முதலாளிகளுக்காகப் பெரும்பான்மை மக்களின் வயிற்றை இறுக்கிக் கட்டச் சொல்லும் மோடி!
என்னுடைய கல்லூரிக் கால நண்பன் மோடியின் முரட்டுப் பக்தன். இஸ்லாமிய வெறுப்பு இல்லையென்றாலும், தேசப்பாதுகாப்பு, ஊழல் ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி என்பதிலிருந்து மோடியை இந்தியாவின் மீட்பராகக் கருதுபவன். மோடி ஆட்சி அமைத்ததிற்குப் பிறகு, விரைவில் இந்தியா வல்லரசாகிவிடும் என்று அடிக்கடி உளறிக்கொண்டிருப்பான். சமீபத்தில், சொந்தக் காரைப் பயன்படுத்தாமல் அரசுப் பேருந்தில் அலுவலகத்திற்குப் போவதைப் பார்த்தேன். ஏனென்றதற்கு, மோடி சொன்ன சிக்கன நடவடிக்கையைப் பின்பற்றுவதாகச் சொன்னான்.
நகரங்களில் அரசுப் பேருந்துகளில் மக்களின் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில், உன்னைப் போலச் சொந்த வாகனம் வைத்திருப்போரில் 10 சதவிகிதம் பேர் கூடுதலாக அரசுப் போக்குவரத்தைப் பயன்படுத்தினால் ஏற்படும் நெரிசலை எப்படிச் சமாளிப்பது? எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கச் சொன்னால், கிக் பணியாளர்கள், கார் மற்றும் ஆட்டோ ஓட்டுபவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாதா? இதனைச் சமாளிப்பதற்கான ஏற்பாடுகளை மோடி அறிவித்திருக்கிறாரா? என்று கேட்டேன். சில வினாடிகள் யோசித்துவிட்டு “அதெல்லாம் தெரியாது, ஏதோ என்னால் முடிந்தது” என்று கடந்து சென்றான்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் பேசிய மோடி, நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு, அந்நியச் செலாவணிக் கையிருப்பைப் பாதுகாக்க நாட்டு மக்கள் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தார். வீட்டிலிருந்து பணிபுரிதல்; ஓராண்டுக்குத் தங்கம் வாங்குவதைத் தவிர்த்தல்; பெட்ரோல் மற்றும் டீசல் நுகர்வைக் குறைத்தல்; சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைத்தல்; இரசாயன உரங்களின் பயன்பாட்டை 50 சதவீதம் குறைத்தல்; வெளிநாட்டுப் பொருட்களுக்குப் பதிலாக இந்தியத் தயாரிப்புகளை வாங்குதல்; மற்றும் ஓராண்டுக்கு வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்த்தல் உள்ளிட்ட ஏழு சிக்கன நடவடிக்கைகளை வலியுறுத்தினார்.
இதனை ஏற்று, பல மாநில பாஜக முதலமைச்சர்களும், மத்திய மாநில அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், பாஜக தலைவர்களும் மோடியின் வேண்டுகோளுக்கிணங்கப் பொதுப் போக்குவரத்திலும் இருசக்கர வாகனங்களிலும் பயணிப்பது போன்ற காட்சிகள் ஊடகங்களில் பகிரப்பட்டன. ஈரான்-அமெரிக்கா போரின் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது, அதனால் இந்தச் சிக்கன நடவடிக்கைகளைப் பின்பற்றுவது அவசியமானது என்று தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுப்போரும் நடுப்பக்க அறிவுஜீவிகளும் பிரச்சினையைத் திசைதிருப்புகின்றனர்.
மாதம் 20,000 ரூபாய் சம்பளத்திற்கு மாடாய் உழைத்து, வயித்துக்கும் வாய்க்கும் பத்தாமல் வயிற்றை இறுக்கிக்கொண்டு சிக்கனமாய் வாழ்ந்துவரும் பல கோடி குடும்பங்களிடம் இன்னும் சிக்கனமாய் இருங்கள் என்று சொல்வது எவ்வளவு பெரிய வக்கிரம் என்று இவர்கள் யாரும் கேள்வி எழுப்பவில்லை. ஆளும் வர்க்கத்தின் இந்தக் குரூர புத்தியைத் தேசபக்தி/நாட்டின் நலன் என்று நியாயப்படுத்துகிறது பாஜக கும்பல்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம், வேகமாக வளர்ந்துவரும் நாடு, 2047 இல் இந்தியா வல்லரசு என்றெல்லாம் பிரச்சாரம் செய்தவர்கள், திடீரென்று நிலைமை சரியில்லை, செலவைக் குறைத்துக்கொள்ளுங்கள், வயிற்றைப் பெல்ட்டால் இறுக்கிக் கட்டிக்கொள்ளுங்கள் என்று எச்சரிக்கிறார்கள் என்றால், இதுநாள் வரை “வளர்ச்சி” குறித்துக் காவிக் கும்பல் பேசி வந்ததெல்லாம் கானல்நீர் என்பதோடு உண்மையை மக்களுக்குச் சொல்லாமல் மறைப்பதாகவே தெரிகிறது.
மோடி சொன்னது உண்மைதான். இந்தியாவின் அத்தியாவசியப் பொருள்களான கச்சா எண்ணெய், விவசாயத்திற்கான உரம், சமையல் எண்ணெய் மற்றும் தங்கம்-வெள்ளி ஆகியப் பொருள்களின் பெரும் பகுதி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதனை நேரடியாக இந்திய ரூபாயைக் கொண்டு சர்வதேசச் சந்தைகளிலிருந்து வாங்க முடியாது. அமெரிக்க டாலரைப் பரிவர்த்தனைக்கான பணமாக மிகப்பெரும்பான்மையான நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளதால், டாலரைக் கொண்டுதான் சர்வதேசச் சந்தைகளிலிருந்து இப்பொருள்களை இறக்குமதி செய்ய முடியும். அதற்கான டாலர் கையிருப்பு மிக அவசியம்.
கடந்த இரண்டு வருடத்திற்கும் மேலாக, இந்தியாவில் செய்யப்படும் அந்நிய நேரடி முதலீடுகள் குறைந்து வருவதாலும், பங்குச் சந்தையிலிருந்து பல பில்லியன் டாலர்கள் வெளியேறுவதாலும், ரூபாயின் மதிப்பு தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதாலும், அந்நியச் செலாவணிக் கையிருப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது. சமீபத்திய ஈரான்-அமெரிக்கா/இஸ்ரேல் போரினால் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடுகள் மேற்சொன்ன பிரச்சினையை இன்னும் ஆழமாக்கியுள்ளன. இதனால் அந்நியச் செலாவணிக் கையிருப்பு குறைவதோடு, அரசின் செலவீனங்களும் பலமடங்கு அதிகரிக்கும் என்பதால், “சிக்கன நடவடிக்கைகளின்” மூலம் இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் அளவைக் குறைத்து நிலைமையைச் சமாளித்துக்கொள்ளலாம் என மோடி அரசாங்கம் கருதுகிறது.
மேலோட்டமாகப் பார்த்தால் மோடியின் சிக்கன நடவடிக்கைகள் சரியென்று தோன்றலாம். திரையைச் சற்றே விளக்கிப் பார்த்தால், மக்கள் சமையல் எண்ணெயையும் தங்கத்தையும் நுகர்வதனால் ஏற்பட்டதல்ல, மாறாக இந்தியத் தரகு முதலாளிகளின் ஊதாரித்தனமான செலவுகளாலும், நாட்டின் சுயசார்பை/இறையாண்மையை அடமானம் வைப்பதையே கொள்கையாகக் கொண்டுள்ள ஆட்சியாளர்களாலும்தான் காரணம் என்பது தெரியவரும். முதலாளிகளைக் காப்பாற்றுவதற்காகப் போரைக் காரணம் காட்டி, அந்நெருக்கடியைப் பெரும்பான்மை மக்கள் மீது நயவஞ்சகமாக இறக்கியுள்ளது மோடி-அமித் ஷா கும்பல்.
இப்பிரச்சினையைப் புரிந்துகொள்ள, முதலில் இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பைப் பற்றிப் பார்ப்போம். இரண்டாவதாக, இந்தியத் தரகு முதலாளி வர்க்கம் மற்றும் மோடி-அமித்ஷா கும்பலின் பாத்திரத்தை விரிவாகப் பார்க்கலாம்.
***************
இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு என்பது, இந்தியா வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதை விட அதிகமான பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்த வர்த்தகத்தினால் திரட்டப்பட்ட உபரி அல்ல. உண்மையில், நாம் ஏற்றுமதியை விட அதிகமான பொருட்களை இறக்குமதிதான் செய்கிறோம். இதனால் பொருள் உற்பத்தி சார்ந்த நடப்புக் கணக்கில் நாம் தொடர்ந்து பற்றாக்குறையையே சந்தித்து வருகிறோம்.
கடந்தாண்டுப் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் பொருள் சார்ந்த உற்பத்தி நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஏப்ரல் 2025 இல் 27 பில்லியன் டாலராக இருந்தது, ஏப்ரல் 2026 இல் 28.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. சேவைத்துறையில் பற்றாக்குறை இல்லையென்றாலும், பொருள் உற்பத்தி மற்றும் சேவைத்துறை இரண்டையும் சேர்த்துப் பார்க்கும்போது நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 7.81 பில்லியன் டாலராகக் கடந்தாண்டு இருந்துள்ளது. இதன் அர்த்தம், இந்தியா தனது அடிப்படைத் தேவைக்கான பொருட்களுக்குக் கூட வெளிநாடுகளைத்தான் நம்பியுள்ளது. எனவே அதனை இறக்குமதி செய்வதற்கான டாலர் கையிருப்பு அவசியம்.
மருந்துகள், உரம், சமையல் எண்ணெய், மின்சார வாகன உபகரணங்கள், தொலைத்தொடர்புச் சாதனங்கள், எலக்ட்ரானிக் கருவிகள் ஆகியவற்றைச் சொந்தமாக இந்தியாவிலேயே உற்பத்தி செய்துகொள்ள முடியும். அதன்மூலம் இறக்குமதிக்கான செலவுகளைக் கணிசமான அளவு குறைக்கவும் முடியும். ஆனால் இந்திய முதலாளி வர்க்கத்தின் தரகுத்தன்மை மற்றும் மறுகாலனியாக்க நிகழ்ச்சிப் போக்குகளின் காரணமாகச் சொந்த உற்பத்தி சார்ந்த நடவடிக்கைகளில் அக்கறை காட்டாமல், ஏகாதிபத்தியங்களுக்குச் சாமரம் வீசிப் பிழைப்பதையே பொருளாதாரக் கொள்கையாக வைத்திருப்பதினால், அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களுக்குக் கூட வளர்ந்த நாடுகளைச் சார்ந்திருக்க வேண்டியதாக உள்ளது. குறிப்பாகக் கடந்த எழுபது வருடங்களில் உற்பத்தியின் மூலமாக இந்தியா அந்நியச் செலாவணியை ஈட்டியதே இல்லை.
அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதன் மூலமும் அந்நியச் செலாவணிக் கையிருப்பை அதிகரிக்க முடியும். அந்நிய நேரடி முதலீடுகள் என்பது வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் புதிய தொழில் தொடங்குவது, பழைய தொழிற்சாலைகளை வாங்குவது, தொழில்களை விரிவாக்கம் செய்வது போன்ற நடவடிக்கைகளில் செய்யப்படும் முதலீடுகளாகும். இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு இந்தியாவின் அனைத்து வாசல்களையும் ஆட்சியாளர்கள் திறந்தே வைத்துள்ளனர். இருப்பினும் இந்தியாவின் நிகர அந்நிய நேரடி முதலீடு படிப்படியாகக் குறைந்து பூஜ்ஜியத்திற்கும் கீழே சென்றுகொண்டுள்ளது.
நிகர அந்நிய நேரடி முதலீடு என்பது, இந்தியாவிற்குள் வரும் அந்நிய நேரடி முதலீட்டிலிருந்து, இந்தியாவிலிருந்து வெளியேறும் முதலீடுகளைக் கழித்த பிறகு கிடைக்கும் மதிப்பாகும். அதாவது, சில வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் பணத்தை முதலீடு செய்யும் அதே வேளையில், வேறு சில வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் மூலதனத்தை இந்தியாவிலிருந்து வெளியே எடுக்கின்றனர். மேலும், இந்திய முதலீட்டாளர்கள் வெளிநாடுகளில் முதலீடும் செய்கின்றனர். இந்த உள்வரவுகள் மற்றும் வெளிவரவுகளைக் கழித்த பிறகு, நமக்கு நிகர அந்நிய நேரடி முதலீடு கிடைக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக, நிகர அந்நிய நேரடி முதலீடு கடுமையாகச் சரிவைச் சந்தித்து வருகிறது. 2014-15 இல் 30 பில்லியன் டாலராக இருந்த நிகர FDI, 2024-25 இல் 1 பில்லியன் டாலருக்கும் குறைவாகச் சரிந்துள்ளது. இந்தியாவிற்குள் வரும் மொத்த FDI கணிசமான அளவு அதிகரித்தாலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடுகளைத் திரும்பப் பெறுவதும் (2019-20 இல் 25 சதவீதத்திலிருந்து 2024-25 இல் 64 சதவீதமாக) மற்றும் இந்திய முதலீட்டாளர்களின் வெளிநாட்டு முதலீடுகளும் (2019-20 இல் 17 சதவீதத்திலிருந்து 2024-25 இல் 35 சதவீதமாக) உயர்ந்துள்ளதால் நிகர FDI யின் அளவு சரிந்துள்ளது. 2025-26 நிதியாண்டின் முதல் எட்டு மாதத்தில் பூஜ்ஜியத்திற்கும் கீழாக இருந்த நிகர FDI இன் அளவு, அடுத்த மூன்று மாதத்தில் சற்றே உயர்ந்துள்ளதாக RBI கூறுகிறது. இந்த விவரங்கள் முன்வைப்பது ஒரு விஷயத்தைத்தான்: பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கப் பல சலுகைகளை அறிவித்தபோதும், அது பெருமளவு எடுபடவில்லை என்பதே உண்மை. அந்நிய நேரடி முதலீடுகளின் மூலமாக அந்நியச் செலாவணியை அதிகரிப்பதென்ற திட்டமும் பெரியளவுக்குப் பயனளிக்கவில்லை.
மூன்றாவதாக, வெளிநாட்டுக் கடன்கள் (அரசு + தனியார் வாங்கியது), அந்நிய முதலீட்டு நிறுவன முதலீடுகள் (FII) மற்றும் அந்நிய பங்கு முதலீடுகள் (FPI) மூலமாக இந்தியாவிற்குள் வரக்கூடிய அந்நியச் செலாவணியாகும்.
வெளிநாட்டுக் கடன்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் கோடிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் கடனாக வாங்குகின்றன. கூடவே இந்திய நிறுவனங்கள் தங்களது தொழில் விரிவாக்கத்திற்காகவும் வெளிநாடுகளில் பிற நிறுவனங்களைக் கையகப்படுத்துவதற்காகவும் பல பில்லியன் டாலர்களைக் கடனாக வாங்குகின்றன. இந்தியாவிற்குள் வரும் இக்கடன்கள் அனைத்தும் அந்நியச் செலாவணிக் கையிருப்பாகக் கணக்கு வைக்கப்படுகிறது. ஆனால் இது எப்பொழுது வேண்டுமானாலும் வேண்டுமென்றாலும் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை என்பதால், இதனை நம்பகமான அந்நியச் செலாவணியாகக் கருத முடியாது.
FPI, FII முதலீடுகளானது பங்குச் சந்தையில் பங்குகளை வாங்குவது மற்றும் விற்பது, பத்திரங்களில் முதலீடு செய்வது, நிதிச் சொத்துக்களில் முதலீடு செய்வது, பரஸ்பர நிதியில் முதலீடு செய்வது ஆகியவற்றிலிருந்து பெறக்கூடிய அந்நியச் செலாவணியாகும். இது பங்குச் சந்தைகளின் ஏற்ற இறக்கங்களைப் பொறுத்தே இருக்கும் என்பதால், இதனை அந்நியச் செலாவணி ஈட்டுவதற்கான நம்பகமான வழியாகக் கருத முடியாது. உதாரணமாக, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ச்சியாகச் சரிந்து வருவதால், கடந்த பதினெட்டு மாதங்களில் மட்டும் 45 பில்லியன் டாலர் (~4.5 இலட்சம் கோடி) அளவிலான FII முதலீடுகளும், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் (May 2025-May 2026) 39.94 பில்லியன் டாலர் (~3.65 இலட்சம் கோடி) அளவிலான FPI முதலீடுகளும் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளன. இப்புள்ளிவிவரங்களிலிருந்தே இதன் நிச்சயமற்றத் தன்மையை நாம் புரிந்துகொள்ளலாம். அந்த வகையில், அவை உண்மையில் ‘கையிருப்பு’ அல்ல; அவை நெருக்கடிக்கு எதிரான ஒரு பாதுகாப்பு அரணாகவும் இருப்பதில்லை.
இந்தியாவின் தற்போதைய அந்நியச் செலாவணிக் கையிருப்பு 688.9 பில்லியன் டாலர்களாகும் (தங்கம் உட்பட). இதனைக் குறிப்பிட்டுத்தான் “போதுமான அளவு அந்நியச் செலாவணிக் கையிருப்பு உள்ளது, கவலைப்பட வேண்டியது இல்லை” என்கிறார் ஆர்பிஐ கவர்னர். ஆனால் மோடியோ, அந்நியச் செலாவணிக் கையிருப்பு குறைகிறது, சிக்கன நடவடிக்கைகளில் இறங்குங்கள் என்று அறைகூவல் விடுக்கிறார். இதில் யார் சொல்வதை நம்புவது? அதற்கு 688.9 பில்லியன் டாலர்கள் எவ்வகையில் ஈர்க்கப்பட்டது என்று பார்த்தாலே போதும்.
இந்தியாவின் ஏற்றுமதி-இறக்குமதி நடப்புக் கணக்கில் பற்றாக்குறை உள்ளதாகப் பார்த்தோம். நிகர அந்நிய நேரடி முதலீடுகளும் போதுமான அளவு இல்லை என்பதையும் பார்த்தோம். எனவே, அந்நியச் செலாவணிக் கையிருப்பின் பெரும் பகுதி, இறுதியாகச் சொல்லப்பட்ட வெளிநாட்டுக் கடன்கள், FII மற்றும் FPI முதலீடுகளால் ஈர்க்கப்பட்டது என்பது சொல்லாமலே விளங்கும். கடந்த ஒன்றரை வருடங்களில் பல லட்சம் கோடி முதலீடுகள் பங்குச் சந்தையிலிருந்து வெளியேறிவிட்டன. வரும் காலங்களில் இன்னும் அதிகமான முதலீடுகள் வெளியேறக் கூடும் என்றே முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். இதனால் அந்நியச் செலாவணிக் கையிருப்பு இன்னும் குறைவதற்கான சாத்தியங்களே அதிகம். இந்தப் பின்னணியிலிருந்துதான், அந்நியச் செலாவணிக் கையிருப்பை நம்பி இருக்கக்கூடிய இறக்குமதிப் பொருள்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று மோடி பேசியிருக்கிறார்.
உற்பத்தியில் (பொருள் உற்பத்தி மற்றும் விவசாயம்) சுயசார்பை ஒழித்துக்கட்டி, அனைத்துத் துறைகளையும் அந்நிய முதலீட்டாளர்களுக்குத் திறந்துவிட்டு, பங்குச் சந்தையில் நிதியாதிக்கக் கும்பல்களின் சூறையாடலை அனுமதித்த நடவடிக்கைகளையெல்லாம் வளர்ச்சிக்காக என்று நியாயப்படுத்தி வந்த இந்திய ஆளும் வர்க்கம், இவற்றின் விளைவாகத் தற்போது ஒரு லிட்டர் பாமாயிலைக் கூடுதலாகச் செலவழிப்பதற்கு அந்நியச் செலாவணி என்ற போர்வையில் அமெரிக்க டாலர்களின் வருகைக்காகக் காத்திருக்க வேண்டிய நிலைக்கு நம்மைத் தள்ளியிருக்கிறது.
தற்போதைய நெருக்கடிக்கு இந்திய ஆளும் வர்க்கம்தான் காரணம் என்பதை அடுத்த கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.
- மாணிக்கம்
தகவல் ஆதாரம்
https://rupeindia.wordpress.com/2026/05/15/whose-belts-will-be-tightened/
https://thewire.in/economy/fpis-withdraw-indian-markets-nifty-negative-return-falling-rupee
https://www.bbc.com/news/articles/cwy21x20q23o?utm_source=firefox-newtab-en-intl


