நீட் மருத்துவக் கலந்தாய்வு: தகுதி ஒரு நாடகம்; பணமே தீர்மானம்!
நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு பதினொரு ஆண்டுகளாகிவிட்டன. மருத்துவப் படிப்புக்கான நன்கொடையை ஒழிக்கவும், திறமையான மாணவர்களைத் தேர்ந்தெடுக்கவும் நீட் தேர்வு அவசியம் என்று பாஜக அப்போது வாதிட்டது; இன்றும் அதையே வலியுறுத்தி வருகிறது. ஆனால், பத்தாண்டுகள் கடந்தும் அதற்கான ஒரு சான்றைக்கூட பாஜகவால் காட்ட முடியவில்லை.
இதற்கிடையில், அனைத்து மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயிற்சி மையங்களுக்குச் செல்லாமல் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதோ, அதிக மதிப்பெண் பெறுவதோ சாத்தியமில்லை என்ற நிலையும் உருவாகிவிட்டது.
மருத்துவப் படிப்பில் ஊழல் ஒழிந்ததா?
மிடில்கிளாஸ் பின்புலத்தைக் கொண்ட ஒரு மாணவர், அரசு நடத்தும் பயிற்சி வகுப்பில் பயின்று, நீட் தேர்வில் 720-க்கு 560 மதிப்பெண்கள் பெற்று, இந்திய அளவில் முதல் 8,000 இடங்களுக்குள் வருவதாகக் கருதுவோம். ஆனால், தமிழக அரசு மருத்துவக் கல்லூரியில் இடஒதுக்கீட்டின் கீழ் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணைவிட 10 மதிப்பெண்கள் குறைவாகப் பெற்றதால், அதிகக் கட்டணம் செலுத்தி தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்வதைத் தவிர அவருக்கு வேறு வாய்ப்பில்லை. அங்கு மருத்துவம் படிக்க ரூ.70 இலட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை செலவாகும் என்பதால், மருத்துவப் படிப்பிற்கான கதவுகள் அனைத்தும் தனக்கு மூடப்பட்டுவிட்டதாக அந்த மாணவர் கருதுகிறார்.
அதே ஆண்டில், நீட் தேர்வில் 720-க்கு 135 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று, இந்திய அளவில் 13,34,342-வது இடத்தைப் பெற்ற வசதியான பின்புலத்தைக் கொண்ட மற்றொரு மாணவர், தனது பணபலத்தின் மூலம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் சுமார் ரூ.2 கோடி அதிகக் கட்டணம் செலுத்தி மருத்துவப் படிப்பில் சேர்ந்துவிடுகிறார்.
நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில், இந்த இருவரில் மருத்துவம் படிக்க அதிகத் திறமையானவர் யார்? பாஜக ஆதரவாளரைக் கேட்டால்கூட, 560 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்தான் திறமையானவர் என்று சொல்வார். அப்படியிருக்க, மிகக் குறைந்த மதிப்பெண் பெற்ற மற்றொரு மாணவருக்கு மட்டும் மருத்துவ இடம் எப்படிக் கிடைத்தது?
இந்தியா முழுவதும் மொத்தமே 1,40,000 எம்.பி.பி.எஸ். மருத்துவ இடங்கள்தான் உள்ளன. ஆனால், நீட் தேர்வை எழுதியவர்களோ 22 இலட்சம் பேர். 720-க்கு 177 மதிப்பெண்களைத் தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயித்து, 11 இலட்சம் மாணவர்கள் தகுதி பெற்றதாக தேசியத் தேர்வு முகமை (NTA) அறிவித்தது. அதாவது, 720-க்கு 720 அல்லது 560 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களும், பன்னிரண்டாம் வகுப்பில் ஒரு பாடத்தில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்று, நீட் தேர்வில் 177 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களும் மருத்துவப் படிப்புக்குத் தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டனர்.
தகுதி, திறமை என்று பேசும் பாஜக, நீட் தேர்ச்சிக்கான மதிப்பெண்ணை வெறும் 25% ஆக ஏன் நிர்ணயிக்க வேண்டும்? தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் அதிகக் கட்டணம் வசூலிப்பதற்கு வழிவகுக்கவே இவ்வளவு குறைந்த மதிப்பெண் நீட் தேர்ச்சிக்கான தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்தக் “கேலிக்கூத்தை” நாமும் பார்த்துப் பழகிவிட்டோம்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 15–35 சதவீத இடங்களும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 100 சதவீத இடங்களும் கல்லூரி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த இடங்களுக்கு இடஒதுக்கீடும் கிடையாது. அந்த இடங்களுக்கான நன்கொடை மற்றும் கட்டணத்தை அந்தந்தக் கல்லூரி நிர்வாகங்களே நிர்ணயிக்கின்றன.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் மக்களிடம் அதிகக் கட்டணம் வசூலிப்பதற்கு ஒன்றிய, மாநில அரசாங்கங்களே சட்டரீதியாக இத்தகைய ஏற்பாட்டைச் செய்து கொடுத்துள்ளன. இதற்கு வழிவகுக்கும் வகையில், நீட் தேர்வு எழுதியவர்களில் பாதிப் பேரை மருத்துவப் படிப்புக்குத் தகுதியானவர்கள் என்றும் அறிவிக்கின்றனர். இதன் விளைவாக, ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் அதிகப் பணம் கொடுத்து மருத்துவ இடங்களைப் பெறுவதும், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாமல் போவதும் தொடர்ந்து நடக்கின்றன. கடந்த வாரம்கூட இதுபோன்ற ஒரு செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்டிருந்தது.
தனியார் மருத்துவ நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கல்விக் கொள்ளை
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கான நடப்புக் கல்வியாண்டின் இறுதிக்கட்டக் கலந்தாய்வு முடிவில், 837 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக இருப்பதாக மருத்துவக் கலந்தாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
இந்தக் கலந்தாய்வு, மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 15 சதவீத இடங்கள், மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள 100 சதவீத மருத்துவ இடங்களுக்காக நடத்தப்பட்டது. இதில், மாநில மற்றும் மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டதாகவும், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கான இடங்கள் மட்டுமே காலியாக இருப்பதாகவும் மருத்துவக் கலந்தாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
குறிப்பாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மட்டும் 824 மருத்துவ இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதற்குக் காரணம், பிற மாநிலங்களைவிட (ரூ.20.85 இலட்சம்) தமிழ்நாட்டில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கல்விக் கட்டணம் இருமடங்காக (ரூ.23–35 இலட்சம்) இருப்பதுதான் எனக் கூறப்படுகிறது. இதனுடன், ஆண்டுக்கு ரூ.2.5 இலட்சம் விடுதிக் கட்டணத்தையும் சேர்த்தால், நான்கரை ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.1.7 கோடி வரை செலவாகிறது. இதனால், நீட் தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண் எடுத்த வசதி படைத்த மாணவர்கள்கூட இப்பல்கலைக்கழகங்களில் சேர முன்வரவில்லை என்கின்றனர்.
இதற்கிடையில், காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக நீட் தகுதி மதிப்பெண்ணை மேலும் குறைக்கலாமா என்று மருத்துவக் கலந்தாய்வுக் குழு பரிசீலித்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கல்விக் கொள்ளையில் நம்பர் ஒன் தமிழ்நாடு
பிற மாநிலங்களைவிட, “கல்வியில் சிறந்த தமிழ்நாட்டில்தான்” அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கல்வியாளர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாகவே, நிரப்பப்படாமல் உள்ள 824 மருத்துவ இடங்களும் சத்ய சாய் (188), மீனாட்சி (117), பாலாஜி (82), சவீதா, எஸ்.ஆர்.எம்., செட்டிநாடு உள்ளிட்ட தனியார் மருத்துவ நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ளன.
தமிழ்நாட்டில் மட்டும் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளும் (+1 எய்ம்ஸ்), 24 தனியார் மருத்துவக் கல்லூரிகளும், 16 மருத்துவ நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் உள்ளன. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணத்தைத் தமிழ்நாடு அரசுதான் நிர்ணயிக்கிறது. ஆனால், மருத்துவ நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் நேரடியாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் வருகின்றன. அவற்றுக்கென ஒன்றிய அரசு நிலையான கல்விக் கட்டணத்தை நிர்ணயிப்பதில்லை.
தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) சட்டப்படி, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கல்விக் கட்டணத்தை அந்தந்தப் பல்கலைக்கழக நிர்வாகங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம். இதற்கு உதாரணமாக, கர்நாடகாவில் உள்ள மருத்துவ நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆண்டுக்கு சராசரியாக ரூ.20.85 இலட்சம் கல்விக் கட்டணமாக வசூலிக்கின்றன. ஆனால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களோ ஆண்டுக்கு ரூ.35 இலட்சம் வரை கல்விக் கட்டணம் வசூலிக்கின்றன.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கல்விக் கட்டணத்தை ஆண்டுக்கு ரூ.16 இலட்சம் என அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால், அதே கல்லூரி தனியார் மருத்துவ நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாறினால், இதைவிட இருமடங்குக் கட்டணம் வசூலிக்க முடியும். இதனால்தான், போதிய மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் இல்லாவிட்டாலும்கூட, தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறத் துடிக்கின்றன.
நடப்புக் கல்வியாண்டில்கூட, நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாறுவதற்கான நிர்ணயிக்கப்பட்ட தகுதிகள் இல்லாத மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகள், மாநில அரசின் தடையில்லாச் சான்றிதழ் (NOC) பெறாமலேயே நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தகுதியைப் பெற்றுள்ளன. தேசிய மருத்துவ ஆணையம் (NMC) மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) இந்த முடிவை எதிர்த்து தமிழ்நாடு அரசு வழக்குத் தொடரப்போவதாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு 69 சதவீத இடஒதுக்கீடும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடும் வழங்கப்படுகின்றன. ஆனால், இக்கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறும்போது, இந்த இடஒதுக்கீடுகளும் அதன் மூலம் கிடைக்கும் சலுகைகளும் இல்லாமல் போகின்றன. இதனால், தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய மருத்துவ இடங்களின் எண்ணிக்கையும் குறைந்துவிடுகிறது.
நடப்புக் கல்வியாண்டில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறிய மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 650 இடங்கள் உள்ளன. இவற்றில் 350 இடங்கள் 69 சதவீத இடஒதுக்கீட்டின் கீழும், 25 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழும் வர வேண்டியவை. ஆனால், இக்கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறியதால், இந்த இடங்கள் அனைத்தும் தற்போது அகில இந்திய ஒதுக்கீட்டிற்குச் சென்றுவிட்டன. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறுவதன் மூலம் அதிக வருமானம் ஈட்ட முடியும் என்பதாலேயே தனியார் மருத்துவக் கல்லூரிகள் இதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன.
தமிழ்நாட்டிலுள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் பாதிக்கும் மேற்பட்டவை திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களால் நடத்தப்படுபவை. சமூகநீதி, இடஒதுக்கீடு, மாநில உரிமை, நீட் ஒழிப்பு என்று பேசுபவர்களே, கல்விக் கொள்ளையில் கண்ணும் கருத்துமாகச் செயல்படுகின்றனர் என்பதுதான் வெளிப்படையாகத் தெரிகிறது.
தமிழ்நாட்டில் பாஜகவைத் தவிர ஏறத்தாழ அனைத்துக் கட்சிகளுமே நீட் ஒழிப்பை ஆதரிப்பதாகக் கூறுகின்றன. இதற்காக அறிக்கைகள், தீர்மானங்கள், மசோதாக்கள், கண்டனங்கள், ஆர்ப்பாட்டங்கள் எனப் பல்வேறு நாடகங்களையும் அரங்கேற்றுகின்றன. ஆனால், மருத்துவக் கல்வியைத் தனியார்மயமாக்குவதை அனுமதிப்பது, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கட்டணக் கொள்ளை, நீட் பயிற்சி மையங்களும் தனியார் பள்ளிகளும் சிறந்த பயிற்சி அளிப்பதாகக் கூறி நடத்தும் வசூல் வேட்டை ஆகியவை குறித்து மட்டும் மறந்தும் வாய்திறப்பதில்லை.
நீட் தேர்வும், மருத்துவக் கல்வியின் தனியார்மயமும் இணைந்து, பெரும்பான்மை மக்களுக்கு மருத்துவப் படிப்பை எட்டாக்கனியாக்கிவிட்டன. இதற்கு இதுவரை நாம் பார்த்த விவரங்களே போதுமான சான்றுகளாக உள்ளன.
- மாணிக்கம்

