சாஸ்த்ராவிற்கு ஒரு நீதி! உழைக்கும் மக்களுக்கு ஒரு நீதி!
இதுதான் உச்ச நீதிமன்றத்தின் மனுநீதி!

செப்டம்பர் 30, 2026
சாஸ்த்ரா ஆக்கிரமித்த 31 ஏக்கர் அரசு நிலத்துக்கு மாற்று நிலம் வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் இதே நீதிமன்றங்கள்தான், பல தலைமுறைகளாக வாழ்ந்த உழைக்கும் மக்களின் குடியிருப்புகளை ஆக்கிரமிப்பு எனக் கூறி ஒரே நாளில் இடித்துத் தள்ளுகின்றன.

எண்பதுகளில் வெளிவந்த படங்களின் பஞ்சாயத்துக் காட்சிகளில் தவறாமல் இருக்கும் காட்சிகளில் ஒன்று, பண்ணையார் மகனோ அல்லது மைனரோ தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டது நிரூபணமானாலும் அவனைத் தண்டிக்காமல் அபராதமாகச் சிறியத் தொகையைக் கட்டினால் போதும் என்று பஞ்சாயத்துத் தீர்ப்புத் தருவதாக அமைக்கப்பட்டிருக்கும். இது கிராமப்புற பகுதிகளில் கோலோச்சியிருந்த நிலப்பிரபுத்துவச் சமூக உறவுகளில் ஆதிக்கச் சாதியினருடைய ஜனநாயகமற்ற அணுகுமுறையையும் ஆதிக்க மனோபாவத்தையும் சுட்டிக்காட்டுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும். அது பழையக் கதை என்று கடந்து சென்றுவிட முடியாது. ஏனென்றால் ஈராயிரம் ஆண்டுகளாக உழைக்கும் மக்களுக்கான நீதியை மறுத்து சாதிக்கொரு சட்டம் என அடிமைப்படுத்திவந்த நிலை இன்றும் மாறாமல் தொடரத்தான் செய்கிறது.

உலகிலேயே பெரிய ஜனநாயக நாடான ‘மோடியின் வளர்ந்த இந்தியாவில்’ சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதைக் கட்டிக் காப்பாற்றுகின்ற பொறுப்பைத் தோளில் தூக்கிப் போட்டுத் திரியும் உச்சநீதிமன்றம் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என்ற நவீன மைனர் குஞ்சுகளின் குற்றத்திற்குத் தண்டனையும் வழங்காமல் அபராதமும் விதிக்காமல் வழக்கிலிருந்து விடுவிப்பதற்கு கட்டப் பஞ்சாயத்து நடத்துகிறது.

அரசுக்குச் சொந்தமான 31.37 ஏக்கர் நிலத்தைச் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் அபகரித்த வழக்கில்தான் மேற்சொன்ன பாணியிலான பரிந்துரையை உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்குக் கடந்த வாரம் வழங்கியிருக்கிறது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தனது பரிந்துரையில், “சந்தை விலை உங்களுக்கு ஏற்றதாக இருந்தால், நீங்கள் விரும்பும் நிலத்தை நீங்களே வாங்கிக்கொள்ளலாம்; அல்லது நிலத்தை நீங்கள் அடையாளம் காட்டினால், உங்களுக்காக அந்த நிலத்தை வாங்குமாறு நாங்கள் அவர்களிடம் கூறுவோம்.” என்றிருக்கிறது.

அதாவது சாஸ்த்ரா ஆக்கிரமிப்புச் செய்த நிலத்திற்கு மாற்றாக வேறொரு இடத்தைக் காட்டுங்கள் நாங்களே சாஸ்த்ரா நிர்வாகத்திடம் பேசி தமிழ்நாடு அரசுக்கு வாங்கித் தருகிறோம் அல்லது சந்தை மதிப்பை விட 5 முதல் 10 மடங்கு வரை கூடுதல் தொகையை சாஸ்த்ராவிடமிருந்து வசூலித்து வேறொரு இடத்தை நீங்களே வாங்கிக்கொள்ளுங்கள் என்கிறார் தலைமை நீதிபதி.

ஆக்கிரமிப்பு செய்த நிலத்திற்கு மாற்றாக வேறொரு நிலத்தை வாங்கிக்கொள்ளலாம் சரி. அரசு நிலம் என்று தெரிந்தும் சாஸ்த்ரா முதலாளி நில ஆக்கிரமிப்பு செய்த குற்றத்திற்கான தண்டனை என்ன? அரசுக்கு எந்தக் கட்டணமும் செலுத்தாமல் முப்பது வருடங்களாக அரசு நிலத்தை அனுபவித்து வந்ததற்கு அபராதம் என்ன? இதைப் பற்றியெல்லாம் தலைமை நீதிபதி அமர்வு வாய்திறக்கவில்லை. சாஸ்த்ராவின் நில அபகரிப்புக் கதை முழுமையாகப் புரிந்து கொள்ள இவ்வழக்கின் வரலாறு நமக்குத் தெரிய வேண்டும்.

தஞ்சாவூரில் உள்ள திருமலைச் சமுத்திரத்தில் திறந்தவெளிச் சிறைச்சாலை அமைப்பதற்காக 1985இல் தமிழ்நாடு அரசு 31 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது. இதே காலக்கட்டத்தில் தொடங்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனமான சண்முகா பாலிடெக்னிக் படிப்படியாக தன்னுடைய கல்வி வியாபாரத்தை விரிவுபடுத்தி சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகமாகப் பரிணமித்தது. இந்த வளர்ச்சிக்காகச் சிறைச்சாலை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட அரசு நிலத்தைத் தெரிந்தே ஆக்கிரமித்து மாணவர் விடுதிகளையும், நூலக கட்டிடங்களையும் வகுப்பறைகளையும் கட்டிக்கொண்டது.

முன்னாள் ஒன்றியக் கல்வி அமைச்சர் பிரதானுடன் சாஸ்த்ரா வைத்தியநாதன் (இடது).

ஆக்கிரமிப்பிலிருந்து வெளியேறச் சொல்லி தமிழக அரசு தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பியபோதும் வெவ்வேறு காரணங்களைக் காட்டி சாஸ்த்ரா நிர்வாகம் வெளியேற மறுத்து வந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நடந்த இவ்வழக்கில், சாஸ்த்ரா நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்திலிருந்து உடனே வெளியேற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் 2018இல் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சாஸ்த்ரா நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்றமுமோ உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்ததோடு இருதரப்பும் பேசி சுமூகத் தீர்வு காணுமாறு பரிந்துரைத்தது. பேச்சுவார்த்தையில், ஆக்கிரமிப்பு செய்த இடத்திற்கு மாற்றாக வேறு ஒரு இடத்தை அரசுக்குக் கொடுப்பதாக சாஸ்த்ரா முன்வைத்த திட்டத்தைத் தமிழக அரசு நிராகரிக்கவே, ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்திலிருந்து நான்கு வாரங்களுக்குள் வெளியேறுமாறு பிப்ரவரி 2022இல் தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியது.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுவை சாஸ்த்ரா தாக்கல் செய்தது. வகுப்பறைகள் மற்றும் விடுதிகளைக் காரணம் காட்டி தமிழக அரசின் நோட்டீசுக்கு இடைக்காலத் தடையையும் பெற்றது. இதனிடையே ரிட்மனுவை விசாரித்து வந்த உயர்நீதிமன்றம் ஜனவரி 2026 அன்று ரிட்மனுவைத் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற சாஸ்த்ரா பிப்ரவரி 2022 நோட்டீசுக்கு இடைக்காலத் தடை பெற்றது. அதே வழக்கில்தான் தற்போது மாற்று நிலத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

அரசு நிலத்தையே ஆட்டையைப் போட்டிருந்தாலும் பார்ப்பன பின்புலம், ஆர்எஸ்எஸ் – பாஜக ஆதரவு, அதிகார மட்டத்தில் உள்ள செல்வாக்கு ஆகிய காரணங்களினால் நீதிமன்றங்களின் துணையோடு சாஸ்த்ராவால் பல பத்தாண்டுகளாக வழக்கை இழுத்தடிக்க முடிந்ததோடு தனக்குச் சாதகமாகவும் தீர்ப்பைப் பெற முடிந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. ஆனால் உழைக்கும் வர்க்க பின்புலம் கொண்ட எளிய மக்களின் பிரச்சினை என்று வரும் போது நீதிமன்றங்கள் அம்மக்களுக்கு எதிராகவே நடந்து கொள்கின்றன. அதற்கு அனகாபுத்தூர் குடியிருப்புப் பிரச்சினையே மிகச் சிறந்த உதாரணம்.

2025 ஆம் ஆண்டு மே மாதம் அனகாபுத்தூர் பகுதியில் அடையாறு ஆற்றின் கரையோரம் 40 வருடகாலமாக வசித்து வந்த 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை ஆக்கிரமிப்பு எனச் சொல்லி இடித்து தரைமட்டமாக்கியது திமுக அரசாங்கம். இந்நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பையே காரணமாகக் காட்டியது. இதையொட்டிய வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் மற்றும் லட்சுமிநாராயணன் அமர்வு, “மூன்று மாதங்களுக்குள் ஆக்கிரமிப்புகளை நீக்க வேண்டும் இல்லையென்றால் தமிழ்நாடு அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு எடுக்கப்படும்” என எச்சரித்திருந்தனர். அதனையடுத்து, அதே சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் அமர்வுதான், வீடுகளை இடிக்கக் கூடாது என்று அப்பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் தனித்தனியாகப் போட்ட வழக்கை காலையில் விசாரித்து மதியம் தள்ளுபடி செய்தது. மாலையில் வீடுகளும் இடிக்கப்பட்டு விட்டன. ஆனால் அடையாற்றின் கரையோரம் காசாகிராண்ட் கட்டியுள்ள பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் நீதிபதிக்கோ அல்லது அதிகாரிக்கோ ஆக்கிரமிப்பாகத் தெரியவில்லை.

மேகமலை விவகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அப்பகுதியில் உள்ள 98 வனக் கிராமங்களில் பல தலைமுறைகளாக வசித்து வரும் மக்களை, புலிகள் சரணாலயம் அமைப்பதற்காக அப்புறப்படுத்தச் சொல்லுகிறது உச்சநீதிமன்றம். இல்லையென்றால் இராணுவத்தை வைத்து மக்களை அகற்ற உத்தரவிடுகிறேன் என்றும் மிரட்டுகிறது.

கல்விக் கொள்ளையனும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளனுமான சாஸ்த்ரா நிர்வாகம் செய்துள்ள நில அபகரிப்புக் குற்றத்தையும் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் நியாயமான வாழ்விடப் பிரச்சினையையும் நீதிமன்றங்கள் அணுகுகின்ற விதத்தை ஒப்பிட்டுப் பாருங்கள். கல்விக் கொள்ளைக் கும்பல் சாஸ்த்ராவின் நில அபகரிப்பு சட்டப்படியே குற்றம் என்று நிரூபிக்கப்பட்ட போதும் “கல்விச் சேவை வழங்குபவர்கள்” என்று யோக்கியன் பட்டம் கொடுத்துக் காப்பாற்றும் நீதிமன்றங்கள், குடிநீர் வரி, வீட்டுவரி, மின்சாரக் கட்டணம் முறையாகச் செலுத்திப் பல தலைமுறைகளாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசித்து வரும் மக்களை “ஆக்கிரமிப்பாளர்” என்று முத்திரைக் குத்தி நடுவீதியில் வீசுகிறது.

ஆளும் வர்க்கத்தில் தனக்குள்ள செல்வாக்கினால் பல பத்தாண்டுகளாக வழக்கை இழுத்தடித்த சாஸ்த்ரா கும்பலிடம் செல்லுபடியாகாத சட்டமும் அரசு அதிகாரிகளின் அதிகாரமும், காலையில் வழக்கை விசாரித்து மாலையில் தள்ளுபடி செய்து உடனுக்குடன் மக்களை அப்புறப்படுத்திச் “சட்டத்தை நிலைநாட்டத்” துடிக்கும் நீதிமன்றங்கள் மற்றும் அதிகாரிகளின் செயலுக்குப் பின்னால் அப்பட்டமான ஆளும் வர்க்க ஆதரவும் மனுநீதி மனப்பாங்கும் வெளிப்படவில்லையா?

“சட்டத்தின் முன் அனைவரும் சமம்” இந்த வாசகம் நாம் பாடப்புத்தகங்களிலும் சினிமா வசனங்களிலும் கேட்டிருப்போம். யதார்த்தத்திலோ இச்சட்டங்களும் நீதிமன்றங்களும் ஆளும் வர்க்கத்தினருடைய சுரண்டலையும், இந்துமதவெறி அராஜகங்களையும், ஆளும்வர்க்கத்தின் பொருளாதாரக் கொள்கை மற்றும் திட்டங்களையும், அவர்களின் குற்றங்களையும் நியாயப்படுத்துவதற்காகவும் அதேவேளையில் உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுப்பதும் அவர்களை ஒடுக்குவதற்காகவுமே கட்டமைக்கப்பட்டது. இந்த நீதிமன்றங்கள் உழைக்கும் மக்களுக்கான நியாயத்தை ஒருபோதும் வழங்காது.

  • மாணிக்கம்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன