போக்குவரத்துத் துறையில் தனியார்மயத்தைத் தீவிரப்படுத்தும் த.வெ.க. அரசு!

ஜி.சி.சி. முறையின் உண்மை நோக்கம் அரசின் கடனையும் நிதிச்சுமையையும் குறைப்பதல்ல. அரசு படிப்படியாக பேருந்துகளைக் கொள்முதல் செய்வதையும் தன் வசம் வைத்திருப்பதையும் கைகழுவ வேண்டும் என்பதுதான்! எண்ணிப்பாருங்கள், இப்போது ஆயிரக் கணக்கான பேருந்துகள் அரசின் கையில் இருக்கின்றன. ஆனால், ஜி.சி.சி முறை தமிழகமெங்கும் நடைமுறையானால் அரசின் கையில் பேருந்துகள் படிப்படியாக இல்லாமல் போகும்.

டீசல் பேருந்துகளைப் பராமரிக்க ஒரு கி.மீ.க்கு ரூ.125 தேவைப்படுகிறதென்றால், மின்சாரப் பேருந்துகளைப் பராமரிக்க ரூ.81-க்கும் குறைவான தொகையே தேவைப்படுகிறது. அரசே மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்து இயக்கினால், போக்குவரத்துத் துறை இலாபத்தோடே இயங்க முடியும். மக்களுக்கும் சிறந்த, தரமான சேவையை வழங்க இயலும். அரசே செய்ய முடியக் கூடிய இந்த விசயத்தை செய்யாமல் ஏன் தனியாருக்குக் கொடுக்கிறார்கள்? ஏனென்றால், தனியார்மயக் கொள்கையின்படி, அரசு போக்குவரத்துத் துறையில் இருந்து படிப்படியாக விலகி, அதை தனியார் முதலாளிகளுக்கு ஒப்படைக்க வேண்டும். அதற்காகத்தான் ஜி.சி.சி.முறை புகுத்தப்படுகிறது.

000

உழைக்கும் மக்களின் உற்ற தோழனாக கடந்த பல ஆண்டுகளாக பொதுப் போக்குவரத்து தமிழகத்தில் இயங்கி வருகிறது. அன்றாடம் காய்ச்சிகள் முதல் ஐ.டி. ஊழியர்கள் வரை, உள்ளூர் பயனங்கள் முதல் தொலைதூரப் பயணங்கள் வரை ஆகப் பெரும்பாலான உழைக்கும் மக்கள் இன்றும் அரசு பேருந்துகளையே நம்பியிருக்கின்றனர். ஆனால், அப்போக்குவரத்துத் துறையைப் படிப்படியாகத் தனியார்மயமாக்குவதற்கான நடவடிக்கைகளை முந்தைய திமுக, அதிமுக அரசுகள் தொடங்கின. ஓட்டுனர்கள், நடத்துனர்களின் நிரந்தரப் பணியை ஏறத்தாழ முற்றாக ஒழித்து காண்ட்ராக்ட் முறைக்கு மாற்றுவது உள்ளிட்டு கடந்த ஆட்சியாளர்கள் சிறுகச் சிறுகப் புகுதிய தனியார்மயத்தை, தற்போது வந்துள்ள த.வெ.க அரசு மேலும் தீவிரப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

கடந்த டிசம்பர் 2024-இல் முந்தைய திமுக அரசு கொள்முதல் செய்வதாக இருந்த 500 மின்சாரப் பேருந்துகளுக்கான ஒப்பந்தத்தை “போதுமான நிதியில்லை” என்ற காரணத்தினால், மார்ச் 2026-இல் இரத்து செய்தது. இப்போது வந்துள்ள த.வெ.க. அரசோ, புதிதாக 500 மின்சாரப் பேருந்துகளின் இயக்கத்தை GCC (Gross Cost Contract) முறையில் தனியாருக்குத் தாரைவார்க்கப் போவதாக அறிவித்துள்ளது. ஜி.சி.சி. முறை என்பது மோடி அரசின் “பி.எம்.இ.டிரைவ்” (PM E-drive) திட்டத்தின் அடிப்படையில், மாநிலங்களின் பொதுப் போக்குவரத்தை படிப்படியாகத் தனியார்வசம் ஒப்படைப்பதற்கான சதிச் செயலாகும். இதைப் புரிந்துகொள்ள ஜி.சி.சி. முறையைப் பற்றிச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

வழக்கமாக போக்குவரத்துத் துறைக்குத் தேவையான பேருந்துகளை அரசானது அசோக் லேலாண்டு போன்ற தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யும். கொள்முதல் செய்த பிறகு அப்பேருந்துகள் அரசின் சொத்தாகிவிடும். பேருந்துகளில் ஓட்டுநர்கள், நடத்துநர்களை நியமிப்பது; பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வது; வழித்தடங்கள், கட்டணங்களை நிர்ணயம் செய்வது – என அனைத்தும் அரசின் கைகளில் இருந்தன. (தனியார்மயம் புகுத்தப்பட்ட பிறகு, இதையே காண்ட்ராக்ட்மயமாக்கியது, அவுட் சோர்சிங் செய்தது ஆகியவை தனிக்கதை)

ஆனால், இந்த ஜி.சி.சி. முறையின்படி, அரசானது பேருந்துகளைக் கொள்முதல் செய்யாது. மாறாக, பேருந்துகள் என்பவை தனியார் முதலாளிகளின் சொத்தாகும். அசோக் லேலாண்டின் துணை நிறுவனமான OHM Global Mobility போன்ற தனியார் நிறுவனங்களோடு ஒப்பந்தம் போடப்படும். அவ்வொப்பந்தப்படி, பேருந்தில் ஓட்டுனர்கள், நடத்துனர்களை நியமிப்பது; பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வது ஆகியவற்றை அத்தனியார் நிறுவனங்களே மேற்கொள்ளும். வழித்தடங்கள், கட்டணங்களை நிர்ணயிப்பது மட்டும் அரசின் கையில் இருக்கும். குறிப்பிட்ட வழித்தடத்தில், குறிப்பிட்ட வகையான (AC, non-AC etc) பேருந்துகளை இயக்க கிலோ மீட்டருக்கு இத்தனை ரூபாய் என்று முன்னரே முடிவு செய்யப்படும். பேருந்து எவ்வளவு குறைவான ஆட்களைக் கொண்டு ஓடினாலும் நட்டமே அடைந்தாலும் ஒப்புக் கொண்ட தொகையை அரசு தனியார் நிறுவனங்களுக்குக் கொடுத்தே ஆக வேண்டும். இதுதான் ஜி.சி.சி. முறையாகும்.

2019-ல் ஒன்றிய அரசு கொண்டு வந்த FAME-II (Faster Adoption and Manufacturing of Electric Vehicles) திட்டத்தின் கீழ், மாநில அரசுகள் மானியம் பெற வேண்டும் என்றால் மின்சாரப் பேருந்துகளை (E-Buses) கட்டாயம் இந்த GCC முறையில் தான் இயக்க வேண்டும் என்று விதியை மாற்றி, இந்தியா முழுவதும் இம்முறையைத் தீவிரமாகத் திணித்தது. அவ்வடிப்படையில் ஏற்கனவே இந்தியாவின் பல்வேறு பெருநகரங்களில் இந்த ஜி.சி.சி. முறை புகுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. தமிழ்நாடு அரசு பி.எம். இ-டிரைவ் திட்டத்தில் இணையவில்லை என்றாலும், முந்தைய திமுக அரசு கடந்த ஜீன் 2025-இல் இருந்து ஜி.சி.சி. முறையை தமிழகத்தில் அமல்படுத்தி வருகிறது. ஏற்கனவே, உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் நிதியுதவியோடு திமுக ஆட்சியில் Switch Mobility, OHM Global Mobility ஆகிய நிறுவனங்களோடு போடப்பட்ட ஒப்பந்தங்களின்படி, சென்னை மாநகராட்சியில் 625 பேருந்துகள் இம்முறையில்தான் இயங்குகின்றன. இதன்படி, குளிர்சாதன (AC) மின் பேருந்துகளுக்கு கி.மீ.க்கு ரூ.81 மற்றும் சாதாரண (non-AC) மின் பேருந்துகளுக்கு ரூ.77 ஐ தமிழக அரசு மேற்படி நிறுவனங்களுக்கு “நிலைக் கட்டணமாக” செலுத்தி வருகிறது.

 

 “தீய சக்தியான திமுகவிற்கு மாற்று நாங்கள்தான்” என்று பேசித் திரியும் தற்போதைய தவெக அரசோ, இத்தனியார்மய நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தும் திசையில் இறங்கியுள்ளது. அதாவது, சென்னையில் மட்டுமே நடைமுறையாகிவந்த இத்திட்டத்தைத் தற்போது MTC, TNSTC, SETC என தமிழகமெங்கும் விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன் முதற்கட்டமாக, ஏற்கனவே கூறியதுபோல 500 மின்சார பேருந்துகளின் இயக்கத்தை ஜி.சி.சி. முறையில் இயக்குவதற்கான டெண்டரைக் கோரியுள்ளது.

‘ஒரு பேருந்தைக் கொள்முதல் செய்ய ரூ.30 இலட்சம் முதல் 40 இலட்சம் வரை செலவாகிறது; அதுவே, மின் பேருந்துகள் என்றால் ரூ.2 கோடி வரை செலவாகிறது; ஜி.சி.சி. முறையில் அரசு பேருந்துகளைக் கொள்முதல் செய்யவே தேவையில்லை; எனவே, நட்டத்தில் இயங்கி வரும் போக்குவரத்துத் துறைக்கு ஜி.சி.சி முறை ஒரு சிறப்பான திட்டமாகும்; மின்சாரப் பேருந்துகளை பராமரிப்பதும் அதன் பேட்டரிகளைப் புதுப்பிப்பதும் மிகவும் சிரமமான (high risk) பணியாகும்; எனவே, அது தனியார் வசம் இருப்பதால் அரசின் சிரமம் தவிர்க்கப்படுகிறது; மேலும், சிறந்த, தரமான சேவையை தனியார் நிறுவனங்கள் வழங்கும்; வழித்தடங்களையும் கட்டணங்களையும் அரசே நிர்ணயம் செய்வதால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் அதேசமயம் அரசின் நிதிச் சுமையும் கடனும் குறையும்; டீசல் பேருந்துகளை இயக்கும்போது அரசு பராமரிப்புக்காக மட்டுமே கி.மீ.க்கு ரூபாய் 125 வரை செலவழிக்க வேண்டியுள்ளது; ஆனால், மின்சாரப் பேருந்துகளில் அதிகபட்சமாக ஏசி பேருந்துகளுக்கே ரூ.81 ஐ செலுத்திவிட்டால் போதும், அரசுக்கு வேறெந்த பொறுப்பும் சிரமமும் இல்லை; இவ்வாறாகப் பார்த்தால் இது அனைவருக்கும் உகந்த (win-win) திட்டம்’ – என்றெல்லம் அரசுகளும் தனியார்மய அடிவருடிகளும் அளந்துவிடுகிறார்கள். இதைக் கேட்கும்போது நமக்கே இது மிகப்பெரிய புரட்சிகரமான, சிறந்த திட்டம் என்று தோன்றலாம்.

உண்மையில், இவர்கள் சொல்வதுபோல அரசின் நிதிச்சுமையோ கடனோ குறையாது. ஏனென்றால், ஏற்கனவே கூறியதுபோல ஜி.சி.சி. ஒப்பந்தப்படி மின்சாரப் பேருந்துகள் எத்தனை பயணிகளைக் கொண்டு ஓடினாலும், காலியாகவே ஓடினாலும் கி.மீ.க்கு இத்தனை ரூபாயை அரசு தனியார் நிறுவனங்களுக்குக் கொடுத்தே ஆக வேண்டும். உதாரணமாக, குளிர்சாதனப் பேருந்தில் ஒரு கி.மீ ரூ.81 மற்றும் சாதாரண பேருந்துகளில் ரூ.77 ஆகியவை நிலைக்கட்டணமாக ஏற்கனவே 10 – 12 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளன. ஒரு கி.மீ.க்கு ரூ.81க்கும் குறைவாகவே பயணிகளிடமிருந்து வசூல் ஆனாலும் அரசு தன் சொந்தக் காசைப் போட்டு தனியாருக்கு தன் ஒப்புக் கொண்ட நிலைக்கட்டணத்தை வழங்க வேண்டும்! ஆக, பயணிகள் ஏறுகிறார்களோ இல்லையோ தனியார் முதலாளிகளுக்கு உத்திரவாதமான இலாபம் வரும் அதேசமயம் அரசோ மேன்மேலும் நட்டமடையவே இது வழிவகுக்கும்!! எனவே, இதே நட்டத்தைக் காட்டி வருங்காலத்தில் போக்குவரத்துத் துறையே தனியார்மயப்படுத்துவதுதான் சரி என்று வாதிடப்படும்!

எனவே, ஜி.சி.சி. முறையின் உண்மை நோக்கம் அரசின் கடனையும் நிதிச்சுமையையும் குறைப்பதல்ல. அரசு படிப்படியாக பேருந்துகளைக் கொள்முதல் செய்வதையும் தன் வசம் வைத்திருப்பதையும் கைகழுவ வேண்டும் என்பதுதான்! எண்ணிப்பாருங்கள், இப்போது ஆயிரக் கணக்கான பேருந்துகள் அரசின் கையில் இருக்கின்றன. ஆனால், ஜி.சி.சி முறை தமிழகமெங்கும் நடைமுறையானால் அரசின் கையில் பேருந்துகள் படிப்படியாக இல்லாமல் போகும்.

அரசு நட்டமடையக் கூடாது என்றாலோ அல்லது குறைவான நட்டமடைய வேண்டும் என்றாலோ கி.மீ.க்கு தான் செலுத்தும் நிலைக் கட்டணத்திற்கு இணையான பணத்தை (அதாவது, கி.மீ. ரூ 81-க்கு மேல்) பயணச் சீட்டு வருவாயில் இருந்து வசூலித்தே ஆக வேண்டும். இதற்கு மூன்று விசயங்களை அரசு செய்ய வேண்டியிருக்கும்.

  • ஏற்கனவே இருக்கும் ‘மகளிர் விடியல் பயணம்’ போன்ற இலவசப் பேருந்துப் பயணத் திட்டங்களை இரத்து செய்ய வேண்டும்.
  • கட்டணங்களைப் பலமடங்கு உயர்த்த வேண்டும். ஏற்கனவே, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இலவச, குறைவான கட்டணமுடைய நீலநிற பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்பட்டு, அதிக கட்டணமுள்ள டீலக்ஸ் மற்றும் ஏசி பேருந்துகள் புகுத்தப்பட்டு வருகின்றன. அதாவது, இது மறைமுகமான கட்டண உயர்வே ஆகும். “இனிமேல் அனைத்துப் பேருந்துகளும் ஏசி வசதியோடுதான் வரும்” என்று சமீபத்தில் விஜய் பேசியதையும் இந்தப் பின்னணியில்தான் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, இந்த அடிப்படையில் “எல்லாப் பேருந்துகளிலும் மகளிருக்கு இலவசப் பயணம்” என்ற விஜயின் “வெற்றிப் பயணத் திட்டம்” எல்லாம் வெற்று வாக்குறுதிகள்தான்! இருக்கும் இலவசப் பயணமும் பறிபோகும் என்பதே உண்மை! “இது தவெகவின் நிர்வாகக் குறைபாடு; பாருங்கள் ஸ்டாலின் கொண்டுவந்த விடியல் பயணத் திட்டத்தை விஜய் இரத்து செய்துவிட்டார்” என்று நாளை திமுக இதை வைத்துக் கூக்குரலிட்டு ஓட்டு அறுவடையில் இறங்கலாம்! த.வெ.க.வும் நிதிநிலையைக் காரணங்காட்டி திமுகவைக் குறை கூறலாம்! நாம் முன்னதாகவே ஒன்றைச் சொல்கிறோம்! ஒருவேளை 2026-இல் திமுகவே ஆட்சிக்கு வந்திருந்தாலும் ஜி.சி.சி. முறையை அமல்படுத்தினால், இதைத்தான் செய்தாக வேண்டும். எனவே, இதை ஓட்டுக் கட்சிகளுக்கு இடையிலான சண்டையாகச் சுருக்காமல், தனியார்மய நடவடிக்கையின் தவிர்க்கவியலாத கோர விளைவு என்றே புரிந்துகொள்ள வேண்டும்.
  • பேருந்துகள் காலியாக ஓடுவதைத் தவிர்க்க, குறைவான நேர இடைவெளியில் பேருந்துகளை (low frequency) இயக்க வேண்டும் (அதாவது, ஒருவழித்தடத்தில் 30 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயங்குகிறது என்றால், அதை ஒரு மணிநேரத்திற்கு ஒரு பேருந்தாக மாற்ற வேண்டும்)

சென்னை போன்ற பெருநகரங்களிலேயே இரவு 8 மணிக்கு மேலும் மதிய வேளைகளிலும் பேருந்துகள் குறைவான நேர இடைவெளியில்தான் ஓடுகின்றன. பிற நகர்ப்புறங்கள், கிராமப் புறங்களிலோ நிலைமை இன்னும் மோசம். பேருந்துகளுக்காக மக்கள் மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே இந்த நிலைமை உள்ளபோது, திட்டமிட்டு செயற்கையாக பேருந்தின் நேர இடைவெளியை அதிகரித்தால் என்னவாகும்! மக்கள் கால்கடுக்க பேருந்துக்காகக் காத்திருந்து, கிடைக்கும் பேருந்தில் நசுங்கிப் பிதுங்கி பயணிக்க வேண்டிய நிலைமை ஏற்படும்!

மேற்கூறிய மூன்றில் ஒன்றையோ அல்லது மூன்றையுமோ நடைமுறைப்படுத்தாமல் அரசு ஜி.சி.சி. முறையில் பேருந்துகளை இயக்குவது சாத்தியமே இல்லை. இதன் விளைவுகளைத் தொகுத்துப் பாருங்கள், “இம்முறை அரசு, தனியார், மக்கள் என அனைவருக்கும் பயனளிக்கும் ஒன்று” (win-win) என்பது புழுத்த பொய் என்பது புரியும்!

உண்மையில், மின்சாரப் பேருந்துகளை அரசே கொள்முதல் செய்து இயக்கினால் கி.மீ. ரூ.81-க்கும் குறைவான பராமரிப்புச் செலவே தேவைப்படும். அதாவது, டீசல் பேருந்துகளைப் பராமரிக்க ஒரு கி.மீ.க்கு ரூ.125 தேவைப்படுகிறதென்றால், மின்சாரப் பேருந்துகளைப் பராமரிக்க ரூ.81-க்கும் குறைவான தொகையே தேவைப்படுகிறது. அரசே மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்து இயக்கினால், போக்குவரத்துத் துறை இலாபத்தோடே இயங்க முடியும். மக்களுக்கும் சிறந்த, தரமான சேவையை வழங்க இயலும். அரசே செய்ய முடியக் கூடிய இந்த விசயத்தை செய்யாமல் ஏன் தனியாருக்குக் கொடுக்கிறார்கள்? ஏனென்றால், செய்ய முடியுமா முடியாதா என்பதல்ல பிரச்சனை. தனியார்மயக் கொள்கையின்படி, அரசானது குடிநீர், போக்குவரத்து, கல்வி, மின்சாரம் போன்ற துறைகளில் செலவு செய்வதைக் கைகழுவி அவற்றைத் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் தனியார்மயக் கொள்கை. இக்கொள்கையின்படி, அரசு போக்குவரத்துத் துறையைக் கைகழுவ வேண்டுமென்பதால்தான் ஜி.சி.சி. முறை புகுத்தப்பட்டு அத்துறை படிப்படியாகத் தனியார்மயமாக்கப்படுகிறது.

எனவே, தமிழகமெங்கும் ஜி.சி.சி. முறை விரிவுபடுத்தப்பட்டால் அரசின் கைகளில் பேருந்துகள் படிப்படியாக இல்லாமல் போகும். சலுகைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டு, கட்டணங்கள் பன்மடங்கு உயர்த்தப்படும். அரசு போக்குவரத்தை நடத்தும்போதே காண்ட்ராக்ட் முறையில் ஓட்டுநர்கள், நடத்துனர்களை அத்துக்கூலிக்கு எடுக்கும்போது, அது தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டால், ஆயிரக் கணக்கான போக்குவரத்துத் தொழிலாளிகளின் வாழ்வாதாரம் அதல பாதாளத்திற்குச் செல்லும். இன்று கட்டண நிர்ணயமும் வழித்தடங்கள் நிர்ணயமும் அரசின் கையில் இருக்கலாம்; ஆனால், படிப்படியாக அவையும் தனியார்வசம் சென்றுவிடும். பின்னர், அவர்கள் வைத்ததுதான் கட்டணம், அவர்கள் ஓட்டுவதுதான் வழித்தடம் என்றாகிவிடும். கிராமப்புறங்கள், மலைப்பகுதிகளில் பேருந்துகளை இயக்கினால் இலாபம் வராது என்று அந்த வழித்தடங்களை தனியார் முதலாளிகள் கைவிடவே செய்வார்கள். ஏற்கனவே விலைவாசி உயர்வு, வறுமை, வேலையின்மையால் அவதிப்பட்டு வரும் மக்களுக்கு இது இன்னொரு பேரிடியாகவே வந்திறங்கும்!!

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வியர்வையாலும் இரத்தத்தாலும் உழைக்கும் மக்களின் வரிப்பணத்தாலும் உருவாக்கப்பட்ட இத்துறையை படிப்படியாகத் தனியார்மயமாக்கி, கார்ப்பரேட்டு முதலாளிகளின் இலாபத்தைப் பெருக்கவே ஜி.சி.சி. முறை வருகிறது! திமுக, தவெக, அதிமுக, பா.ஜ.க. போன்ற அனைவரும் என்னதான் தங்களுக்குள் தீவிரக் கொள்கை வேறுபாடு இருப்பது போல நடித்தாலும், “தீய சக்தி” “தூய சக்தி” “ஈவில்” “டெவில்” என்று ஒருவரையொருவர் மாறிமாறிக் குற்றஞ்சாட்டினாலும், சகல ஓட்டுக் கட்சிகளின் கொள்கையும் இத்தனியார்மயம் சரி என்பதுதான்! நரகலில் நல்லரிசி பொறுக்குவதைப் போல, தனியார்மயத்தை அமல்படுத்தும் இந்த ஓட்டுக் கட்சிகளில் ஒன்றைத் தேர்வு செய்வது எந்தவகையில் மாற்றம் என்பதை மக்கள்தான் சிந்திக்க வேண்டும்!! 

000

  • சந்தோஷ்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன