வேதாந்தா விபத்து : தொழிலாளர்களின் பாதுகாப்பை விழுங்கும் இலாப வெறி
இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஒரு வேளை சோற்றுக்காக ஒவ்வொரு நாளும் மரணத்தின் நிழலிலேயே உழைக்கிறார்கள். இந்தியத் தொழிற்சாலைகளில் அன்றாடம் தொழிலாளர்களுக்கு நிகழக்கூடிய மரணங்களும், காயங்களும் ஒரு செய்தியாக பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் ஈசல் பூச்சியாய் வந்த வேகத்தில், மறைந்து விடுகின்றன. மேலும் சில மரணங்களும், காயங்களும் ஆலைகளுக்குள்ளேயே புதைக்கப்படுகின்றன.
ஒவ்வொரு நாளும் இந்தியத் தொழிற்சாலைகளில் விபத்துக்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. தொழிலாளர்கள் இறந்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அதை பற்றிய செய்திகள் இருட்டடிப்பு செய்யப்படுகிறது அல்லது ஒரு சில நாட்களிலேயே மறக்கடிக்கப்படுகிறது.
இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இயங்கும் முதலாளித்துவ வர்க்கம், தொழிலாளர்களின் வியர்வையை மட்டுமின்றி அவர்களின் உயிர்களையும் பறிக்கின்றன. இதற்கு உதாரணமாக கடந்த மாதம் ஏப்ரல் 14-ஆம் தேதியன்று சத்தீஸ்கரின் சக்தி எனும் மாவட்டத்தில் செயல்படும் நாசகார வேதாந்தா நிறுவனத்தின் அனல் மின்நிலையத்தில் கொதிகலன் (பாய்லர்) வெடித்ததில் 26 தொழிலாளர்கள் உயிரிழந்ததும், பல பேர் காயமடைந்ததும் கண் முன் சாட்சியாக இருக்கிறது. இருந்தும் அத்தொழிலாளர்களின் மரணங்கள் தொழிற்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட விபத்து என்று சித்தரிக்கப்படுகிறது.
மரணமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெயிண்டிங் மற்றும் வெல்டிங் வேலைக்காக பல்வேறு மாநிலங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள். அவர்கள் அனைவரும் தொழிற்சங்க உரிமை ஏதுமற்ற புலம் பெயர் தொழிலாளர்கள்.
இக்கோர விபத்து நடந்த அன்று அனல் மின்நிலையத்தின் கொதிகலனில் நிலக்கரி அதிகப்படியாக குவிந்ததால், உயர் அழுத்த நீராவிக் குழாய் தீடீரென வெடித்தது. இதிலிருந்து சுமார் 600 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொண்ட நீராவி வெளியேறி, அந்தப் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது கொட்டியது.
உணவு இடைவேளையின் போது கொதிகலன் வெடித்ததால் பெரும்பாலான தொழிலாளர்கள் விபத்து நடந்த இடத்திலேயே இருந்துள்ளனர். ஒரு ஏவுகணை வந்து விழுந்தது போன்ற பெரும் சத்தம் கேட்டது; எங்கும் புகையும் அலறல் சத்தமுமே இருந்தது என நேரில் பார்த்தவர்கள் இச்சம்பவத்தை விவரிக்கின்றனர்.
ஆந்திரா, சத்தீஸ்கர், ஒடிசா, பஞ்சாப் போன்ற நான்கு மாநிலங்களில் மொத்தம் 4,780 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின்நிலையங்களை இயக்கிவரும் வேதாந்தா எனும் நாசகார நிறுவனத்தில் தான் இந்த துயரச் சம்பவம் நடைப்பெற்றிருக்கிறது.
இதற்கு முன்பு கடந்த டிசம்பர் 2025-ஆம் ஆண்டில் ஆந்திராவில் மருந்து உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் ரியாக்டர் வெடித்ததில் 18 பேர் உயிரிழந்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம். இதே போன்று நாட்டில் பல தொழிற்சாலைகளில் விபத்துகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் முதலாளிகளும், அரசும் தொழிலாளர்களின் உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக எவ்வித நடவடிக்கையிலும் இறங்குவதில்லை.
இந்தியா ஸ்பெண்ட் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமை மனுவின்படி, நாட்டில் பதிவுசெய்யப்பட்ட தொழிற்சாலைகளில் மட்டும் 2017 மற்றும் 2020-ஆம் ஆண்டிற்கு இடையில் ஆண்டுதோறும் சராசரியாக 1,109 பேர் உயிரிழந்திருக்கின்றனர் 4,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் தொழிற்சாலைகளில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக சுமார் 660 பேர் உயிரிழந்துள்ளனர். 109 பேர் காயமடைந்துள்ளனர். அதேபோல் சுமார் 30 கொதிகலன் மற்றும் எரிவாயு வெடிப்பு (boiler and gas explosion) சம்பவங்கள் நடந்திருப்பதாக தேசிய குற்றப் பதிவேடு ஆணைத்தின் அறிக்கை கூறுகிறது.
இச்சம்பவங்கள் அனைத்தும் விபத்துக்கள் அல்ல. மாறாக இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையின் கீழ் நிகழ்த்தப்படும் குரூரமான, இரக்கமற்ற படுகொலைகள். மேலும் இப்படுகொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
வேதாந்தாவின் கொதிகலன் வெடிப்பு ஏற்பட்ட ஒரு சில நாட்களிலேயே சத்தீஸ்கர் மாநில அரசு, அந்நிறுவனத்தின் இயக்குநரான அனில் அகர்வால் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது. பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 106 (அலட்சியத்தால் மரணம் விளைவித்தல்), 289 (இயந்திரங்கள் தொடர்பான அலட்சியச் செயல்) மற்றும் 3(5) (பொது நோக்கம்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டன.
இது போன்ற வழக்குப் பிரிவுகளின் கீழ் முதலாளிகள் எளிதாக தப்பிவிட முடியும் என சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வழக்குப் பிரிவு 289-இன் கீழ் அதிகபட்சமாக அபராதம் 5000 ரூபாயோ, ஆறு மாதம் சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம். வழக்குப் பிரிவு 106-இன் கீழ் இரண்டு வருடம் முதல் பத்து வருடம் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
இந்திய தொழிலாளர் நீதிமன்றத்தில் மட்டும் 8000-திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன என்கிறது இந்து ஆங்கில நாளேடு. இதில் பல வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. தொழிலாளர்களுக்கு நீதி வேண்டும் என்பதற்காக அரசு எவ்வளவு முனைப்புடன் செயல்படுகிறது என்பதை ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருப்பதிலிருந்து நாம் புரிந்து கொள்ளமுடியும்.
கடந்த 2018 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் மட்டும் தொழிற்சாலை விபத்துக்களில் 3331 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால் இதே காலக்கட்டத்தில் தொழிற்சாலை சட்ட குற்றங்களுக்காக 14 பேர் மட்டுமே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்திய சட்டங்களின் ஓட்டைகளின் மூலம் முதலாளிகள் எப்படி எளிதாக தப்புகிறார்கள் என்பதற்கு சாட்சியாக இத்தண்டனை விகிதம் இருக்கிறது.
போபால் விஷவாயு கசிவு மனிதனால் உருவாக்கப்பட்ட மாபெரும் தொழில்துறை பேரிடருக்கு (Man-made Industrial Disaster) முதன்மையான எடுத்துக்காட்டாகும். இது 1984-ஆம் ஆண்டு டிசம்பர் 2 மற்றும் 3-ஆம் தேதிகளில், போபாலில் உள்ள யூனியன் கார்பைடு (Union Carbide) பூச்சிக்கொல்லி ஆலையில் இருந்து ‘மீத்தைல் ஐசோசயனேட்’ (MIC) என்ற நச்சு வாயு கசிந்து ஆயிரக்கணக்கான மக்கள் மாண்டனர். இருந்தும் ஆலையின் முதலாளியான ஆண்டர்சனை காப்பாற்றிய இந்திய அரசமைப்பும், ஆட்சியாளர்களும் வேதாந்தா இயக்குநரான அனில் அகர்வால் போன்ற முதலாளிகளுக்கு தண்டனையை பெற்றுக் தருமா என்ன?
சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள வேதாந்தா நிறுவனம் அனல் மின்நிலையத்தின் பராமரிப்பு பணிகளை என்.எஸ்.ஜி.எல் என்ற துணை ஒப்பந்த நிறுவனத்திடம் ஒப்படைத்திருந்தது. பகாசுர தொழிற்சாலைகள் தனது இலாபத்திற்காக ஒப்பந்த முறை எனும் சுரண்டல் வடிவத்தைப் பின்பற்றுகின்றன. இதன் மூலம் பெரும்பாலான வேலைகளில் அதிலும் ஆபத்து நிறைந்த வேலைகளில் ஒப்பந்த தொழிலாளர்களே தினக்கூலி அடிப்படையில் பணியில் அமர்த்தப்படுகின்றனர். எந்தவொரு பயிற்சியும் இல்லாமல் ஆபத்தான வேலைகளை செய்யும் இந்த ஒப்பந்த தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி காயமடைந்தால் கூட அவர்களுக்கு மருத்துவக் காப்பீடு கிடைப்பதில்லை.
இந்தியாவில் 85 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஒப்பந்த முறையிலேயே வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு தொழிலாளர்கள் உரிமை என்பது பெயரளவுக்கே இருக்கிறது. இலாப வெறி கொண்டு அலையும் முதலாளித்துவ சமூகத்தின் இருண்ட வரலாற்றில் இத்தொழிலாளர்களின் கொலைகள் பற்றிய செய்திகள் பதிவு செய்யப்படாமல் மறைக்கப்படுகின்றன.
ஒப்பந்த தொழிலாளர்கள் அன்றாடம் தமது கை விரல்கள், உயிர்கள் என அனைத்தையும் இழந்து வருகின்றனர். அவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டால் வழக்குகள் பதிவு செய்யாமல் இருப்பதற்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். நாட்டின் ஒவ்வொரு துறையிலும் ஆபத்து நிறைந்த அனைத்து பணிகளிலும் ஒப்பந்த தொழிலாளர்களே அமர்த்தப்படுகின்றனர்.
வேதாந்தா, என்.ஜி.எஸ்.எல் நிறுவனம் அதன் இலாபத்திற்காக பணியில் அமர்த்தப்பட்ட புலம் பெயர் தொழிலாளர்களின் பயிற்சியின்மை, பாதுகாப்பு குறைபாடுகள் போன்ற பல காரணங்களை இந்த உயிரிழப்புகள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.
சத்தீஸ்கரில் தனது அலுமினியத் தொழிற்சாலைகளின் மின்சாரத் தேவைகளுக்காகவே அதீனா எனும் நிறுவனத்தால் பகுதியளவு கட்டப்பட்டிருந்த அனல் மின்நிலையத்தை வேதாந்தா நிறுவனம் கையகப்படுத்தியது. மூன்றாண்டுகளிலேயே இந்த அனல் மின்நிலையத்தை விரைவாக கட்டி முடித்ததோடு, அதன் முதல் அலகை 600 மெகாவாட் எனும் முழு செயல் திறனில் இயக்கி வந்தது. தொழிலாளர்களின் மரணத்திற்குக் காரணமான கொதிகலனின் தரச் சான்றிதழ், அரசு அதிகாரிகள் சான்றிதழை எப்போது ஆய்வு செய்தனர் போன்ற விபரங்கள் இதுவரை இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.
இந்தியா ஸ்பெண்ட்டின் 2020-ஆம் ஆண்டு பகுப்பாய்வின் படி இந்தியாவில் 3,63,442 தொழிற்சாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தொழிற்சாலைகளின் பாதுகாப்பு அம்சங்களின் ஆய்வுக்காக மொத்தம் 1040 ஆய்வாளர்களின் பணியிடங்களே உள்ளன. இதிலும் 31% பணியிடங்களுக்கு ஆய்வாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதன்படி ஒரு ஆய்வாளர் சுமார் 412 தொழிற்சாலைகளில் பாதுகாப்பு சம்பந்தமான பணிகளில் ஆய்வு செய்ய வேண்டும் என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லை. இதனால் பல தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் பாதுகாப்பு சம்பந்தமான அம்சங்களை அரசு ஆய்வாளர்கள் பரிசோதனை செய்கிறார்களா என்பதே கேள்விக் குறியாக இருக்கிறது.
ஏற்கனவே தொழிலாளர்களின் நிலைமை மோசமாக இருக்கும் இக்கட்டத்தில் தாராளமயக் கொள்கையை தீவிரமாக அமுல்படுத்திவரும் மோடி அரசு, கார்ப்பரேட்டுகளை ஈர்ப்பதற்காக தொழில் முதலீடுகளை எளிதாக்குவதே (ease of doing business) தமது இலட்சியம் என்று மார்தட்டுகிறது. தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டுவதற்காகவும், தொழில் முதலீடுகளை எளிதாக்கி கார்ப்பரேட்டுகளை கொழுக்க வைப்பதற்காகவும் மோடி அரசு கொண்டு வந்திருக்கும் நான்கு தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் தொழிலாளர்களின் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
மோடி அரசு கொண்டு வந்திருக்கும் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பின் படி பெரும் நிறுவனங்கள் மட்டுமின்றி அதில் செயல்படும் ஒப்பந்த மற்றும் துணை ஒப்பந்த நிறுவனங்களும், சட்டப்பூர்வமாகவே முதலாளியாகக் கருதப்படுவர். தொழிற்சாலை உரிமம் இல்லாமலேயே சுமார் 49 ஒப்பந்தத் தொழிலாளர்களை ஒரு நிறுவனம் பணியில் அமர்த்த முடியும். மேலும் 40-க்கும் குறைவான தொழிலாளர்கள் வேலை பார்க்கும் மின்சாரம் இல்லா தொழிற்சாலைகளுக்கு தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார சட்டத் தொகுப்பு பொருந்தாது என்கிறது மோடி அரசு. இதன் மூலம் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பாதுகாப்பு மற்றும் சுகாதார சட்டத்திலிருந்து அப்புறப்படுத்துகிறார்கள்.
இப்புதிய சட்டத் தொகுப்பின் படி ஆலைகள் மற்றும் இயந்திரங்கள் வேதாந்தா போன்ற பகாசுர நிறுவனங்களின் உடைமையாக இருந்த போதிலும், ஆலைகளில் விபத்து ஏற்பட்டால் அந்நிறுவனம் பொறுப்பேற்க வேண்டிய அவசியமில்லை. மாறாக பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனங்களே விபத்துக்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக வரும் காலங்களில் மோடி அரசு கொண்டுவந்துள்ள நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பின் படி பெரும் முதலாளித்துவ நிறுவனங்களில் விபத்து ஏற்பட்டால் அதன் முதலாளி அல்லது அதன் அதிகாரிகள் மீது கூட வழக்குகள் போட முடியாது.
மேலும் தொழிற்சாலையின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் ஆய்வுக்கான சான்றிதழை ஒரு முதலாளி, அவர் நியமிக்கும் நபரை வைத்து வாங்கி கொள்ள முடியும். முதலாளியால் நியமிக்கப்படும் நபர் அரசு ஆய்வாளர் போல அந்நிறுவனத்தின் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியாது. தேவைப்படும் பட்சத்தில் நிறுவனங்களுக்கு ஆலோசனைகள் மட்டுமே வழங்க முடியும். இதன்படி தொழில் முனைவாக்கத்தை எளிதாக்குதல் என்ற பெயரில் தனியார் முதலாளிகளின் ஆலை உபகரணங்கள், அதன் பாதுகாப்பு அம்சங்கள் போன்றவற்றில் இனிமேல் அரசு தலையிடாது என்று மோடி அரசின் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பு கூறுகிறது.
அனில் அகர்வால் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தவுடன் ஜிண்டால் குழுமத்தின் முதலாளியும் பா.ஜ.க-வின் அமைச்சருமான நவீன் ஜிண்டால், இந்த விபத்திற்கு அனில் அகர்வாலை எப்படி குற்றவாளியாக்க முடியும்? அரசு நிறுவனங்களில் விபத்து நடந்து தொழிலாளர்கள் உயிரிழந்தால் அரசு அதிகாரிகளை கைது செய்யமுடியுமா? பிக்கி மற்றும் அசோசேம் போன்ற முதலாளித்துவ நிறுவனங்களின் சங்கங்கள் இதில் உடனடியாக தலையிட வேண்டும் என பெரும் முதலாளிகளுக்கு வரிந்து கட்டிக் கொண்டு பேசுகிறார்.
வேதாந்தாவின் இயக்குநரான அனில் அகர்வாலோ, தமது அனல் மின்நிலையத்தின் பராமரிப்பு பணி மற்றும் செயல்பாடுகளின் பொறுப்புகள் என்.ஜி.எஸ்.எல் என்ற நிறுவனத்திடமே ஒப்படைக்கப்பட்டது. ஒப்பந்ததாரர்கள், குழுக்கள், தொழில்நுட்ப நிபுணத்துவம் என அனைத்தும் அவர்களுடையதே என்கிறார்.
மேலும் ஒரு வாகன உரிமையாளர் தனது வாகனத்தையும், பயணிகளையும் பாதுகாப்பாக போக வேண்டிய இடத்திற்குக் கொண்டு செல்வார் என நம்பி ஒரு திறமையான ஓட்டுநரிடம் ஒப்படைப்பதைப் போல, நாங்கள் அதீனா ஆலையை என்.ஜி.எஸ்.எல் நிறுவனத்திடம் ஒப்படைத்தோம் என தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மோடியின் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பு நாடு முழுவதும் பரவலாக அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே தொழிலாளர்களின் மரணங்களுக்கு பொறுப்பேற்காமால் முதலாளிகள் தப்புகின்றனர். இப்புதிய தொகுப்பு நாடு முழுக்க அறிமுகப்படுத்தப்பட்டால் முதலாளிகளின் இலாப வெறிக்காக ஏற்படப் போகும் தொழிலாளர்களின் மரணங்களையும், காயங்களையும் தடுக்க முடியாது என்பது திண்ணம்.
தொழிலாளர்களின் வியர்வையோடு அவர்களின் இரத்தத்தையும் உறிஞ்சிக் கொழுக்கும் முதலாளித்துவம் தனது கோரப் பற்களில் படிந்திருக்கும் இரத்தக் கறையையும், அதன் வாசனையையும் கவனமாக மறைத்துக் கொள்கிறது. மோடி அரசின் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்போ, தொழிலாளர்களுக்கு எதிராக முதலாளிகளுக்கு வெண்சாமரம் வீசுகிறது. தொழிலாளர்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம்?
- தாமிரபரணி


