பார்ப்பனிய ஒடுக்குமுறையே காவி பாசிஸ்டுகளின் ‘ஜனநாயகம்’ – பாகம் -3
காவிக்கும்பல்கள் முன்வைக்கும் ஜனநாயக வடிவங்களின் யோக்கியதைக்கு மேற்சொன்னவை சிறு உதாரணங்கள் மட்டுமே. இப்படி வர்ணாசிரம முறையின் அடிப்படையில் அமைந்த பார்ப்பனியத்தின் கேடு கெட்ட வடிவத்தை தான் ஜனநாயகம் என்கிறது காவி பாசிஸ்டு கும்பல்கள்.
மேற்கு நாடுகளின் ஜனநாயகத்தைவிட பண்டைய இந்தியாவில் ஜனநாயகம் இருந்தது அதை அந்நிய படையெடுப்பாளர்கள் சிதைத்துவிட்டார்கள் என வரலாற்றை புரட்டியும் அவர்கள் கூறும் வேதகால கதைகளை தற்காலத்திற்கு ஏற்ற மாதிரி மாற்றியும் கோயபல்ஸ் பிரசாரத்தைச் செய்துவருகிறது காவி கும்பல். காவிகள் முன்வைக்கும் கட்டுக்கதைகள் போதிய ஆதரங்கள் மற்றும் அறிவியல் அணுகுமுறையில் இல்லையென்பதால் அவற்றௌப் பல வரலாற்று ஆய்வாளர்கள் ஒப்புக் கொள்வதில்லை. ஆனால் இடஒதுக்கீட்டில் பயனடைந்த நம்முடைய பேராசிரியர்களோ சிறிதும் சுயமரியாதை உணர்வின்றி யுஜிசி சொன்னதைக் கேட்டு நவம்பர் 26 அன்று பல்கலைக்கழகங்களில் கூட்டம் நடத்துகிறார்கள்.

1947 அதிகார மாற்றத்திற்கு பிறகு உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டம் இந்திய மக்களுக்கு சில அடிப்படை உரிமைகளை உத்திரவாதப்படுத்தியது. (சட்டப்பிரிவு 19 லிருந்து 24 வரை). இதில் பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துத்துரிமை, கண்ணியமான வாழ்க்கைக்கான உரிமை, ஓட்டுரிமை, சொத்து சேர்ப்பதற்கான உரிமை, சாதி-மத அடிப்படையில் பாகுபாடு பார்ப்பது குற்றம், தீண்டாமைக் குற்றம் என்றெல்லாம் சொல்லப்பட்டுள்ளது. இதனடிப்படையிலேயே இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றும் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். இவைகள் அடிப்படையில் முதலாளித்துவ ஜனநாயக உரிமைகளே. நடைமுறையில் அரைநிலப்பிரபுத்துவ தன்மைகளுக்குட்பட்டு இவ்வுரிமைகள் அமல்படுத்தப்பட்டாலும் முந்தையக் சமூகக் கட்டமைப்புக்குள் (வருண-சாதி அமைப்பு முறைக்குள்) வழங்கப்பட்ட உரிமைகளுடன் ஒப்பிடுகையில் இவை மேம்பட்டது என்பதை மறுக்க இயலாது.
உதாரணமாக, பார்பனர்களைத் தவிர மற்றவர்கள் கல்வி பெறுவதை தண்டனைக்குரிய குற்றமாக்கியது பார்பனியம். இந்தியாவில் அனைவருக்கும் கல்வி என்பது பிரிட்டிஸார் வருகைக்கு பின்பே தொடங்குகிறது. 2009ல் கொண்டுவரப்பட்ட கல்வி உரிமைச் சட்டம் பதினான்கு வயது வரையிலான குழந்தைகள் அனைவருக்கும் இலவசக் கல்வி கட்டாயம் என்கிறது. ஆனால், நாலு வர்ணத்தையும் நானே படைத்தேன்; அவரவர் வர்ணத்திற்கான வேலை அவரவர் செய்யவேண்டும்; இதனை மீறுவதுக் குற்றம் என்கிறது பகவத் கீதை. ஆட்சியாளர்கள் மக்களை தன் கட்டுக்குள் வைப்பதற்காக மக்களை குடிகாரர்களாக்குவதும் மத மௌடீகங்களுக்கு அடிமைப்படுத்துவதும் சரி என்கிறது அர்த்தசாஸ்திரம். இவைகள் எப்படி முதலாளித்துவ ஜனநாயகத்தின் அடிப்படையாக இருக்க முடியும்?
பழைய புராணங்களை விட்டுவிடுவோம். மோடியின் இந்தியாவில் ஜனநாயகத்தின் நிலை என்ன? கடந்த எட்டு ஆண்டுகளில் பத்திரிக்கை சுகந்திரம் படிப்படியாகக் குறைந்து பாஜக- ஆர்எஸ்எஸ் கும்பலை விமர்சிக்கின்ற பத்திரிக்கைகள்/ஊடகங்கள் தொழில்செய்ய முடியாது என்கிற நிலை உருவாகியுள்ளது. உலக பத்திரிக்கை சுகந்திரத்திற்கான மதிப்பீட்டில் இந்தியா 150வது இடத்தில் உள்ளதாக ஒரு அறிக்கைக் கூறுகிறது. இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம், இலங்கையில் கூட இந்தியாவை விட பத்திரிக்கை சுகந்திரம் இருப்பதாக அவ்வறிக்கைக் கூறுகிறது.
2009லிருந்து 2022 வரையிலான காலத்தில் தேசிய புலனாய்வு முகமை(NIA) பதிந்துள்ள 357 ஊபா வழக்குகளில் 344 வழக்குகள் அதாவது 80 சதவிகித வழக்குகள், மோடியின் ஆட்சிகாலத்தில் (2014-2022) பதியப்பட்டவை. 2010 லிருந்து 2020 வரை 816 தேச தூரேக வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில் 65% வழக்குகள் 2014 க்கு பிறகு, மோடி ஆட்சியில், பதியப்பட்டவை. குறிப்பாக ஆதித்தியநாத் ஆளுகின்ற உத்திரப்பிரதேசத்தில் தான் அதிகமான NSA வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இவ்வழக்குகளில் பேராசிரியர்கள், மாணவர்கள், மாணவர் சங்கத் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், அப்பாவி முஸ்லீம்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என ஜனநாயகம் கோரிய பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவசர நிலை காலத்தை விட மோடியின் ஆட்சியில் ஜனநாயகத்தின் நிலை மிகமோசமாக இருப்பதாக அரசியல் அறிஞர்கள் கூறுகின்றனர். நிகழ்காலத்தில் ஜனநாயகத்தை மயிரளவும் மதிக்காத காவி கும்பல், அதன் குரல்வலையை நெரித்ததோடு மட்டுமில்லாமல் அந்த உண்மையை மறைத்து அதனிடத்தில் வேதகாலத்தில் ஜனநாயகம் இருந்தது என்ற பொய்யை வைத்து மாணவர்களையும் மக்களையும் ஏமாற்றுகிறது. யுஜிசியோ இதற்கு ஆதரவாக பழங்காலத்தைப் பற்றி பெருமை கொள்ளச் சொல்கிறது. வேத புராண குப்பைகளை மிதமிஞ்சிய அளவிற்கு இட்டுக்கட்டி பார்பனிய மதமே இந்தியாவின் அடையாளம்/அனைத்திற்கும் மூலம் என்று மாணவர்களிடம் பிரச்சாரம் செய்கிறது. இதன் மூலம் பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பலின் இந்து-இந்தி-இந்தியா என்ற கொடுங்கனவிற்கு ஆதரவான கருத்துருவாக்கத்தை யுஜிசி செய்கிறது.
பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பலின் இத்தகைய பாசிச செயல்பாடுகள் வெறும் பார்பனிய மீட்டுருவாக்கத்திற்கானது மட்டுமே என்று கருதினால் அது பிழையாகும். இவர்களின் பாசிச நடவடிக்கைகளுக்குப் பின்னால் அப்பட்டமான கார்பரேட் நலன்கள் ஒழிந்துள்ளது.
கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவில் மோடி ஆட்சியில்தான் வேலையின்மை அதிகம். இதுவரை இல்லாத வகையில் மோடி ஆட்சிகாலத்தில் தான் பல லட்சக்கணக்கான சிறு தொழில்கள் மூடப்பட்டுள்ளன. கடுமையான விலவாசி உயர்வு மற்றும் மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளதும் மோடி ஆட்சிகாலத்தில் தான். அதேவேளையில் இதுவரையில்லாத அளவில் பொதுறைத் தனியார்மயம் மோடி ஆட்சியில்தான் நடந்துள்ளது. நாட்டில் பெரும்பான்மை மக்கள் உணவுக்குத் திண்டாடிய கொரோனா காலத்தில் இந்திய கார்பரேட்களின் சொத்து மதிப்பு ஒன்பது லட்சம் கோடியாக (300 சதவிகிதம்) அதிகரித்தது. இந்தியாவிலுள்ள பன்னாட்டு தொழில் நிறுவனங்களின் வருவாய் மற்று பங்குசந்தை சூதாட்டத்திலிருந்து வரும் லாபம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.
இதனால் பெருகிவரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிலிருந்து எழும் எதிர்ப்புகள் மற்றும் சமூக நெருக்கடிகளை சமாளிக்க தற்போது இருக்கும் ‘ஜனநாயகத்தின்’ பெயரில் இனியும் ஆட்சி செய்ய முடியாது என்பதால், சமூக செயற்பாட்டாளர்களை தேசவிரோதியாக சித்தரிப்பது, சி.பி.ஐ., என்.ஐ.ஏ, அமலாக்கத்துறை, வருமான வரித்துரை போதாக் குறைக்கு கவர்னர்கள் மற்றும் நீதிமன்றங்களைக் கொண்டு ஒடுக்குகிற வேலையை காவி கும்பல் செய்து வருகிறது. இதிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காகவே பழம்பெருமைகளைப் பேசியும் கார்பரேட்களின் கட்டற்ற சுரண்டலை பாதுகாக்க கடுமையான ஒடுக்குமுறைகளையும் ஏவிவருகிறது.
இந்திய வரலாறு முழுவதையும் துருவி ஆராய்ந்து பார்ப்பனிய கட்டுக்கதைகளிலிருந்து காவி பாசிஸ்டுகள் கண்டுபிடித்த புதிய விசக்கிருமி தான் “இந்தியா ஜனநாயகத்தின் தாய்” எனும் கருத்து. இந்த விசக்கிருமியை உலகம் முழுவதும் மோடி பிரச்சாரம் செய்ய, யுஜிசியோ மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கிறது. சாதி, இன, மொழி ஒடுக்குமுறைகளை உள்ளடக்கிய பார்ப்பனிய கொடுங்கோன்மையை ஜனநாயகமாக முன்னிறுத்தும் இவர்கள், இந்திய தரகு முதலாளிகள் மற்றும் ஏகாதிபத்திய நலங்களையே உயிர் மூச்சாக்கக் கொண்டு செயல்படும் காவி-கார்பரேட் பாசிஸ்டுகள். இவர்களுக்கும் ஜனநாயகத்திற்கும் துளியளவும் சம்பந்தமில்லை. ஆனால் இந்த கேடு கெட்ட பார்பனிய கருத்துகளை சமுதாயத்தின் அனைத்து மக்களும் பெருமைக் கொள்ளக்கூடியது என்று படம் ஓட்டுகின்றனர்.
இவர்களுடைய படத்தினை திரைகிழித்து, பார்பனியத்திற்கும் கார்பரேட் முதலாளிகளின் சுரண்டலுக்கும் இறுதிமணியடிக்க போராடுவது நம் அனைவரின் கடமையாகும்.
முற்றும்
- தாமிரபரணி
