விண்ணை முட்டும் மருத்துவச் செலவுகள் :
கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் மருத்துவமனைகளும்
காப்பீட்டு நிறுவனங்களும்!
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மிகச்சிறந்த மருத்துவக் கட்டமைப்பு உள்ளதென்பது பரவலாகப் பேசப்படுகின்ற விடயம். ஆனால், இது எந்தளவிற்குப் பொதுமக்களுக்கானதாக என்பதிலிருந்தே இதை நாம் பெருமையாகப் பார்க்க முடியும். உண்மையிலேயே, பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில்தான் தனியார்துறை மருத்துவத்திற்காகச் சராசரியாக ஒவ்வொரு குடும்பமும் அதிகளவு சொந்தப் பணத்தைச் செலவு செய்கின்றனர்.
ஆறுபத்தைந்து வயதுடைய கூலித் தொழிலாளியான முருகேசன் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் தொகையைக் கொண்டு மருத்துவச் செலவுகளைச் சமாளித்துக் கொள்ளலாம் என்று அவரது குடும்பத்தினர் நம்பியிருந்த நிலையில், அந்தத் தனியார் மருத்துவமனையோ அரசு மருத்துவக் காப்பீடு இங்கு பொருந்தாது என்று இடியை இறக்கியுள்ளனர். உடனே மொத்த மருத்துவச் செலவையும் கடன் வாங்கிக் கட்ட வேண்டியுள்ளது. இக்கடனை ஈடுகட்ட மொத்தக் குடும்பமும் அடுத்த இரண்டு மூன்று வருடங்களுக்குக் கூடுதல் நேரம் உழைத்தோ, குடும்பச் செலவுகளைக் குறைத்தோ அல்லது குடும்பச் சேமிப்பைக் கொண்டோ ஈடுகட்ட வேண்டும்.
முருகேசனைப் போலவே ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான குடும்பங்கள் மருத்துவத்திற்காகச் செலவு செய்வதன் காரணமாக வறுமையை நோக்கித் தள்ளப்படுகின்றனர். ஒன்றிய அரசின் ஒரு புள்ளிவிவரத்தின்படியே, மருத்துவச் செலவின் காரணமாக, வருடத்திற்கு 6.3 கோடி இந்தியர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் வெளிவந்த சுகாதாரம் குறித்த தேசிய மாதிரிக் கணக்கீட்டின்படி, தமிழகத்தில் மருத்துவச் செலவிற்காக ஒவ்வொரு குடும்பமும் சராசரியாக 44,535 ரூபாயும், தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பார்ப்பவர்கள் சராசரியாக 75,149 ரூபாயும் செலவிடுகின்றனர். கூடவே மொத்த மக்கள்தொகையில் 43 சதவிகிதம் பேர் அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் பார்ப்பதாகவும் அப் புள்ளிவிவரம் கூறுகிறது.
உடனே, இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகளவு அரசு மருத்துவமனை பயனாளர்கள் உள்ளனர்; இது திராவிட மாடலின் சாதனை என்றெல்லாம் பேசினர். ஆனால் உண்மையோ, மற்ற மாநிலங்களைவிட விண்ணளவு உயர்ந்துள்ள தனியார் மருத்துவமனைகளின் மருத்துவக் கொள்ளையின் காரணமாக, அதனைச் சமாளிக்க இயலாமல் மக்கள் அரசு மருத்துவமனைகளை நோக்கிப் படையெடுப்பதே இதற்குக் காரணம் என்பதைச் சுட்டிக்காட்டாமல் கடந்து செல்கின்றனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், மருத்துவ உபகரணங்களை அதிகப்படுத்துதல், காலியாக உள்ள / பற்றாக்குறையாக உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர் பணியிடங்களை நிரப்புதல் போன்றவற்றைப் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டியுள்ளது. திமுக ஆட்சிக் காலத்தில் பல புதிய அரசு மருத்துவமனைகளும், புதிய மருத்துவச் சிகிச்சைப் பிரிவுகளும், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட்டிருந்தாலும், அதற்கு இணையாக மருத்துவப் பணியாட்களை நியமிக்கவும் இல்லை, மருத்துவ வசதிகளையும் அதிகரிக்கவில்லை.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் கொள்கை முடிவுகளில் சுகாதார மற்றும் மருத்துவத்திற்கான நிதியை அதிகரிக்க வேண்டும் என்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும், நடைமுறையைப் பொறுத்தவரை கானல் நீராகவே உள்ளது. குறிப்பாக 1990 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, சேவைத் துறையில் தனியார்மயம், தாராளமயம் மற்றும் உலகமயக் கொள்கைகளை அனுமதிக்கத் தொடங்கியதில் இருந்து, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவக் கட்டமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்காமல், அதனை ஈடுகட்டும் வகையில் தொடக்கத்தில் உள்நாட்டுத் தனியார் முதலீடுகளை அனுமதித்து, அதன் தொடர்ச்சியாக வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிக்கத் தொடங்கினர். கூடவே அரசு முதலீட்டுக்குப் பதிலாக, அரசாங்கமே மருத்துவக் காப்பீடுகளை வழங்குவதற்கான திட்டத்தைத் தொடங்கியது.
உதாரணமாக, மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தேசிய சுகாதாரக் கொள்கை 2017-ஐ அறிமுகப்படுத்தியது. அதில் 2025 க்குள், பொது சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீட்டைத் தற்போதுள்ள ஒரு சதவீத GDP அளவிலிருந்து 2.5 சதவிகித GDP ஆக அதிகரிக்க வேண்டும் என்பதை இலக்காக வைத்தது. கூடவே மாநில அரசுகளும் மொத்த பட்ஜெட்டில் எட்டு சதவீதத்திற்கு மேல் மருத்துவத்திற்காக ஒதுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.
2.5 சதவிகித GDP-யில் ஒன்றிய அரசின் பங்கான 40 சதவீதத்தைக் கணக்கிட்டால் ஏறத்தாழ GDP-இல் ஒரு சதவீதத்தை [3.5 லட்சம் கோடி] ஒன்றிய அரசு பொது சுகாதார பட்ஜெட்டுக்காக ஒதுக்க வேண்டும். ஆனால் 2026-27 ஒன்றிய பட்ஜெட்டில் பொது சுகாதாரத்துக்காக 0.27 சதவிகித GDP அளவிலான தொகையை [தோராயமாக 1 லட்சம் கோடி] மட்டுமே ஒதுக்கியுள்ளது. கடந்த பத்து வருடங்களாக, கொரோனா ஆண்டைத் தவிர, பொது சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடு 0.32 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. நிதி அமைச்சகத்தின் செய்திக் குறிப்பின்படி, ஒவ்வொரு ஆண்டும் செய்யப்படும் மொத்த மருத்துவச் செலவில் 35-40 சதவிகிதம் அரசாங்கத்தின் பங்களிப்பாகவும், மீதமுள்ள 65-60 சதவிகிதச் செலவை மக்கள் தங்களது பையிலிருந்து செலவு செய்வதாகவுமே உள்ளது. அரசின் நிதி ஒதுக்கீட்டில் உள்ள இப் பற்றாக்குறைதான் அரசு மருத்துவக் கட்டமைப்பின் சீரழிவாகவும், மக்களைத் தனியார் மருத்துவமனைகளை நோக்கித் தள்ளுவதாகவும் வெளிப்படுகிறது.
அரசு, பொது சுகாதாரத்தில் முதலீடு செய்வதற்குப் பதிலாக மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை முன்தள்ளியது. பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா [PM-JAY] என்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மோடி அரசாங்கம் 2018-ல் கொண்டு வந்தது. அதில் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் அடித்தட்டு நிலையில் உள்ள 10 கோடி குடும்பங்களை [40-50 கோடி மக்களை] இம் மருத்துவக் காப்பீட்டுக்குள் கொண்டு வருவதாக அறிவித்தது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதிகபட்சமாக 5 லட்சம் மருத்துவக் காப்பீடு என்று கூறியது. இக் காப்பீட்டுத் திட்டத்தின் நான்கில் மூன்று பங்கு நிதியினால் சிறிய தனியார் மருத்துவமனைகளே பயனடைந்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. மீதமுள்ள மக்கள் தொகையில் அரசாங்க ஊழியர்களுக்கான காப்பீடு, ESI, தனிநபர்கள் செய்துள்ள காப்பீடு மற்றும் கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களின் காப்பீடு ஆகியவற்றுக்குள் 50 கோடி பேர் வருவதாகக் கொள்வோம். இவர்கள் அனைவருமே தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் மருத்துவக் காப்பீட்டை வைத்துள்ளவர்கள். இவர்கள் பெரும்பாலும் தனியார் மருத்துவச் சேவையைப் பெறுபவர்களாக இருப்பர். மீதமுள்ள 45 கோடி இந்தியர்கள் எவ்வித மருத்துவக் காப்பீடும் இல்லாமலே உள்ளனர். இவர்கள் தங்களது சொந்த நிதியைக் கொண்டே தங்களுக்கான மருத்துவச் சேவையைப் பெற வேண்டிய நிலையில் உள்ளனர்.
இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களினால் அதிகம் லாபம் அடைந்தது தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் என்றால் மிகையல்ல. 2001-இல் காப்பீட்டுத் துறையில் 26 சதவீத அந்நிய முதலீட்டை அப்போதைய வாஜ்பாய் அரசாங்கம் அனுமதித்தது. அதனை 49 சதவீதமாக 2015-இல் மோடி அரசாங்கம் உயர்த்தியது. பிறகு கொரோனா காலகட்டத்தில் 74 சதவீத அந்நிய முதலீட்டைக் காப்பீட்டுத் துறையில் அனுமதித்தனர். தற்போது 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டைக் காப்பீட்டுத் துறையில் அனுமதிப்பதற்கான ஒப்புதலையும் மோடி அரசாங்கம் கொடுத்துள்ளது.
கடந்த 25 வருடங்களில் மருத்துவச் சேவைத் துறையில் தனியார்மயத்தைப் புகுத்தியதற்கு இணையாகவே மருத்துவக் காப்பீட்டுத் துறையிலும் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதையுமே செய்து வந்துள்ளனர். இவையிரண்டும் சேர்ந்து மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் கொள்ளை லாபம் அடைவதற்கான வழியமைத்துக் கொடுத்துவருகிறது ஆளும் வர்க்கக் கும்பல்.
- மாணிக்கம்
தகவல் ஆதாரம்
https://www.thehindu.com/sci-tech/health/tns-health-sector-feats-and-challenges/article69769863.ece
https://frontline.thehindu.com/the-nation/india-healthcare-costs-crisis/article70788234.ece
