பல் இளிக்கும் பாசிச எதிர்ப்பு

2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் “இந்தியா” கூட்டணி உருவாகியபோது, “பாசிச எதிர்ப்பில் மிகப்பெரிய நம்பிக்கை” என்று பா.ஜ.க. எதிர்ப்பு சக்திகளும் பல மா-லெ குழுக்களும் கூடக் கொண்டாடிக் கொண்டிருந்த சமயத்தில், “இது ஒரு சந்தர்ப்பவாத, பிழைப்புவாதக் கூட்டணி” என்று செங்கனல் எழுதியது. ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார், அகிலேஷ் யாதவ், அரவிந்த் கேஜ்ரிவால் என ஏறத்தாழ பா.ஜ.க. எதிர்ப்புக் கட்சிகள் அனைத்தும் சேர்ந்திருந்த இக்கூட்டணியை, “ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது தளபதிகள்” என்று எழுதினோம். […]

2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் “இந்தியா” கூட்டணி உருவாகியபோது, “பாசிச எதிர்ப்பில் மிகப்பெரிய நம்பிக்கை” என்று பா.ஜ.க. எதிர்ப்பு சக்திகளும் பல மா-லெ குழுக்களும் கூடக் கொண்டாடிக் கொண்டிருந்த சமயத்தில், “இது ஒரு சந்தர்ப்பவாத, பிழைப்புவாதக் கூட்டணி” என்று செங்கனல் எழுதியது. ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார், அகிலேஷ் யாதவ், அரவிந்த் கேஜ்ரிவால் என ஏறத்தாழ பா.ஜ.க. எதிர்ப்புக் கட்சிகள் அனைத்தும் சேர்ந்திருந்த இக்கூட்டணியை, “ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது தளபதிகள்” என்று எழுதினோம். நமது கணிப்பு பொருளற்றதோ, அவசரக் குடுக்கைத்தனமானதோ அல்ல. கூட்டணியில் சேர்ந்திருக்கும் கட்சிகளின் வர்க்கத் தன்மை, அவர்களின் கடந்த காலச் செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையிலானதாகும்.

இவர்களின் நோக்கம் பாசிசத்தை எதிர்ப்பதோ முறியடிப்பதோ அல்ல. தமது ஓட்டுச் சீட்டு அறுவடையின் நலனுக்குட்பட்டு பா.ஜ.க. எதிர்ப்பை மேற்கொள்வது மட்டுமே. சிபிஐ., வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்ற ஆயுதங்களை ஏவியும்; தமது கட்சிகளை உடைத்தும் பா.ஜ.க. இவர்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கியதால், அந்த நிர்ப்பந்தத்தில் இருந்தே இக்கூட்டணி அமைக்கப்பட்டது.

தற்போது இக்கூட்டணி உருவாக்கப்பட்டு சரியாக மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. அவிழ்த்துவிட்ட நெல்லிக்காய் மூட்டைபோல, இக்கூட்டணிக் கட்சிகள் ஆளுக்கொரு திசையில் சிதறிக் கொண்டிருக்கின்றன. இந்த மூன்றாண்டுகளின் அனுபவங்களைப் பரிசீலிப்பதும் அதிலிருந்து படிப்பினைகளைப் பெறுவதும், பாசிச எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு முக்கியமானதாகும்.

பாசிசம் என்பதை அதன் உண்மையான பொருளில் இவர்கள் பேசுவதோ, அம்பலப்படுத்துவதோ இல்லை. இவர்களைப் பொறுத்தவரை, பா.ஜ.க.வை எதிர்ப்பதுதான் பாசிச எதிர்ப்பு; அக்கட்சியை ஒன்றிய ஆட்சியதிகாரத்தில் இருந்து இறக்குவதுதான் பாசிசத்தை வீழ்த்துவது. இந்த மூன்றாண்டுகால அனுபவத்தைப் பரிசீலிக்கையில் இந்த “மிகக் குறைந்தபட்ச” நோக்கத்திற்குக் கூட இக்கூட்டணியும் அதிலுள்ள கட்சிகளும் தகுதியற்றவர்கள் என்ற உண்மை வெட்டவெளிச்சமாகிறது. மக்கள் கிளர்ந்தெழுந்து மிகப்பெரிய போராட்டங்களையும் எழுச்சிகளையும் மேற்கொள்ளாமல் இந்தக் குறைந்தபட்ச நோக்கம் கூட ஈடேறாது என்பதும் நிரூபனமாகிறது.

000

மே 4, 2026 அன்று தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, தமிழகத்தில் இக்கூட்டணியின் மீதான நம்பிக்கை தகர்ந்துபோகத் தொடங்கியது. விஜயின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்ற பிறகு, திமுகவுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, சிபிஐ., சிபிஎம்., ஐ.யூ.எம்.எல். போன்ற கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்ததும்; போலிகம்யூனிஸ்டுகளைத் தவிர பிறர் அமைச்சரவையில் பங்கேற்றதும்; திமுகவும் அவர்களும் மாறிமாறி போட்டுக் கொண்ட குழாயடிச் சண்டைகளும் – என “பா.ஜ.க. எதிர்ப்பு” “பாசிச எதிர்ப்பு” “கொள்கைக் கூட்டணி” என்று பேசிக் கொண்ட இவர்களின் உண்மை முகம் அம்பலமாகி நாறத் தொடங்கியது!

இதனால், பலரும் அதிர்ச்சியும் அருவருப்பும் அடைந்துள்ளனர். இதில் அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை! கடந்த 3 ஆண்டுகளாக நாடு முழுவதும் என்ன நடக்கிறதோ, அதுதான் தற்போது தமிழகத்திலும் நடந்துவருகிறது. இந்தியா கூட்டணி உருவான இந்த மூன்றாண்டுகளில் மொத்தம் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இவற்றில், 13 மாநிலங்களில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே ஆட்சியைக் கைப்பற்றியுள்ளன! பா.ஜ.க. வெற்றிபெற பல காரணங்கள் இருந்தபோதிலும், ஒன்றியத்தில் ஒரு நிலைப்பாடு, மாநிலத்தில் ஒரு நிலைப்பாடு என்ற இக்கட்சிகளின் சந்தர்ப்பவாதமும் பதவி-அதிகார வெறியில் தங்களுக்குள் சண்டையிட்டு பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளைச் சிதறடித்ததும் மிக முக்கியமான காரணமாகும். இவற்றை விரிவாகப் பார்ப்போம்.

கடந்த மேற்கு வங்கத் தேர்தலில் பா.ஜ.க. பெற்ற வாக்குகள் 2 கோடியே 92 (46%) இலட்சமாகும். திரிணாமுல் காங்கிரசு பெற்ற வாக்குகளோ 2 கோடியே 60 (40%) இலட்சமாகும். அதாவது, வெறும் 32 இலட்சம் வாக்குகள்தான் வித்தியாசம். ஆனால், சீட்டு வித்தியாசமோ மலைக்கும் மடுவுக்குமானது. பா.ஜ.க. 207 தொகுதிகளிலும் திரிணாமுல் வெறும் 80 தொகுதிகளிலும்தான் வெற்றிபெற்றது. திரிணாமுல் அரசின் மீதான அதிருப்தி (anti incumbency), மம்தா இந்துத்துவ நடவடிக்கைகளைக் கையில் எடுத்து காவி பாசிசத்திற்கு ஒத்திசைவாகச் செயல்பட்டது, எஸ்.ஐ.ஆர் போன்றவை பா.ஜ.க.வின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தன என்பது உண்மைதான். எனினும், சிபிஎம்., காங்கிரசு, திரிணாமுல் ஆகிய கட்சிகள் தனித்து நின்றதால், அம்மாநிலத்தில் உள்ள 34% இசுலாமிய ஓட்டுக்களும் பிற பா.ஜ.க. எதிர்ப்பு ஓட்டுகளும் கணிசமாகச் சிதறிப் போனதும் மிக முக்கியமான காரணமாகும். ஒருவேளை, மூன்றுபேரும் சேர்ந்து நின்றிருந்தால், இதில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கும், பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்பே தடுக்கப்பட்டிருக்கும் என்று பல நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அதெல்லாம் எப்படி நடக்கும்; ஒரு மாநிலத்தில் எதிரெதிரான கட்சிகள் எப்படி ஒன்றிணைந்து போட்டியிடும் என்ற கேள்வி எழலாம். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. மே.வங்கத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்று தன் இருப்பே கேள்விக்குள்ளான பின்னர், மம்தா காங்கிரசோடு கூடிக் குலாவுவதும், சோனியாவைக் கட்டித் தழுவுவதும், சிபிஎம் மற்றும் காங்கிரசோடு “இணக்கமாக இருந்து இந்தியா கூட்டணியை பலப்படுத்தப் போவதாக” அறிவித்திருப்பதுமே இதற்குச் சான்று!! விஜய் ஆட்சியமைப்பதைத் தடுக்க, தமிழகத்தில் எதிரெதிரான திமுகவும் அதிமுகவும் கூட்டணி பேரத்தில் ஈடுபடவில்லையா என்ன?!

எனவே, திரிணாமுல், சிபிஎம்., காங்கிரசு தனித்துப் போட்டியிட்டதற்கு கொள்கை முரண்பாடோ, வேறெந்த முரண்பாடோ பிரதானக் காரணமோ இல்லை. மம்தாவின் பதவி-அதிகார வெறியும், ஓட்டுச் சீட்டுக் கணக்குகளுமே பிரதானக் காரணமாகும். தான் வெற்றிபெற்றுவிடுவேன் என்ற மமதையில், பா.ஜ.க.வை எதிர்ப்பதைவிட, சி.பி.எம்.மும் காங்கிரசும் வளர்ந்துவிடக் கூடாது என்பதில் மம்தா தெளிவாக இருந்தார். இன்றும் தன் இருப்பே கேள்விக்குள்ளாகியிருப்பதால்தான் அவர்களுடன் கூடிக் குலாவுகிறார். எனவே, முன்னர் ஒன்று சேராமல் இருந்ததற்கும் இப்போது சேர்ந்திருப்பதும் அடிப்படை முரணற்ற பிழைப்புவாதமன்றி (consistent-survivalism) வேறல்ல!

மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல, பிற எல்லா மாநிலங்களிலும் இந்தியா கூட்டணிக் கட்சிகள் தமக்குள் சண்டையிட்டுக் கொள்வதற்கும், ஒருவரை எதிர்த்து இன்னொருவர் போட்டியிடுவதற்கும், ஒருவரையொருவர் கீழறுப்பதற்கும் அடிப்படை இந்த முரணற்ற பிழைப்புவாதமே ஆகும்! பா.ஜ.க.வை எதிர்ப்பது, வீழ்த்துவது என்பதைவிட, தமது கட்சியை வளர்ப்பது பதவி-அதிகாரத்தை அடைவது, அதற்காக சொந்தக் கூட்டணிக் கட்சிகளையே பலவீனப்படுத்துவது என்பதே இவர்களின் நடைமுறை!

கடந்த 2025 டெல்லி சட்டமன்றத் தேர்தலின்போது, இந்தியா கூட்டணியில் இருந்த ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரசும் தனித்துப் போட்டியிட்டன. போதாக்குறைக்கு, சிபிஐ., சிபிஎம். ஆகியவை ‘இடது முன்னணி’ என்ற ஒரு கூட்டணியை அமைத்து அவர்களும் 10 இடங்களில் தனித்துப் போட்டியிட்டனர். இந்தியா கூட்டணியில் இருந்த மம்தா பானர்ஜியும், அகிலேஷ் யாதவும் காங்கிரசை ஆதரித்தன. இவ்வாறு ஒரே கூட்டணியில் இருந்த இக்கட்சிகள் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிட்டது மட்டுமின்றி, மாறி மாறி ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டனர்.

“அரவிந்த் கேஜ்ரிவால் மோடியை விட தந்திரமானவர், அவரைவிட மோசமாக பொய் பேசுபவர்” என்றும் “மதுபான ஊழலின் சூத்திரதாரி” என்றும் ராகுல்காந்தி கேஜ்ரிவாலை பகிரங்கமாக விமர்சித்தார். பதிலுக்கு கேஜ்ரிவால் ராகுல்காந்தி மீது தொடுக்கப்பட்ட நேஷனல் ஹெரால்ட் பத்திரிக்கை ஊழல் வழக்கையும், பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா மீதான ஊழல் வழக்குகளையும் காட்டி, “நீ மட்டும் யோக்கியமா” எனக் கேட்டார். மேலும், நேர்மையற்ற மனிதர்கள் எனப் பட்டியல் வெளியிட்டு அதில் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் படத்திற்கு முன்னதாக ராகுல் காந்தியின் படத்தைப் போட்டு அவரைக் கொச்சைப்படுத்தினார். இந்தியா கூட்டணி தமக்குள் போட்டுக் கொண்ட இந்த நாய்ச்சண்டை டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு மிக முக்கியமானதொரு காரணமாக அமைந்துவிட்டது.

சமீபத்தில் நவம்பர் 2025-இல் நடந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில், பாசிச பா.ஜ.கவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்கு பதிலாக இந்தியா கூட்டணியினர் தங்களுக்குள்ளேயே மோதிக் கொண்டனர். இறுதிவரை தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யாமலேயே இந்தியா கூட்டணிக் கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிவித்தன. இதன் விளைவாக, அங்குள்ள 12 தொகுதிகளில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரசு, இடதுசாரிகள் உள்ளிட்டோர் தங்களுக்குள் ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிட்டனர்! மேலும், யார் முதல்வர் வேட்பாளர் என்பதைக்கூட அறிவிக்காமல் காங்கிரசு கட்சி இழுத்தடித்து வந்தது. காங்கிரசு மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சிகளின் மாநில நிர்வாகிகளின் குழாயடிச் சண்டைகள் மக்கள் மத்தியில் அம்பலமாகி வந்தன. பீகாரில் இந்தியா கூட்டணியின் குழப்பங்கள் தீவிரமடையவே, ஒரு கட்டத்தில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா என்ற ஒரு கட்சி கூட்டணியில் இருந்தே வெளியேறியது! இதனால், எஸ்.ஐ.ஆர். விவகாரம், நிதிஷ் குமார் ஆட்சி மீதிருந்த அதிருப்தி ஆகியவற்றை இந்தியா கூட்டணி அறுவடை செய்ய இயலாமல், பா.ஜ.க.  – நிதிஷ் குமார் கூட்டணி அபார வெற்றிபெற்றது!

சமீபத்திய 2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில், வேட்பு மனுத் தாக்கல் செய்யும் கடைசிநாள் வரையில் இந்தியா கூட்டணியின் தொகுதி பேரங்களில் உடன்பாடு எட்டப்படவில்லை. காங்கிரசு கட்சி தன்னிச்சையாக தாம் விரும்பிய 22 தொகுதிகளிலும், சி.பி.ஐ 1, சி.பி.எம் 2, வி.சி.க 3 தொகுதிகளிலும் வேட்பு மனுத் தாக்கல் செய்தன. இதனால், பாசிசத்தை எதிர்க்கிறோம் எனப் புறப்பட்ட சூரப்புலிகளான இந்தியா கூட்டணிக் கட்சிகள் சில தொகுதிகளில் ஒருவரையொருவர் எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டனர்!

இவ்வாறாக, ஹரியானா, ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், கேரளம் என பிற மாநிலங்களிலும் இக்கட்சிகள் அரங்கேற்றிய கேலிக்கூத்துக்கள், போட்டுக் கொண்ட நாய்ச் சண்டைகள் என அனைத்தையும் சொல்லிக் கொண்டே போகலாம்! விரிவஞ்சி இத்துடன் நிறுதிக் கொள்கிறோம்!

மாநிலத்திற்கு மாநிலம் வெவ்வேறு நிலைப்பாடுகள் எடுத்து ஒருவருக்கொருவர் மோதிக் கொண்ட கதையைப் பார்த்தோம். ஒரே தொகுதியில் இருவேறு நிலைப்பாடு எடுத்துப் பிரச்சாரம் செய்த ஒரு கட்சியையும் அதன் கதையையும் அறிவீர்களா?! இதோ அப்படியொரு கதை! பாண்டிச்சேரி என்ற ஒரே நாடாளுமன்றத் தொகுதியின் பிரதேசங்கள் நிலவியல் ரீதியில் (geographically) நான்காகப் பிரிந்திருக்கின்றன. பாண்டி, காரைக்கால் ஆகியவை தமிழ்நாட்டிலும், ஏனாம் ஆந்திரத்திலும், மாஹே கேரளத்திலும் இருக்கின்றன. கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மாஹே தவிர மூன்றிலும் சிபிஎம் கட்சி காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாடு எடுத்துப் பிரச்சாரம் செய்தது. கேரளாவில் உள்ள மாஹே பகுதியில் ஆதரித்துப் பிரச்சாரம் செய்யாமல் விட்டாலாவது பரவாயில்லை, அங்கே சிபிஎம் கட்சி காங்கிரசை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தது! இப்படி ஒரே நாடாளுமன்றத் தொகுதியில் ஒரு இடத்தில் காங்கிரசை ஆதரித்தும் இன்னொரு இடத்தில்  காங்கிரசை எதிர்த்தும் பிரச்சாரம் செய்யும் புதியதொரு கூட்டணி தர்மத்தை சிபிஎம் கட்சி நடைமுறைப்படுத்தியது!! இந்தக் கேலிக்கூத்தை என்னவென்று சொல்ல!!

அதே நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணன் திருமாவளவன் செய்த ஒரு காரியத்தைப் பார்ப்போம். கர்நாடகத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பெங்களூரு தெற்கு, ரூரல் மற்றும் கோலார் ஆகிய தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. அந்தப் பகுதியில் காங்கிரசு கட்சி போட்டியிட்டது. அதனை எதிர்த்து விசிக களமிறங்கினால் அது பாஜகவிற்குத்தான் சாதகமாக முடியும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இது தெரிந்தும் விசிக அந்த மூன்று தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தியது. பின்னர், பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் கிளம்பியதால் வேட்பாளர்களைப் பின்வாங்கிக் கொண்டது.

அதேபோல, இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு அதிலிருந்து நிதிஷ் குமார் வெளியேற ஒரு முக்கியமான காரணம், தன்னை இக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகப் போடவில்லை என்பதும் பிரதமர் வேட்பாளரை முடிவு செய்வதில் ஏற்பட்ட முரண்பாடுகளும்தான். அவர் அக்கூட்டணியில் இருந்து வெளியேறி பா.ஜ.க.வுடன் இணையாமல் இருந்திருந்தால், 2024-இல் பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதே கூட தடுக்கப்பட்டிருக்கலாம்!

நன்றாக நினைவில் கொள்ளுங்கள்! இவையெல்லாம் நாடாளுமன்றத் தேர்தலில் நடந்தவை! ஒன்றிய பா.ஜ.க.வை ஆட்சியதிகாரத்தில் இருந்து வீழ்த்துவதை விட, தன் கட்சியை ஒவ்வொரு இடத்திலும் எப்படி பலப்படுத்துவது, விரிவுபடுத்துவது, அதிக எம்.பி.களையும் எம்.எல்.ஏ.க்களையும் பெற்று அதிகாரத்தை அடைந்து பொறுக்கித் திண்பது – ஆகியவைதான் இக்கட்சிகளின் தலையாய நோக்கமாக இருந்தன. ‘இந்தியா கூட்டணியை விமர்சிப்பது பா.ஜ.க.வுக்குச் சாதகமாகிவிடும்’ என்று நம்மை வசைபாடும் திமுக அடிவருடிகள், இவ்வாறு ஒருவரையொருவர் கீழறுக்கும் இக்கேலிக்கூத்தைப் பற்றியெல்லாம் வாய்திறப்பதே இல்லை.

எனவே, ஒன்றியத்திலும் பிற மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சியமைப்பதைத் தடுப்பது, ஒன்றுபட்டு பா.ஜ.க. எதிர்ப்பை மேற்கொள்வது என்பதைவிட இக்கட்சிகளுக்கு மேற்கூறிய ‘உன்னத’ நோக்கங்களே பிரதானமாக இருந்தன / இப்போதும் இருக்கின்றன. இவர்களால் எப்படி பா.ஜ.க.வை குறைந்தபட்சம் ஒன்றிய ஆட்சியதிகாரத்தில் இருந்தாவது இறக்க முடியும்! 

000

மேற்கூறிய ‘உன்னத’ நோக்கங்களில் திமுக, சிபிஐ., சிபிஎம்., விசிக போன்ற ஓட்டுக் கட்சிகளும் விதிவிலக்கல்ல! சமீபத்தில், இக்கட்சிகளெல்லாம் திமுகவை விட்டுப்போய், திமுக அரசியல் ரீதியில் தனித்துவிடப்பட்ட நிலையில், ‘திமுக அனைவரையும் அரவணைத்துச் சென்றது; இக்கட்சிகள்தான் நன்றி விசுவாசமின்றி ஓடிப்போய்விட்டனர்’ என்று வாதிடப்படுகிறது. ‘பாற்கடலை கடையும்போது, அமிர்தமும் நஞ்சும் வந்த நிலையில் தேவர்களுக்கு அமிர்தத்தைக் கொடுத்து நஞ்சை சிவபெருமான் உண்ட புராணக் கதையைப் போல, திமுகவும் மு.க.ஸ்டாலினும் பாசிச எதிர்ப்புக்காக அனைத்துப் பழிகளையும் பாரங்களையும் தாங்கிக் கொண்டனர்’ என்று திமுகவும் அதன் அடிவருடிகளும் ஒப்பாரி வைக்கின்றனர். இந்த ஒப்பாரியின் மூலம் அனுதாபம் தேட முயல்கின்றனர். ஆனால், இது உண்மையல்ல.

திமுக எவ்வாறு பாசிச எதிர்ப்புக்குத் துரோகமிழைத்தது என்பது தனிக்கதை. ஆனால், 2019-இல் இருந்து இக்கட்சிகளின் செல்வாக்கைக் கீழறுக்க பல்வேறு வேலைகளையும் திமுக செய்துள்ளது. கூட்டணிக் கட்சிகள் வளரக் கூடாது என்பதற்காக தனிச் சின்னத்தில் போட்டியிட விடாமல் உதய சூரியனில் போட்டியிடுமாறு நிர்ப்பந்திப்பது; விசிக, சிபிஐ., சிபிஎம் என ஒவ்வொரு கட்சிக்குள்ளும் ‘குட்டி திமுக’ ஒன்றை உருவாக்குவது; வேங்கைவயல், சாம்சங் தொழிலாளர் பிரச்சனை போன்றவற்றில் திமுகவை விமர்சித்தால் இணையக் கூலிப்படையைக் கொண்டு இக்கட்சிகளைக் கேவலப்படுத்துவது; சிபிஎம், சிபிஐ போன்ற கட்சிகள் வெளியேறினால் நான்கு சீட்டு மிச்சம்தான் என்று இணைய கூலிப்படைகள் மூலம் பிரச்சாரம் செய்தது; கூட்டணி சீட்டு பேரங்களின்போது பெரியண்ணன் மனப்பான்மையில் நடந்துகொள்வது – என அக்கட்சிகளின் செல்வாக்கைக் கீழறுக்க திமுக எல்லா சதித்தனங்களையும் செய்தது.

அதாவது, எதிர்காலத்தில் இக்கட்சிகள் வளர்ந்து தனது பதவி, அதிகாரம், எம்.எல்.ஏ. சீட்டுகள், அமைச்சர் பதவிகள் இவற்றுக்குப் போட்டியாக வந்துவிடக் கூடாது என்பதில் திமுக தெளிவாக இருந்துள்ளது. இந்த சட்டமன்றத் தேர்தலில் திருமாவளவன் எம்.பி. பதவியை இராஜினாம செய்துவிட்டு, காட்டுமன்னார் கோயிலில் போட்டியிடுவதாக இருந்ததை திமுக தலையிட்டு தடுத்து நிறுத்தியதும் இதே ‘உன்னதமான’ காரணத்திற்காகத்தான்!

இப்போதைக்கு நம்பகமான ‘எஜமான்’ திமுகதான் என்பதாலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவே வெற்றிபெற வாய்ப்புள்ள நிலைமை இருந்ததாலும் இக்கட்சிகள் அனைத்தும் தன் விசுவாசத்தைத் தவறாமல் திமுகவிடம் வெளிப்படுத்தின. ‘தூய்மைப் பணியை நிரந்தரமாக்கினால் சாதித் தீண்டாமை நிரந்தரமாகும்’ என்று தூய்மைப் பணியாளர் போராட்டத்தை இழித்துப் பேசும் அளவுக்கு திருமாவளவன் தனது விசுவாசத்தைக் காட்டினார். மறுபுறம், சிபிஐ., சிபிஎம் கட்சிகளோ ‘திராவிட மாடல் ஆட்சி சிறப்பான ஆட்சி’ என்று புகழ்ந்து தள்ளினர். சாம்சங் பிரச்சனையில் கூட, ‘சில திமுக அமைச்சர்கள்தான் தவறாக நடந்துகொண்டதாகவும் திமுக தொழிலாளர் பக்கம் நின்றதாகவும்’ பாராட்டுப் பத்திரம் வாசித்தனர். இவ்வாறு திமுக அப்பட்டமாக அம்பலமாகி நாறிய விவகாரத்தில் கூட முட்டுக் கொடுத்துத் தூக்கி நிறுத்தும் பணியை இவர்கள் செவ்வணே செய்தனர்.  

ஆனால், கடந்த மே 4-க்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறிப்போனது. யாரும் எதிர்பாராத வகையில் தவெக வெற்றி பெற்ற பிறகு, இவர்களின் அரிதாரம் கலைந்துபோனது. “இது தேர்தலுக்கான கூட்டணி அல்ல; கொள்கைக் கூட்டணி; மோடி கும்பலை ஆட்சியதிகாரத்தில் இருந்து இறக்கும் வரை இந்தக் கூட்டணி தொடரும்” என்றெல்லாம் தொடர்ந்து பேசிவந்த, விசிக, சிபிஐ., சிபிஎம்., ஐ.யூ.எம்.எல் கட்சிகள் கூட்டணியை உடைத்துவிட்டு தவெகவுடன் சென்றனர். போலி கம்யூனிஸ்டுகளைத் தவிர பிறர் ஆட்சியதிகாரத்திலும் பங்கேற்றனர். தங்கள் விசுவாசத்தை திமுகவில் இருந்து தவெகவிற்கு மாற்றிக் கொண்ட இவர்கள், தற்போது தவெகவின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முட்டுக் கொடுக்கும் திருப்பணியைச் செவ்வணே செய்கின்றனர்.

தேர்தலுக்கு முன், ‘தவெக ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த குழந்தை’ என்ற திமுகவின் பிரச்சாரத்தை அப்படியே வாந்தியெடுத்த திருமாவளவன், இப்போது ‘அவர் ஒரு மதச்சார்பற்ற சக்தி’ என்று கூறுகிறார். சி.பி.ஐ., சிபிஎம். கட்சிகளும் அவ்வாறே விஜயைப் புகழ்கின்றனர். அமைச்சர் வன்னி அரசோ, சோபா மாடல் என்ற சொல்லுக்கே புதிய பொழிப்புரை (SOFA – S – Social Justice O – Organised Action F – Freedom A – Anti-corruption or Anti-cast) எழுதும் அளவுக்குத் தன் விசுவாசத்தை வெளிப்படுத்துகிறார். (மே 4 முதல் இன்றுவரை நடந்துவரும் குழாயடிச் சண்டைகளை வாசகர்கள் தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கக் கூடும் என்பதால் விரிவஞ்சி அவற்றை இங்கு விளக்கவில்லை)

திமுகவுடன் கூட்டணியில் இருந்தபோது இக்கட்சிகள் பேசியதற்கும் இப்போது பேசுவதற்கும் மிகப்பெரிய முரண்பாடுகள் இருப்பதாக வாசகர்கள் கருதலாம். ஆனால், மேற்கூறிய முரணற்ற பிழைப்புவாதம், முரணற்ற பதவி-அதிகாரவெறி, அதிகாரத்தில் அமர்ந்து பொறுக்கித் திண்பது ஆகிய ‘உன்னத’ நோக்கங்கள்தான் இரண்டிற்குமே அடிப்படையாகும்!! எனவே, அவர்கள் கருத்தில் முரணும் சந்தர்ப்பவாதமும் இருக்கலாம், அக்கருத்துக்களுக்கு அடிப்படையிலான அவர்களது பிழைப்புவாதத்தில் எந்த முரணும் இல்லை!!   

“2014 முதல் இன்றுவரை பா.ஜ.க. வெற்றிபெறுவதற்கு மோடியும் அமித்ஷாவும்தான் காரணம் என நினைத்தேன்; ஆனால், காங்கிரசுதான் காரணம் என்பது இப்போதுதான் புரிந்தது” என்கிறார் உதயநிதி! பா.ஜ.க.வைப் போல திமுகவின் இணைய கூலிப் படைகள் அவரை “பப்பு” என்று அழைக்கின்றனர்! “நீங்கள் செய்த 2ஜி ஊழலால்தான் 2014-இல் காங்கிரசு ஆட்சியையே இழந்தது” என்கிறது, காங்கிரசு. “கச்சத்தீவு, ஈழப் படுகொலை போன்று நீங்கள் செய்தவற்றால்தான் தமிழ்நாட்டில் எங்கள் செல்வாக்கே போனது” என்கிறது, திமுக. “கூட்டணிக் கட்சிகள் பலர் தேவையற்ற சுமையாகவே (waste luggage) இருந்தனர்; அவர்களைத் தேவையிலாமல் தூக்கிச் சுமந்தோம்” என்கிறது, திமுக!

இதில் ஒரு வேதனையான நகைச்சுவை என்னவென்றால், திமுக உருவாக்கிக் கொடுத்த ஆயுதத்தை திமுகவின் மீதே இக்கட்சிகள் பிரயோகித்ததுதான்! அதாவது, “பா.ஜ.க. உள்ளே வந்துவிடும்” “பாசிசம் தமிழ்நாட்டில் வளர்ந்துவிடும்” என்பது ஒரு மிகத் தீவிரமான, அபாயமான பிரச்சனையாகும். ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் இதை ஒரு அற்பமான அரசியலாக மாற்றி, மக்களிடையே (குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினரிடையே) மதிப்பிழக்கச் செய்துவிட்டது, திமுக. உதாரணமாக, ‘பா.ஜ.க. உள்ளே வந்துடும் எனவே, ஊழலைப் பற்றிப் பேசாதே; பாட்டிலுக்குப் பத்து ரூபாய் வாங்குவதைப் பேசாதே; பல்வேறு தரப்பினரின் போராட்டங்களைப் பேசாதே; வேங்கைவயல், கவின்கொலை, போன்ற சாதிய ஒடுக்குமுறைகளைப் பேசாதே; திமுக செய்யும் இலஞ்ச ஊழல் இலாவன்யங்களைப் பேசாதே’ – எனத் தொடர் பிரச்சாரத்தை செய்தனர்.

இவ்வாறு கடந்த ஐந்தாண்டுகளில், “பா.ஜ.க. உள்ளே வந்துடும்” என்ற ஆயுதத்தை உருவாக்கி, அதை வெற்றிகரமாகச் சுழற்றியது, திமுக. இன்று அதே ஆயுதம் திமுகவுக்கு எதிராகத் திருப்பப்பட்டுள்ளது. எப்படி? காங்கிரசு, விசிக, போலி கம்யூனிஸ்டுகள் தவெக கூட்டணியில் சேருவதற்குக் கூறும் காரணங்கள் இரண்டுதான்: 1) நாம் சேராவிட்டால் ஆளுநர் ஆட்சி வந்துவிடும், அதன் மூலம் அமித்ஷாதான் ஆள்வார் 2) நாம் சேராவிட்டால் அதிமுக சேர்ந்துவிடும் அதன்மூலமும் பாஜக விஜயைக் கட்டுப்படுத்தும், அதன்மூலம் தமிழகத்தைக் கட்டுப்படுத்தும்; எனவே இவற்றிலிருந்து தமிழகத்தைக் காக்க காலச் சூழல் கருதி இம்முடிவு அவசியம். இவைதான். இவ்வாறான வாதங்களின் மூலம் தங்களது பதவி-அதிகாரவெறியையும் பிழைப்புவாதத்தையும் திறம்பட மறைத்துக் கொள்கின்றனர். ‘அவன் பொருளை எடுத்து அவனையே போடுவது’ என்ற சினிமா வசனம் போல என்னே நகைமுரண் இது! விசிக, சிபிஐ, சிபிஎம் போன்ற கட்சிகளின் இத்தகைய நடவடிக்கைகள் “பா.ஜ.க. உள்ளே வந்துடும்” என்ற அபாயத்தை தன் பங்கிற்கு மேலும் மக்களிடையே மதிப்பிழக்கச் செய்யும், திமுக ஆதரவாளர்களிடையே மதிப்பிழக்கச் செய்தாலும் வியப்படைய ஒன்றுமில்லை!

இவ்வாறாக, இவர்களின் பாசிச எதிர்ப்பின் யோக்கியதை அம்பலமாகி, சந்தி சிரித்து ஊறே நாறுகிறது! முரணற்ற பிழைப்புவாதம், பதவி-அதிகார வெறி, தன் வளர்ச்சிக்காகக் கூட்டணிக் கட்சிகளையே ஒருவருக்கொருவர் கீழறுப்பது ஆகிய இக்கட்சிகளின் தன்மையின் காரணமாக பா.ஜ.க.வை ஒன்றிய ஆட்சியதிகாரத்தில் இருந்து இறக்கும் குறைந்தபட்ச நோக்கத்திற்குக் கூட இவர்கள் தகுதியற்றவர்கள் என்பது நிரூபனமாகிறது.

000

2023-இல் ‘இந்தியா கூட்டணியால் பாசிசத்தை முறியடிக்க முடியாது’ என்று நாம் பேசியபோது, திமுகவும் அதன் அடிவருடிகளும் நம்மை வறட்டுவாதிகள், தூய்மைவாதிகள், யாரோடும் ஒட்டாத குறுங்குழுவாதிகள் என வசைபாடினர். இந்தியா கூட்டணியை பலவீனப்படுத்தும் எந்த முயற்சியும் பா.ஜ.க.விற்கு சாதகமாகப் போய்விடும், அந்தவகையில் நாம் பா.ஜ.க.விற்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூடக் குற்றஞ்சாட்டினர்.

ஆனால், 2023 முதல் இந்த மூன்றாண்டுகளில் இந்தியா கூட்டணியை பலவீனப்படுத்தியது நாம் அல்ல; மாறாக, அக்கூட்டணியில் இருந்த கட்சிகளேதான்! இன்று தமிழகத்தில் அந்தக் கூட்டணியையே உடைத்துவிட்டு, ஆளுக்கொரு திசையில் சென்றுவிட்டனர். நம்மை வசைபாடியவர்கள் இந்த உண்மையைப் பற்றி வாய்திறக்கப் போவதில்லை! மூன்றாண்டுகளில் எல்லாத் தேர்தல்களிலும் ஒருவரை ஒருவர் கீழறுக்கும் திருப்பணியைச் செவ்வணே செய்து, பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றியைக் கூடத் தடுக்கத் துப்பற்றவர்கள் என்பது நிரூபனமாயிருக்கும் இந்த நிலைமை குறித்தும் அவர்கள் வாய்திறக்கப் போவதில்லை!! பா.ஜ.க.வை ஒன்றிய ஆட்சியதிகாரத்தில் இருந்து வீழ்த்துவதற்கு, பாசிசத்தை வீழ்த்துவதற்கு அல்லது தடுப்பதற்கு என்று தாம் ஒரு வழிமுறையை முன்வைத்தோமே; அது இன்று கண்முன்னே தோற்று திவாலாகி சந்தி சிரித்து நிற்கிறதே – என்பது குறித்தெல்லாம் பொறுப்புணர்ச்சியோ சுயபரிசீலனையோ இவர்களிடம் கிஞ்சித்தும் இல்லை!

ராகுல் காந்தி அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பேன் என்ற பிரச்சாரத்தை மக்களிடம் செய்கிறார்; பாரத் ஜோடோ யாத்திரை மூலம் இந்தியாவையே ஒன்றிணைக்கிறார்; எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் அணுகுண்டு போட்டுவிட்டார், ஹைட்ரஜன் குண்டு போட்டுவிட்டார்; மோடியின் ஆட்டமே காலி – என்றெல்லாம் வரிந்து கட்டிப் பேசி பொய்நம்பிக்கை ஊட்டி ஊட்டி புதைகுழியில் மக்களைத் தள்ளியதற்கு இவர்கள் இப்போது பொறுப்பேற்றுக் கொள்ளப் போவதில்லை! இன்று அதேவாயால் ராகுலை பப்பு என்றும் காங்கிரசை துரோகக் கட்சி என்றும் வேஸ்ட் லக்கேஜ் என்றும் நாக்கூசாமல் பேசுகின்றனர்!!

ஒருபுறம், “பாசிச எதிர்ப்பில் உறுதியாக இருந்த திமுகவை எல்லோரும் விட்டுவிட்டு ஓடிப்போய்விட்டதாக” ஒப்பாரி வைத்து அனுதாபம் தேடும் அதேசமயம், “காங்கிரசு, பா.ஜ.க. இல்லாத மூன்றாவது ஒரு கூட்டணியை உருவாக்கப்போவதாக” இக்கோமாளிகள் இன்னொரு கேலிக்கூத்தை அரங்கேற்றி வருகின்றனர்.

பாசிசத்தை எதிர்ப்பதிலும் முறியடிப்பதிலும் எந்த உறுதியும் நிலைப்பாடும் தெளிவும் இல்லாத இவர்கள் எப்படி இந்த அனுபவங்களைப் பரிசீலிப்பார்கள்! அதிலிருந்து கற்றுக் கொள்வார்கள்!! பாசிச எதிர்ப்பில் நேர்மையாக உள்ள அறிவாளிகளும் உழைக்கும் மக்களுமாகிய நாம்தான் இந்த அனுபவங்களில் இருந்து படிப்பினையைக் கற்றுக் கொள்ள வேண்டும்! மக்கள் கிளர்ந்தெழுந்து ஒரு உள்நாட்டுக் கலகம் வெடித்தெழாதவரை பூமிப்பந்தில் உள்ள எந்த சக்தியாலும் பாசிசத்தின் முன்னேற்றத்தையும் அதன் வெற்றியையும் தடுத்து நிறுத்தவே முடியாது என்பதே அந்தப் படிப்பினை!!

  • ரவி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன