கணினி முறையில் நீட் தேர்வு
கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடுமா?
நோய்நாடி நோய்முதல் நாடி யதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
என்ற குறளை நாம் படித்திருப்போம். உடலில் வந்திருக்கும் நோயின் தன்மையை அதன் அறிகுறிகளைக் கொண்டு அறிந்து அதன் மூலக்காரணங்களையும் ஆராய்ந்து அந்த நோயை குணப்படுத்துவதற்கேற்ற பொருத்தமான மருந்தைக் கொடுக்க வேண்டும் என்பதே இக்குறளின் பொருள். இதைச் சமூகப் பிரச்சனைகளுக்கும் நாம் பொருத்திக் கொள்ளலாம்.
ஆனால் முதலாளித்து அறிவுஜீவிகளும், அதிகாரவர்க்கத்தினரும், அரசியல் கட்சித் தலைவர்களும் சமூகப் பிரச்சனைகளின் மூலக்காரணத்தைக் கண்டறிந்து அதைச் சரிசெய்வதற்கான மருந்தைக் [தீர்வைக்] கொடுக்காமல் பிரச்சனையின் விளைவுகளுக்குக் களிம்பு தடவுவதையே நிரந்தரத் தீர்வாக முன்வைப்பார்கள். இதை நீட் தேர்வு முறைகேடு விவகாரத்திலும் பொருத்திப் பார்க்கலாம்.
2026 ஆம் ஆண்டு நீட் தேர்வு வினாத்தாள் கசிவு முறைகேடுகளுக்கு எதிராக எழுந்த மாணவர்-இளைஞர்கள் எழுச்சியின் விளைவாக, நீட் தேர்வு சீர்திருத்தம் குறித்த பரிந்துரைகளை வழங்க நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் கமிட்டியை மோடி அரசாங்கம் அமைத்தது. முறைகேடுகள் இல்லாமல் நீட் தேர்வை நடத்துவது தொடர்பாகக் கலந்தாலோசிப்பதற்காக இதுவரை ஏறத்தாழ நாற்பது முறை கூடியுள்ள இக்கமிட்டி கூடிப் பேசியுள்ளதாம்.
சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நந்தன் நிலேகனி, நீட் தேர்வு முறைகேடுகளைத் தடுப்பதற்கான இரண்டு முக்கியத் தீர்வுகளை முன்வைத்திருக்கிறார். ஒன்று, பேப்பர்-பேனா தேர்வு முறைக்குப் பதிலாக இணையத்தின் வழியாக இணைக்கப்பட்ட கணினி முறையிலான தேர்வு; இரண்டு, நீட் தேர்வு தொடங்குவதற்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன்பு செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் வினாத்தாளைத் தயாரித்துக் கொடுப்பது.
“எதற்கு வினாத்தாள் என்ற ஒன்று நமக்குத் தேவை? வினாத்தாள் கைக்கு வந்த கணமே அதன் மூலம் எவ்வளவு பணம் கிடைக்கும் என்பதும் கூடவே வந்து விடுகிறது” என்கிறார் நிலேகனி. அதாவது வினாத்தாள் தயாரிப்பது, அச்சிடுவது, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லும் போது, பள்ளியில் பாதுகாப்பாக வைத்திருக்கும் போது ஆகிய நிலைகளில் பணம் சம்பாரிப்பதற்காக வினாத்தாள் கசிவும் அதையொட்டிய முறைகேடுகளும் நடப்பதாகக் கூறுகிறார் நிலேகனி.
உண்மைதான், முந்தைய காலங்களில் அவ்வாறே நடந்துள்ளதை யாரும் மறுக்க முடியாது. உதாரணமாக 2026 இல் நடந்த நீட் வினாத்தாள் கசிவில், வினாத்தாளை அமைத்த பேராசிரியர்களே அதிக விலைக்கு நீட் கேள்விகளை விற்றதால் மறுதேர்வு நடத்த வேண்டியதாயிற்று. 2024 இலோ, வினாத்தாள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அறையை உடைத்து வினாத்தாள் நகலெடுத்து விற்கப்பட்டதாக சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கையே தாக்கல் செய்துள்ளது. எனவே வினாத்தாள்கள் காகிதங்களில் அச்சடிக்கப்பட்டு விநியோகிப்பதனாலேயே முறைகேடுகள் நடக்கின்றன, ஆதலால் காகித முறைக்குப் பதிலாக கணினி வழியிலான தேர்வுக்கு மாறினால் அம்முறைகேடுகள் நடக்காது என்பதே நிலேகனியின் வாதம்.
காகித முறையிலோ அல்லது கணினி வழியிலோ தேர்வு நடத்தினாலும் 2026 முறைகேட்டைப் போல என்.டி.எ. விலிருந்தே வினாத்தாள் கசிந்தால் அதை எப்படி அடைப்பது? அதற்கு நிலேகனி சொல்வது, ஒவ்வொரு பாடத்திற்கும் ஆயிரக்கணக்கான கேள்விகளைக் கொண்ட கேள்வித் தொகுப்பைத் தயாரித்து வைத்துக் கொள்வோம். அத்தொகுப்பில் ஒவ்வொரு வருடமும் புதிய கேள்விகளையும் சேர்த்துக்கொள்ளலாம். அதைக் கொண்டு செயற்கை நுண்ணறிவு உதவியுடன் தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு வினாத்தாளைத் தயாரித்து அனுப்புவதன் மூலம் வினாத்தாள் கசிவைத் தடுத்து விட முடியும் என்கிறார்.
ஒன்றிய கல்வி அமைச்சகமும் கணினி வாயிலாக நீட் தேர்வை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாகக் கூறுகிறது. இரு வாரங்களுக்கு முன்பு வந்த கல்விக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை கூட, நீட் தேர்வை கணினி வழியாக, இந்தியா முழுவதும் பல கட்டத் தேர்வாக நடத்துவது; என்.டி.எ. வை நாடாளுமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவருவது போன்ற பரிந்துரைகளை வழங்கியுள்ளது. மொத்தத்தில் கணினி வழியான தேர்வுமுறையே நீட் முறைகேடுகளைத் தடுப்பதற்கான சிறந்த தீர்வு என்பதை ஆளும்வர்க்கம் முன்வைக்கிறது. அப்படியென்றால் கணினி முறைத் தேர்வில் முறைகேடுகளே நடக்க முடியாதா? இல்லை.
உதாரணமாக ஜே.இ.இ. தேர்வுகள் கணினி முறையில் தான் நடத்தப்படுகின்றன. 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜே.இ.இ. முதன்மைத் தேர்வில் [JEE Main] 820 மாணவர்களிடம் தலா 10-15 இலட்சம் வாங்கிக் கொண்டு தேர்ச்சி பெற உதவி செய்த புகாரில் அஃபினிட்டி எஜிகேசன் பிரைவேட் லிட் என்ற நிறுவனத்தின் இயக்குநர், அதன் நிர்வாகிகள் மற்றும் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த மிகையில் சர்கின் ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது.
இவ்வழக்கில் ஹரியானாவின் சோனிபத் நகரத்தில் உள்ள ஒரு தேர்வு மையத்தின் கணினிகள் ஹேக் செய்யப்படுகின்றன. அந்தக் குறிப்பிட்ட கணினிகளில் பணம் கொடுத்த மாணவர்கள் தேர்வெழுத செட் செய்யப்படுகிறார்கள். ஜே.இ.இ. தேர்வுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட iLeon என்ற மென்பொருளை ஹேக் செய்து வெளியிலிருந்து அந்தக் கணினிகளை இயக்குவதற்கான வழியை மிகையில் சர்கின் ஏற்படுத்தித் தருகிறார். TeamViewer, AnyDesk, VNC போன்ற மென்பொருள்கள் மூலமாக வெளியிலிருந்து அக்கணினிகளோடு தொடர்பை ஏற்படுத்தி, அஃபினிட்டி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த தீர்வர்கள் [solvers] அம்மாணவர்களுக்குப் பதிலாகத் தேர்வெழுதுகின்றனர். இதன் மூலம் சுமார் 820 தேர்வர்கள் பயனடைந்திருக்கலாம் என்று சிபிஐ கணித்தாலும் பயனடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும் ‘அஃபினிட்டி’ மீதான வழக்கும் இன்றுவரை முடிக்கப்படவில்லை.
ஜே.இ.இ. மட்டுமல்ல, வெளிநாட்டுப் படிப்புகளுக்கான GMAT தேர்வு, ஒன்றிய அரசுப் பணிகளான SSC தேர்வு, இரயில்வே தேர்வு, மத்தியப் பிரதேச மாநில வங்கித் தேர்வு என கணினி முறையில் நடத்தப்பட்ட பல தேர்வுகளில் கணினியை ஹேக் செய்து முறைகேடுகள் நடந்திருப்பதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இம்முறையில் கணினியை ஹேக் செய்து விட்டால், பிறகு மிக எளிமையாக தேர்வர்களுக்கு வெளியிலிருந்து உதவ முடியும் என்பதே உண்மை. முறைகேடுகள் நடப்பதற்கான முழுச் சாத்தியமும் உள்ள இத்தேர்வு முறையைத்தான் ஆட்சியாளர்கள் மிகவும் பாதுகாப்பானது என்று வாதிடுகின்றனர். மேலும் கணினி வழியான தேர்வு முறையினால் இலாபமடையப் போவது தனியார்-கார்ப்பரேட் நிறுவனங்களே.
2027 இல் 23 இலட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதாகக் கொள்வோம். இதற்கு ஒரு மையத்தில் 500 மாணவர்கள் தேர்வெழுதுவதாகக் கொண்டால், தடையில்லாத இணைய வசதி மற்றும் 500 கணினிகள் கொண்ட 4,600 தேர்வு மையங்கள் தேவைப்படும். தற்போதைய நிலையில் கல்வி நிறுவனங்களிடம் தேர்வெழுதுவதற்கான 500 கணினிகள் கொண்ட கட்டமைப்பு இருக்க வாய்ப்புகள் மிகக் குறைவு. நீட் தேர்வுக்காக இனிமேல் தான் அக்கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
மேலும் இந்தியாவின் கிராமப்புறங்களில் இன்னும் முழுமையான இணைய வசதிக்கான கட்டமைப்புகள் இல்லை என்று அரசே ஒப்புக்கொள்கிறது. எனவே அப்பகுதிகளில் அமைக்கப்படும் தேர்வு மையங்களில் தடையற்ற இணையத்திற்கும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. நாடாளுமன்ற நிலைக்குழுவோ, கணினி முறைக்கு மாறினாலும் தனியார் மையங்களில் நடத்துவதை விட அரசு மையங்களில் இத்தேர்வுகளை நடத்துவதன் மூலம் முறைகேடுகள் நடப்பதற்கான வாய்ப்பைக் குறைக்க முடியும் என்கிறது. இதற்கு பல ஆயிரம் கோடிகளை ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டியிருக்கும். அதனால் நீட் தேர்வு நடத்துவதைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கே மோடி அரசாங்கம் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வு விடைத்தாள்கள் கணினித் திரை வழியாகத் திருத்தியதில் நடந்த குளறுபடிகளுக்குப் பின்னால் உள்ள ஊழல் முறைகேடுகளை நாடே அறியும். இங்கே வினாத்தாள் கசிவு முறைகேடுகளைத் தடுக்கிறோம் என்ற போர்வையில் தேர்வு முறைகளில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கின்ற வேலையைத்தான் மோடி-என்.டி.எ.-நிலேகனிக் கும்பல் மறைமுகமாகச் செய்கிறது.
நீட் தேர்வு அமலுக்கு வந்து பதினொரு ஆண்டுகளாகின்றன. திறமையான மருத்துவர்களை உருவாக்கப் போகிறோம், மருத்துவக் கல்வியில் புரையோடிக் கிடக்கின்ற ஊழலை ஒழிக்கப் போகிறோம் என்று சொல்லித்தான் நீட் தேர்வை மோடி அரசாங்கம் நம் மீது திணித்தது. ஆனால் இவர்கள் சொன்னதற்கு நேரெதிராக, நீட்-க்கு முன்பு இருந்ததை விட தற்போது முறைகேடுகளும், ஊழல்-பணமும் மருத்துவக் கல்வியில் அதிகமாகவே புரளுகின்றன. ஒரு மாணவன் நீட் தேர்வில் மிக மிகக் குறைந்த அல்லது ஒரு பாடத்தில் பூஜ்ஜிய மதிப்பெண் எடுத்திருந்தாலும் அல்லது பூஜ்ஜிய பர்சென்டைல் எடுக்கின்ற மாணவர்கள் கூட பணமிருந்தால் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து விடலாம் என்ற நிலையே யதார்த்தமாகியுள்ளது.
நீட்-க்குப் பிறகு தான், பல ஆயிரம் கோடி அந்நிய முதலீடுகள் கோச்சிங் நிறுவனங்களில் குவிந்துள்ளன. அதன் அபரீத வளர்ச்சியின் காரணமாக மொத்தப் பள்ளிக் கல்வியுமே கோச்சிங் மையங்களின் அழுத்தத்திற்குள் சென்று கொண்டிருக்கின்றன. இதனோடு கூடவே, ஏராளமான தனியார் சி.பி.எஸ்.சி. பள்ளிகளும் புற்றீசல் போலத் தோன்றியுள்ளன. எனவே மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு என்பது அடிப்படையில் தனியார் கல்வி முதலாளிகளும், கோச்சிங் மைய முதலாளிகளும், சர்வதேச நிதி மூலதனமும் இணைந்து பெரும்பான்மை மக்களை சுரண்டுவதற்காகக் கொண்டுவரப்பட்ட ஒரு சதித் திட்டமாகும். இந்த மருத்துவக் கல்வி சார்ந்த வியாபாரச் சந்தையும் அதில் லாபமடையும் தனியார் பள்ளிகள்/கோச்சிங் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியே இத்தேர்வு முறைகேடுகளுக்கு அடிப்படையாக அமைகின்றன.
எனவே நீட் தேர்வு முறைகேடுகளுக்குக் காரணம், முற்றிலும் தனியார்மயமாகிப்போன மருத்துவக் கல்வியும் அந்நிய முதலீடுகளைக் கொண்ட கோச்சிங் மையங்களின் ஆதிக்கமுமா? அல்லது வினாத்தாளைக் கொண்டு பேப்பர்-பேனா முறையில் நடத்தியதா? என்பதை நாம் ஒவ்வொருவரும் பரிசீலித்து நீட் முறைகேடுகளின் மூலக்காரணியான நீட் தேர்வையும், கல்வித் தனியார்மயத்தையும் ஒழிப்பதற்கு செயலில் இறங்க வேண்டும்.
- மாணிக்கம்
