ஐரோப்பாவை உலுக்கும் தொழிலாளர் வர்க்கப் போராட்டங்கள்!

நவம்பர் 4, 2026
ஐரோப்பிய நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் உருவாக்கிய பொருளாதார நெருக்கடிகளின் சுமைகளைத் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் மீது திணித்து வருகின்றன. இதற்கு எதிராக ஐரோப்பியக் கண்டம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தொழிலாளி வர்க்கமும் உழைக்கும் மக்களும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

2008-ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார நெருக்கடியிலிருந்து இன்னும் முழுமையாக மீள முடியாமல் தவித்து வரும் ஐரோப்பியப் பொருளாதாரம், கொரோனா பெருந்தொற்று, ரஷ்யா–உக்ரைன் போர், எரிசக்தி நெருக்கடி, விலைவாசி உயர்வு, அதிகரித்து வரும் ராணுவச் செலவுகள் என அடுத்தடுத்த நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.

இந்த நெருக்கடிகளிலிருந்து பெருமுதலாளிகளையும் நிதி மூலதனக் கும்பல்களையும் பாதுகாப்பதற்காக ஐரோப்பிய அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், இந்த நடவடிக்கைகளால் ஏற்படும் சுமைகள் அனைத்தும் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் தலையிலேயே சுமத்தப்படுகின்றன.

ஊதிய உயர்வைக் கட்டுப்படுத்துவது, ஓய்வூதிய வயதை உயர்த்துவது, சமூக நலத்திட்டங்களுக்கான நிதியைக் குறைப்பது, தொழிலாளர் உரிமைகளைக் கட்டுப்படுத்துவது, பொதுத்துறைச் சேவைகளுக்கான செலவுகளைக் குறைப்பது என அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் மக்களின் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்து வருகின்றன.

குறிப்பாகப் பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, கிரீஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள், விவசாயிகள், இளைஞர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்துப் போராடி வருகின்றனர்.

இந்தப் போராட்டங்கள் வெவ்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்றாலும், அவற்றின் அடிப்படையில் சில பொதுவான பிரச்சினைகள் உள்ளன. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, ஊதியப் பற்றாக்குறை, வேலைவாய்ப்பின்மை, ஓய்வூதியப் பாதுகாப்பு, தொழிலாளர் உரிமைகள் மற்றும் அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான மக்களின் அதிருப்தி ஆகியவையே அவை.

2008 முதல் தொடரும் பொருளாதார நெருக்கடி: சுமைகளைச் சுமக்கும் உழைக்கும் மக்கள்!

2008-ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதித்தது. வங்கிகளின் நிதி நெருக்கடி, பெருநிறுவனங்களின் திவால்கள், அரசுகளின் கடன் சுமை ஆகியவற்றைச் சமாளிப்பதற்காகப் பல ஐரோப்பிய நாடுகள் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டன. குறிப்பாகக் கிரீஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், அயர்லாந்து, இத்தாலி போன்ற நாடுகள் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டன.

அரசின் செலவுகளைக் குறைப்பதாகக் கூறி ஊதியங்கள் குறைக்கப்பட்டன; ஓய்வூதியச் சலுகைகள் கட்டுப்படுத்தப்பட்டன; பொதுத்துறை நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்யப்பட்டது. மருத்துவம், கல்வி, சமூகப் பாதுகாப்பு போன்ற அடிப்படைத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளும் பல இடங்களில் வெட்டிக் குறைக்கப்பட்டன.

இதன் விளைவாக வேலையின்மை அதிகரித்தது. குறிப்பாக இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றித் தவிக்கும் நிலை உருவானது. பல குடும்பங்கள் கடன் சுமையில் சிக்கித் தவித்தன. வீட்டு வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாத நிலைக்குப் பெரும்பாலான மக்கள் தள்ளப்பட்டனர்.

இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக 2011-ஆம் ஆண்டு ஸ்பெயினில் உருவான Indignados (15-M) மக்கள் இயக்கம், கிரீஸில் நடைபெற்ற சிக்கன நடவடிக்கை எதிர்ப்புப் போராட்டங்கள், போர்ச்சுகலில் நடைபெற்ற மக்கள் பேரணிகள் ஆகியவை ஐரோப்பியத் தொழிலாளர் போராட்ட வரலாற்றில் முக்கியமான நிகழ்வுகளாக அமைந்தன.

2008-ஆம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டதாகப் பொருளாதார அறிக்கைகள் கூறினாலும், அதன் நீண்டகாலப் பாதிப்புகள் பல நாடுகளில் இன்றும் தொடர்கின்றன. வருமான ஏற்றத்தாழ்வு, வீட்டு வசதிப் பிரச்சினை, பொதுக்கடன், வேலைவாய்ப்பின்மை போன்ற கட்டமைப்பு ரீதியான நெருக்கடிகள் இன்னும் மக்களின் வாழ்க்கையைப் பாதித்து வருகின்றன.

உக்ரைன் – ரஷ்யா போரும் ஐரோப்பாவின் எரிசக்தி நெருக்கடியும்!

2022 பிப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான போரைத் தொடங்கியதைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடி ஏற்பட்டது.

ஐரோப்பிய நாடுகள் பல ஆண்டுகளாக ரஷ்யாவிலிருந்து இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெயைப் பெருமளவில் இறக்குமதி செய்து வந்தன. போர் தொடங்கிய பிறகு ரஷ்யாவுடனான எரிசக்தி வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகள், ரஷ்யாவின் விநியோகக் குறைப்புகள், எரிசக்திச் சந்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவை இந்த நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தின.

இதன் விளைவாக இயற்கை எரிவாயுவின் விலை கடுமையாக உயர்ந்தது. மின்சாரக் கட்டணங்கள் அதிகரித்தன. தொழிற்சாலைகளின் உற்பத்திச் செலவுகள் உயர்ந்தன. வீடுகளில் சமையல், வெப்பமூட்டுதல் உள்ளிட்ட அன்றாடத் தேவைகளுக்கான எரிசக்திச் செலவுகளும் அதிகரித்தன.

ஜெர்மனி போன்ற நாடுகள் ரஷ்யாவிலிருந்து கிடைத்து வந்த இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாற்று நாடுகளிலிருந்து எரிசக்தியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. இதனால் எரிசக்தி இறக்குமதிக்கான செலவுகள் அதிகரித்ததுடன், மின்சாரம் மற்றும் எரிபொருளின் விலையும் கடுமையாக உயர்ந்தது. குறிப்பாக 2022-ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் ஏற்பட்ட இயற்கை எரிவாயு விநியோக நெருக்கடியும் எரிபொருள் விலை உயர்வும் மக்களின் அன்றாட வாழ்க்கையையும் தொழில் உற்பத்தியையும் கடுமையாகப் பாதித்தன.

அதே காலகட்டத்தில் பிரான்சில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரியும், பணவீக்கத்திற்கு ஏற்ப ஊதியத்தை மாற்றியமைக்க வலியுறுத்தியும் வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதிகரித்து வந்த வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப ஊதிய உயர்வு வழங்கப்படாததும், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நிர்வாகங்கள் செவிசாய்க்காததும் இந்தப் போராட்டங்களைத் தீவிரப்படுத்தின. இவ்வாறு தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் தொடங்கிய போராட்டங்களும், ஏற்கெனவே நிலவிய எரிசக்தி விநியோக நெருக்கடியும் எரிபொருள் விலை உயர்வும் இணைந்து ஐரோப்பிய உழைக்கும் மக்களின் பொருளாதாரச் சுமையை மேலும் அதிகரித்தன.

எரிசக்தி விலை உயர்வால் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான செலவுகளும் அதிகரித்தன. உரங்கள், போக்குவரத்து, தொழிற்சாலை உற்பத்தி எனப் பல்வேறு துறைகளிலும் செலவுகள் உயர்ந்தன. இறுதியில், இந்தச் செலவு உயர்வுகளின் சுமை நுகர்வோர் மீதே திணிக்கப்பட்டது.

விலைவாசி உயர்வால் திணறும் ஐரோப்பிய உழைக்கும் மக்கள்!

எரிபொருள் மற்றும் எரிசக்தி விலை உயர்வுடன் உணவுப் பொருட்கள், வீட்டு வாடகை, போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கான செலவுகளும் அதிகரித்தன.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு ஏற்பட்ட விநியோகச் சங்கிலிப் பிரச்சினைகள், உற்பத்திச் செலவு உயர்வு, போர் காரணமாகச் சந்தைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவை பணவீக்கத்தை மேலும் தீவிரப்படுத்தின.

ஆனால், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப தொழிலாளர்களின் ஊதியம் உயரவில்லை. இதனால் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு அன்றாடத் தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாத நிலை பல குடும்பங்களுக்கு ஏற்பட்டது. குறிப்பாகக் குறைந்த வருமானம் பெறும் தொழிலாளர்களும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

இதற்கு எதிராகப் பல ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

கிரீஸில் ஊதிய உயர்வு கோரியும், எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்தும் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

போர்ச்சுகலில் ஊதிய உயர்வு, வீட்டு வாடகையைக் கட்டுப்படுத்துதல், அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைத்தல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் பேரணிகளை நடத்தினர்.

ஜெர்மனியில் பொதுத்துறை ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இங்கிலாந்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், ரயில்வே ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரிப் போராடினர். அதேபோல் அதிகரித்து வரும் பணிச்சுமையைக் குறைக்க வேண்டும், போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும், பாதுகாப்பான மற்றும் உரிய வசதிகளுடன் கூடிய பணிச்சூழலை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

இந்தப் போராட்டங்களின் அடிப்படைக் கோரிக்கை ஒன்றுதான் – விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதியத்தை உயர்த்துவதுடன், உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதே!

பிரான்சில் மக்ரோன் அரசின் ஓய்வூதியச் சீர்திருத்தத்திற்கு எதிரான தொழிலாளர் போராட்டம்!

பிரான்சில் 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற மிகப்பெரிய தொழிலாளர் போராட்டங்களுக்குப் பின்னால் இருந்த முக்கியக் காரணம், அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தலைமையிலான அரசு கொண்டுவந்த ஓய்வூதியச் சீர்திருத்தமாகும்.

ஓய்வூதியத் திட்டத்தின் நிதிச்சுமையைக் குறைக்க வேண்டும் என்று கூறி, ஓய்வூதியம் பெறுவதற்கான குறைந்தபட்ச வயதை 62-லிருந்து 64-ஆக உயர்த்தும் சட்டத்தை மக்ரோன் அரசு கொண்டுவந்தது. மேலும், முழுமையான ஓய்வூதியம் பெறுவதற்குத் தேவையான பணிக்காலத்தை 43 ஆண்டுகளாக மாற்றியது. இதனால் தொழிலாளர்கள் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஏற்கெனவே கடுமையான உடல் உழைப்பைச் செலுத்தி வாழ்க்கையை நடத்தி வரும் தொழிலாளர்கள், வயது முதிர்ந்த காலத்திலும் தொடர்ந்து வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறி இந்தச் சீர்திருத்தத்தை எதிர்த்தனர். குறிப்பாகக் கட்டுமானத் தொழிலாளர்கள், சுரங்கத் தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் போன்ற கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் இந்த மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்ற எதிர்ப்பு எழுந்தது.

‘முதியவர்களுக்கு உரிய ஓய்வூதியத்தை வழங்கு! ஓய்வூதிய வயதை உயர்த்தும் சட்டத்தைத் திரும்பப் பெறு! இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கு!’ என்ற கோரிக்கைகளுடன் தொழிற்சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்தன.

2023 ஜனவரி 19-ஆம் தேதி நடைபெற்ற போராட்டங்களில் சுமார் 20 லட்சம் பேர் பங்கேற்றதாகவும், ஜனவரி 31-ஆம் தேதி நடைபெற்ற போராட்டங்களில் சுமார் 28 லட்சம் பேர் பங்கேற்றதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. அதேவேளையில், அரசு வெளியிட்ட கணக்குகள் இதைவிடக் குறைவான எண்ணிக்கையைக் குறிப்பிட்டன.

பாரிஸ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பிரம்மாண்டமான பேரணிகள் நடைபெற்றன. ரயில், விமானப் போக்குவரத்து, பள்ளிகள், பொதுத்துறை அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் போராட்டங்களால் பாதிக்கப்பட்டன.

மக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, மக்ரோன் அரசு அரசியலமைப்பின் சிறப்பு நடைமுறையைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் முழுமையான வாக்கெடுப்பு நடத்தாமலேயே சட்டத்தை நிறைவேற்றியது. இதனால் அரசுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பு மேலும் தீவிரமடைந்தது.

இந்தப் போராட்டம் ஓய்வூதிய வயது உயர்வுக்கு எதிரான போராட்டமாக மட்டும் நின்றுவிடவில்லை. மக்களின் ஓய்வூதியம், மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அடிப்படைத் தேவைகளுக்கான நிதியைக் குறைக்கும் அரசு, மறுபுறம் ராணுவச் செலவுகளையும் போர் தயாரிப்புகளுக்கான நிதி ஒதுக்கீட்டையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொழிலாளர்களின் உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் புறக்கணிக்கும் இத்தகைய அரசுக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டமாகவும் இது விரிவடைந்தது.

பிரிட்டனில் ஊதிய உயர்வு மற்றும் வேலைநிறுத்த உரிமைக்காகப் போராடிய தொழிலாளர்கள்!

உக்ரைன் போர் தொடங்கியதைத் தொடர்ந்து பிரிட்டனிலும் வாழ்க்கைச் செலவு கடுமையாக உயர்ந்தது. உணவுப் பொருட்கள், எரிபொருள், மின்சாரம், வீட்டு வாடகை ஆகியவற்றின் விலை உயர்வால் மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகினர்.

2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு பல ஆண்டுகளாக ஊதிய வளர்ச்சி, பணவீக்கத்துடன் ஒப்பிடும்போது மந்தமாகவே இருந்தது. இதனால் தொழிலாளர்களின் உண்மையான வாங்கும் சக்தி தொடர்ந்து பாதிக்கப்பட்டது.

ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் அரசு ஆட்சியில் இருந்த 2022–2023 காலகட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழகப் பணியாளர்கள், ரயில்வே ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

பணவீக்கத்திற்கு ஏற்ப ஊதியத்தை உயர்த்த வேண்டும், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும், பொதுச் சேவைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்பன அவர்களின் முக்கியக் கோரிக்கைகளாக இருந்தன.

இதற்கிடையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் குறைந்தபட்சச் சேவைகளை வழங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் சட்டத்தை ரிஷி சுனாக் அரசு கொண்டுவந்தது. 2023-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம் Strikes (Minimum Service Levels) Act என அழைக்கப்பட்டது.

இந்தச் சட்டம் தொழிலாளர்களின் வேலைநிறுத்த உரிமையைப் பறிப்பதாகவும், வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், சில சூழல்களில் அவர்களைப் பணிநீக்கம் செய்யவும் வழிவகுப்பதாகவும் தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன.

2023 பிப்ரவரி 1-ஆம் தேதி பிரிட்டனில் நடைபெற்ற ஒருங்கிணைந்த வேலைநிறுத்தத்தில் ஆசிரியர்கள், ரயில்வே ஊழியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்றனர். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

அதேபோல், பல்கலைக்கழக ஆசிரியர்களும் பணியாளர்களும் ஊதியம், ஓய்வூதியம், பணிச்சூழல் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டங்கள் பிரிட்டனில் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பது, மருத்துவம், கல்வி, போக்குவரத்து போன்ற அடிப்படைப் பொதுச் சேவைகளை மேம்படுத்துவது, அவற்றுக்கான அரசின் நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது, உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது ஆகிய கோரிக்கைகளை முன்னிறுத்தின.

உக்ரைன் போருக்காக அதிகரிக்கும் ராணுவச் செலவுகள்: மக்கள் நலனா? போர் தயாரிப்பா?

உக்ரைன் போர் தொடங்கிய பிறகு ஐரோப்பிய நாடுகள் தங்களது ராணுவச் செலவுகளைத் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. உக்ரைனுக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள், ஏவுகணைகள், ராணுவ வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. அதேபோல், உக்ரைனின் அரசுச் செலவுகள், பொருளாதாரம் மற்றும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளுக்கும் பெருமளவு நிதி ஒதுக்கப்படுகிறது.

இதனுடன் ஜெர்மனி, பிரான்ஸ், போலந்து உள்ளிட்ட நாடுகள் தங்களது சொந்த ராணுவக் கட்டமைப்புகளையும் விரிவுபடுத்தி வருகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 2026 அக்டோபர் மாத நிலவரப்படி, உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கியதற்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனுக்காகச் சுமார் 231.5 பில்லியன் யூரோ செலவிட்டுள்ளது.

மக்களின் மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டு வசதி, ஓய்வூதியம் ஆகியவற்றுக்கான நிதியைப் பற்றாக்குறை என்று கூறும் அரசுகள், ராணுவச் செலவுகளை அதிகரிக்கும்போது அதற்கான நிதியை மட்டும் எங்கிருந்து திரட்டுகின்றன? ஓய்வூதிய வயதை உயர்த்தும் அரசுகள், ராணுவச் செலவுகளை உயர்த்துவதில் மட்டும் ஏன் தயக்கம் காட்டுவதில்லை? என்ற கேள்விகளைத் தொழிலாளர் அமைப்புகளும், போர் எதிர்ப்பு இயக்கங்களும், ஜனநாயக அமைப்புகளும் தொடர்ந்து எழுப்பி வருகின்றன.

இந்தப் பொருளாதார நெருக்கடியில் போர் ஒரு முக்கியக் காரணியாக இருந்தாலும், அதற்கு முன்பே உருவாகியிருந்த பொருளாதாரச் சிக்கல்கள், பணவீக்கம், பொதுக்கடன், எரிசக்திச் சந்தை மாற்றங்கள் ஆகியவையும் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

ஐரோப்பிய விவசாயிகளின் போராட்டம்: உற்பத்திச் செலவுகளும் வாழ்வாதாரப் பிரச்சினைகளும்!

ஐரோப்பியத் தொழிலாளர்களைப் போலவே விவசாயிகளும் தங்களது வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவதற்காகப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

2024-ஆம் ஆண்டு பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து, போலந்து, ஸ்பெயின், இத்தாலி, கிரீஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விவசாயிகள் டிராக்டர்களுடன் வீதிகளில் இறங்கிப் போராடினர்.

டீசல் விலை உயர்வு, உரங்களின் விலை அதிகரிப்பு, உற்பத்திச் செலவுகள், விவசாய மானியங்களில் செய்யப்பட்ட மாற்றங்கள், சுற்றுச்சூழல் விதிமுறைகள், குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் விவசாயப் பொருட்களுடனான போட்டி ஆகியவை அவர்களின் முக்கியப் பிரச்சினைகளாக இருந்தன.

குறிப்பாக, உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விவசாயப் பொருட்கள் குறைந்த விலையில் சந்தைக்கு வருவதால், தங்களது விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் போவதாக ஐரோப்பிய விவசாயிகள் குற்றம்சாட்டினர். இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும், விளைபொருட்களுக்கு உரிய கொள்முதல் விலையை உறுதிப்படுத்த வேண்டும், விவசாய மானியங்களைப் பாதுகாக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

பல இடங்களில் டிராக்டர்களைக் கொண்டு முக்கியச் சாலைகள் மறிக்கப்பட்டன. ஐரோப்பிய ஒன்றிய அலுவலகங்கள் அமைந்துள்ள பிரஸ்ஸல்ஸ் நகரிலும் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்தப் போராட்டங்கள் ஐரோப்பிய விவசாயக் கொள்கைகளிலும், அரசுகளின் மானியத் திட்டங்களிலும் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான அழுத்தத்தை ஏற்படுத்தின.

2026-ஆம் ஆண்டிலும் தொடரும் மக்கள் போராட்டங்கள்!

2026-ஆம் ஆண்டிலும் ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகள் முடிவுக்கு வரவில்லை. மாறாக, வாழ்க்கைச் செலவு, வேலைவாய்ப்பு, வீட்டு வசதி, ஊதியம், அரசின் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான போராட்டங்கள் பல நாடுகளில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அயர்லாந்தில் 2026 ஏப்ரல் மாதம் டீசல் விலை உயர்வுக்கு எதிராக விவசாயிகள், லாரி ஓட்டுநர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் டிராக்டர்கள் மற்றும் கனரக வாகனங்களுடன் சாலைகளிலும் முக்கிய எரிபொருள் நிலையங்களுக்கு அருகிலும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

2026 அக்டோபர் 30-ஆம் தேதி இத்தாலியின் பல்வேறு நகரங்களில் தொழிலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பங்கேற்ற நாடு தழுவிய வேலைநிறுத்தங்களும் பேரணிகளும் நடைபெற்றன. ஊதிய உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துதல், கல்வி மற்றும் மருத்துவத் துறைகளுக்கான நிதியை அதிகரித்தல், ராணுவச் செலவுகளைக் குறைத்தல், போருக்கான ஆயுத உதவிகளை நிறுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்தப் போராட்டங்களில் முன்வைக்கப்பட்டன.

இத்தகைய போராட்டங்கள் ஐரோப்பிய நாடுகளில் மக்களின் பொருளாதார மற்றும் சமூகக் கோரிக்கைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பதையும், அரசின் கொள்கைகளுக்கு எதிரான மக்களின் அதிருப்தி தொடர்ந்து அதிகரித்து வருவதையும் வெளிப்படுத்துகின்றன.

ஐரோப்பியத் தொழிலாளர் போராட்டங்கள் உணர்த்துவது என்ன?

2008-ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, 2020-ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று, 2022-ஆம் ஆண்டு தொடங்கிய உக்ரைன் போர், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட எரிசக்தி விலை உயர்வு, பணவீக்கம், அதிகரித்து வரும் ராணுவச் செலவுகள் என அடுத்தடுத்த நெருக்கடிகள் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளன.

ஓய்வூதிய வயதை உயர்த்தும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் பிரான்சில் தொழிலாளர்கள் போராடுகின்றனர். ஊதிய உயர்வு கோரியும், வேலைநிறுத்த உரிமையைப் பாதுகாக்கக் கோரியும் பிரிட்டனில் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். விவசாய உற்பத்திச் செலவுகளைக் குறைக்கவும், தங்களது விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதிப்படுத்தவும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல், எரிசக்தி விலை உயர்வு, வீட்டு வாடகை அதிகரிப்பு, வேலைவாய்ப்பின்மை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பொதுச் சேவைகளுக்கான நிதிப் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளும் உழைக்கும் மக்களின் வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துள்ளன. இதனால் அரசின் கொள்கைகளுக்கு எதிரான மக்களின் எதிர்ப்புப் போராட்டங்களும் மேலும் தீவிரமடைந்துள்ளன.

மக்களின் அடிப்படைத் தேவைகளை உறுதிப்படுத்த வேண்டும்; தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்; உரிய ஊதியம், ஓய்வூதியம், வேலைவாய்ப்பு, தரமான கல்வி, மருத்துவ வசதிகள் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் ஐரோப்பிய நாடுகளின் தொழிலாளர்களும் விவசாயிகளும் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். பொருளாதார நெருக்கடிகளின் சுமைகளைத் தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த உழைக்கும் மக்கள் மீது திணிக்கும் ஆளும் வர்க்கங்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக அவர்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருவதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து, உழைக்கும் மக்களின் உழைப்பில் உருவாகும் செல்வத்தைக் குவித்து வரும் முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான இந்தப் போராட்டங்கள் ஒரு நாட்டின் எல்லைக்குள் மட்டும் முடங்கிவிடவில்லை. மாறாக, சர்வதேச அளவில் தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையையும் போராட்ட உணர்வையும் வலுப்படுத்தி வருகின்றன.

அழுகி நாறிவரும் முதலாளித்துவ அமைப்புக்கு எதிராக, நாடுகளின் எல்லைகளைக் கடந்து உலகத் தொழிலாளர் வர்க்கம் ஒன்றிணைந்து போராடும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதையே ஐரோப்பியத் தொழிலாளர் போராட்டங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

  • மகேஷ்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன