மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழித்த
பாஜக-வின் சிபிஎஸ்இ ஊழல்
இந்தியா முழுவதிலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி, கல்லூரியில் சேர்வதற்கான வேலைகளில் மாணவர்கள் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்ற வேளையில், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் [CBSE] ஊழல் முறைகேடுகளின் காரணமாக, அப்பாடத்திட்டத்தில் பயிலும் பல ஆயிரம் மாணவர்களின் தேர்வு மதிப்பெண்களில் பல குளறுபடிகள் நடந்திருப்பதால், அவர்கள் இவ்வாண்டு கல்லூரிகளில் சேர முடியுமா என்ற நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
சிபிஎஸ்இ, 12வது பொதுத்தேர்வு விடைத்தாள்களைக் கணினித் திரை வழியே திருத்தும் முறையை [On-screen marking] அவசர கதியில் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. ஆசிரியர்கள், மாணவர்களின் விடைத்தாள்களை நேரடியாகத் திருத்துவதற்குப் பதிலாக, “தேர்வு முறைகளை நவீனப்படுத்துகிறோம், விடைத்தாள் திருத்துவதில் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்துகிறோம், மதிப்பெண் கூட்டலில் உள்ள தவறுகளைக் குறைக்கிறோம்” என்று சொல்லி, கணினித் திரை வழியாக விடைத்தாள்களைத் திருத்தும் முறையை சிபிஎஸ்இ கொண்டு வந்தது. இந்த முறையில், மாணவர்கள் எழுதும் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு இணையத்தின் மூலம் ஒரிடத்தில் சேமிக்கப்படும். இத்தாள்களை, சிபிஎஸ்இ அமைந்திருக்கக் கூடிய தேர்வுத் திருத்தும் மையங்களில் ஆசிரியர்களைக் கொண்டு கணினி மூலம் திருத்தி மதிப்பெண்கள் கொடுக்கப்படும். இவ்வகையில் தேர்வு நடத்துவதற்கான ஒப்பந்தத்தை, ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்ட கோம்ப்ட் [Coempt edu tech] என்ற ஒரு கல்வித் தொழில்நுட்ப நிறுவனத்திற்குச் சிபிஎஸ்இ வழங்கியிருந்தது. முன்னனுபவம் இல்லாத இத்தனியார் நிறுவனமே மதிப்பெண் குளறுபடிகளுக்குக் காரணமாக உள்ளது.
கடந்த மாதம் வெளியான சிபிஎஸ்இ பன்னிரண்டாவது தேர்வுத் தாள்கள் திருத்தல் மற்றும் மதிப்பெண்களில் உள்ள குளறுபடிகள் அம்பலமாகின. மாணவர்களின் விடைத்தாள்கள் அரைகுறையாகத் திருத்தப்பட்டிருப்பது, விடைத்தாள்களே மாறியிருப்பது, மறுகூட்டல் மற்றும் மறுதிருத்தலுக்கு விண்ணப்பிக்க முடியாமல் இருப்பது, மாணவர்களின் தனிப்பட்ட தரவுகளும் விடைத்தாள்களும் இணைய ஹேக்கர்களால் திருட முடிகின்ற அளவிற்கு இணையதளமே மிகவும் பாதுகாப்பற்ற முறையில் உள்ளது ஆகியவற்றைப் பள்ளி மாணவர்கள் அம்பலப்படுத்தினர்.
ஆரம்பத்தில் இக்குற்றச்சாட்டுகளை மறுத்த ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பாதிக்கப்பட்ட மாணவர்களே ஆதாரங்களுடன் இக்குறைபாடுகளை அம்பலப்படுத்தவே, தவறுகளை ஒப்புக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். நிலைமையைச் சமாளிக்க, சிபிஎஸ்இ தலைவர் மற்றும் செயலாளரைப் பணி மாற்றம் செய்ததோடு, சிபிஎஸ்இ-யின் தேர்வு முடிவுகளை வெளியிடும் இணையத்தளத்தைப் பலப்படுத்தும் வேலையில் ஐஐடி பேராசிரியர்களைக் கொண்ட குழுவை இறக்கி விட்டுள்ளனர்.
இப்பிரச்சனைக்குக் காரணமே சிபிஎஸ்இ-யின் ஊழல்தான். கோம்ப்ட் நிறுவனத்திற்கு விடைத்தாள் திருத்துவதற்கான ஒப்பந்தம் கொடுக்க வேண்டும் என்ற முடிவிலிருந்து, ஏற்கனவே இருந்த ஒப்பந்த விதிமுறைகளைச் சிபிஎஸ்இ பலமுறைத் தளர்த்தியுள்ளது. கோம்ப்ட் தவிரப் போட்டியிலிருந்த டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்காமல், ஏற்கனவே பிளாக் லிஸ்ட் செய்யப்பட்ட கோம்ப்ட்க்கு ஒப்பந்தத்தைச் சிபிஎஸ்இ கொடுத்திருக்கிறது.
கணினித் திரை வழியாக விடைத்தாள்களைத் திருத்துவதற்காக மூன்று ஒப்பந்தங்களை 2025-இல் சிபிஎஸ்இ வெளியிட்டது. இம்மூன்றிலும் கோம்ப்ட் நிறுவனத்திற்காக எவ்வாறு ஒப்பந்த விதிமுறைகள் மாற்றப்பட்டது என்பதை, சிதாந்த் சர்தக் என்ற பன்னிரண்டாவது படிக்கும் மாணவன் ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியிருந்தான். அதற்குப் பிறகுதான் எதிர்க்கட்சிகளும் செய்தி ஊடகங்களும் இக்குளறுபடிகளைப் பேச ஆரம்பித்தன. பாஜகவை கொள்கை எதிரியாக அறித்துக் கொண்ட தாவெகவோ இப்பிரச்சனை குறித்து வாய் திறக்கவில்லை.
கோம்ப்ட் நிறுவனம் 2019-இல் குளோபரீனா என்ற பெயரில் இயங்கி வந்தது. தெலுங்கானா மாநிலத்தின் பள்ளித் தேர்வு முடிவுகளை [intermediate exam] வெளியிடுவதற்கான ஒப்பந்தம் குளோபரீனா நிறுவனத்துக்கு அம்மாநில அரசு கொடுத்திருந்தது. இந்நிறுவனத்தின் மென்பொருள் குளறுபடியால் மாணவர்களின் மதிப்பெண்கள் மாறியதோடு, 3.8 இலட்சம் மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்ததாகத் தவறாக அறிவித்தது. இக்குளறுபடிகளினால் 23 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். குளோபரீனா நிறுவனம் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டது. உடனே கோம்ப்ட் என்று பெயரை மாற்றிக் கொண்டது.
பல இலட்சம் மாணவர்கள் பங்கெடுக்கின்ற தேர்வைக் கையாள முன்னனுபவம் இல்லாத, அதற்கான கட்டமைப்பு வசதிகளும் அனுபவமிக்க பணியாட்களும் இல்லாத, ஏற்கனவே குற்றப் பின்னணி கொண்ட ஒரு நிறுவனத்திற்கு ஏன் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது என்ற கேள்விக்குச் சிபிஎஸ்இ நிர்வாகமோ, ஒன்றியக் கல்வி அமைச்சகமோ இன்றுவரை பதிலளிக்கவில்லை. உச்ச நீதிமன்றமோ, இப்பிரச்சனையை மோடியே நேரடியாகக் கண்காணிக்கிறார் என்று அரசு வழக்குரைஞர் கொடுத்த பதிலை ஏற்று, மேற்கொண்டு விசாரணைக்கும் போகவில்லை. நேரடிக் கண்காணிப்பாளரான மோடியும், வழக்கம் போல வாய் திறக்கவில்லை.
அதேவேளையில், இவ்விமர்சனங்களைத் தனது இணையக் கூலிப்படையைக் கொண்டு, தனது வழக்கமான முறைகளில் பாஜக கையாண்டது. விடைத்தாள் திருத்தலில் உள்ள தவறுகளை அம்பலப்படுத்திய மாணவர்களைப் பாகிஸ்தானிகள், தேச விரோதிகள் என்று சமூக வலைதளங்களில் அவதூறு பிரச்சாரம் செய்தது. சில சிபிஎஸ்இ பள்ளிகளின் தாளாளர்களுக்கு டூல் கிட்களை அனுப்பி, அரசுக்கு ஆதரவாகவும், மாணவர்களைச் சமாதானப்படுத்தும் விதமாகவும் பேசிய வீடியோக்களைச் சமூக வலைதளங்களில் பரப்பியது. ஆனால் இவை எதுவும் எடுபடவில்லை. இதனை அம்பலப்படுத்தியது பள்ளி மாணவர்கள் என்பதால், வழக்கம் போல உளவுப் பிரிவு சோதனை, கடுமையான பிரிவுகளின் கீழ் கைது போன்ற ஒடுக்குமுறைகளைப் பாஜகவால் முன்னெடுக்க முடியவில்லை.
ஏற்கனவே நீட் வினாத்தாள் கசிவின் காரணமாக மறுதேர்வு அறிவிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட விரக்தியால் இதுவரை 8 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நீட் வினாத்தாள் கசிவுக்குப் பின்னால் பாஜக நிர்வாகிகள், கோச்சிங் சென்டர் முதலாளிகள், மற்றும் என்டிஏவின் வினாத்தாள் அமைப்பாளர்கள் ஆகியோருக்கு இடையே கள்ளக் கூட்டு இருப்பது அம்பலமானது. பாஜகவைச் சேர்ந்த யாரும் கைது செய்யப்படவில்லை. தற்போது சிபிஎஸ்இ விடைத்தாள்-தேர்வு முடிவுகள் குளறுபடிகளுக்குப் பின்னால் பாஜகவின் ஊழல் முறைகேடுகளே காரணம் என்பது உறுதியாகியுள்ளது. ஆனால் ஒன்றியக் கல்வி அமைச்சர் பதவி விலகவில்லை.
பாசிஸ்டுகள் தங்களது தவறுகளை ஒருபோதும் ஒப்புக்கொள்வதில்லை. அதை அவர்களிடமிருந்து எதிர்பார்க்கவும் முடியாது. சில குறைந்தபட்ச கோரிக்கைகளைக் கூட மக்களின் போராட்டங்களின் மூலமே சாத்தியப்படுத்திக்கொள்ள முடியும்.
- மாணிக்கம்
தகவல் ஆதாரம்
- https://scroll.in/latest/1093176/centre-accepts-responsibility-for-glitches-in-cbse-class-12-evaluation-mechanism
- https://sarthaksidhant.com/coempt/
- https://www.altnews.in/doordarshan-anchor-calls-delhi-student-pakistani-for-raising-cbse-marking-grievance/
- https://www.altnews.in/how-cbse-turned-school-principals-into-its-social-media-pr-wing/
