமிழ்நாட்டில் கவர்ச்சிவாத, விளம்பர அரசியலைத் தொடங்கிவைத்தவரே அண்ணாத்துரை தான்.

1967 தேர்தலில் கட்டாயம் வென்றே தீர வேண்டும் என்று நினைத்த திமுக, பலமான கூட்டணிகளை அமைத்து தேர்தலைச் சந்தித்தது. அப்போது அரிசியின் விலை தமிழகத்தில் விண்ணை முட்டும் அளவில் இருந்தது. காங்கிரஸ் கட்சியினரைப் பார்த்து அண்ணா சவால் விடுக்கிறார். ரூபாய்க்கு மூன்று படி அரிசி போடுவதாக காங்கிரஸ் ஒப்புக்கொண்டால் திமுக தேர்தலில் இருந்தே விலகிக் கொள்வதாக அறிவித்தார். “அதெப்படி முடியும், திமுகவால் முடியுமா?” என காங்கிரஸ் கட்சியினர் திருப்பிக் கேள்வி கேட்டனர். அதற்கு “ரூபாய்க்கு மூன்று படி இலட்சியம், ஒரு படி நிச்சயம்” என்றார் அண்ணாதுரை.

இந்த பதிலால் தான் தவெகவிற்கு அண்ணா வழிகாட்டியானார் என்று சொல்வது மிகையாகாது. எனவே, அவரது பிறந்த நாளில் “தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்” தொடங்குவது, தமிழர் பாரம்பரியத்தில் “தாய்மாமன் சீர்” என்ற மரபைப் பேணுவது என்று சொல்வதை விட, அண்ணாவின் மரபைப் பேணுவது என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

2026 தேர்தலில் கட்டாயம் வென்றே தீர வேண்டும் என்று நினைத்த தவெக, பலமான கூட்டணிகளை அமைத்து தேர்தலைச் சந்திப்பதற்காக “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு” எனக் கூறியது. ஆனால் இன்றைக்கு, ஆட்சியில் பங்குபெறுவதற்காக, போட்டி போட்டுக் கொண்டு விஜயை ஆதரிக்கும் கூட்டணிக் கட்சிகள் எதுவும் அன்றைக்கு அவரை ஆதரிக்க முன்வரவில்லை. இதனால் ஏற்கனவே இருந்த திட்டங்களின் மீது டாப்-அப் செய்து மக்கள் மத்தியில் கடைவிரித்தனர். அதில் ஒன்று தான் “தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்”.

தேர்தல் பிரச்சாரத்தின் போது இத்திட்டம் குறித்து நடிகர் விஜய், “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம். உலகத்துல மனுஷனா பிறக்கிறதே பெரிய விஷயம். அதுவும் நம்ம தாய்நாடான தமிழ்நாட்டுல பிறக்கிறது மிகப்பெரிய வரம். அப்படி நம்ம தமிழ்நாட்டுல பிறக்கிற குழந்தைகளை வரவேற்கிற திட்டம் தான் ‘தாய்மாமன் தங்கமோதிரம்’ திட்டம். தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அரசாங்கத்தின் ஆசீர்வாதமாக ஒரு தங்கமோதிரம் வழங்கப்படும். கூடவே ஒரு ‘பேபி வெல்கம் கிட்’ம் வழங்கப்படும்.” – என்று பேசினார்.

“மூன்று படி இலட்சியம், ஒரு படி நிச்சயம்” என்ற அண்ணாவின் மரபுப்படி, தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தங்கமோதிரம் வழங்க வேண்டும் என்பது இலட்சியம், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு நிச்சயம் என்று முதல்வர் விஜயின் பேச்சைப் புரிந்து கொள்ளலாம். ஏற்கெனவே 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்பதை 500 யூனிட்டுக்கும் குறைவாக உபயோகிப்பவர்களுக்கு மட்டும் எனவும், விவசாயக் கடன் தள்ளுபடியை 50,000 ரூபாய் அளவிற்கு மட்டும் எனச் சுருக்கியதையும் இத்துடன் சேர்த்துப் பார்த்தால் குருவை (அண்ணாவை) மிஞ்சிய சிஷ்யனாகவிட்டார் என்றுதான் கூற வேண்டும்.

பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்கு வரும் ஒரு தாய்க்கு தேவைப்படுவது ஒரு கிராம் தங்க மோதிரம் அல்ல; திறமையான மருத்துவர்கள், போதுமான செவிலியர்கள், சுத்தமான வார்டுகள், நவீன மருத்துவ வசதிகள் மற்றும் பாதுகாப்பான சிகிச்சை. இவற்றை வழங்காமல், ஒரு மோதிரத்தைக் கொடுத்து அரசு மருத்துவமனைகள் மீது மக்களின் நம்பிக்கையை உருவாக்கலாம் என்று கருதுவது, மக்களின் வாழ்க்கையைப் பற்றிய அக்கறையை விட, விளம்பர அரசியலை முன்னெடுத்தால் போதும் என்ற அரசின் நோக்கத்தைக் காட்டுகிறது.

  • மகேஷ்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன