எங்களுக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் யார்? துள்ளி குதிக்கும் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்!
மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்ததையொட்டி உச்ச நீதிமன்றத்தை குடியரசுத் துணைத் தலைவர் கடுமையாகச் சாடியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே!
“குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது; அவரை உச்ச நீதிமன்றம் வழி நடத்தவும் முடியாது; நாடாளுமன்றத்தை விட மேலானதாக நீதிமன்றம் செயல்படவும் முடியாது. அதாவது, சூப்பர் நாடாளுமன்றமாகவும் செயல்பட முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 142 உச்ச நீதிமன்றத்திற்கு முழு அதிகாரம் கொடுத்து விட்டது என்பதற்காக எங்களைப் போன்ற ஜனநாயகச் சக்திகள் மீது அணு ஏவுகணைகளை ஏவ முடியாது” என பூமிக்கும், வானத்திற்கும் எகிறி குதிக்கிறார் குடியரசுத் துணைத் தலைவர்.
நான்கு ஜனநாயகத் தூண்களில், நாடாளுமன்றம் எப்படியோ, அதே போன்று தான் நீதிமன்றமும், தனித்தனியாக கடமைகளையும், பொறுப்புகளையும் கொண்டு இயங்குகின்றன. அந்த வகையில் நீதிமன்றம் மேற்கண்ட சட்டப் பிரிவுக்கு உட்பட்டு தன் கடமையையும், பொறுப்பையும் நிறைவேற்றியுள்ளது.
இராமர் கோயில், காஷ்மீர் 370 பிரிவு போன்றவற்றில் வந்த சாதகமான தீர்ப்புகளைப் போல மசோதாக்களுக்கும் வரும் என்று இலவு காத்த கிளியைப் போல காத்திருந்து ஏமாந்ததன் எதிர்விளைவே இது.
அதனால் தான் “டெல்லி நீதிபதி யஸ்வந்த் வர்மா வீட்டில் எரிந்த பணக்கட்டுகள் பிரச்சனை மீதான விசாரணை மாட்டு வண்டி வேகத்தில் கூட ஏன் இல்லை என கேள்வி எழுப்புகிறார். இதே சாமானியனின் வீட்டில் நடந்திருந்தால் நவீன ராக்கெட் வேகத்தில் போய் இருக்கும்” என்கிற அணு ஏவுகணையை உச்சநீதிமன்றத்தின் மீது திருப்பி ஏவியுள்ளார் குடியரசுத் துணைத் தலைவர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் எவருமில்லை. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிற வகையில், ஜனநாயகத்தில் அரசமைப்புச் சட்டம் மட்டும் தான் அதிக அதிகாரம் படைத்தது. அந்த வகையில் குடியரசுத் தலைவர், ஆளுநர் உட்பட, சாமானியன் வரை அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டவர்களே‘ என்பதை குடியரசுத் துணைத் தலைவர் அறியாதவர் அல்லர்.
தீர்ப்பின் சில அம்சங்கள், சட்டம் இயற்றும் நாடாளுமன்ற உரிமைகளை மீறும் வகையில் இருக்கலாம். அவற்றைக் கூட மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்வது மூலம் எதிர்கொள்ளலாம் என்கிறது அரசியல் அமைப்புச் சட்டம்.
இவற்றைக் கூட மதித்தனமாக பகுத்தறிவோடு பரிசீலித்து பதிலளிக்க துப்பு இல்லை. ஆனால், ‘தீர்ப்பை எதிர்த்து யார் மறு ஆய்வு மனு தாக்கல் செய்வது என்பது இப்போது பிரச்சனை இல்லை‘ என அலட்சியப்படுத்தி ‘நீ யார் எங்களுக்கு கட்டளையிட என்கிற தோரணையில் ஆணவத்தைத் தலைக்கேற்றி பேசியுள்ளார்.
ஜனநாயகப் பண்பை கிஞ்சித்தும் அறியாத, அறிய விருப்பப்படாத ஆர்எஸ்எஸ், பிஜேபி பாசிசக் கும்பலில் அங்கம் வகிக்கும் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் போன்ற ஜனநாயக விரோதப் பேர்வழிகளிடம் ஆணவத்திமிரை தவிர ஜனநாயகப் பண்பை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.
- மோகன்

