தவெக ஆட்சியில் யூனிட் மின்சாரம் ரூ.35:
ஊழலா? நிர்வாகச் சீர்கேடா? தனியார்மயமா?

அக்டோபர் 23, 2026
அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்படுவது, மின் வாரியம் நஷ்டத்தில் இயங்குவது, மின்சாரக் கட்டணம் உயர்வது இவையெல்லாம் அப்போதைய ஆளும் அரசாங்கத்தின் தனிப்பட்ட நிர்வாகக் கோளாறாகப் பார்க்க முடியாது. இவையெல்லாம் தனியார்மயத்தால் ஏற்படும் பின்விளைவுகள் மட்டுமே. யூனிட் மின்சாரத்தை  35 ரூபாய்க்கு வாங்குவது, மின் வாரியம் 2.7 லட்சம் கடன் சுமையெல்லாம் பால் விலை உயர்வாக, சொத்துவரி உயர்வாக, சாரய விற்பனையாக, மின் கட்டண உயர்வாக, பேருந்து கட்டண உயர்வாக உழைக்கும் மக்களாகிய நமது தலையில் தான் விடியும்.

தவெக அரசு மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு 35 ரூபாய்க்கு தனியாரிடமிருந்து வாங்கும் திட்டத்தைப் பல்வேறு கட்சிகளும் தமிழ்நாட்டு மக்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கும் இத்திட்டத்திற்கு முட்டுக்கொடுக்கும் வகையில், ‘இத்தனியார் கொள்முதல் ஒப்பந்தம் அக்டோபர் 12 முதல் 31-ஆம் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும்’ என்றும், ‘ஒருநாளுக்கு 1,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும்’ என்றும் மின்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் கூறியுள்ளார். ஆனால், கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் ஒரு யூனிட் மின்சாரம் 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும், நாளொன்றுக்கு ரூ.77 கோடி என 30 நாட்களில் (செப் 15 – அக் 15) ரூ.2200 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாகவும் மின்வாரிய பொறியாளர் அமைப்பைச் சேர்ந்த ச.காந்தி கூறுகிறார். ஆர்.எஸ்.எஸ்.ஸின் வளர்ப்பான அமைச்சர் நிர்மல்குமார், உண்மையைப் பேசினால்தான் நாம் ஆச்சரியப்படவேண்டும்!

மேலும், ‘கடந்த 2025-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 16,800 மெகாவாட்டாக இருந்த தமிழ்நாட்டின்  மின்தேவை தற்போது 21,700 மெகாவாட்டாக உயர்ந்திருக்கிறது; ஒன்றிய மின் தொகுப்பிலிருந்து தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய மின்சாரத்தில் பற்றாக்குறை உள்ளது; காற்றாலை மின் உற்பத்தி சரிந்துள்ளது; இதனால் ஏற்படும் மின் பற்றாக்குறையைச் சரி செய்யதான் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது’ என்று சொல்கிறார், அமைச்சர் நிர்மல் குமார். 

இவ்வாறு தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்படுவது மிகப் பெரிய ஊழல் என்றும் இது தவெக அரசின் நிர்வாகத் திறனின்மை என்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. ‘இப்படி கொள்ளை விலைக்கு தனியாரிடம் மின்சாரம் வாங்கத்தான் இத்தனை நாட்களாக இந்த ஆட்சியாளர்கள் செயற்கை மின் தட்டுப்பாட்டை உருவாக்கினார்களா?’ என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வாறு இவ்விவகாரம் குறித்து பலரும் பல விதங்களில் பேசி வருகிறார்கள். எனில், உண்மை என்ன?

‘Devil is in the Details’, அதாவது, மிக நுணுக்கமான விவரங்களில்தான் உண்மை என்னும் பூதம் ஒளிந்துள்ளது என்பார்கள். அவ்வகையில் தமிழ்நாட்டின் மின்சார வாரியத்தில் கட்டமைப்பு ரீதியான சிக்கல்கள் குறித்த விவரங்களிலிருந்துதான் மின்சார விலை உயர்வு பற்றிய உண்மையைக் காண முடியும்.

ஏன் தனியாரிடமிருந்து அரசு அதிக விலைக்கு மின்சாரம் வாங்குகிறது? என்ற கேள்விக்கு, ‘தமிழ்நாட்டிற்குத் தேவைப்படும் மின்சாரத்தை விட அரசின் மின் உற்பத்தி குறைவாகவே இருக்கிறது; இந்த பற்றாக்குறை காரணமாகவே தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை அரசு வாங்குகிறது’ என்று அதிகாரிகளும் ஆளும் வர்க்க ஊதுகுழல்களும் பதிலளிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் நிலவும் மின் பற்றாக்குறைக்குக் காரணம் என்ன?

தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டின் மின் தேவை நாளொன்றுக்கு சராசரியாக 19,000 மெகாவாட்டாக இருக்கிறது. இது கோடைக்காலங்களில் இன்னும் அதிகமாகலாம். அதேநேரத்தில், தமிழ்நாட்டில் 5,780 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறன் கொண்ட அரசுக்குச் சொந்தமான அனல் மின்நிலையங்கள் உள்ளன. அதுபோக புனல் மின்நிலையங்களும் இருக்கின்றன. மேலும், என்.எல்.சி, கூடங்குளம் அணுமின் நிலையம் போன்றவற்றிலிருந்து ஒன்றிய தொகுப்பாக தமிழ்நாட்டிற்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால், இவையனைத்தும் தமிழ்நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதல்ல. அப்பற்றாக்குறையால்தான் தனியாரிடமிருந்தும் மின்சாரம் வாங்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் அனல் மின் நிலையங்களின் மொத்த உற்பத்தித் திறன் 5,780 மெகாவாட் ஆகும். ஆனால், தமிழ்நாடு அரசின் இந்த மின் உற்பத்தித் திறன் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்பது கசப்பான உண்மை. பொதுவாகவே திமுக, அதிமுக என அந்த கட்சியின் ஆட்சியாக இருந்தாலும், அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையங்கள் 60 முதல் 65 சதவீத செயல்திறனில் மட்டுமே இயக்கப்படுகின்றன. ஏதேனும் ஒரு அனல் மின் நிலைய அலகு பழுதானால், மற்ற அலகுகள் 70 முதல் 85 சதவீத செயல்திறனில் இயக்கப்படுகின்றன. இவ்வாறு 85 சதவீத செயல்திறன் வரையில் மின் உற்பத்தி அலகுகளை இயக்க முடியும், ஆனால் 65 சதவீத செயல்திறனில் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதற்குக் காரணம் அரசு தன் சொந்த மின்னுற்பத்தியைக் கைகழுவி, தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கொள்கை ரீதியிலான முடிவே ஆகும்.

மேலும், தற்போதைய நிலையில் அரசு அனல் மின் நிலையங்கள் ஒட்டுமொத்த மின் தேவையில் சுமார் 15 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்கின்றன. மீதமுள்ள மின்தேவைக்காக, புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், ஒன்றிய மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து கிடைக்கும் ஒதுக்கீடு மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்வது ஆகியவற்றையே சார்ந்திருக்கிறோம்.

அரசு மின்னுற்பத்தியைக் கைகழு வேண்டும் என்ற தனியார்மயக் கொள்கை முடிவை கடந்த அதிமுக, திமுக அரசுகள் அமல்படுத்தியன் விளைவாகவே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. தற்போது மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசு அதே கொள்கையை மேலும் மூர்க்கத்தனமாகவும் தீவிரமாகவும் அமல்படுத்துகிறது. ஆம், தவெக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து மின்னுற்பத்தி மேலும் சீரழிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அனல் மின் நிலையங்களின் மின்சார உற்பத்தி திறன் 5,780 மெகாவாட், 420 மெகாவாட் திறன் கொண்ட அலகுகள் மட்டுமே தற்போது பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் பல உற்பத்தி அலகுகள் செயல்படாமல் வேண்டுமென்றே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

காடம்பாறை நீரேற்று மின் நிலையத்தின் 400 மெகாவாட் மின்சாரம் கடந்த 450 நாட்களாக உற்பத்தி செய்யப்படவில்லை. இதேபோல், வடசென்னை அனல் மின் நிலையம், தூத்துக்குடி அனல்மின் நிலையம், மேட்டூர் அனல்மின் நிலையம் ஆகியவற்றில் சில உற்பத்தி அலகுகள் செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மொத்தத்தில், 2250 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட உற்பத்தி அலகுகள் எவ்வித காரணமும் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார், ச.காந்தி. இவ்வாறு அதிமுக, திமுக ஆட்சிக் காலத்தில் சராசரியாக 65 சதவீத உற்பத்தி திறனில் இயங்கி வந்த அனல் மின்நிலைய உற்பத்தி, தற்போது தவெக ஆட்சியில் 35 சதவீதமாக வெட்டிச் சுருக்கப்பட்டுள்ளது!

தவெக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அடிக்கடி மின் தடை நிகழ்ந்தது. மக்கள் இரவு நேரங்களிலும் வீதியில் இறங்கிப் போராடினார்கள். அப்போதெல்லாம், மின்சார விநியோகத்தில் இருக்கும் பிரச்சினைகள் காரணமாகத்தான் இந்த மின் தடை ஏற்பட்டதாக அரசு தரப்பில் சொல்லப்பட்டது. அதாவது, மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரையில் அதிகமான மின்சாரம் தேவைப்படும் பீக் ஹவர் (Peak hour) என்று அழைக்கப்படும். கோடைக் காலத்தில் இந்நேரத்தில் அதிகமான மின்சாரம் நுகரப்படுவதால், பவர் டிரிப்பிங் பிரச்சினை காரணமாக மின் தடை ஏற்படுவதாகவும், அதனைச் சரி செய்ய மின் வாரியத்தில் ஆள் பற்றாக்குறை இருப்பதால் அதிக நேரம் எடுப்பதாகவும் சொல்லப்பட்டது. அதனால் தான் அதிக நேரம் மின் தடை ஏற்படுவதாக அரசு தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால், கோடைக் காலம் முடிந்த மின் தேவை குறைந்த பின்னரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களிலும் இந்த மின் தடை தொடர்ந்தது. இந்த மின் தடையை, 2250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதோடு தொடர்புபடுத்திப் பார்க்கும்போது, தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கவே இவ்வாறு தவெக அரசு திட்டமிட்டு மின் உற்பத்தியைச் சீரழித்து செயற்கையாக மின் தடையை ஏற்படுத்தியிருப்பது அம்பலமாகிறது.

ஏன் ஒரு மாநில அரசு தனது வளர்ந்து வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தனது மின் உற்பத்தித் திறனை வளர்த்துக்கொள்ளாமல் இருக்கிறது? புதிய மின் உற்பத்தி நிலையங்களைத் திறந்து மின் உற்பத்தியில் தன்னிறைவு பெறாமல் ஏன் தனியார் மின்சாரத்தை நம்பி இருக்கிறது? இந்தக் கேள்விகள் இயல்பாகவே நம்முன் எழுகின்றன.

சுய மின்னுற்பத்தி சீரழிக்கப்பட்டதும் – தனியார்மயம் தீவிரமாக்கப்பட்டதும்

1980-களில் தமிழ்நாடு அரசு தனது சொந்தத் தேவைக்கான மின் உற்பத்தியை வளர்த்திருந்தது. அப்போது தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை இருக்கவில்லை. மின்சாரத்தை தனியாரிடம் வாங்க வேண்டிய நிலை இருக்கவில்லை. ஆனால் அப்போது பல கிராமங்கள் முழுமையான மின் இணைப்புகளைப் பெறாமல் இருந்தன என்பது உண்மைதான். அதன் பின் தொடர்ச்சியாக அதிகரித்து வந்த தமிழ்நாட்டின் மின் தேவையை புதிய உற்பத்தி நிலையங்களை உருவாக்கி ஈடு செய்திருக்க முடியும். அதற்கான திறன் தமிழ்நாடு அரசிடம் இருந்தது. ஆனால் அரசு செய்யவில்லை. 1990-களில் புதிய தாராளவாதக் கொள்கை அமலுக்கு வந்ததால், அரசு மின் உற்பத்தித் திறனை வளர்ப்பதற்கான செலவுகளைச் சுருக்கி மின்துறையைத் தனியாருக்குத் திறந்துவிட வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டது.

1992-97 காலகட்டத்தில் வந்த எட்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் புதிய மின் உற்பத்திக்காக அதுவரையில் ஒதுக்கப்பட்டு வந்த மூலதன ஒதுக்கீடானது ரத்து செய்யப்பட்டது. இதனால் அரசு தனது மின் தேவைக்கான புதிய அனல் அல்லது புனல் மின் நிலையங்களைக் கட்டுவதை கொள்கை ரீதியாகவே கைவிட்டது. இதனால், 2002-ல் வெறும் 3% ஆகவும் இருந்த தனியார் மின் உற்பத்தி, தற்போது 51%-க்கும் மேல் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு தனது மின் தேவைக்காகப் பாதிக்கும் மேல் தனியாரைத்தான் சார்ந்திருக்கிறது.

அதிகரித்துவரும் மின் தேவைக்கு ஏற்றவாறு உற்பத்தி நிலையங்களை கட்டமைக்க அரசிடம் பணமில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் அவர்களின் சொந்த பணத்திலோ கட்டப்படுகிறது. தனியார் நிறுவனம் மின் உற்பத்தி நிலையங்களை கட்டமைக்க தேவையான நிதியில் 70 சதவீதம் வரை அரசு வங்கிகள்தான் கடன் கொடுக்கின்றன. மேலும், மலிவான விலைக்கு நிலம், ஐந்தாண்டுகள் வரி விலக்கு என்று அரசு தனியாருக்கு பணத்தை வாரி இறைக்கிறது.

இதுபோக, தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கான லாபத்தை உறுதி செய்ய வகையில், அவற்றிடமிருந்து அரசு மின்சாரம் வாங்கும் போது அந்நிறுவனம் முதலீடு செய்த பணத்தில் 24 சதவீதத்தை ஆண்டுதோறும் மூலதனக் கட்டணமாக அரசு செலுத்துகிறது. இவ்வளவு கொட்டிக் கொடுக்கும் அரசுக்கு தனியார் நிறுவனங்கள் கொடுப்பது என்ன தெரியுமா? அந்நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய செலவிடப்பட்ட தொகையை விட நான்கு மடங்கு அதிகமான விலைக்கு அரசிடம் விற்பது.

மேலும் தனியார் நிறுவனங்களிலிடமிருந்து அரசு மின்சாரம் வாங்கினாலும் வாங்காவிட்டாலும் ஒப்பந்தம் செய்து கொண்ட மின்சாரத்திற்காக அரசு நிலைக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நிலைக்கட்டணம் என்பது மின்சாரத்தின் விலையில் சாராத தனிக் கட்டணமாகும். இதுபோன்று நீண்ட கால ஒப்பந்தம், இடைக்கால ஒப்பந்தம் என்ற வகையில் அரசு தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்குகிறது.

தமிழ்நாடு அரசு செய்து கொண்ட இடைக்கால ஒப்பந்தப்படி ஒருநாளுக்கு 2,814 மெகாவாட் மின்சாரத்தை அரசு தனியாரிடமிருந்து பெற வேண்டும். ஆனால் அரசு 1,500 மெகாவாட் மட்டுமே வாங்குகிறது. ஆனால் வாங்காத 1,314 மெகாவாட் மின்சாரத்திற்கு சேர்த்து தமிழ்நாடு அரசு கட்டணம் செலுத்தி வருகிறது. இதனால் ஒரு ஆண்டுக்கு தமிழ்நாடு அரசுக்கு 3,453 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

தற்போதைய நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் 2.7 லட்சம் கோடி கடனில் இருப்பதாக இதே நிர்மல்குமார் தான் ஆட்சிக்கு வந்ததும் வெள்ளை அறிக்கை வாசித்தார். இவ்வாறு மின் வாரியம் கடனில் இயங்குவதற்கு, ஏழை மக்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்குவதும், விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்குவதும் தான் காரணம் என்று தனியார்மய ஆதரவாளர்கள் பேசித் திரிகிறார்கள். ஆனால், தனியார் மின் கொள்முதல் என்ற பெயரில் வாங்காத மின்சாரத்திற்கு நிலைக் கட்டணமும், மூலதனக் கட்டணமும் செலுத்துவதே மின் வாரியத்தின்  நஷ்டத்திற்கு முக்கியக் காரணமாகும்.

2021-22 நிதியாண்டில் தமிழ்நாடு மின் வாரியம் ரூ. 24,576 கோடி நஷ்டத்தில் இயங்கியது. இந்த நஷ்டத்தை சரி செய்வதாக சொல்லி ஒரு யூனிட்டிற்கு 5.72  ரூபாயாக இருந்த மின் கட்டணத்தை 7.85  ரூபாயாக உயர்த்தினார்கள். இவ்வாறு கட்டணம் உயர்த்தப்பட்ட பின்னரும் 2022-23 நிதியாண்டில் மின் வாரியத்திற்கு ரூ. 26,499 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இதிலிருந்து மக்களுக்கு வழங்கப்படும் மின் கட்டண சலுகைகளால் நஷ்டம் ஏற்படவில்லை என்பதும், தனியார் மின் உற்பத்தியாளர்களுக்கு அரசு கொடுக்கும் சலுகைகள் தான் நஷ்டத்திற்கு காரணம் என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என அனைத்து ஓட்டுக்கட்சிகளும் இந்த தனியார்மயக் கொள்கையைத் தான் நடைமுறைப்படுத்துகிறார்கள். தவெக அரசு இதுவரை இல்லாத அளவில் அசுர வேகத்தில் மின்துறையைத் தனியாருக்குத் தாரை வார்த்து வருகிறது. ஒவ்வொரு கட்சி ஆட்சியிலிருக்கும் போதும் மற்ற கட்சிகள் மின் வாரியத்தின் நஷ்டத்தை குறித்து பேசி அரசியல் செய்வார்கள். ஆளும் கட்சி மின் துறையில் ஊழல் செய்வதாக சொல்வார்கள். ஆனால் யாருமே தனியார் நிறுவனங்களுக்கு அரசு படியளப்பது பற்றி மூச்சு கூட விடமாட்டார்கள். ஏனெனில் எல்லா ஓட்டுக்கட்சிகளும் தனியார்மயத்தின் ஆதரவாளர்கள் தான்.

இதனால் தான் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்படுவது, மின் வாரியம் நஷ்டத்தில் இயங்குவது, மின்சாரக் கட்டணம் உயர்வது இவையெல்லாம் அப்போதைய ஆளும் அரசாங்கத்தின் தனிப்பட்ட நிர்வாகக் கோளாறாகப் பார்க்க முடியாது என்று சொல்கிறோம். இவையெல்லாம் தனியார்மயத்தால் ஏற்படும் பின்விளைவுகள் மட்டுமே. யூனிட் மின்சாரத்தை  35 ரூபாய்க்கு வாங்குவது, மின் வாரியம் 2.7 லட்சம் கடன் சுமையெல்லாம் பால் விலை உயர்வாக, சொத்துவரி உயர்வாக, சாரய விற்பனையாக, மின் கட்டண உயர்வாக, பேருந்து கட்டண உயர்வாக உழைக்கும் மக்களாகிய நமது தலையில் தான் விடியும்.

  • கலைச் செல்வன்

 

தகவல் உதவி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன