மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் :
காவிகளிடம் மம்தா தோற்றுப்போனது ஏன்?
செங்கனல் – மே – ஜூன் – 2026 அச்சு இதழில் வெளியான கட்டுரை
கடந்த 15 ஆண்டு காலமாக மேற்கு வங்கத்தில் ஆட்சி செய்த திரிணாமுல் காங்கிரஸ் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளதோடு, அக்கட்சியின் முதல்வரான மம்தா உள்ளிட்டு முக்கியத் தலைவர்களும் தத்தமது தொகுதிகளில் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். மே.வங்கத்தில். மொத்தமுள்ள 294 சட்டமன்ற தொகுதிகளில் பா.ஜ.க 206 தொகுதிகளைக் கைப்பற்றி திரிணாமுல் காங்கிரசை தோற்கடித்து ஆட்சியமைத்துள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 215 இடங்களை வென்ற திரிணாமுல் காங்கிரசு கட்சி, தற்போதைய தேர்தலில் வெறும் 79 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மம்தாவின் கீழ் பதினைந்து ஆண்டு காலமாக அசைக்க முடியாத கோட்டையாக இருந்த மே.வங்கம், தற்போது மணற் கோட்டையாக சரிந்து போனதைப். பற்றி முதலாளித்துவ வியந்துபோய் வெவ்வேறு கோணங்களில் அலசி வருகின்றனர்.
ஆனால், திரிணாமுல் காங்கிரசின் வீழ்ச்சி தீடீரென்று நிகழ்ந்துவிடவில்லை. கடந்த 1999-ஆம் ஆண்டு வாஜ்பாயி தலைமையிலான பா.ஜ.க-வின் கூட்டணி ஆட்சியில் மம்தா பங்கெடுத்த நாளிலிருந்தே அதன் தோல்வியும் சீரழிவும் தீவிரமாகத் தொடங்கிவிட்டன. அன்றிருந்தே மே.வங்கத்தில் பா.ஜ.க வலுவாகக் காலூன்றத் தொடங்கிவிட்டது.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் வெறும் 3 இடங்களை வென்ற பா.ஜ.க 2021 தேர்தலில் 77 இடங்களை கைப்பற்றியது. தற்போதைய தேர்தலில் மம்தாவை தோற்கடித்த பா.ஜ.க-வின் சுவேந்து அதிகாரி, முந்தைய சட்டமன்ற தேர்தலிலும் மம்தாவைத் தோற்கடித்தார். பின்பு அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில்தான் மம்தா வெற்றி பெற்றார். திரிணாமுல் காங்கிரசின் சரிவும், தோல்வியும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பே அப்பட்டமாக தெரியத் தொடங்கியது.
2014-இல் ஒன்றியத்தில் மோடியின் தலைமையில் பா.ஜக ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய பின்பு, காவி பாசிஸ்டுகள் மே.வங்கத்தில் இந்து மதவெறி முனைவாக்கத்தை தீவிரப்படுத்தினர். அங்கு வேகமாக நடந்தேறிய காவிகளின் இந்துவெறி முனைவாக்கத்தை தடுத்து நிறுத்துவதற்காக மம்தா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் விளைவாக ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள் அங்கு வேகமாக வளர்ந்தன.
மே.வங்கத்தில் 2021-ஆம் ஆண்டில் 1900-ஆக இருந்த ஆர்.எஸ்.எஸ் சாகாக்களின் எண்ணிக்கை, தற்போது 4500-ஆக அதிகரித்திருக்கிறது. காவிகளின் பல்வேறு அமைப்புகள் கிராமப்புறங்களிலும் பழங்குடிகள் வாழும் பகுதியிலும் பல்கிப் பெருகியிருக்கின்றன. அம்மாநிலத்திற்கு அறிமுகமே இல்லாத இராமநவமியும், அனுமன் ஜெயந்தி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. இதுபோன்ற இந்து மதப் பண்டிகைகளின் ஊர்வலங்களையொட்டி பல இடங்களில் கலவரங்கள் நடக்க ஆரம்பித்தன.
மேற்கு வங்கத்தில் முசுலீம் மக்கள் தொகை 27% இருப்பதால் தான் காலூன்றிய நாளிலிருந்தே இந்துமதவெறி முனைவாக்கத்திற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பா.ஜ.க பயன்படுத்தி வந்தது. முசுலீம்களை “வந்தேறிகள்” என்றும் “அவர்களை வங்கதேசத்திற்கு அனுப்ப வேண்டும்” என்றும் தமது பாசிச செயல்திட்டத்தினை காவிகள் பல ஆண்டுகளாகத் தீவிரப்படுத்தி வந்துள்ளனர். ‘தான் இந்துக்களின் பாதுகாவலன்’ என்றும் ‘மம்தா இந்துக்களின் எதிரி’ என்றும் மக்கள் மத்தியில் வீச்சாகப் பிரச்சாரம் செய்தனர்.
ஆனால், மம்தாவோ “டெல்லியிலிருந்து வரும் பா.ஜ.க-வினர் தான் ஊடுருவல்காரர்கள்” என்று மென்மையாகவே காவிகளைக் கண்டித்தார். ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலின் இந்துமதவெறி அரசியலை எதிர்த்துப் பிரச்சாரங்களையும் போராட்டங்களையும் கட்டியமைப்பதற்கு பதிலாக, மதச்சார்பற்ற நிலையில் ஊன்றி நிற்பதற்குப் பதிலாக, இந்துக்களைத் தாஜா செய்யும் (Hindu appeasement) அரசியலையே கையில் எடுத்தார். அதாவது, “நான்தான் இந்துக்களின் உண்மையான காவலன்” என்று காட்டிக் கொள்ளும் பல்வேறு முயற்சிகளை மம்தா கையில் எடுத்தார்; அதன்மூலம், இந்துக்களின் வாக்குகளைத் தான் பெற்றுவிட முடியும் என்றும் கணக்குப் போட்டார்.
அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த சங்கப் பரிவாரங்கள் அங்கு மோடி தலைமையில் இராமர் கோவிலைத் திறந்து வைத்தார்கள் என்றால், மம்தாவோ அதற்கு போட்டியாக 250 கோடி ரூபாய் செலவில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் பூரி ஜெகந்நாதர் கோவிலைத் திறந்து வைத்தார். மேலும் அக்கோவிலின் பிரசாதத்தை ரேசன் கடைகளின் மூலம் விநியோகிக்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். துர்கா பூஜையை நடத்தும் பார்ப்பனர்களுக்கான ஊக்கத்தொகை 2018-ஆம் ஆண்டில் ஒரு குழுவிற்கு ரூ.18,000 என நிர்ணயித்தார். இந்தத் தொகையை 2024-ஆம் ஆண்டில் ரூ.85,000 ஆக உயர்த்தினார். அதேசமயம், முசுலீம் வாக்குகளைக் கவர்வதற்காக இமாம் உதவித் தொகையையும் அறிவித்தார்.
வங்கக் கலாச்சாரத்தின் பாதுகாவலன் திரிணாமுல் காங்கிரசு என்றும், அதைப்பற்றி வெளியாளான பா.ஜ.க-விற்கு எதுவும் தெரியாது என்றும் கூறினார். அதேநேரத்தில், சண்டி பாராயணமும் செய்தார்; காவிகளின் ஜெய் ஸ்ரீ ராம் முழக்கத்திற்கு மாற்றாக துர்கா பூஜையின் மரபை இராமனோடு இணைத்தார்; ஹூக்ளி நதிக்கரையில் ‘கங்கா ஆரத்தி’யை அறிமுகப்படுத்தினார்; இந்துக்களின் புனித யாத்திரைத் தலமான கங்காசாகருக்கு ரூ.1,500 கோடியில் உள்கட்டமைப்புத் திட்டங்களை அறிவித்தார். மேலும், தனது இந்து அடையாளத்தை உறுதிப்படுத்தும் விதமாக, துர்கா சிலைகளுக்குச் செய்யப்படும் சொக்கு தானம் உள்ளிட்ட மதச் சடங்குகளைத் தனிப்பட்ட முறையில் செய்து, அவற்றைச் சமூக ஊடகங்களில் ஒளிபரப்பினார்.
திரிவேணி கும்பமேளாவை 700 ஆண்டுகால இந்துக்களின் பராம்பரியம் எனக்கூறி மே.வங்கத்தில் பரப்புவதை ஒரு திட்டமாக சங்கப் பரிவாரங்கள் கொண்டுவர மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. சங்கப் பரிவாரங்களின் தோல்வியடைந்த இத்திட்டத்திற்கு உயிர் கொடுப்பதற்காக திரிணாமுல் கட்சியினர் இத்திட்டத்தை மேலும் வீச்சாகக் கொண்டு சென்றனர்!
அதேபோல், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது, பா.ஜ.க.வினருக்கு இணையாகப் போட்டி போட்டுக் கொண்டு திரிணாமுல் கட்சியினர் இராம நவமியைக் கொண்டாடினர்.
காவிகளை முறியடிக்க வேண்டுமென்றால், அவர்கள் மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ள இந்து உணர்வை (hindu consciousness) எதிர்த்து வீரியமான பிரச்சாரங்களையும் போராட்டங்களையும் கட்டியெழுப்ப வேண்டும். ஆனால், மம்தாவோ அதே இந்து உணர்வை தாஜா செய்து, ‘நான் தான் இந்துக்களின் காவலன்’ என்று காட்டிக் கொண்டால் வெற்றி பெற்றுவிடலாம் என்று கணக்குப் போட்டுள்ளார். ஆனால், நடைமுறையில் மம்தாவின் நடவடிக்கைகளி அதே இந்து உணர்வை வளர்ப்பதற்கு ஒத்திசைவாகவும் உறுதுணையாகவும்தான் முடிந்திருக்கின்றன. இதன்விளைவாக மே.வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெருவாரியான இந்துக்கள் ‘போலி இந்துத்துவாவான’ மம்தாவை தோற்கடித்துவிட்டு “அசல் இந்துவெறியர்களான” காவிகளைத் தேர்தெடுந்துள்ளனர்.
மேலும், பிகாரில் எஸ்.ஐ.ஆரின் மூலம் இலட்சக்கணக்கான மக்களின் வாக்குகளைப் பறித்து வெற்றி பெற்ற பா.ஜ.க., மே.வங்கத்திலும் 90 இலட்சம் வாக்காளர்களை நீக்கியது. இதில் பெரும்பான்மையாக முசுலீம்கள், தலித்துகள், பழங்குடிகளின் வாக்குரிமையே பறிக்கப்பட்டன. தர்க்கமுரண் (logical discrepancy) என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு, மக்களின் வாக்குரிமையைச் சோதிப்பதற்காக வெளிமாநிலங்களிலிருந்து நூற்றுக்கணக்கான நீதித்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
எஸ்.ஐ.ஆரின் மூலம் பறிக்கப்பட்ட தமது வாக்குரிமையை மீண்டும் பெறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் அன்றாடம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். எஸ்.ஐ.ஆருக்கு எதிராகப் பல இடங்களில் மக்களின் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் பலர் கைது செய்யப்பட்டனர். ஒருகட்டத்தில் இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் வெகுண்டெழுந்த மக்கள் ஏழு நீதித் துறை அதிகாரிகளை அவர்களின் அலுவலகத்திலேயே சிறை வைத்தனர். இச்சம்பவத்தையொட்டி உச்சநீதிமன்றம் என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிட்டது. இப்படி மக்கள் எஸ்.ஐ.ஆர் என்ற பெயரில் பல துயரங்களுக்கு ஆளாகினர்.
மம்தாவும் அவரது கட்சியும் பா.ஜ.க-வின் எஸ்.ஐ.ஆருகு எதிராக, நீதிமன்றத்தை நாடினர். எஸ்.ஐ.ஆரிலிருந்து தனது கட்சியைப் பாதுகாக்க மம்தா நடத்திய பல போராட்டங்களை தனது மதவெறிப் பிரச்சாரத்தின் மூலம் பா.ஜ.க முறியடித்தது. கடந்த ஆண்டில் வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்ததையடுத்து அங்கு ஒரு சில இடங்களில் இந்துக்கள் தாக்கப்படுவதைச் சாக்காக வைத்துக் கொண்டு, “இந்துக்கள் ஆபத்தில் இருக்கிறார்கள்” “முசுலீம்கள் ஊடுருவல்காரர்கள்” என்ற பிரச்சாரத்தை மே.வங்கத்தில் பா.ஜ.க. தீவிரப்படுத்தியது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின்போது அமித்ஷா, “மாநிலத்தின் எல்லைகள் வழியாக நடைபெறும் சட்டவிரோத ஊடுருவல் தேசியக் கவலையாக (national concern) மாறிவிட்டது; மே 6-ஆம் தேதிக்குப் பிறகு ஊடுருவல்காரர்கள் ஒவ்வொருவரையும் தேடிப்பிடித்து நாடு கடத்துவோம்” என தேசவெறி, மதவெறிப் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தினார். சுவேந்து அதிகாரி போன்ற பா.ஜ.க தலைவர்கள், “முசுலீம்களின் ஒரு ஓட்டுக்கூடத் தமக்குத் தேவையில்லை” என வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்தனர்.
பாசிசத்தை எதிர்ப்பதற்கு குறுங்குழு மனப்பான்மையோடு (sectarian) பிரிந்து நில்லாமல், இந்தியா கூட்டணியோடு இணைந்து நில்லுங்கள் என்று புரட்சியாளர்களுக்குப் பாடம் எடுக்கப்படுகிறது. ஆனால், நகைமுரண் என்னவென்றால் மேற்கு வங்கத்தில் காங்கிரசு., சி.பி.எம்., திரிணாமுல் என அனைவரும் பிரிந்தே நின்றனர். மே.வங்க முசுலீம்களின் வாக்குகள் திரிணாமுல் காங்கிரசு, காங்கிரசு, சி.பி.ஐ(எம்) மற்றும் பிற முசுலீம் கட்சிகளுக்குள் பிரிந்திருக்கின்றன. இவற்றின் விளைவாகவும், கடந்த பதினைந்து ஆண்டுகளில் நடைபெற்ற மூன்று சட்டமன்ற தேர்தல்களில் திரிணாமுல் காங்கிரசு வென்ற பல தொகுதிகளில் இந்த முறை பா.ஜ.க வெற்றி பெற்றிருக்கிறது. புரட்சியாளர்களைக் குறுங்குழுவாதிகள், வரட்டுவாதிகள் என்று ஏளனம் செய்யும் பாசிச எதிர்ப்பாளர்கள் யாரும், தமது சுயநலனுக்காகத் தமக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் மேற்கூறிய கட்சிகளை விமர்சிப்பதில்லை.
இவ்வாறாக, திரிணாமுல் காங்கிரசின் செயல்பாடுகள் அனைத்தும் பா.ஜ.க-வின் இந்துமத முனைவாக்கத்திற்கும், வெற்றிக்கும் உதவியுள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல! மேலும், மம்தாவின் கடந்த 15 ஆண்டுகால ஆட்சியில் சமூகப் பொருளாதார நிலைமை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. வேலையின்மையால் அங்குள்ள இலட்சக்கணக்கான இளைஞர்கள் வேறு மாநிலத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர். பள்ளிக் கல்வித்துறையில் நடந்த ஊழலின் விளைவாக சுமார் 26,000 ஆசிரியர்களின் வேலை பறிக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்டுகள் ஆட்சியிலிருந்தே மே.வங்க கிராமப்புறங்களில் சாலை வசதிகள் போன்ற அடிப்படை கட்டமைப்புகள் கூட குதிரை கொம்பாகவே இருக்கிறது. அரசுத்துறையில் ஒப்பந்த முறையில் சொற்ப கூலிக்கு வேலை பார்த்து வருகின்றனர். ஊதிய உயர்வு பல ஆண்டுகாலமாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. மொத்தத்தில் மக்கள் வாழ்வாதாரங்களில் எந்த முன்னேற்றத்தையும் மம்தா கொண்டு வரவில்லை.
மம்தாவிற்கு எதிரான இந்த அதிருப்தி அலையைத் தனக்குச் சாதகமாகவே பா.ஜ.க பயன்படுத்திக் கொண்டது. ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் நடைபெற்ற மாணவியின் வல்லுறுவு மற்றும் படுகொலை, கொல்கத்தா நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் உள்ள பெண்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பை உருவாக்கியது.
அதேநேரத்தில் மோடி, மே.வங்கத்தின் சமூகப் பொருளாதார நிலைமைகளை முன்னேற்றப் போவதாக பல இடங்களில் பிரச்சாரம் செய்தார். மே.வங்கத்திலிருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கான சாலைகள், மீன்பிடித் துறையில் தன்னிறைவு, இளைஞர்களுக்கான வேலைகள், மம்தா முன்பு அறிவித்த பெண்களுக்கான இலவச திட்டங்களுக்கு போட்டியாக பல்வேறு திட்டங்கள் என அம்மாநில மக்களின் அதிருப்திக்கு வடிகாலாக பலதிட்டங்களை பா.ஜ.க அறிவித்தது.
சமூகப் பொருளாதார நிலைமைகளை தாண்டி 2018 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தல்களில் திரிணாமுல் காங்கிரசு கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டனர். பல நகர்ப்புறங்களில் பஞ்சாயத்து தேர்தல் நடந்தே பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மம்தா அரசால் பல இடங்களில் மாணவர்கள் சங்கத் தேர்தல்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இப்படி மக்களுடன் தொடர்பு ஏற்படுத்தி கொள்ளும் வாய்ப்பின்றி ஆளும் அரசுக்கு எதிரான கோபத்தை உணராமலேயே திரிணாமுல் காங்கிரசு இருந்து வந்தது.
இதுபோன்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு எப்படியாவது மே.வங்கத்தில் ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும்; இனி இப்படியொரு வாய்ப்புக் கிடைப்பது அரிது – என நாலுகால் பாய்ச்சலில் பா.ஜ.க.வும் காவி பாசிசப் படைகளும் வேலை செய்தனர். மேற்கு வங்கத்தில் பதவியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக இந்து மதவெறி ஓநாய்கள் தனது வாலைச் சுருட்டிக் கொண்டு பாசாங்கு செய்யவில்லை. மாறாக, பொது சிவில் சட்டத்தை அமலாக்குவோம்; ‘ஊடுருவல்காரர்களை’ நாடு கடத்துவோம் என்று வெளிப்படையாகத் தமது கோரமுகத்தைக் காட்டியே வெற்றிபெற்றுள்ளனர்.
பன்முகத்தன்மை கொண்ட மே.வங்கத்தை காவி பாசிச சக்திகள் மதவெறி பாசிச அமைப்புகள் மூலமே கைப்பற்றியிருக்கிறார்கள். ஓட்டுப் பொறுக்குவதற்கு மட்டுமே பயிற்றுவிக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரசு கட்சியால் பாசிஸ்டுகளின் வெற்றியை நீண்ட காலத்திற்குத் தடுக்க முடியவில்லை என்பதையே இத்தேர்தல் முடிவுகள் நிரூபித்திருக்கின்றன.
இதை தமிழக நிலைமைகளோடு சற்று ஒப்பிடுவோம். தமிழகத்திலும் 2010-இல் வெறும் 1500 ஆக இருந்த ஷாகாக்களின் எண்ணிக்கை 2025-இல் 4000 ஆக உயர்ந்துள்ளன. காவி பாசிசக் கும்பல் அனைத்து மக்களிடையேயும் ஊடுருவிக் கிளைபரப்பி விஷமரமாக வளர்ந்து வருகின்றனர். மக்கள் மத்தியில் காவிகள் உருவாக்கிவரும் இந்த “இந்து உணர்வை” உடைக்க வேண்டுமென்று சிந்திக்காமல், ‘நாங்கள்தான் இந்துக்களின் உண்மையான காவலன்’ என்று திமுக உள்ளிட கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன. புதிதாக ஆட்சியமைத்துள்ள தவெகவோ, திமுக அளவுகூட பாசிச எதிர்ப்பை மேற்கொள்ளாத ஒரு கட்சியாகும். எனவே, இவையெல்லாம் தமிழகத்தில் காவிகள் அசுர வேகத்தில் வளர்வதையே அண்மை எதிர்காலத்தில் சாத்தியமாக்கும்! மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகளில் இருந்து பாடம் கற்கவிலையெனில், காவிகளை எதிர்த்த பிரச்சாரங்களையும் போராட்டங்களையும் களத்தில் கட்டியமைக்கவில்லையெனில், தமிழகமும் இன்னொரு மேற்கு வங்கமாக மாறுவதைத் தடுக்க முடியாது!
- தாமிரபரணி


