இசுலாமிய வெறுப்பைக் கக்கும் “வந்தே மாதரம்” பாடலும் ஓட்டுக் கட்சிகளின் சந்தர்ப்பவாதமும்

பதவியேற்ற முதல் நாளன்றே இசுலாமிய வெறுப்பைக் கக்கும் ‘வந்தேமாதரம்’ பாடலைப் பாடியதன் மூலம், விஜய்-இன் “பா.ஜ.க. எதிர்ப்பு மதச்சார்பின்மை முகத்தின்” சாயம் வெளுத்துப்போனது. ஆனால், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளோ, “வந்தே மாதரம் பாடலே இசுலாமிய வெறுப்பைக் கக்கும் இந்து மதவெறிப் பாடல்” என்று அம்பலப்படுத்தாமல், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டதுதான் பிரச்சினை என்பதுபோல வலிக்காமல் கண்டிக்கின்றனர். இதன்மூலம், பாசிஸ்டுகள் பரப்பும் குருட்டு தேசவெறியை எதிர்த்துக் களமாடுவதில் இவர்கள் கையாலாகாதவர்கள் என்பது மட்டும் அம்பலமாகவில்லை; “மதச்சார்பின்மை” என்பது தவெக, திமுக உள்ளிட்ட அனைத்து ஓட்டுக் கட்சிகளின் முகம்தானே தவிர முகமல்ல என்பதும் அம்பலமாகியுள்ளது.

செங்கனல் – மே – ஜூன் – 2026 அச்சு இதழில் வெளியான கட்டுரை

நடந்து முடிந்த முதலமைச்சர் விஜய் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம், தேசிய கீதம் பாடப்பட்ட பின்னர், மூன்றாவதாக “தமிழ்த்தாய் வாழ்த்து” பாடப்பட்டுள்ளது. அனைத்து அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிகளில் “தேசிய கீதத்துக்கு” முன்னதாக “தேசிய பாடலான” வந்தே மாதரம் பாடப்பட வேண்டும் என்று புதிய வழிகாட்டு நெறிமுறைகளின் மூலம், கடந்த ஜனவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இப்பாடல் பாடப்பட்டதை விட, தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாமிடத்திற்கு பின்தள்ளப்பட்டது குறித்து அன்று காலை முதலே விமர்சனங்கள் எழுந்துவந்து நிலையில், அதனை குறித்து சிறிதும் கவலைப்படாமல் மாலையில் மக்கள் பவனில் நடைபெற்ற தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு விழாவிலும் அதேமுறை பின்பற்றப்பட்டுள்ளது.

வந்தே மாதரம் என்பது வேதங்களில் கூறப்பட்டுள்ள பாரத கலாச்சார அடித்தளத்தை பிரதிபலிக்கும் பாடல் என்று பாசிஸ்ட் மோடியே புகழுந்து பேசியது குறிப்பிடத்தக்கது. பசுவதை, அயோத்தி, காஷ்மீர் பிரச்சனைகளைப் போன்று வெறுப்பை விதைப்பதற்கு, வந்தே மாதரமும் பாசிசக் கும்பலின் முக்கிய ஆயுதமாக மாற்றப்பட்டுள்ளது. இப்பாடலில் பாரதமாதாவை இந்து மதக் கடவுள்களான துர்கையுடனும், இலட்சுமியுடனும் உருவகப்படுத்தி எழுதப்பட்டிருப்பதால் இசுலாமியர்கள் பலர் வந்தே மாதரம் பாடலைப் பாட மறுக்கின்றனர். இதனைச் சாக்காக வைத்து இசுலாமியர்களை “தேசவிரோதிகள்” என்று முத்திரை குத்துகின்றனர். “வந்தே மாதரம் பாடதவர்கள் பாகிஸ்தானுக்குப் போங்கள்” என வெறுப்பையும் விசத்தையும் கக்குகின்றனர்.

முதலாவதாக, “பல நூற்றாண்டுகால அடிமைத்தனத்தில் சிதைந்து போயிருந்த பாரதத்தில் புதிய உயிர்ப்பை ஏற்படுத்த இப்பாடலை பங்கிம் சந்திரர் இயற்றினார்” என்று மோடி கூறியிருக்கிறார். இங்கே பல நூற்றாண்டுகால அடிமைத்தனம் என்று மோடி கூறுவது ஆங்கிலேயர்களால் நம் நாடு அடிமைப்படுத்தப்பட்டதை அல்ல. முகலாயர்களது ஆட்சியைத்தான் அவர் பல நூற்றாண்டுகால அடிமைத்தனம் என்கிறார். இரண்டாவதாக, ‘இசுலாமிய ஆட்சியாளர்களின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த இந்துக்களை’ வேதங்கள் கூறிய கலாச்சாரத்தை முன்னிறுத்தி இப்பாடல் ஒன்றுபடுத்தியதாக மோடி கதையளக்கிறார்.

இதுதான் காவிபாசிஸ்டுகள் திரும்பத் திரும்பக் கூறிவரும், பரப்பிவரும் இசுலாமிய எதிர்ப்பு அரசியலின் அடிப்படை. ‘வேத கலாச்சாரத்தின்படி உலகுக்கே வழிகாட்டியாக வாழ்ந்து வந்த இந்துக்களை வெளியிலிருந்து வந்த இசுலாமியர்கள், பலநூற்றாண்டுகள் அடிமைகளாக வைத்திருந்தார்கள்’ என்றும், ‘மீண்டும் வேதங்கள் கூறுகின்ற கலாச்சாரத்தினை நிலைநாட்ட  வேண்டும்’ என்றும் பொய்யுரைத்து, நாட்டில் இந்து ராஷ்டிரத்தை நிறுவுவதற்கு மக்கள் அடித்தளத்தை உருவாக்குகிறார்கள். இதைத்தான் அவர்கள் “தேசபக்தி” என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.  மோடி கூறுவதைப் போல வேதகாலத்து கலாச்சாரத்தை நிலைநாட்ட வேண்டும் என்று கூறுவதைத் தவிர “வந்தே மாதரம்” பாடலுக்கும் உண்மையான தேசபக்திக்கும் சம்பந்தமில்லை.

1882-ஆம் ஆண்டு வெளிவந்த “ஆனந்த மடம்” எனும் வங்க நாவலில் இடம் பெற்ற பாடல்தான் “வந்தே மாதரம்”. இந்த நாவலை எழுதியவர் பங்கிம் சந்திர சட்டர்ஜி என்ற வங்காளப் பார்ப்பனராவார். அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்தில் டெபுடி மாஜிஸ்ரேட்டாக விசுவாசமான காலனிய சேவை செய்த சட்டர்ஜி, 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் வங்காளத்தில் நவாபுக்கு எதிராக நடந்த வைணவ சந்நியாசிகளின் கலகத்தைப் பின்னணியாகக் கொண்டு இந்நாவலை எழுதினார்.

1773-ஆம் ஆண்டில் வங்காளத்தில் வந்த பஞ்ச காலத்திலிருந்து நாவல் தொடங்குகிறது. அன்றைய வங்காள நவாப்பான மீர் ஜாபரின் கஜானாவை சந்நியாசிகள் கொள்ளையடிக்கின்றனர். இந்த நாவலில் வரும் பவானந்தன் எனும் கதாபாத்திரம், நவாபுக்கு எதிராக வைணவத் துறவிக் கூட்டத்துடன் அரசாங்கக் கஜானாவைக் கொள்ளையிடவும், இசுலாமிய வழிபாட்டுத் தலங்களை இடிக்கவும் செல்லும்போது “வந்தே மாதரம்” பாடலினைப் பாடியபடியே மக்களைத் திரட்டுவதாய் நாவல் நீள்கிறது.

“இந்தப் பாதகர்கள் நிரம்பிய யவனபுரியைத் தகர்த்து ஆற்றில் வீழ்த்திவிட வேண்டும்” என்றும், “இந்தத் துன்மார்க்கர்கள் கூட்டத்தை தீ வைத்து எரித்து அன்னையாகிய நமது தாய்நாட்டை மீண்டும் பரிசுத்தமாக்க வேண்டும்” என்றும் “நமது தேவாலயங்களை இடித்து அவற்றின் மீது அவர்கள் எழுப்பிய கட்டிடங்களைத் தகர்த்தெறிந்து மறுபடியும் இராதா மாதவர்களுக்கு (கிருஷ்ணனுக்கு) கோயில் கட்டுவோமாக!” என்றும் முசுலீம்களுக்கு எதிராக இந்நாவல் விசத்தைக் கக்குகிறது.

“இந்த தாடிக்காரப் பயல்களைத் தேசத்தை விட்டுத் துரத்தினாலன்றி இந்து மார்க்கத்திற்குச் ‌ஷேமமில்லை” என்றும் “இம்முகம்மதியர் ஜாதி எனும் குருவிக் கூட்டைப் பிரித்தெறிய வேண்டுமென்று அடிக்கடி நினைத்தோம். நம் மத எதிரிகள் நகரை அழித்து ஆற்றில் விடக் கருதினோம். இப்பன்றிகளின் கிடையைச் சாம்பலாக்கிப் பூமாதேவியின் துன்பத்தைத் துடைத்தெறிய எண்ணினோம்! நண்பர்களே! அதற்கான காலம் வந்துவிட்டது. வாருங்கள்! நாம் சென்று அந்த இஸ்லாமியப் பாவிகளின் இருப்பிடத்தை அழிப்போம். அப்பன்றிகளை அடைக்கும் பட்டியை எரிப்போம். அக்குருவிக் கூட்டைக் கலைத்துக் குச்சிகளை எல்லாம் காற்றில் பறக்க விடுவோம்” என்றெல்லாம் நஞ்சைக் கக்கி விட்டு, கூடவே, “பகவான் நாமம் ஸ்தோத்திரம் செய்வோமாக!” என்கிறார் பங்கிம் சந்திர சட்டர்ஜி.

முசுலீம்களைத் தீ வைத்துப் பொசுக்குவதுதான் தேசத்தைப் பரிசுத்தமாக்குவதாம்! இதைத்தானே சங்கப் பரிவார பாசிஸ்டுகள் குஜராத்தில் செய்து முடித்தார்கள்! முசுலீம்கள் எழுப்பிய கட்டிடங்களைத் தகர்த் தெறியும் சதித்திட்டத்திற்கான மூலவிதையைக் காவி பாசிசக் கும்பலுக்கு இந்த நாவல்தான் விதைக்கிறது எனும்போது, இந்நாவலில் இடம் பெறும் பாடலும் இந்து பயங்கரவாதிகளுக்கு உவப்பாக இருப்பதில் வியப்பென்ன?

வந்தே மாதரம் என்றால் “தாய்க்கு வணக்கம்” என்று பொருள். எந்தத் தாய்க்கு வணக்கமாம் அது? பாட்டின் இரண்டாம் பகுதியில் இதற்கு பதில் இருக்கின்றது. பார்வதி, காளி, துர்க்கை, சரஸ்வதி, இலட்சுமி என்றெல்லாம் சுட்டப்படுபவள்தான் இந்தத் தாய். பாரதியார் மொழிபெயர்த்துள்ள வந்தே மாதரம் பாடலில் இது தெளிவாகவே உள்ளது.

முசுலீம்களை வெறுக்கக் கற்றுத்தரும் இதே நாவல், ஆங்கிலேயர்களுக்கு அதிக விசுவாசமாக “ஆங்கிலேயர்கள் நமக்குப் பகைவர்கள் அல்லர்” என்றும் “இந்த சந்தான சந்நியாசிகள் செய்த புரட்சியின் காரணமாகவே அரசுப் பொறுப்பை ஆங்கிலேயர்கள் ஏற்க வேண்டி வரும்” என்றும் கூறுகிறது. பல இடங்களில் பிரிட்டிஷாரை வெகுவாகப் புகழ்கிறது. இந்து தர்மம் தழைக்கக் கூட ஆங்கிலேயனின் ஆதிக்கம் வேண்டுமென “ஆன்மீக அடிமைத்தனத்தை” வெளிப்படுத்துகிறது, இந்நாவல்.

நமது நாட்டின் சக மக்களான இசுலாமியர்களை அழிக்கவும் அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு அடிவருடிகளை உருவாக்கவும் முனையும் இந்த நாவலில்தான் இன்றைக்கு தேசபக்தியின் அடையாளமாகக் காட்டப்படும் “வந்தே மாதரம்” பாடல் அமைந்துள்ளது. இப்பாடலை தேசபக்தியின் அடிப்படையில் முன்னிறுத்தி அதன்மூலம் மதவெறியைப் பரப்புவதே பாசிஸ்டுகளின் திட்டம். இதை மக்கள் இனங்கண்டு “வந்தே மாதரம்” பாடலை முற்றிலுமாக புறக்கனிக்க வேண்டும்; இதற்கெதிரான கலகக் குரலை எழுப்ப வேண்டும். ஆனால், சகல ஓட்டுக் கட்சிகளும் இதைப் பட்டும் படாமல் விமர்சித்து வருகின்றனர்.

இச்சர்ச்சையை ஒட்டி சிபிஎம் கட்சி வெளியிட்ட அறிக்கையில், “இன்று பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டதும், பெரும்பாலான மக்களால் புரிந்துகொள்ள முடியாமலும் இருந்தது.” என்று குறிப்பிட்டுள்ளனர். வந்தே மாதரம் பாடல் பாடப்பட்ட விவகாரத்தில் இந்தக் குற்றத்தை தான் இவர்கள் கண்டறிந்தார்களா? சரி அப்போது மக்களுக்கு புரியும்படி தமிழில் வந்தே மாதரம் என்ற “தேசபக்தி” பாடலை பாடச் சொல்லிப் பரிந்துரை செய்வோமா? வந்தே மாதரம் பாடல் விவகாரத்தில் அது முதலில் பாடப்பட்டதும், புரியாமல் இருப்பதும்தான் சிக்கலா?

இதேபோல் சிபிஐ கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியனும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படாததுதான் ஒரே குற்றம் என்பதுபோலவே கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். வந்தே மாதரம் பாடப்படுவதைப் பற்றி (முதலில் பாடப்படுவதை பற்றி அல்ல) அவரின் அறிக்கை சொல்வதென்ன? “வந்தேமாதரம்” ஒரு குறிப்பிட்ட கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டதும் ஒரு மதச்சார்புடையதுமான அப்பாடல் என்பதால் தேசிய கீதமாக இருக்க முடியாது என விடுதலை இயக்கக் காலத்திலேயே தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்கிறார். அருமை! இதிலிருந்து வர வேண்டிய தர்க்கரீதியான முடிவு என்ன? வைக்க வேண்டிய கோரிக்கை அல்லது தெரிவிக்க வேண்டிய கண்டனங்கள் என்ன? அப்படிப்பட்ட பாடலை முன் தள்ளும் பாசிச மோடி கும்பலுக்கு இணங்கிச் செல்லக் கூடாது என்பதுதானே? வந்தே மாதரம் பாடலை பாடுவதை தவிர்க்க வேண்டும், பாடுவதற்கே கண்டனங்கள் என்பதுதானே? ஆனால், அதைப் பற்றியெல்லாம் கள்ளமௌனமே சாதிக்கிறார், வீரபாண்டியன். அவரும் ‘தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுங்கள்’ என்பதுடன் நிறுத்தி கொள்கிறார். ஈயம் பூசியது மாதிரியும் இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும்; எடுக்கும் நிலைப்பாட்டின் மூலம் கட்சியில் இருக்கும் விவரம் தெரிந்த நபர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தியும் செய்ய வேண்டும் அதேநேரத்தில் பாஜக-வின் தேசவெறி பிரச்சாரத்திற்கு எதிராக ஏதும் செய்து விடவும் கூடாது. இதுவே இவரின் கண்டனத்தின் சாரம்.

விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்னும் கூடுதலாக, “இனிவரும் காலங்களிலும் அரசு விழாக்களில் “வந்தே மாதரம்” பாடல் ஒலிக்கப்படுமா? அதுவும் முதலில் இடம்பெறுமா? அல்லது அப்பாடல் இனி ஒலிக்கப்படாமல் தவிர்க்கப்படுமா?” என்றும் “மதச்சார்புடைய கருத்தைக் கொண்டது என்கிற விமர்சனத்துகுள்ளாகும் வந்தே பாரதம் பாடலை நிகழ்சிகளில் பாடுவதை அரசு தவிர்க்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். மேற்பார்வைக்குச் சரியாக தெரியும் இந்த அறிக்கையும் ஒரு மேம்போக்கான அறிக்கையே.

“இசுலாமிய வெறுப்பைக் கக்கும் பாடல்” என்று அம்பலப்படுத்தாமல், “மதச்சார்புடைய பாடல்” என்று விசிக மயிலிறகால் வலிக்காமல் விமர்சிக்கிறது. ஆனால், மயிலிறகால் வருடித்தரும் இந்த விமர்சனங்கள் கூட ஊடகங்களால் பின்னுக்கு தள்ளப்பட்டு, “தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டதா?” என்பது மட்டுமே விவாத பொருளாக்கப்பட்டது.

இதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில், தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட அறிக்கையில், “எங்கள் கோரிக்கையை ஏற்காமல்தான் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் மூன்றாவதாக பாடப்பட்டது” என்றும், “இனிவரும் காலங்களில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் பாடப்படும்” என்றும் தெரிவித்தார். இதைப்பற்றி சட்டசபையில் பேசிய ‘திராவிட இளவரசர்’ உதயநிதி ஸ்டாலுனும் “முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும்” என்று சுருக்கிப் பேசி முடித்துக் கொண்டார். அத்துடன் இந்த அலப்பறைகள் அனைத்தும் இனிதே நிறைவடைந்து விட்டன.

இப்படி “பாசிச எதிர்ப்பு நாயகர்கள்” வந்தே மாதரத்தை எதிர்க்க வேண்டிய முக்கியக் காரணத்தை மக்களிடம் சொல்ல மறந்தது ஏனோ? “விஜயை முதல்வராக்கி அவரை மக்களிடம் அம்பலப்படுத்துவார்கள்” என்று இக்கட்சிகளின் அணிகளில் இருக்கும் பலரும் நம்பும்போது, விஜய்-இன் இந்தப் பாசிச அடிவருடி செயலை அம்பலப்படுத்தாமல் போனது ஏனோ? இவர்கள் எடுத்திருக்க வேண்டிய நிலைப்பாடு வந்தே மாதரம் பாடல் ஒளிக்கப்பெறவே கூடாது என்பதும், அது இசுலாமிய வெறுப்பைக் கக்கும் ஒரு மதவெறி பாடல் என்பதும்தான். தமிழ்நாட்டில் காவி பாசிஸ்டுகளின் வளர்ச்சியைத் தடுக்க, தேசவெறி, மதவெறிக்கு எதிராக அவர்களை அம்பலப்படுத்தியிருக்க வேண்டும். விஜய்-இன் பாசிச அடிவருடித் தனத்தை அம்பலப்படுத்த முதல் நாளே கிடைத்த இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஏன் அவ்வாறு செய்யவில்லை?

காவி பாசிஸ்டுகள் முன்னெடுக்கும் தேசவெறி பிரச்சாரத்திற்கு எதிராக மக்களிடம் பிரச்சாரம் செய்ய இவர்களிடம் துணிவில்லை; எண்ணமுமில்லை. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஆதரவாக, பாஜக ஆளும் மாநிலங்களையெல்லாம் முந்திக்கொண்டு, ஸ்டாலின் திமுக தலைமையில் திமுக அரசு பேரணி நடத்தியதை இத்துடன் இணைத்துப் பார்க்கவும். தமிழ்நாட்டு மக்களிடம் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் மதவெறி பிரச்சாரம் எடுபடுவதை விடவும் தேசவெறி பிரச்சாரம் எடுபட்டுள்ளது. “மோடி இருப்பதால்தான் அண்டை நாடுகள் இந்தியாவிடம் வாலாட்டவில்லை” என்ற பிரச்சாரத்திற்கு ஏராளமான தமிழ் மக்களும் பலியாகி வருகின்றனர். எனவே இவ்வகையில், இதை உடைத்து ‘தேசப்பற்று’ எனும் போர்வையில் முன்தள்ளப்படும் இந்துமதவெறி பாடலை அம்பலப்படுத்துவது அதிமுக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், திமுக உள்ளிட்ட எந்த ஓட்டுக் கட்சிகளும் இதைச் செய்யத் தயாராயில்லை.  

ஒருநாடு என்பது நாட்டு மக்களையும், அவர்கள் சார்ந்திருக்கும் இயற்கை வளங்களையும் பண்பாட்டையும் குறிப்பதாகும். நாட்டு மக்களின் மீதும், நாட்டின் மீதும் உண்மையான அக்கறையுடன், அந்நிய ஆக்கிரமிப்புக்கும், ஆதிக்கத்துக்கும் எதிராகவும், நாட்டு மக்கள் நலன் மீது மாளாக் காதலுடனும் போராடுவதே உண்மையான நாட்டுப் பற்றாகும். இதைச் செய்யாமல் தேசத்துரோக ஒப்பந்தங்கள் மூலம் நாட்டின் இறையாண்மையை ஏகாதிபத்தியங்களிடம் அடகு வைத்து விட்டு, “வந்தே மாதரம்” பஜனை பாடுவது நாட்டுப் பற்றாகாது.

பதவியேற்ற முதல் நாளன்றே இசுலாமிய வெறுப்பைக் கக்கும் ‘வந்தேமாதரம்’ பாடலைப் பாடியதன் மூலம், விஜய்-இன் “பா.ஜ.க. எதிர்ப்பு மதச்சார்பின்மை முகத்தின்” சாயம் வெளுத்துப்போனது. ஆனால், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளோ, “வந்தே மாதரம் பாடலே இசுலாமிய வெறுப்பைக் கக்கும் இந்து மதவெறிப் பாடல்” என்று அம்பலப்படுத்தாமல், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டதுதான் பிரச்சினை என்பதுபோல வலிக்காமல் கண்டிக்கின்றனர். இதன்மூலம், பாசிஸ்டுகள் பரப்பும் குருட்டு தேசவெறியை எதிர்த்துக் களமாடுவதில் இவர்கள் கையாலாகாதவர்கள் என்பது மட்டும் அம்பலமாகவில்லை; “மதச்சார்பின்மை” என்பது தவெக, திமுக உள்ளிட்ட அனைத்து ஓட்டுக் கட்சிகளின் முகம்தானே தவிர முகமல்ல என்பதும் அம்பலமாகியுள்ளது.

  • பார்த்திபன் & கார்த்தி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன