விஜய்-இன் த.வெ.க. மாற்றல்ல,
கிரிமினல் குற்றக் கும்பல்களின் கூடாரமே!
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் முன்னேப்போதும் நடக்காத ஒரு நிகழ்வு 2026 சட்டமன்ற தேர்தலில் நடந்திருக்கிறது. கட்சி ஆரம்பித்து வெறும் இரண்டு வருடங்கள் மட்டுமே ஆகி, தேர்தலில் இதற்கு முன்பு பங்கேற்காத, இன்னும் முழுதளவில் கட்டமைப்பே உருவாகாத, அரசியலைக்கூட ஊறுகாய் போல தொட்டுக்கொண்டு அரசியல் செய்கிற விஜய்-இன் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை வென்றுள்ளது. ஐம்பதாண்டுகளுக்கு மேல் தேர்தலில் நின்று, மாறிமாறி ஆட்சியிலும் இருந்த திராவிட கட்சிகளான திமுக, அதிமுகவை பின்னுக்கு தள்ளி ஆட்சியமைத்துள்ளது.
இந்த வெற்றியை தவெகவினர் மட்டுமல்ல, மக்களே பலர் கொண்டாடுகின்றனர்; இதென்னவோ தங்களுக்கே கிடைத்த ஒரு வெற்றியைப் போலக் கருதி நெகிழ்ந்து போயுள்ளனர். விஜய் மீது பெரிய அளவு அன்போ நம்பிக்கையோ இல்லாதவர்களும் கூட “ஒரு மாற்று வந்தால்தான் என்ன” என்று இந்த முடிவை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இதற்கு ஒத்தூதும் வகையில், “விஜய் ஆட்டோ ஓட்டுனர் ஒருவரை வெற்றிபெற செய்துள்ளார்”, “விஜய் பொறுப்பான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு சீட் கொடுத்துள்ளார்”, “விஜய் அமைதியாக ஒரு மாஸ்டர் பிளான் ஒன்றை செயல்படுத்தி கொண்டிருக்கிறார்”, “விஜய் வந்தால் அவரே பெண்களின் பாதுகாப்பை நேரடியாக கண்காணிப்பார்”, “அவர் ஊழலை ஒழிப்பார்” என்று ஊடகங்களும் விஜய்-இன் நாயக பிம்பத்தை வைத்து அவரை ஒரு மீட்பரைப் போலவும், விஜய் நிஜமாகவே ஒரு “மாற்று சக்தி” என்பது போலவும் சித்தரிக்கிற வேலையை ஊடகங்கள் செய்து வருகின்றனர். “திராவிட கட்சிகள் வந்து கொள்ளையடிக்கும் அளவிற்கு அவர் கொள்ளையடிக்க மாட்டார்”, “விஜய் பல கோடி வருமானத்தை விட்டு வந்திருக்கிறார் என்றால் ஏதோ ஒன்று இருக்கிறது, அவர் நிஜமாகவே மக்களுக்கு நல்லது செய்யத்தான் வந்திருக்கிறார்” என்ற பொதுக் கருத்து உருவாக்கப்படுகிறது. பல இளைஞர்களும், உழைக்கும் மக்களும் “விஜய் வந்து அனைத்தையும் சரிசெய்ய முடியவில்லை என்றாலும், சிலவற்றையாது சரி செய்வார்” என்று நம்பிக்கொண்டுள்ளனர். தவெக என்கிற கட்சி திமுக, அதிமுக போன்ற “தீயசக்திகளை” போல் இல்லாமல், ஒரு “தூயசக்தியாக” இருக்கும் என்று விஜய் சொல்லும் கதைகளை வைத்து சிலர் மனக்கோட்டை ஒன்றையே கட்டியுள்ளனர்.
உண்மையில், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ள கிரிமினல் கும்பல்களின் கூடாரமாகவும், அதிமுக திமுக போன்ற ஓட்டுக் கட்சிகளில் எல்லா அட்டூழியங்களிலும் ஈடுபட்டு, அங்கே இடம் கிடைக்காமல் ஓடி வந்தவர்களின் அணி சேர்க்கையாகவுமே தவெக இருக்கிறது. சொல்லப்போனால் திமுக – அதிமுக போன்ற “தீயசக்திகளுக்கு” இணையாக சீரழிந்த அரசியல்வாதிகளுக்கும் பணக்காரர்களுக்கும் புதிதாக தஞ்சம்புக கிடைத்துள்ள கட்சிதான் தவெக என்பதை ஏ.டி.ஆர் (Association for Democratic Reforms) அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கையின் மூலம் அம்பலமாகியுள்ளது.
திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு இணையாக, தமிழ்நாட்டில் களமிறங்கிய 231 தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களில் 92 வேட்பாளர்கள் மீது (அதாவது 40 சதவீத வேட்பாளர்கள் மீது) ஏற்கனவே கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதில் 43 பேர் மீது தீவிரமான கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற அபிஷேக், செஞ்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட சந்திரசேகரன் மீது 32 வழக்குகள் உள்ளன. சத்தியபாமா குழுமத்தை சேர்ந்த “நட்சத்திர” வேட்பாளரான மரிய வில்சன் மீது கூட 2 தீவிர கிரிமினல் வழக்குகள் உள்ளன. அவர் இன்னொருவர் வீட்டில் நுழைந்து தாக்கும் காணொளி ஒன்றுகூட சமீபத்தில் வைரலானது. இவர்களைத் தாண்டி இன்னும் பல கிரிமினல் குற்றவாளிகள் இக்கட்சியின் சார்பாகப் போட்டியிட்டுள்ளனர், வெற்றியும் பெற்றுள்ளனர்.
அக்கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளராக இருந்து, பூந்தமல்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.பிரகாசம் என்பவர் மீது தேர்தலுக்கு முன்பே பாலியல் குற்றச்சாட்டு ஒன்று வைக்கப்பட்டது. புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட ஒரு திருமண நிகழ்வில், பிரகாசம் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், இதுதொடர்பாக பலமுறை கட்சியின் மேலிடத்திற்குப் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண் காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்துள்லார். இவையனைத்திற்குப் பிறகும் பிரகாசம் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார்! “பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் பாதுகாப்பு எனது நேரடி கட்டுப்பாட்டில் வரும்” என்று கூறிய விஜய் மற்றும் தவெக தலைமையின் இலட்சணம் இத்தகையதுதான். தன் சொந்தக் கட்சிப் பெண்களுக்கே கூட பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத, பாலியல் குற்றக் கும்பலின் கூடாரமான இவர்கள்தான் தமிழ்நாட்டுப் பெண்களைப் பாதுகாப்பார்களாம்!
அதேபோல, சமூகத்தில் வேறெந்த இடத்தையும் விட பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும் சுரண்டல்களும் மிக அதிகமாக நடக்கும் துறையே சினிமாத் துறைதான். அவ்வப்போது பல நடிகைகள், திரைக் கலைஞர்கள் தங்கள் மீதான பாலியல் சுரண்டலையும் வன்முறையையும் பொறுக்க முடியாமல் வெளிக்கொணருகின்றனர். சமீபத்தில் கேரளத் திரையுலகின் பாலியல் சுரண்டலைப் பற்றிய ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்போதும்கூட பிரித்விராஜ், மம்முட்டி போன்ற சில விரல்விட்டு எண்ணத்தக்க ஆண்கள் அதை ஆதரித்தார்களே தவிர, விஜய் போன்ற சினிமாக் கழிசடைகள் யாரும் இவை குறித்து கள்ள மெளனத்தையே சாதித்தனர். இவ்வாறு தன் சொந்தத் துறையில் பெண்களுக்கு நடக்கும் அநீதிகள் குறித்தே வாய்திறக்காத விஜய்தான் சமூகத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வாராம்!
பெண்கள் முன்னேற்றம், பெண்கள் பாதுகாப்பு என்று மூச்சுக்கு முந்நூறு முறை முழங்கும் விஜய், மற்ற பிற்போக்கான, ஆணாதிக்க கட்சிகளைப்போல இல்லாமல் பெண்களுக்கு அதிக அளவில் சீட்டாவது கொடுத்துள்ளாரா? ஒரு 33 சதவீதம், 25 சதவீதமாவது கொடுத்துள்ளாரா? இல்லை. தவெகவின் மொத்த வேட்பாளர்களில் 10 சதவீதத்தினர் மட்டுமே பெண் வேட்பாளர்களாவர்! எனவே, பெண்களின் வாக்குகளை அறுவடை செய்து அதிகாரத்தில் அமர்வதற்காக, ‘பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக’ எல்லாக் கட்சிகளும் எப்படி நாடகமாடுகிறார்களோ, அத்தகையதொரு நாடகம்தான் விஜயுடைதமாகும்.
மேலும், அதிகாரப்பூர்வத் தரவுகளின்படியே, வேறெந்த கட்சியிலும் இல்லாத அளவிற்கு தவெகவில் தான் 100 கோடிக்குமேல் சொத்துள்ள வேட்பாளர்கள் அதிகம் உள்ளனர். அக்கட்சியிலுள்ள 8 வேட்பாளர்களின் சொத்து மதிப்பு 100 கோடியை தாண்டுகிறது. இது திமுக, அதிமுகவை விட அதிகம்! அதேபோல, திமுக., அதிமுக-வுக்கு இணையான எண்ணிக்கையில் கோடீசுவரர்கள் அக்கட்சியில் உள்ளனர். அதிமுகவில் 170 கோடீசுவரர்கள் உள்ளனர், திமுகவில் 160, தவெகவில் 156! ஒருவேளை 4 கோடீசுவரர்கள் குறைவாக இருப்பதுகூட மாற்றம் தானோ என்னவோ!
தவெக கட்சிக்கு பெருமளவில் பணம் செலவழிக்கும் புரவலராக உள்ள ஆதவ அர்ஜுனாவின் சொத்துமதிப்பு (வேட்புமணுவின்படியே) ரூ532 கோடி ரூபாயாகும். அவரது மாமியாரும், அதிமுக கட்சி சார்பில் காரைக்குடி எம்.எல்.ஏ.வாகியுள்ளவருமான லீமா ரோஸின் சொத்துமதிப்போ ரூ.1100 கோடி! மார்டின், லீமாரோஸ், ஆதவ அர்ஜூன என இக்குடும்பத்தின் உண்மையான சொத்துமதிப்பு இதைவிடப் பலமடங்கு அதிகமாகும். இவையெல்லாம், பல்வேறு மாநிலங்களில் கள்ள லாட்டரி விற்றது, பல்வேறு பணமோசடிகளில் ஈடுபட்டது ஆகியவற்றின் மூலம் கொள்ளையடித்த பணமாகும். இக்குடும்பத்தின் மீது பல்வேறி அமலாக்கத்துறை, மத்தியப் புலனாய்வுத்துறையின் (ED, CBI) வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இவ்வாறு “தூயவழியில்” கொள்ளையடிக்கப்பட்ட இப்பணம்தான் தவெகவின் அனைத்து செலவுகளுக்கும் பாய்கிறது. (நாளை இதே வழக்குகளைக் கொண்டு மிரட்டி மார்டின் குடும்பத்தையும் தவெகவையும் தன் கட்டுப்பாட்டில் பா.ஜ.க. கொண்டுவரும்; அதன்மூலம் தமிழகத்தில் தான் நினைக்கும் எல்லாவற்றையும் அரங்கேற்ற முயலும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை)
தனது சொத்தில் ஒரு பங்கை (அதாவது கோடிக்கணக்கான ரூபாயை) பந்தயம் கட்டி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளன் ஒருவன், தான் வெற்றிபெற்ற பின்னர் மக்களுக்குச் சேவை செய்வான் என்பதை விட அரசியல் மூட நம்பிக்கை வேறில்லை! தான் முதலீடாக செலவு செய்த பணத்தை, அதிக இலாபத்தோடு அள்ளவே எம்.எல்.ஏ.வாகவும் அமைச்சராகவும் ஆகிறார்கள். இதைச் செய்யும் திமுக., அதிமுக போன்ற இதர ஓட்டுக்கட்சிகளுக்கும் தவெகவுக்கும் என்ன வித்தியாசம்?
இதையும் தாண்டி எந்தெந்த கட்சிகளைத் “தீயசக்தி” என்றும், எந்தெந்த கட்சிகளை விடத் தான் வேறுபட்டவன் என்றும் விஜய் தன்னை முன்நிறுத்தினாரோ, அந்தக் கட்சிகளில் இருந்து தாவி தவெகவில் வந்து தஞ்சம் புகுந்துள்ள அரசியல்வாதிகளை மகிழ்ச்சியாக ஏற்று, அவர்களுக்குப் பதவிகளையும் வாரி வழங்குகிறார், விஜய்! திமுக., அதிமுகவில் அதிகார-கோஷ்டி மோதல்களாலும் பிற காரணங்களாலும் ஓரங்கட்டப்பட்ட, இடமில்லாத ஊழல்வாதிகள், கிரிமினல்கள் தவெகவில் வந்து சேர்ந்துள்ளனர். அவர்கள் என்ன விஜய் தலைமையில் தமிழ்நாட்டை மாற்றவா வந்துள்ளனர். இக்கட்சியில் உள்ள வெற்றிடங்களை கண்டும், வளரும்போதே சேர்ந்தால் நாளை பணமும் அதிகார பலமும் இரட்டிப்பு அடையும் என்ற கணக்கில்தான் இங்கே தஞ்சம் புகுகின்றனர். “ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு அதிகாரமையம் என்று இருக்காது; ஒரே அதிகாரமையமாக நான்தான் இருப்பேன்; ஆட்சி கிடைத்ததென்று ஆடிப்பார்க்கலாம் என்று கருதினால் விடமாட்டேன்; நான் தவறு செய்யவும் மாட்டேன், பிறர் தவறு செய்யவும் விடமாட்டேன்” என்றெல்லாம் பதவியேற்பு விழாவில் விஜய் பேசியவை வெறும் பஞ்சு டயலாக்குகளன்றி வேறில்லை!
அரசியலில் பலகாலம் இருந்து, சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு சீரழிந்து போன இன்றைய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்துப் பேர்வழியான வீ.எஸ். பாபு போன்றவர்கள் இந்தக் கட்சிக்கு வந்த உடனே மாறி விடுவார்களா? ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பல்வேறு ஊழல்கள் மூலம் சொத்துக்களைக் குவித்த செங்கோட்டையன் திடீரென விஜய்-இன் “கட்டளைக்கு இணங்கி” மாறிவிடுவாரா? அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி போன்றதொரு ஊழல் பெருச்சாளி இந்த கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்றால் இன்னும் நாம் எப்படி இதை “மாற்று” என்று நம்ப முடியும்?!
ஊழல்வாதிகள் மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள், நேரடியாக அவ்வமைப்பல் பயிற்றுவிக்கப்பட்டவர்களும் தவெகவில் தஞ்சம் புகுந்துள்ளனர். எந்த திருப்பரங்குன்றத்தில் இந்துக்களும் இசுலாமியர்களும் ஒருதாய் மக்களாக வாழ்ந்து வருகிறார்களோ, காவிகள் அங்கே குறிப்பிட்ட கற்தூனில் தீபம் ஏற்றுவதை நிராகரித்தார்களோ, அதே கற்தூனில் தீபம் ஏற்ற வேண்டும் எனப் பேசிவரும் சி.டி.ஆர். நிர்மல் குமார் அத்தொகுதியில் எம்.எல்.ஏ.வாகத் தேர்வாகியுள்ளார். எந்த ஸ்டெர்லைட் போராட்டத்தில் 15 பேர் உயிரைத் தியாகம் செய்து ஆலையை மூடினார்களோ, அதே வேதாந்த குழுமத்தின் முதலாளி அனில் அகர்வால் விஜய் வெற்றி பெற்றதும் வாழ்த்துத் தெரிவித்து ஆதரவளிக்கிறார்.
எனவே, ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற ரசிகர்களின் கூடாரமாக இருக்கக்கூடிய ஒரு அமைப்பை அடித்தளமாகக் கொண்ட இக்கட்சி எந்தவித அரசியல் பிரச்சனைகளிலும் மக்களோடு நின்றதில்லை. திமுக., அதிமுக கட்சிகள் அவ்வாறு நிற்பதுபோலப் பாசாங்காவது செய்யும்; இவர்கள் அதைக் கூடச் செய்ததில்லை. கட்சி தொடங்கிய பிறகும்கூட இதேநிலைதான். விஜய்-இன் திரைப்படங்களுக்கு “பிளாக் டிக்கெட்” விற்கும் இவர்களைத்தான் மாவட்டச் செயலாளர்களாகவும், தேர்தல் வேட்பாளர்களாகவும் நிறுத்தியுள்ளனர். இவர்களில் பலர், மேற்கூறியதுபோல கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கக்கூடிய தொழிலதிபர்களாகவும் முதலாளிகளாகவும் இருப்பவர்களாவர்.
விஜயின் திரைக்கவர்ச்சியும் அச்சு, காட்சி, சமூக ஊடகங்கள் அவருக்குக் கொடுத்த அளப்பரிய வெளிச்சமும் சேர்த்து திமுக., அதிமுகவுக்கு மாற்றான ஒரு இரட்சகனாக விஜயை முன்னிறுத்தியுள்ளன. திமுக., அதிமுகவின் மீது மக்களின் இந்த வெறுப்பு, ஒட்டுமொத்த அரசமைப்பின் மீதான வெறுப்பாக துளியும் மாறிவிடக் கூடாதென்பதற்காக, ஆளும் வர்க்கங்களும் அரசு எந்திரமும் விஜயை மாற்றாக முன்னிறுத்துகின்றன. விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், தகுதிக்கும் குறைவான வேலை, கடன் நெருக்கடிகள் – என கடந்த 30 ஆண்டுகாலமாக தனியார்மயம் என்னும் மறுகாலனியாக்கத்தின் நுகத்தடியில் அல்லலுற்று வரும் மக்கள் விஜயை ஒரு மீட்பனாகக் கருதி வாக்களித்துத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால், உண்மையில் மாற்றைத் தேடிய மக்கள் எண்ணெய்ச் சட்டியில் இருந்து எரியும் நெருப்பில் விழுந்துள்ளனர்!
- திருமாறன்

