வளங்கள் நிறைந்த இந்தியத் “திருநாடு” ஏன் வெளிநாட்டில் கையேந்துகிறது?

இன்று மோடி மக்களிடம் “தங்கம் வாங்காதீர்கள்”, “பயணங்களைக் குறைத்துக் கொள்ளுங்கள்”, “தேசியப் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்” என்று கோரிக்கை வைப்பது, உண்மையில் தனியாரர்மயம், தாராளமயம், உலகமயம் (LPG) என்ற பொருளாதாரக் கொள்கையின் தோல்வியை மறைமுகமாக ஒப்புக் கொள்வதேயாகும். நாட்டின் வளங்களையும் உழைப்பையும் அடிப்படையாகக் கொண்டு “தற்சார்பான உற்பத்தி அமைப்பை” உருவாக்குவதற்குப் பதிலாக, ஏகாதிபத்தியப் பன்னாட்டு நிதியாதிக்க கும்பல்கள், உள்நாட்டுத் தரகு முதலாளிகலின் இலாபத்தை அச்சாணியாகக் கொண்டு சுழலும் பொருளாதாரத்தை ஆட்சியாளர்கள் கடந்த 30 ஆண்டுகளாக அமல்படுத்தியதன் விளைவுதான் இந்த நெருக்கடி.

சமீபத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மக்கள் இன்னும் சிறிது காலத்திற்குத் தங்கம் வாங்குவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார். இந்தியா தங்கம் வாங்குவதற்காக அந்நியச் செலாவணியைப் பெருமளவில் செலவு செய்ய வேண்டியிருப்பதால், கச்சா எண்ணெய் உள்ளிட்ட இதரப் பொருட்கள் வாங்குவதற்கான அந்நியச் செலாவணி கையிருப்புக் குறைந்து தடை ஏற்படுத்துவதாக உள்ளது எனக் கூறியுள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்காவின் போரானது இன்னும் சிறிது காலத்திற்கு நீடிக்கும் என்பதால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு பெருமளவு சரியும் என்பதாலும், அதனை ஈடுகட்ட மக்கள் தங்கம் வாங்குவதைக் குறைத்துக் கொள்வதுடன், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும், நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் வசதியை (work from home) ஊழியர்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் கூறியுள்ளார். உலக அளவில் ஏற்பட்டுள்ள இந்தப் பொருளாதாரச் சிக்கலில் இருந்து இந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க மக்கள் ‘தேசியப் பொறுப்புடனும்’, ‘பொருளாதார தேசபக்தியுடனும்’ செயல்பட வேண்டும் என மோடி கூறியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் லாக்டவுன் அறிவிப்பதற்கு முன்னதாக, இதேபோன்று மக்களிடம் உரையாற்றிய மோடி மக்களைப் பொறுப்புடன் செயல்படுமாறு கூறினார். எனவே, மோடியின் தற்போதைய பேச்சிற்குப் பின்னால், கொரோனா கால லாக்டவுன் போல ஏதாவது அறிவித்து விடுவாரோ என்று மக்கள் அஞ்சுகின்றனர். அரசியல் சாசனப் பிரிவு 360-ஐ பயன்படுத்தி ‘பொருளாதார அவசரநிலையை’ அறிவிக்கக்கூடும் என்ற அச்சத்தையும் பல முதலாளித்துவப் பத்திரிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் மதிப்பு பேரலுக்கு 125 டாலரைத் தாண்டி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் விளைவாக சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களின் விலை நிச்சயமாக உயரப் போகிறது. மேலும், இன்னும் சிறிது காலத்திற்குள் மிகப்பெரிய விலைவாசி உயர்வைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று அனைவரும் அச்சத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் மோடியின் இந்தப் பேச்சு மக்களிடையே பீதியைக் கிளப்பிவிட்டுள்ளது.

பல பத்தாண்டுகளாக இந்தியப் பொருளாதாரம் தனது அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட மற்ற நாடுகளிடமிருந்து வரும் இறக்குமதியைச் சார்ந்திருக்க வேண்டிய அவலநிலைதான், மோடியின் இந்தக் கோரிக்கைக்குப் பின்னால் உள்ள உண்மையான காரணமாகும்.

உதாரணமாக, 2026 நிதியாண்டிற்கான இந்தியாவின் ஒட்டுமொத்த இறக்குமதியின் மதிப்பு சுமார் 74 இலட்சம் கோடி ரூபாயாகும். இதில் 4 பொருட்கள் மட்டுமே மூன்றில் ஒரு பங்கிற்கு (அதாவது 23 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு) இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அவையாவன: 1) கச்சா எண்ணெய், 2) தங்கம், 3) சமையல் எண்ணெய், 4) உரங்கள்.

இதில் கச்சா எண்ணெய் 13 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கும்; தங்கம் 6.8 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கும்; சமையல் எண்ணெய் 2 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கும்; உரங்கள் 1.4 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கும் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த இறக்குமதி தான் இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயரும் போது, இந்தியா இறக்குமதி செய்வதற்கு அதிக அளவில் அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது. அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரிக்கும் போது, அது இந்திய ரூபாயின் மதிப்பைக் குறைக்கிறது. தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ரூ.95.5 என அதல பாதாளத்தில் இருப்பதுடன், மேன்மேலும் சரிந்து கொண்டே செல்கிறது. இந்திய ரூபாயின் இந்த வீழ்ச்சியானது, இறக்குமதிக்கான செலவை அதிகரிப்பதுடன் விலைவாசி உயர்வுக்கும் வழிவகுக்கிறது. அத்துடன் அந்நியச் செலாவணிக் கையிருப்பையும் சிக்கலுக்கு உள்ளாக்குகிறது.

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல், டீசல் விலைகள் ஏறி பொதுவில் விலைவாசி அதிகரிக்கிறது. மேலும், அதிக டாலர் கொடுத்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இந்திய ரூபாயின் மதிப்பை சரிவுக்குத் தள்ளி, அதன்மூலம் அடுத்த கட்ட விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கிறது. இவ்வாறு தொடர்ச்சியாக ஏற்படும் விலைவாசி உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் இடையறாது அதிகரித்து, அதன் முழுச் சுமையையும் சாதாரண மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் நேரடியாகச் சுமக்க வேண்டிய நிலை உருவாகிறது.

இந்த நெருக்கடியிலிருந்து தப்பிக்க இறக்குமதியைக் குறைக்க வேண்டும் எனக் கூறுகிறார், பிரதமர் மோடி. இங்கே நாம் எழுப்ப வேண்டிய கேள்வி இந்தியா ஏன் இவ்வளவு அதிகமாக இறக்குமதி செய்கிறது என்பதல்ல, இந்தியா ஏன் இன்னமும் இறக்குமதியைச் சார்ந்திருக்கிறது என்பதுதான்.

அளவற்ற இயற்கை வளங்களையும், பரந்து விரிந்த விவசாய நிலங்களையும், உலகின் மிகப்பெரிய தொழிலாளர் படையையும், பிரம்மாண்டமான உள்நாட்டுச் சந்தையையும் கொண்ட ஒரு நாடு, ஏன் இன்னமும் தனது அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட வெளிநாட்டு விநியோகச் சங்கிலிகளையே சார்ந்திருக்கிறது? இந்தக் கேள்விக்கான பதில், இந்திய ஆட்சியாளர்கள் இத்தனை ஆண்டுகளாக அமல்படுத்தி வரும் பொருளாதாரக் கொள்கைகளில் இருக்கிறது.

கச்சா எண்ணெய் எனும் புதைகுழி

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 முதல் 90 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. இந்தியாவிற்குள் கச்சா எண்ணெய் உற்பத்தி என்பது மிகவும் சொற்பமான அளவிற்கே நடைபெறுகிறது. இந்தியாவிற்கு நாளொன்றுக்கு 55 இலட்சம் பேரல் கச்சா எண்ணெய் தேவைப்படுகிறது. ஆனால், வெறுமனே 7 இலட்சம் பேரல்கள் மட்டுமே உள்நாட்டு உற்பத்தியிலிருந்து கிடைக்கிறது. தனது அன்றாடத் தேவைக்காக வெளிநாட்டுக் கச்சா எண்ணெயைச் சார்ந்திருப்பது, புவிசார் அரசியல் நெருக்கடிகளின்போது இந்தியாவின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிவிடுகிறது.

இன்றைக்கு மேற்காசியாவில் ஏற்பட்டிருக்கும் போர்ச்சூழல் இதைத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது. “ஹார்மூஸ் நீரிணை” மூடப்பட்டிருப்பதால், தினந்தோறும் சுமார் 60 கோடி பேரல்கள் உலகச் சந்தைக்குச் செல்வது தடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதி வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டிருக்கிறது. தனது எரிசக்தித் தேவைக்காக வளைகுடா பகுதியின் கப்பல் போக்குவரத்தைப் பெரிதும் சார்ந்துள்ள இந்தியாவால், இதனை வெறுமனே ஒரு புவிசார் அரசியல் நிகழ்வாகக் கடந்து செல்ல முடியாது. ஏனெனில், அது விலைவாசி உயர்வை, சமையல் எரிவாயு தேவையை, உள்நாட்டுச் சரக்குப் போக்குவரத்துகளை, இந்திய ரூபாயின் மதிப்பை நேரடியாகப் பாதிக்கின்றது.

சமையல் எரிவாயு இதற்குத் துலக்கமான உதாரணமாகும். இந்தியா தனது சமையல் எரிவாயுத் தேவையில் 60 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. அதில் 90 சதவீத இறக்குமதி மேற்காசியப் பகுதிகளில் இருந்து வருகிறது. சமீபத்திய நெருக்கடியின் காரணமாக, வளைகுடாப் பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்வது பெருமளவிற்குக் குறைந்துபோய், அமெரிக்காவிடமிருந்து அதிக அளவில் சமையல் எரிவாயு இறக்குமதி செய்யும் நிலைமைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

மேலோட்டமாகப் பார்த்தால் இந்தியா சமையல் எரிவாயுச் சிக்கலைத் தீர்த்துவிட்டதாகத் தோன்றினாலும், நடைமுறையில் இந்தியாவின் சார்பு நிலையில் எவ்வித மாற்றமும் இல்லை. ஒருநாட்டின் புவிசார் அரசியல் நெருக்கடியிலிருந்து இன்னொரு நாட்டை நம்பியிருக்கும் நிலைக்கு இந்தியா மாறியிருக்கிறது.

அதேபோல, சமீப காலங்களாக இந்தியா தனது எரிவாயுத் தேவைக்கு, அது ரசியாவிலிருந்து தள்ளுபடி விலையில் கிடைக்கும் கச்சா எண்ணெயைச் சார்ந்திருக்கிறது. ரசிய எண்ணெயை வாங்குவதற்காக அமெரிக்காவின் தற்காலிக ஒப்புதல் கிடைக்காமல் போயிருந்தால், இந்தியா கடுமையான கச்சா எண்ணெய் பற்றாக்குறையை எதிர்கொள்ள நேர்ந்திருக்கும். இந்தியாவின் எரிசக்தித் தேவை என்பது தற்சார்பானதாக இல்லாமல், அமெரிக்கா, ரசியா மற்றும் மேற்காசிய நாடுகளுடன் நடக்கும் ஆடுபுலி ஆட்டத்தில், அவற்றுடனான உறவை இந்தியா எவ்வாறு பராமரிக்கிறது என்பதைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படுவதாக மாறியிருக்கிறது.

இவ்வாறு தனது எரிசக்தித் தேவைகளுக்காக வெளிநாடுகளைச் சார்ந்திருக்கும் இந்தியாவில், கச்சா எண்ணெய் வளம், ஹைட்ரோ கார்பன் வளம் இல்லாமல் இல்லை. இந்தியாவில் மொத்தமாக 26 படுகைப் படிமங்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றில் மிகச் சிறிய பகுதி மட்டுமே வணிகரீதியில் முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி, உலகிலேயே மிகவும் நீளமான கடற்கரைப் பகுதிகளைக் கொண்ட நமது நாட்டில், கடலோரத்திலும், நிலப்பரப்பிலும் படிமங்கள் இருக்கின்றனவா என இன்னமும் முழுமையாக ஆராயப்படாமல் உள்ளன. இந்தியாவிடம் இன்னும் பயன்படுத்தப்படாத மிகப்பெரிய ஹைட்ரோகார்பன் இருப்புகள் இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. ஆனால், அவை குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதே இல்லை. நாட்டின் எரிசக்தித் தேவையை ஈடுகட்ட உள்நாட்டு உற்பத்தியைச் சார்ந்திருப்பதை விட, வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதையே ஆட்சியாளர்கள் விரும்புவதுதான் அதற்குக் காரணம்.

இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களைப் பொறுத்தமட்டில், அரசுக்குச் சொந்தமான ஓ.என்.ஜி.சி மற்றும் ஐ.ஒ.சி, இந்தியாவில் மட்டுமல்லாமல் உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், ஆப்பிரிக்க நாடுகள், தென் அமெரிக்க நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளிலும் எண்ணெய் வயல்களையும், இயற்கை எரிவாயுவையும் கண்டுபிடிப்பதிலும், எண்ணெய் துரப்பணத்திலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. ஆக, இத்துறையில் அரசு நிறுவனங்களுக்குப் போதுமான தொழில்நுட்ப அறிவும், நிபுணத்துவமும், தகுதியும், திறனும் இருக்கிறது.

இருந்தபோதும், நாட்டின் எண்ணெய் வயல்களைக் கண்டறியும் பொறுப்பு அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. கே.ஜி.பேசின் எனப்படும் கிருஷ்ணா – கோதாவரி நதிப் படுகைகளில் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வயல்களை 1977-இல் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கண்டுபிடித்தது. 1986-இல் 30 கச்சா எண்ணெய்க் கிணறுகளையும், 30 இயற்கை எரிவாயுக் கிணறுகளையும் உருவாக்கி, ஆண்டுக்கு 2000 டன் கச்சா எண்ணெய்யையும், 140 இலட்சம் கியூபிக் மீட்டர் இயற்கை எரிவாயுவையும் உற்பத்தி செய்து வருகிறது. இதேபகுதியில் இன்னும் இதுபோலப் பல எண்ணெய் வயல்களும், இயற்கை எரிவாயு மூலங்களும் இருக்கலாம் என ஓ.என்.ஜி.சி.யின் முதற்கட்ட ஆய்விலேயே தெரிய வந்தது.

ஆனால், அதனை இந்திய அரசு அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லாமல், ரிலையன்ஸ் நிறுவனத்தின் கையில் ஒப்படைத்தது. ரிலையன்ஸ் நிறுவனமோ இங்கிலாந்தின் பிரிட்டீஷ் பெட்ரோலியம், ரசியாவின் ரொஸ்நெஃப்ட், ஐக்கிய அமீரகத்தின் தேசிய எண்ணெய் நிறுவனம் – ஆகிய பன்னாட்டு எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து அதனைச் சுத்திகரிக்கும் தொழிலைப் பிரதானமாகக் கொண்டிக்கிறது. உள்நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்தால் அது நேரடியாக இந்த பன்னாட்டு நிறுவனங்களின் நலனைப் பாதிக்கும். இதன் காரணமாகவே உள்நாட்டில் உள்ள கச்சா எண்ணெய் மூலங்கள் குறித்து எவ்வித ஆய்வும் மேற்கொள்ளாமல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. இதுபோல இன்னும் பல இடங்களில் கச்சா எண்ணெய் இருப்பதற்கான முதற்கட்ட ஆய்வுகள் முடிக்கப்பட்டு, பல பத்து ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் இன்றிக் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இதன் விளைவாக, இன்றைக்கு இந்தியா கச்சா எண்ணெய் உற்பத்தியில் தற்சார்பை அடைவதற்குப் பதிலாக, வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து சுத்திகரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற நாடாக மாறியிருக்கிறது.

 நிலக்கரி: இந்தியா பயன்படுத்தாத மிகப் பெரிய வளம்

இந்தியா, உலக அளவில் மிகப்பெரிய நிலக்கரி வளமுள்ள நாடுகளில் ஒன்று. 39,000 கோடி கியூபிக் டன் அளவிற்கு இந்தியாவில் நிலக்கரி கொட்டிக் கிடக்கிறது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை, நிலக்கரி என்பது அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யப் பயன்படும் எரிபொருளாக மட்டுமே அதன் பயன்பாடு சுருக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், சீனா நிலக்கரிப் பயன்பாட்டினை வேறு ஒரு கோணத்தில் நகர்த்திச் சென்றுள்ளது. சீனா, நிலக்கரியிலிருந்து எரிவாயு தயாரிக்கிறது. அத்துடன் நிலக்கரியிலிருந்து இரசாயனம் தயாரிக்கும் தொழில்கள் மூலம் நிலக்கரியை ஒரு முக்கிய தொழில்துறை வளமாக மாற்றியிருக்கிறது. சீனாவில் நிலக்கரியிலிருந்து செயற்கை வாயு, அம்மோனியா, மெத்தனால், உரங்கள் மற்றும் தொழில்துறை இரசாயனங்கள் தயாரிக்கப்பட்டன. இன்று, சீனா தனது அம்மோனியா மற்றும் யூரியா தேவைகளில் பெரும் பகுதியை, நிலக்கரி அடிப்படையிலான தொழில்துறை அமைப்புகள் மூலம் உற்பத்தி செய்கிறது.

விவசாயத்திற்குத் தேவையான அம்மோனியா மற்றும் யூரியா உரங்களின் மிகப்பெரிய ஏற்றுமதியாளனாக சீனா இன்றைக்கு மாறியிருக்கிறது. அதேசமயம் இந்தியா, பரந்த நிலக்கரி இருப்புக்களைக் கொண்டிருந்த போதிலும், இறக்குமதி செய்யப்படும் திரவ இயற்கை எரிவாயு (LNG), உரங்கள், அம்மோனியா மற்றும் இரசாயனங்களைச் சார்ந்தே இருக்கிறது.

கச்சா எண்ணெயைப் போன்றே இயற்கையாகக் கிடைக்கும் நிலக்கரி வளம் கொட்டிக் கிடக்கும் போதும், அதனை இந்திய அரசு தனது தற்சார்பை நிலைப்படுத்திக் கொள்ளப் பயன்படுத்தாமல், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதைத் தொடர்கிறது. இவ்வாறு இந்திய ஆட்சியாளர்கள் தற்சார்பு பொருளாதாரம் குறித்துக் கிஞ்சித்தும் கவலை இல்லாமல் இருப்பதைப் புரிந்து கொள்ள, சமையல் எண்ணெய் விவகாரத்தில் அந்தத் தற்சார்பு எவ்வாறு திட்டமிட்டு ஒழிக்கப்பட்டது என்பதைப் பார்த்தாலே போதும்.

 சமையல் எண்ணெய் – தற்சார்பு வீழ்த்தப்பட்ட கதை

தற்போது இந்தியா எதிர்கொண்டுள்ள அந்நியச் செலாவணி நெருக்கடியைப் போன்றே, 1970-களின் மத்தியிலும் ஒரு பெரிய நெருக்கடியை இந்தியா சந்தித்தது. அன்றைக்குக் கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக, சமையல் எண்ணெய்தான் மிக அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. இந்தியாவில் எண்ணெய் வித்து உற்பத்தி குறைந்து, சமையல் எண்ணெய் விலைகள் அதிகரித்தன. இதன் விளைவாக, குஜராத் மாநிலத்தில் கல்லூரி விடுதிகளில் உணவுக் கட்டணங்கள் உயர்ந்தன. இதை எதிர்த்து மாணவர்கள் தெருவில் இறங்கி நடத்திய போராட்டம்தான், ஆளுங்கட்சிக்கு எதிரான ‘நவநிர்மான்’ இயக்கமாக வளர்ந்து, நரேந்திர மோடி அந்த இயக்கத்தின் மூலமாகத்தான் அரசியலில் அடியெடுத்து வைத்தார். சமையல் எண்ணெய் விலைகளைக் கட்டுப்படுத்த முடியாததால், இந்தப் போராட்டம் நாடு முழுவதும் பெரிய அளவில் பரவியது.

அவசரநிலைக் காலத்திற்குப் பிறகு, உள்நாட்டிலேயே அதிக அளவு சமையல் எண்ணெயை உற்பத்தி செய்து, எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பது என இந்திய அரசு முடிவு செய்தது. தேசிய பால்வள நிறுவனத்தின் மூலம், தங்கத்தாரைத் திட்டம் என்ற பெயரில் ஒரு திட்டம் முன்னெடுக்கப்பட்டது. நாடு முழுவதும் ஏழு மாநிலங்களில், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியாளர் கூட்டுறவு நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.

தேசிய பால் வள நிறுவனம், ‘தாரா’ என்னும் ஒரு பிராண்டை வடிவமைத்து, கடலெண்ணெய், கடுகு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் எனச் சந்தைப்படுத்தியது. சந்தைப்படுத்திய 2 ஆண்டுகளில், சந்தையில் 50 சதவீதத்தை ‘தாரா’ பிடித்தது. திட்டம் தொடங்கிய 4 ஆண்டுகளில் (அதாவது, 1990-இல்) இந்தியா தனது தேவையில் 98%-ஐ சொந்தமாக உற்பத்தி செய்தது. சமையல் எண்ணெய் இறக்குமதி நின்றுபோனது.

உலகின் மிகப் பெரும் சமையல் எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா இறக்குமதியை நிறுத்தியது, உலகின் மிகப் பெரும் சமையல் எண்ணெய் ஏற்றுமதியாளர்களான அமெரிக்காவுக்கும், மலேசியாவுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் எண்ணெய்க்கு இந்தியா 90% வரி விதித்தது, இதனால் உள்ளூர் உற்பத்தியாளர்கள் இலாபமடைந்தனர்.

1990-களின் மத்தியில், நரசிம்மராவ் அரசு, தனியார்மயம், தாராளமயம், உலகமயம் (உ.த.தா) என்ற மறுகாலனியாக்கப் பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்தியது. அதன் அடிப்படையில் 90% இருந்த சமையல் எண்ணெயின் மீதான இறக்குமதி வரி 65% எனவும், சோயா எண்ணெயின் மீதான இறக்குமதி வரி 45% எனவும் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மலிவு விலை சமையல் எண்ணெய், இந்தியச் சந்தையை மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கத் தொடங்கியது.

அடுத்த நான்கே ஆண்டுகளில் இந்தியா தனது தேவையில் 30% இறக்குமதி செய்யத் தொடங்கியது. அடுத்து வந்த வாஜ்பாயி ஆட்சியில் இறக்குமதி வரிகள் 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டன. தற்போது மோடி தலைமையிலான அரசு, தன் பங்கிற்கு அதனை 5.5% வரை குறைத்துள்ளது!

இதன் விளைவு, உள்ளூர் உற்பத்தியாளர்கள் சர்வதேசச் சந்தையுடன் போட்டி போட முடியாமல் மெல்ல மெல்ல அழிந்து போனார்கள். இந்தியா சமையல் எண்ணெயில் தற்சார்பு நிலையில் இருந்தபோது, நாடு முழுவதும் பல நகரங்கள் எண்ணெய் சந்தையின் முக்கியத் தளங்களாக விளங்கின. கேரளத்தின் கோழிக்கோடு, தமிழ்நாட்டின் ஈரோடு, விருதுநகர், விழுப்புரம், கர்நாடகத்தின் செல்லக்கெரே, தாவன்கெரே, ஹோஸ்பேட், ராய்ச்சூர், ஆந்திரத்தின் அதோனி, அனந்தப்பூர், சித்தூர், மகாராஷ்டிரத்தின் ஜல்காவ்ன், அக்கோலா, அமராவதி, குஜராத்தின் ராஜ்கோட், பாவ்நகர், ஜாம்நகர், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், உத்திரப் பிரதேசத்தின் கான்பூர் – என இந்தியாவெங்கும் எண்ணெய் உற்பத்தித் தளங்கள் வெற்றிகரமாக இயங்கி வந்தன.

ஆனால், இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டவுடன், இந்த நகரங்களில் சமையல் எண்ணெய் உற்பத்தி இலாபமின்றி வீழ்ச்சியடைந்து, தற்போது முற்றிலுமாக அழிந்துவிட்டது.

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட இந்த மாற்றத்தின் மிகப்பெரிய பயனாளி யார் என்றால், அது அதானிதான்! குஜராத்தின் முந்த்ரா துறைமுகம் வழியே பெருமளவில் பாமாயிலை இறக்குமதி செய்த அதானி நிறுவனம், சிங்கப்பூரின் வில்மர் நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து, இறக்குமதி செய்யப்பட்டுச் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் வகைகளை விற்பனை செய்து வருகிறது. ஆண்டுக்கு 58,000 கோடி ரூபாய் அளவிற்கு அந்த நிறுவனம் சமையல் எண்ணெயில் மட்டும் வணிகம் செய்து வருகிறது!

