2002 குஜராத் படுகொலையின் முதல் குற்றவாளியே மோடி தான்!
குஜராத் படுகொலை நடந்து ஏறத்தாழ இருபது ஆண்டுகள் கடந்து விட்டது. 2000க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லீம்கள் (பச்சிளம் குழந்தைகள் முதல் கர்ப்பிணிகள் வரை) மோடியின் மேற்பார்வையில் சங்க பரிவார இந்துமதவெறி பயங்கரவாதிகளால் கொடுரமாக கொலை செய்யப்பட்ட நிகழ்வு கிட்டத்தட்ட பொதுப் புத்தியிலிருந்து திட்டமிட்டு மறக்கடிக்கப்பட்டு வருகிறது. அதே வேளையில் இப்படுகொலையைப் பற்றியே அறியாத ஒரு இளம் தலைமுறையும் உருவாகிவிட்டது. இந்நிலையில் குஜராத் படுகொலை குறித்து கடந்த வாரம் பிபிசி வெளியிட்ட ஆவணப்படங்கள் (India:The Modi Question, Part 1&2), இப்படுகொலை குறித்தும் அதில் மோடியின் பங்கு பற்றியும் விவாதங்களை கிளப்பியுள்ளது.
இப்படுகொலை தொடர்பாக பதியப்பட்ட 1600 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பன்மையினர் தண்டிக்கபடவே இல்லை. இதில் பலர் பதவிகள் பெற்று எம்.எல்.ஏ.க்களாகவும் எம்.பி.க்களாகவும் அமைச்சர்களாகவும் வலம் வருகின்றனர். சாட்சி சொன்னவர்களும், பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களுக்காக நியாயம் வேண்டி போராடியவர்களும் குற்றவாளிகளாக தற்போது சிறையில் உள்ளனர். கடந்த 70 ஆண்டுகளில் உலகமே கண்டிராத கொடூரமான படுகொலைக்கு இந்திய நீதித்துறை வழங்கியுள்ள ‘நீதி’ இவ்வளவு தான்.

திருவாளர் மோடிக்கும் குஜராத் படுகொலைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென்று நிருபிக்க வலதுசாரி-காவி கும்பல் (பாண்டே தொடங்கி டைம்ஸ் நவ், ஸ்வராஜ்யா வரை) பலவிதமான உருட்டுகளை அள்ளி வீசுகின்றது. இதற்கு ஆதாரமாக SITன் அறிக்கையை காட்டுகின்றனர். SIT அறிக்கையின் அடிப்படையில் மோடிக்கும் குஜராத் படுகொலைக்கும் தொடர்பில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்பளித்தது. அதற்கு கைமாராக மோடி பிரதமரானதும் SITன் தலைவராக இருந்த ஆர்.கே. ராகவனை (2017ல்) சைப்ரஸ் நாட்டுக்கான இந்திய ஆணையராக நியமித்தார். இதிலிருந்தே SITன் லட்சணத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். (SIT அறிக்கை எவ்வாறு மோடியைக் காப்பாற்றியது என்பது குறித்து ஜூன் 2012 மற்றும் ஜீலை 2013 புதிய ஜனநாயகத்தில் நாம் விரிவாக அம்பலப்படுத்தியுள்ளோம்).
குஜராத் படுகொலையை மோடியின் தலைமையில் ஆர்எஸ்எஸ்-பாஜக இந்து-பார்ப்பன பயங்கரவாதிகள் திட்டமிட்டு நடத்தினர் என்பதை, அந்த கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட காவிகள் அளித்த வாக்குமூலங்களைக் கொண்ட புலனாய்வுத் தொகுப்பை தெகல்கா பத்திரிக்கை 2007ல் வெளியிட்டது. அதனடிப்படையில் 2007 நவம்பர் மாத புதிய ஜனநாயகத்தின் தலையங்கத்தில் அந்த வாக்குமூலங்கள் தமிழில் பிரசுரிக்கப்பட்டன. குஜராத் படுகொலையை மோடிதான் தலைமை தாங்கி நடத்தினார் எனபதை இவ்வாக்குமூலங்களே உறுதிப்படுத்திகின்றன.
“நாம் பழிதீர்ப்போம் என்பதுதான் மோடி சொன்ன முதல் வார்த்தை. இதையே எல்லோர் முன்பும் நானும் சொன்னேன். மோடி முதல் மந்திரி. அவரே எல்லா முஸ்லீம்களையும் கொல்லுங்கள் என்று சொல்ல முடியாது. நான் சொல்ல முடியும். நான் ஒரு விஸ்வ இந்து பரிசத் தலைவர். இதையே எல்லோர் முன்பும் நானும் சொன்னேன். அதன்பிறகு நான் சாப்பிடவே இல்லை. ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்கவில்லை. கோத்ரா ரயிலில் எரிந்து போன இந்துக்களை எண்ணி எண்ணி ஆத்திரமடைந்தேன். தாரை தாரையாகக் கண்ணீர் வடித்தேன். பலத்தை எல்லாம் திரட்டிக் கத்தினேன். எதிரிகளை திட்டித் தீர்த்தேன். அமைதியாக இரு நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார் மோடி. அப்படி அவர் சொன்னதன் பொருள் என்னவென்று எல்லோரும் புரிந்து கொண்டனர். ஆமாம், நானும் புரிந்து கொண்டேன்.” – விசுவ இந்து பரிசத் அகமதாபாத் தலைவர் இராஜேந்திர வியாஸ்.
“மோடி வெளிப்படையாக சொன்னார்: நமக்கு மூன்று நாட்கள் இருக்கின்றன. நம்மால் முடிந்த அனைத்தும் செய்வோம். அதற்கு பிறகு கால அவகாசம் தர முடியாது என்று. எமக்குத் தேவையான ஆட்களும் ஆயுதங்களும் வந்தன. மூன்று நாட்களில் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து முடித்தோம்.” ஹரேஸ் பட், வி.இ.ப. எம்.எல்.ஏ. மாயா பென் மற்றும் பாபு பஜ்ரங்கி

“நரேந்திர மோடி மட்டும் ஒரு முதல் மந்திரியாக இருக்கவில்லை என்றால் அவரே நேரடியாக வெடிகுண்டுகளை வீசியிருப்பார். மோடி இந்து சமாஜத்தின் இரட்சகர்-மீட்பாளர். இந்துக்களுக்கு சாதகமாக எல்லா சமிக்ஞைகளையும் கொடுத்தார். ஆட்சியாளரே இவ்வளவு கடுமையாக இருக்கும்போது எல்லாம் நடக்கத்தான் செய்யும். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொலைபேசி மூலம் கேள்விப்பட்டதும் அவர் ரத்தம் கொதித்தது. மோடி என்ன செய்தாரோ அதை வேறு எவரும் செய்திருக்க முடியாது.”- குஜராத் 2002 சம்பவங்களை விசாரிக்கும் நானவதி-ஷா கமிசனுக்கு நியமிக்கப்பட்ட அரசு தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியா.
“எங்கள் விசுவ இந்து பரிசத் சகோதரர்கள் பெரும் எண்ணிக்கையில் வந்தனர். அந்த லங்காவை நாங்கள் சுற்றி வளைத்தோம். அது முழுமையாக அழிக்கப்பட்டது. காங்கிரஸின் முன்னாள் எம்.பி ஈஷான் ஜெப்ரி வசித்த குல்பர்க் சொசைட்டி குடியிருப்புக்குள் முசுலீம்கள் பலரும் தஞ்சம் புகுந்திருந்தனர். ஜெப்ரி தங்களைக் காப்பாற்றுவார் என்று எண்ணினார்கள். அவரையே இழுத்து வந்து கைகளையும் கால்களையும் ஆணுறுப்பையும் வெட்டி வீசி, உயிரோடு எரித்தோம். பிறகு மற்றவர்களைச் சூழ்ந்து கொண்டு முழுவதுமாக அழித்தோம்.” சங்கப் பரிவார தலைவர் மங்கிலால் ஜெயின்.
“ஒருவரும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படவில்லை. நாங்கள் அவர்களை துரத்திக் கொண்டு சென்றோம். ஒரு பெரிய குழிக்குள் தள்ளினோம். அவர்கள் ஒருவரையொருவர் இறுக்கிப் பிடித்துக் கொண்டார்கள். சூழ்ந்து கொண்டு பெட்ரோலை ஊற்றினோம். எரியும் டயர்களை வீசினோம். அவர்கள் அனைவரையும் எரித்து அழித்தோம். ஒரேநாளில் 95 முஸ்லீம்களை நானே கொன்றேன். அவர்களை கொன்றபிறகு நான் மகாராண பிரதாபை போன்று பெருமித உணர்வு கொண்டேன். கொள்ளையடிக்கவில்லை. கற்பழிக்கவில்லை. கொலை மட்டும் செய்தேன். ஒரு முஸ்லீமை மணந்த இந்து கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்தேன். கருவை வெளியே உருவி எடுத்து சிசுவை வெட்டி இரண்டாகப் பிளந்தேன்.” பாபு பஜ்ரங்கி, முன்னாள் வி.இ.ப பிரமுகர், இன்னாள் சிவசேனா தலைவர்.
“முஸ்லீம் பெண்கள் பழங்களைப் போன்று இருந்தார்கள்; நாங்களெல்லாம் சுவைத்தோம்; வேண்டுமென்றால் வி.எச்.பி.-ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களைக் கேட்டுப் பாருங்கள்; அவர்களும் கூடத்தான் சுவைத்தார்கள். இதோ என் எதிரே சாமிப்படம் இருக்கிறது. என் அருகே என் மனைவி இருக்கிறாள். நான் பொய் சொல்ல மாட்டேன். நானும் கூட ஒருத்தியை சுவைத்தேன். பின் அவளைக் கொன்றேன். எல்லோரையும் கொன்ற பிறகு போலீஸ் எங்களை அழைத்தது. சில முஸ்லீம்கள் சாக்கடைக் குழிக்குள் பதுங்கி இருக்கிறார்கள் என்று சொன்னார்கள். நாங்கள் ஒன்றும் செய்யவில்லை. அந்தக் குழியை மூடி போட்டு மூடினோம். அவ்வளவு பேரும் செத்துப் போனார்கள். உள்ளூர் எம்.எல்.ஏ. மாயா பென் தெருத் தெருவாக சுற்றி வந்தார். கொல்லுங்கள் இன்னும் பல முஸ்லீம்களை கொல்லுங்கள் என்று முழங்கிக் கொண்டே இருந்தார். எல்லாம் முடிந்த பிறகு நரேந்திர மோடி கருப்புப் பூனை படையோடு வந்தார். எங்கள் சகோதரிகள் அவருக்கு மாலை போட்டு வரவேற்றார்கள். எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்தார். எங்களை வாயாரப் புகழ்ந்தார்.” சுரேஷ் ரிச்சர்டு, பிரகாஷ் ரத்தோடு, வி.இ.ப. பிரமுகர்கள்.
“கடந்த 20-25 ஆண்டுகளாக நாங்கள் பார்த்து வந்திருக்கும் முஸ்லீம்களையெல்லாம் எங்கள் இலக்காக வைத்துக் கொன்றோம். எங்கள் ஆட்கள் தேவையான துப்பாக்கிகளைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். இது வெறுமனே வாள்களை வைத்துக் கொண்டிருக்கும் காலமல்லவே. நாங்கள் ராக்கெட் கூட தயாரித்து, சோதனை செய்திருக்கிறோம்.” கோத்ரா எம்.எல்.ஏ. ஹரேஸ் பட்.
“நரேந்திர மோடி போலீசை எங்கள் உதவிக்கு நிறுத்தினார். உங்களுக்கு என்ன தேவையோ அதைத் தருகிறோம் என்று சொன்ன போலீசு எங்கள் செயல்களில் தலையிடவே இல்லை. எனக்கு ஊரடங்கு காலத்தில் நடமாடும் அனுமதிச் சீட்டு கொடுத்தார்கள். இரும்புக் கம்பிகள், கடப்பாரைகள், திரிசூலங்களோடு வலம் வந்தோம். ஜெய் ஸ்ரீராம் என்று சொன்னால் போதும் போலீசு புரிந்து கொள்ளும். போலீசு தமது தோட்டா ரவைகளைக் கொடுத்தது. போலீசு ஜீப்பிலிருந்து ஒரு முஸ்லீமை வெளியே இழுத்துப் போட்டேன். அவனை வெட்டிக் கொள்ளுங்கள் என்றது போலீசு. கொன்றேன்.”
“நாங்கள் ஒரு நான்கைந்து பேர் ஒரு பன்றியைக் கொன்று மசூதியின் மேல் தொங்க விட்டோம். பிறகு காவிக்கொடியை ஏற்றினோம். மசூதியின் மௌல்வியுடைய தலையைத் துண்டித்துத் தெருவிலே வீசினோம். உடலை எரித்தோம். ஒரு சிறு கிராமத்தைக் கூட நாங்கள் விட்டுவைக்கவில்லை. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் திரும்ப திரும்ப வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. அது எங்களை மேலும் ஆத்திரமடையச் செய்தது. கண்ணில்பட்ட முஸ்லீம்களில் எத்தனை பேரைக் கொல்ல முடிமோ அத்தனை பேரையும் எரித்துக் கொன்றோம். கோத்ரா ரயில் எரிக்கப்பட்ட அன்றே அதற்கு பழி தீர்ப்பது என்பது வதோத்ரா பா.ஜ.க தலைவர்களால் திட்டமிடப்பட்டது. அது வரலாற்றில் முன் எப்போதும் கண்டிராததாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. மோடி நகர்புற நடவடிக்கைகளுக்கு வழிகாட்டிய அதேசமயம் வி.இ.ப. தலைவர் பிரவின் தொகாடியா மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.”
இவையெல்லாம் இந்த பாசிச பயங்கரவாதிகள் அளித்த வாக்குமூலங்கள்.
பிபிசி வெளிநாட்டு செய்தி நிறுவனம் மோடிக்கு எதிராக செய்யும் சதிவேலை, சீனா பணம் கொடுத்து ஆவணப்படம் எடுக்கச்சொன்னது என்று கதை கட்டுபவர்கள், அன்று கலவரத்தை முன்னின்று நடத்திய கொலைகார கூட்டமே தங்களது வாயால் மோடியின் மேற்பார்வையில்தான் இந்தக் கலவரம் நடந்தது எனக் கொடுத்த ஒப்புதல் வாக்குமுலத்தை மறுக்க முடியாதென மறைக்கிறார்கள்.
இன்றைக்கு தமிழிசை, எல்.முருகன், அண்ணாமலை, என்று நம் முன்னே நிறுத்தப்படும் பாஜக தலைவர்கள் எல்லோரும் வெறும் முகமூடிகள் மட்டுமே. இந்த முகமூடிகளைக் கழற்றி உள்ளே பார்த்தால் குஜராத் படுகொலை போன்று எண்ணற்ற படுகொலைகளை திட்டமிட்டு நடத்தி பல ஆயிரம் அப்பாவி மக்களின் உயிரைக் குடித்த, இந்து மதவெறி காவி பாசிஸ்டு கும்பலின் கோரமான உண்மை முகத்தைப் பார்க்க முடியும். முகமூடிகளை மட்டுமே பார்த்து வளர்ந்துள்ள இன்றைய தலைமுறையினருக்கு காவி பாசிஸ்டுகளின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் வாய்ப்பை இந்த ஆவணப்படம் வழங்கியுள்ளது.
- அழகு
