காசிமேடு மீனவர்களைக் காப்பாற்ற வராத
கடற்படையும் கடலோரக் காவற்படையும்

முரசுப் புயலில் சிக்கிய காசிமேடு மீனவர்களைக் காப்பாற்றத் தவறிய கடற்படையும் கடலோரக் காவற்படையும், புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத தமிழக அரசும், தனது நிர்வாகத் தோல்வியை மறைக்கப் பாதுகாப்புக் கருவி இல்லாததையே மீனவர்களின் தவறாகச் சித்தரிக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு தமிழகக் கடலோரப் பகுதிகளைத் தாக்கிய முரசுப் புயலில் சிக்கி, சென்னையின் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற ஒன்பது மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. மீன்பிடிப் படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக நடுக்கடலில் சிக்கித் தத்தளித்த மீனவர்களை மீட்க இந்தியக் கடற்படையும், கடலோரக் காவற்படையும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே மீனவர்கள் உயிரிழக்க முக்கியக் காரணம்.

கடந்த அக்டோபர் 29 அன்று காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து செல்வழகன் என்பவருக்குச் சொந்தமான ‘ஸ்ரீ செங்காளம்மன்’ என்ற விசைப்படகில் ஒன்பது மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றுள்ளனர். முரசுப் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் ஆந்திர மாநிலம் நிசாம்பட்டினம் துறைமுகத்தில் கரையொதுங்கியுள்ளனர்.

புயல் ஆந்திரக் கடற்கரையைக் கடந்துகொண்டிருந்த நிலையில், நவம்பர் 2 அன்று அவர்கள் மீண்டும் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது கடலில் ஏற்பட்ட கடும் கொந்தளிப்பின் காரணமாகப் படகின் எஞ்சின் பழுதடைந்துள்ளது. இதனால் படகை இயக்க முடியாமல் நடுக்கடலில் அவர்கள் தத்தளித்துள்ளனர்.

நவம்பர் 3 அதிகாலை சுமார் 3.30 மணியளவில், தங்களுக்கு ஏற்பட்ட ஆபத்து குறித்து அருகிலிருந்த மற்றொரு விசைப்படகில் இருந்த மீனவர்களுக்கு வயர்லெஸ் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு அவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீனவர்கள் ஆபத்தில் சிக்கியிருப்பது குறித்த தகவல் அவர்களது உறவினர்களுக்கும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு புகார் அளித்துள்ளனர்.

தகவல் தெரிந்தும் தேடாத அதிகாரிகள்!

மீனவர்கள் புயலில் சிக்கிக் காணாமல் போனது தெரிந்த பிறகும் மீன்வளத்துறை அதிகாரிகள் அவர்களைத் தேடும் பணியைத் தொடங்கவேயில்லை. மீனவர்கள் ஆந்திரக் கடற்கரையில் கரையொதுங்கியிருந்ததும், அங்கிருந்து மீண்டும் அதிகாலை 3 மணிக்குக் கடலுக்குள் புறப்பட்டுச் சென்றதும், அவர்களது படகில் ஏற்பட்ட பழுதும் மீனவர்களின் உறவினர்கள் அளித்த புகாரில் தெளிவாகக் கூறப்பட்டிருந்தது. அதாவது, காணாமல் போன மீனவர்கள் கடைசியாக எங்கிருந்தார்கள், எப்போது கடலுக்குள் புறப்பட்டார்கள், அவர்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற முக்கியமான தகவல்கள் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஏற்கெனவே இருந்துள்ளன.

ஆனால், இந்தத் தகவல்களின் அடிப்படையில் உடனடியாகத் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ, ஆந்திர மாநில அதிகாரிகளுடனும் கடலோரக் காவல்படையுடனும் ஒருங்கிணைந்து செயல்படவோ மீன்வளத்துறை அதிகாரிகள் எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

மூன்று நாட்கள் கடந்தும் மீன்வளத்துறையிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. மீன்வளத்துறை அமைச்சரோ காசிமேடு பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த காசிமேடு மீனவர்கள், தங்களது சக மீனவர்களை மீட்டுத் தரக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்குள் கடலில் மூழ்கி உயிரிழந்த ஏழு மீனவர்களின் உடல்கள் ஆந்திர மாநிலக் கடலோரப் பகுதியில் கரை ஒதுங்கின. இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் மீன்வளத்துறை அமைச்சரும், முதலமைச்சரின் நெருங்கிய நண்பருமான நடிகர் ஸ்ரீநாத், உயிரிழந்த மீனவர்களின் உறவினர்களைச் சந்திக்கச் சென்றார். அடுத்த இரண்டு நாட்களில் மற்ற இரு மீனவர்களின் உடல்களும் கரை ஒதுங்கின.

கடலில் சிக்கித் தத்தளித்த மீனவர்களைக் காப்பாற்றத் தவறிய குற்றச்சாட்டு வலுக்க ஆரம்பித்த உடனே கடலோரக் காவற்படையின் சார்பில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் பணிகள் குறித்து விளக்கம் கொடுக்கப்பட்டது. அதில் தங்களுக்குத் தகவல் கிடைத்த உடனே நவமபர் 3ஆம் தேதி மதியம் 12 மணிக்குத் தேடுதல் பணியைத் தொடங்கியதாகவும் சென்னையில் இருந்து தேடுதல் விமானமும், கிருஷ்ணாப்பட்டினத்திலிருந்து கப்பலும் அனுப்பப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

மீனவர்கள் காணாமல் போனதாக நவம்பர் மாதம் அதிகாலை 3.30 மணிக்குப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேடுதல் பணிகள் நண்பகல் 12 மணிக்குத்தான் தொடங்கப்பட்டதாகக் கடலோரக் காவற்படை கூறுகிறது. மீனவர்கள் புயலில் சிக்கியிருப்பதாகத் தகவல் கிடைத்த பிறகும், ஒன்பது மணி நேரம் தேடுதல் பணிகளைத் தொடங்காமல் அதிகாரிகள் காலம் கடத்தியிருக்கிறார்கள்.

அதுமட்டுமின்றி, ஆந்திர மாநிலத்தின் நிசாம்பட்டினம் பகுதியில் மீனவர்கள் காணாமல் போயிருந்த நிலையில், அவர்களைச் சென்னைக்கு அருகிலுள்ள கிருஷ்ணபட்டினம் பகுதியில் தேடியிருக்கிறார்கள். மீனவர்கள் காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரிலேயே, அவர்கள் கடைசியாக இருந்த இடத்தை உறவினர்கள் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தபோதும், அதிகாரிகள் வேறொரு பகுதியில் தேடுதல் நடத்தியிருப்பது, இந்தத் தேடுதல் நடவடிக்கையை வெறுமனே கணக்குக் காட்டுவதற்காகவே மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தெளிவாக அம்பலப்படுத்துகிறது.

அதிகாரிகளின் அலட்சியப் போக்கும், மீன்வளத்துறை அமைச்சரின் மெத்தனப் போக்கும் ஒன்பது மீனவர்களின் உயிரைப் பலிகொண்ட நிலையில், சம்பவத்திற்குப் பிறகு காசிமேட்டிற்கு வந்த ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.வும் தமிழக நிதியமைச்சருமான மரிய வில்சன், தன் பங்கிற்கு இந்தத் துயரச் சம்பவத்திற்கான பழியை மீனவர்கள் மீதே சுமத்தும் வேலையில் இறங்கினார். கடலில் மூழ்கிய படகில் இஸ்ரோ (ISRO) நிறுவனத்தின் டிரான்ஸ்பாண்டர் கருவி பொறுத்தப்படாததே படகு இருந்த இடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் போனதற்குக் காரணம் என்று கூறி மீனவர்களே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்ளாததுதான் பிரச்சினைக்குக் காரணம் எனப் பேசினார்.

ஆனால், இந்த டிரான்ஸ்பாண்டர் கருவியைப் பொருத்த வேண்டிய பொறுப்பு யாருடையது? டிரான்ஸ்பாண்டர் கருவியை தமிழ்நாடு அரசுதான் மீனவர்களின் படகுகளில் இலவசமாகப் பொறுத்தித் தருகிறது. தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான விசைப்படகுகள் உள்ள நிலையில், அரசு முதற்கட்டமாக சுமார் 4,997 விசைப்படகுகளுக்கு மட்டுமே இக்கருவிகளை ஒதுக்கி, படிப்படியாகப் பொருத்தி வருகிறது. இதனால் அனைத்துப் படகுகளுக்கும் இக்கருவிகள் இன்னும் சென்றடையவில்லை

படகுகளில் பொறுத்தப்படும் டிரான்ஸ்பாண்டர் கருவி

அரசே இலவசமாக வழங்க வேண்டிய பாதுகாப்புக் கருவியை அனைத்துப் படகுகளுக்கும் வழங்காமல் வைத்துக்கொண்டு, அந்தக் கருவி இல்லாததால் மீனவர்கள் ஆபத்தில் சிக்கினார்கள் என்று கூறுவது எவ்வளவு பெரிய பொறுப்பற்ற அணுகுமுறை! அரசின் பாதுகாப்புக் கட்டமைப்பில் உள்ள குறைபாட்டிற்கு மீனவர்களை எப்படிப் பொறுப்பாக்க முடியும்?

மேலும், இந்த டிரான்ஸ்பாண்டர் கருவி என்பது கடலில் படகின் இருப்பிடத்தைக் கண்டறியவும், அதன் பயணப் பாதையைக் கண்காணிக்கவும், புயல் போன்ற பேரிடர் காலங்களில் மீனவர்களுடன் தொடர்புகொள்ளவும், மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உதவும் தொழில்நுட்பக் கருவியாகும். இத்தகைய முக்கியமான பாதுகாப்புக் கருவியை அனைத்துப் படகுகளுக்கும் வழங்க வேண்டியது அரசின் கடமை. அந்தக் கடமையைச் சரிவரச் செய்யாத அரசு, இப்போது தனது தோல்வியை மறைப்பதற்காகப் பாதுகாப்புக் கருவி இல்லாத மீனவர்கள் மீதே பழியைப் போடுகிறது.

மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது அவர்களது உயிரைப் பாதுகாப்பதற்கான அடிப்படை ஏற்பாடுகளைச் செய்வது அரசின் பொறுப்பு. புயல் எச்சரிக்கை விடுப்பதோடு அந்தப் பொறுப்பு முடிந்துவிடுவதில்லை. பாதுகாப்புக் கருவிகளை அனைத்துப் படகுகளுக்கும் வழங்குவது, அவசரகாலங்களில் உடனடியாகத் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்வது, அதற்குத் தேவையான கப்பல்கள், விமானங்கள், தகவல் தொடர்பு வசதிகளை ஏற்படுத்துவது எனப் பல்வேறு கடமைகள் அரசுக்கு இருக்கின்றன.

காசிமேடு மீனவர்களின் உயிரிழப்புச் சம்பவத்தில், அரசு மேற்கொள்ள வேண்டிய இந்தக் கடமைகள் அனைத்தையும் தவெக அரசு காற்றில் பறக்கவிட்டுவிட்டது. ஒன்பது மீனவர்களின் உயிரிழப்புக்குக் காரணமான அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் அலட்சியத்திற்குத் தமிழக அரசு பதிலளித்தே ஆக வேண்டும். வெறுமனே நிவாரணத் தொகையை அறிவித்துவிட்டு இந்தத் துயரச் சம்பவத்திலிருந்து அரசு தப்பித்துவிட முடியாது. மீனவர்களைக் காப்பாற்றத் தவறிய அதிகாரிகள் மீதும், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறிய அமைச்சர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஆனால், அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்றால், நிச்சயமாக எடுக்கப்படாது என்பதுதான் கடந்த கால அனுபவங்கள் நமக்கு உணர்த்தும் பாடம். ஏனெனில், கடற்படையும் கடலோரக் காவல்படையும் மீனவர்களின் உயிரைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டவை அல்ல. மற்ற அரசுப் படைகளைப் போலவே மக்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் இவை, நெருக்கடியான நேரங்களில் மக்களைப் பாதுகாக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இதற்கு முன்பு ஒக்கி புயலும் கஜா புயலும் தமிழகத்தைத் தாக்கியபோதும், கடலில் சிக்கித் தத்தளித்த மீனவர்களைக் காப்பாற்றக் கடற்படையும் வரவில்லை; கடலோரக் காவல்படையும் வரவில்லை. தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டிய அவலநிலையில் தான் இன்றைக்கு மீனவர்கள் இருக்கிறார்கள்.

  • அறிவு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன