கட்டுப்பாடுகள் விதித்து நீட் தேர்வை நடத்தினால் மாணவர், பெற்றோர் பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா?
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான (NEET UG) மறுதேர்வு நாடு முழுவதும் ஜூன் 21, 2026 அன்று நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற தேர்வில் ஏற்பட்ட முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து, தேசிய தேர்வு முகமை (NTA) இந்த மறுதேர்வை நடத்தியது.
வினாத்தாள் கசிவைத் தடுக்கிறோம் என்ற பெயரில், ஒன்றேகால் இலட்சத்துக்கும் அதிகமான சிசிடிவி கேமராக்கள், ஜாமர் கருவிகள், தேர்வு மையங்களுக்குப் போலீஸ் பாதுகாப்பு, வினாத்தாளை எடுத்துச் செல்ல விமானப்படை ஹெலிகாப்டர்கள், ஒன்றிய அரசின் தொடர் எச்சரிக்கைகள், டெலிகிராம் செயலிக்குத் தடை என மிஷன் இம்பாசிபிள் படக்காட்சிகளை ஞாபகப்படுத்துகின்ற அளவில் தோரணையை உருவாக்கித் தேர்வை நடத்தி முடித்துள்ளது மோடி கும்பல்.
இந்திய விமானப்படையைப் பயன்படுத்தி வினாத்தாள் கொண்டு செல்லப்பட்டது ஏன்?
நீட் தேர்விற்கு முதல்நாள் செய்தி தொலைக்காட்சிகளில் ஒரு செய்தி திரும்பத் திரும்ப ஒலிபரப்பப்பட்டு வந்தது. மதுரை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய ஒரு பார்சல் பெட்டி, தமிழ்நாடு போலீஸின் பாதுகாப்போடு அஞ்சல் துறை (Postal Department) வாகனத்தில் ஏற்றப்படுகிறது. அஞ்சல் துறை வாகனத்திற்குப் பாதுகாப்பாகத் தமிழ்நாடு காவல்துறை வாகனம் முன்செல்ல, மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் (CISF) பின்செல்ல, சுமார் 300 மீட்டர் கடந்த நிலையில் வாகனம் திடீரெனப் பழுதானது. உடனே போலீசாரின் பல அடுக்குப் பாதுகாப்புடன் அஞ்சல் துறை (Postal Department) வாகனத்தில் இருந்த பார்சல் வேறு வாகனத்திற்கு மாற்றப்பட்டுக் கொண்டு செல்லப்படுகிறது. இவ்வளவு பில்டப்புகளுடன் கொண்டு செல்லப்படும் இப்பெட்டிக்குள் தேசிய பாதுகாப்புக் குறித்த ஆவணமோ அல்லது பல ஆயிரம் கோடி மதிப்புள்ள தங்கமோ/வைரமோ எதுவும் இல்லை. நீட் தேர்விற்கான வினாத்தாளைக் கொண்டு செல்வதற்குத்தான் இவ்வளவு அலப்பறைகள். இதனைத் தொலைக்காட்சிகளில் த்ரில்லர் பட அளவிற்கான வசனங்களைச் சேர்த்து ஒலிபரப்பவும் செய்தன. அக்காட்சிகள் ஒரு கேள்வியைத்தான் எழுப்பின. உண்மையிலேயே கொள்ளையர்கள் அதிகமாகிவிட்டார்களா அல்லது மோடி அரசு தனது தோல்வியை மறைப்பதற்கு இது போன்ற வேலைகளைச் செய்கிறதா?
டெலிகிராம் தடை குறித்து நீதிமன்றம் கூறியது என்ன?
இந்த பில்டப் காட்சிகளில் ஒன்றுதான் டெலிகிராம் செயலியை முடக்கியது. வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுப்பதற்காக டெலிகிராம் செயலியை, ஜூன் 22-ஆம் தேதி வரை ஒன்றிய அரசு தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது. மேலும், ஏற்கனவே அனுப்பப்பட்ட செய்திகளைத் திருத்தும் வசதியை, ஜூன் 30-ஆம் தேதி வரை முடக்கியும் உத்தரவிட்டது.
டெலிகிராம் செயலியைத் தற்காலிகமாக முடக்கி ஒன்றிய அரசு பிறப்பித்த உத்தரவு சரியானது; நீட் மறுதேர்வை நேர்மையாகவும், பாதுகாப்பாகவும் நடத்துவதற்கு இந்த நடவடிக்கை அவசியமானது; ஒன்றிய அரசின் தடை உத்தரவு, சட்டவிரோதமானது அல்ல; எனவே தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின், ’69 ஏ’ பிரிவின் கீழ் ஒன்றிய அரசு பின்பற்றிய நடைமுறைகள் சரியானவையே என்று மோடியின் பில்டப் காட்சிகளுக்குப் பக்கவாத்தியம் வாசித்தது.
ஊடகங்கள் பேசியது என்ன?
NEET-UG 2026 தேர்வு வினாத்தாள் கசிவை விமர்சித்துப் பல முன்னணி ஆசிரியர்கள் குரல் கொடுத்ததைத் தொடர்ந்து, மே 29-ஆம் தேதியன்று நடைபெற்ற தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் ஒரு பிரபல செய்தி வாசிப்பாளர், இந்தியாவின் யூடியூப் ஆசிரியர்களை “மதிப்பற்றவர்கள்” அல்லது “எதற்கும் உதவாதவர்கள்” (do kaudi ke) என்று குறிப்பிட்டார்.
சமீப காலங்களில், டிஜிட்டல் கல்வித் தளங்கள் எண்ணிக்கையிலும், பரவலிலும் மிகப்பெரிய வளர்ச்சியடைந்துள்ளன. 2020-இல் 12 மில்லியனாக இருந்த இந்தியாவின் இணையவழி கற்பவர்களின் எண்ணிக்கை தற்போது 50 மில்லியனாக உயர்ந்துள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
யூடியூப் தளத்தில் பிரபலமாகி, பாடங்களை எளிமையாக விளக்கும் ஆசிரியர்கள் மீதான அந்தச் செய்தி வாசிப்பாளரின் ஏளனப் பேச்சு, ஒரு உண்மையான சிக்கலை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. டிஜிட்டல் கற்பித்தல் முறை ஆசிரியர்களின் திறமையின்மையைச் சுட்டிக்காட்டவில்லை; மாறாக, ஆசிரியர்களின் பணிச்சூழல் சிதைக்கப்படுவதையே அது உணர்த்துகிறது. தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020-இன் அறிமுகம் இச்சிக்கலைப் பல மடங்கு தீவிரப்படுத்தியுள்ளது.
தற்போது, மாநிலப் பல்கலைக்கழகங்களில் 35 சதவீதத்திற்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக நிதி ஆயோக் (NITI Aayog) மதிப்பிட்டுள்ளது. இராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்ட மொத்தம் 800 பணியிடங்களில் சுமார் 400 முதல் 500 வரையிலான இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. 2021-22 ஆம் ஆண்டிற்கான AISHE (உயர்கல்வி குறித்த அகில இந்தியக் கணக்கெடுப்பு) தரவுகளின்படி (2020-21 மற்றும் 2022-23 ஆம் ஆண்டுகளுக்கான AISHE அறிக்கைகளை அரசு இன்னும் வெளியிடவில்லை), பல மாநிலங்களில் 40 முதல் 50 சதவீத ஆசிரியப் பணியிடங்கள் நிரந்தரமற்ற பணியாளர்களால் நிரப்பப்பட்டுள்ளன. தற்காலிக ஆசிரியர்கள், வருகைதரு விரிவுரையாளர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்கள் (CLAs) ஆகியோருக்கு நிரந்தரப் பணியாளர்களின் ஊதியத்தில் ஒரு சிறு பகுதியே வழங்கப்படுகிறது; மேலும் அவர்களுக்கு மருத்துவக் காப்பீடு அல்லது ஓய்வூதியம் கிடைப்பது அரிது. 2019 முதல், ஆசிரியர் பயிற்சிக்கான சட்டப்பூர்வ அமைப்பான ‘தேசிய ஆசிரியர் கல்விக் குழு’ (NCTE), எந்தவொரு நிரந்தர உறுப்பினரையும் நியமிக்கவில்லை.
இது ஏதோ ஒரு தனிப்பட்ட முரண்பாடு அல்ல; இது ஒரு கட்டமைப்பு சார்ந்த சிக்கல். NEP 2020 (தேசிய கல்விக் கொள்கை 2020) கொள்கையால் இதை மாற்றியமைக்க இயலாது. 2035-க்குள் மொத்தச் சேர்க்கை விகிதத்தை (GER) 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று NEP இலக்கு நிர்ணயித்துள்ளது; ஆனால் அதை எவ்வாறு அடைவது என்பது குறித்த எந்த வழிகாட்டுதலையும் அது வழங்கவில்லை. அதற்குப் பதிலாக, கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மாணவர்களையும் ஒப்பந்த ஆசிரியர்களையும் சேர்த்துக்கொண்டே செல்கின்றன; ஏனெனில் ஒப்பந்த ஆசிரியர்கள் குறைந்த ஊதியத்தில் கிடைப்பதோடு, அவர்களை எவ்விதத் தயக்கமும் இன்றி வேலையிலிருந்து நீக்கவும் முடியும்.
ஒப்பந்த ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பற்ற நிலை என்பது வெறும் நலன் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல; அது கற்பித்தல் முறை சார்ந்த ஒரு பிரச்சினையும் கூட. அடுத்த பருவத்தில் (semester) மீண்டும் பணி வாய்ப்பு கிடைக்குமா இல்லையா என்று தெரியாத நிலையில் இருக்கும் ஒரு விரிவுரையாளரால், வகுப்பறையில் கற்பிக்கும்போது அறிவுசார் ரீதியான துணிச்சலான முயற்சிகளை மேற்கொள்ள முடிவதில்லை. அவருக்கு வழங்கப்படும் பாடத்திட்டத்தை அவரால் கேள்விக்குள்ளாக்க முடிவதில்லை. விமர்சன ரீதியான சிந்தனைக்குத் (critical thinking) தேவையான நீண்டகாலக் கற்பித்தல் சார்ந்த பிணைப்புகளை அவரால் ஒருபோதும் உருவாக்க முடிவதில்லை. ஆனால், இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் உயர்கல்வி அமைப்பு இத்தகைய பணியாளர்களைக் கொண்டே கட்டமைக்கப்படுகிறது என்பதுதான் எதார்த்தம். அதாவது, எளிதில் சுரண்டப்படக்கூடிய மற்றும் தங்கள் வாழ்வாதாரச் சூழலால் கட்டுப்படுத்தப்பட்ட பணியாளர்களைக் கொண்டே இந்த அமைப்பு இயங்குகிறது.
பிரதம மந்திரி அலுவலகம் கூறியது என்ன?
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததைத் தொடர்ந்து, மறுதேர்வுப் பணிகளைப் பிரதமர் அலுவலகமே நேரடியாகக் கண்காணித்தது. வினாத்தாள் தயாரிப்பு, அச்சிடுதல் மற்றும் விநியோகம் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் பிரதமர் அலுவலகக் கட்டுப்பாட்டில் இருந்தன. இதற்காகப் பிரத்யேகத் தொழில்நுட்பக் குழுவும், முன் எப்போதும் இல்லாத வகையில் பல அடுக்குப் பாதுகாப்பும் அமைக்கப்பட்டது.
இவையெல்லாம் தான் தீர்வுகளா?
தமிழ் சினிமாவின் க்ளைமேக்ஸ் காட்சிகளுக்குச் சற்றும் குறையாமல் ஊடகங்களும், பத்திரிகைகளும், அரசியல் கட்சிகளும் இந்தச் செய்திகளைத் திட்டமிட்டு மக்கள் மத்தியில் பரபரப்பாக்குகின்றன. ஏனென்றால் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வின் முறைகேடுகள் அம்பலமாகிக்கொண்டே வருகின்றன. இதனால் “தகுதியான, திறமையான மருத்துவர்களை உருவாக்கவே நீட் தேர்வு” என்ற மோடி அரசு அளந்துவிட்டதெல்லாம் பச்சைப் பொய்கள் என்பதை இந்த நீட் மறுதேர்வின் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
முதலில் நீட் மறுதேர்வு நடத்துவதற்கான காரணம் என்ன? NTA கேள்வித்தாள் தயாரிக்கும் குழுவும், RCC நீட் பயிற்சி மையமும் இணைந்துதான் வினாத்தாளைக் கசியவிட்டுள்ளது என்று அம்பலமான பிறகும் அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் என்னென்ன எடுத்துள்ளோம் என்று நாட்டு மக்களுக்குக் கூறினால் அறிவுடையதாக இருக்கும். பெற்றோரும், மாணவர்களும் கலக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு வாய்ப்பாக அமையும்.
அதனை விடுத்து வினாத்தாள் டெலிகிராமிலும், வாட்ஸ்ஆப்பிலும் பரவியது என்பதற்காக அதன்மீது தடை விதிப்பது என்பது தும்பை விட்டு வாலைப் பிடிப்பது ஆகாதா? இதற்கு நீதிமன்றங்கள் ஒத்தூதுவதினால் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் நம்பிக்கை பிறந்துவிடுமா?
பிரதமர் அலுவலகமே வினாத்தாள் தயாரிப்பதையும், அச்சிடுவதையும், விநியோகம் செய்வதையும் நேரடியாகச் செய்வதின் மூலம் தேசியத் தேர்வு முகமை (NTA) குறித்து என்ன சொல்ல வருகிறது? அது ஒரு கையாளாகாத முகமை என்று எடுத்துக்கொள்ளலாமா? அப்படியென்றால் அந்த முகமை நடத்தும் பல்வேறு தேர்வுகளை இனிமேல் ஒன்றிய அரசின் மேற்பார்வையின் கீழ்தான் நடைபெறும் என்று அறிவிக்காதது ஏன்? கேள்வித்தாள் தயாரிக்கும் பணிகளை மேற்பார்வையிடும் ஒன்றிய அரசு பயிற்சி மையங்கள் குறித்து வாய் திறக்காதது ஏன்?
நாம் எழுப்பும் கேள்விகள் அனைத்தும் ஒன்றிய அரசுக்குத் தெரியாமலோ, மறதியாகவோ பதிலளிக்க விட்டுச் சென்றவையல்ல. மாறாகத் தெரிந்தே வேண்டுமென்றே பதிலளிக்கவில்லை என்பதுதான் நிதர்சன உண்மை.
பல்லாயிரக்கணக்கான கோடிகளில் புழங்கும் கோச்சிங் சென்டர்கள் பெற்றோரின் இரத்தத்தை உறிஞ்சிக் கொள்ளை இலாபம் அடிப்பதற்கு NTA வினாத்தாள் தயாரிக்கும் குழுவுடன் தொடர்பில் இருப்பது அவசியம். அப்பொழுதுதான் ப்ளூ பிரிண்ட் என்ற பெயரில் தேர்ச்சி பெறுவதற்குத் தேவையான கேள்விகளைச் சேர்த்துக்கொடுக்க முடியும். அவ்வாறு கொடுக்கும் பொழுதுதான் பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் நம்பிக்கை ஏற்படும். அதன்மூலம் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும், கட்டணத்தை அதற்குத் தகுந்தாற்போல் ஏற்றிக்கொள்ளவும் முடியும். அப்படித்தான் RCC நீட் பயிற்சி மையத்திற்கு ”டாக்டர்ஸ் பேக்டரி” அதாவது மருத்துவர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை என்று பெயரெடுத்துள்ளது.
இவையெல்லாம் ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பது போலத்தான். அனைத்துப் பயிற்சி மையங்களும் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு பாடங்களை மாணவர்களுக்குப் புரியும்படி நடத்தி, அதன்மூலம் பெறப்பட்ட பெயர்கள் அல்ல. குறுக்கு வழியில் தேர்வாவது எப்படி? என்ற முறையிலேயே பயிற்சி மையங்கள் நடத்தப்படுகின்றன. எனவே அங்கே அறத்தைக் காண்பது அரிது.
அறமற்றவர்களைக் காப்பற்றத் துடிக்கும் அரசு பெற்றோர்களுக்காக, மாணவர்களுக்காக இந்த நடவடிக்கைகளை எல்லாம் எடுத்துள்ளது என்று நம்புவது அறிவீனம். ஐம்பது இலட்சம், ஒரு கோடி எனப் பணம் கொடுத்தால் மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேர்ந்து விடலாம் என எண்ணும் பணக்காரர்களும், அவ்வளவு பணம் நம்மால் கட்ட முடியாது, எனவே இரண்டு, மூன்று இலட்சத்திலேயே டாக்டர் சீட்டு வாங்கிவிடலாம் என எண்ணும் நடுத்தர வர்க்கத்தினரும் போட்டி போட்டுக்கொண்டு இதுபோன்ற பயிற்சி மையங்களில் சேர்கிறார்கள்.
எனவேதான் “தகுதியான, திறமையான மருத்துவர்களை உருவாக்கவே நீட் தேர்வு” என்ற மோடியின் வார்த்தைகளின் மீது மறுதேர்வு நடத்தப்படும்போதும் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் கோபம் வரவில்லை. இரண்டு, மூன்று இலட்சம் செலவு செய்ய முடியாத, டாக்டர் படிப்புக்குத் தகுதியான, திறமையான ஏழை எளிய மாணவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதை அறிந்தும் நீட் தேர்வைப் பற்றிச் சிலாகிப்பவர்களை என்னவென்று கூறுவது?
இப்படிப்பட்டவர்கள் டாக்டர்களாக வெளிவரும்போது சமூகத்தில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை எண்ணிப்பாருங்கள். வருங்காலம் என்னவாக இருக்கும் என்பதைக் கற்பனையிலும் நினைத்துப்பார்க்க முடியாது.
பெற்றோர்களே, மாணவர்களே, எதிர்காலத்தில் ஒரு கேடான சமூகத்தை உருவாக்கவா மருத்துவம் படிக்கிறோம்? காசுள்ளவனுக்கே மருத்துவம் என்றால் தகுதி, திறமை என்று பேசுவதெல்லாம் பொய்யென்று ஆகாதா? இப்படித் தெரிந்தே பொய் பேசுவது எப்படி அறமாக இருக்க முடியும்? மருத்துவப்படிப்பு அறமானது என்றால் மருத்துவர்களும் அறமானவர்களாகத்தானே இருக்க முடியும்?
அனிதா தொடங்கி ஜெகதீஸ்வரன் வரையில் நீட் தேர்வால் பல மாணவர்கள் தங்களது இன்னுயிரை மாய்த்துக்கொண்டதற்குக் காரணம், புற்றீசல் போலப் பெருகியுள்ள பயிற்சி மையங்கள் பெற்றோரின் இரத்தத்தை உறிஞ்சிக் கொள்ளை இலாபமடிப்பதுதான். இருந்தும் தேசியத் தேர்வு முகமையும், ஒன்றிய அரசும் நீட் தேர்வை நடத்தியே தீருவோம் எனக் கூறிவருவதைப் பெற்றோர்களும், மாணவர்களும் சேர்ந்து ”உயிரைக் குடிக்கும் நீட் தேவையில்லை” என கையில் பதாகையுடன் களத்தில் இறங்கிப் போராடும் பொழுதுதான் நல்ல சமூகத்தையும், மருத்துவர்களையும் உருவாக்க முடியும்.
- மகேஷ்