சமையல் எண்ணெயின் தற்சார்பை அழித்தது என்பது அத்துறையில் இயங்கி வந்த சிறு முதலாளிகளை மட்டுமல்ல, எண்ணெய் வித்துக்களை உற்பத்தி செய்த கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையையும் சேர்த்தே அழித்தது. சமையல் எண்ணெய்யை ஏற்றுமதி செய்யும் பன்னாட்டு நிறுவனங்களின் நலன் பாதிக்கப்படக் கூடாது; அவர்களின் அடிவருடிகளான இந்தியத் தரகு முதலாளிகளின் நலனுக்கு பாதிப்பு வரக் கூடாது என்பதற்காகவே பலகோடி இந்தியர்களின் வாழ்க்கையை அழித்தது மட்டுமன்றி, நாட்டின் தற்சார்பையும் ஆட்சியாளர்கள் திட்டமிட்டு அழித்துள்ளனர்.

1990-களில் “தாராளமயம்”, “உலகமயம்”, “தனியார்மயம்” என்ற பெயரில் அமல்படுத்தப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை, இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தித் திறனையும் தற்சார்பு அடித்தளத்தையும் திட்டமிட்டு பலவீனப்படுத்தியது. இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்டன; பொதுத்துறை நிறுவனங்கள் முடக்கப்பட்டன; உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கான பாதுகாப்புகள் அகற்றப்பட்டன; விவசாயமும் தொழிலும் சர்வதேசச் சந்தையின் இலாப வெறிக்குப் பலியாக்கப்பட்டன. அதன்விளைவாக, ஒரு காலத்தில் தன்னிறைவு பெற்றிருந்த சமையல் எண்ணெய் உற்பத்தி அழிந்தது; உள்நாட்டு உர உற்பத்தி பின்னடைவுக்கு உள்ளானது; எரிசக்தித் துறையில் அந்நியச் சார்பு அதிகரித்தது; இந்தியாவின் அத்தியாவசியத் தேவைகள் கூட உலகச் சந்தையில் ஏற்பட்ட விலைகளின் ஏற்றத் தாழ்வுகளால் தீர்மானிக்கப்படும் நிலை உருவானது.

இன்று மோடி மக்களிடம் “தங்கம் வாங்காதீர்கள்”, “பயணங்களைக் குறைத்துக் கொள்ளுங்கள்”, “தேசியப் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்” என்று கோரிக்கை வைப்பது, உண்மையில் தனியாரர்மயம், தாராளமயம், உலகமயம் (LPG) என்ற பொருளாதாரக் கொள்கையின் தோல்வியை மறைமுகமாக ஒப்புக் கொள்வதேயாகும். நாட்டின் வளங்களையும் உழைப்பையும் அடிப்படையாகக் கொண்டு “தற்சார்பான உற்பத்தி அமைப்பை” உருவாக்குவதற்குப் பதிலாக, ஏகாதிபத்தியப் பன்னாட்டு நிதியாதிக்க கும்பல்கள், உள்நாட்டுத் தரகு முதலாளிகலின் இலாபத்தை அச்சாணியாகக் கொண்டு சுழலும் பொருளாதாரத்தை ஆட்சியாளர்கள் கடந்த 30 ஆண்டுகளாக அமல்படுத்தியதன் விளைவுதான் இந்த நெருக்கடி.

எனவே இந்தச் சிக்கலுக்கான தீர்வு மக்களின் நுகர்வைக் கட்டுப்படுத்துவதிலும் இல்லை; “தேசபக்தி” பெயரில் மக்களிடம் தியாகம் கோருவதிலும் இல்லை. மாறாக, நாட்டின் இயற்கை வளங்கள், பொதுத்துறையின் திறன்கள், விவசாயிகள், தொழிலாளர்களின் உழைப்புச் சக்தி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு தற்சார்பு பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்குவதில்தான் உள்ளது. அதற்காக புதிய பொருளாதாரக் கொள்கையின் பாதையை நிராகரித்து, உள்நாட்டு உற்பத்தியைப் பாதுகாக்கும், பொதுத்துறையை விரிவுபடுத்தும், விவசாயத்தையும் தொழில்துறையையும் ஒருங்கிணைக்கும் பொருளாதாரக் கொள்கை நோக்கி நாடு நகர வேண்டியது அவசியம்.

இல்லையெனில், உலகச் சந்தையில் ஏற்படும் ஒவ்வொரு போருக்கும், ஒவ்வொரு எண்ணெய் விலை உயர்வுக்கும், ஒவ்வொரு பொருளாதார அதிர்வுக்கும் இந்திய மக்கள் மீண்டும் மீண்டும் பலியாகிக் கொண்டே இருப்பார்கள்.

  • அறிவு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன