சட்டத்தைக் கடுமையாக்கினால் நீட் முறைகேடுகள் ஒழிந்துவிடுமா?
இருபது வருடகாலமாக ஆளும் வர்க்கத்தினால் திட்டமிட்டுக் கட்டியெழுப்பப்பட்ட மோடியின் பிம்பம் கரப்பான் பூச்சிகளின் உறுதியான போராட்டத்தினால் புஷ்வானமாகிவிட்டது. தர்மேந்திர பிரதானின் பதவி விலகலை ஒருவகையில் தங்களது தோல்வியாகவே கருதும் ஆர்எஸ்எஸ்-பாஜக அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல், போராட்டத்தில் பங்கெடுத்தவர்களை வேட்டையாடி வருவதோடு, இளைஞர்களிடம் செல்லுங்கள், அவர்களின் கருத்துக்களைக் கேளுங்கள் என்று யோக்கியன் போல நாடகமாடுகிறது.
எப்போதுமே சினிமாப் பட பாணியில் முன்தயாரிப்புகளுடன் காணொலியில் பேசும் மோடி, தீவிரமான போராட்டத்தின் காரணமாக, ஜூன் 23 அன்று நடு இரவில் கழுவாத மூஞ்சியோடும் ஸ்கிரிப்ட் இல்லாமலும் பேச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார். மோடியின் நோக்கமோ, எதையாவது சொல்லிப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதே. அதற்காக, 2026 ஆம் ஆண்டு நீட் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டவர்களுக்குக் கடுமையான தண்டனை வாங்கித் தருவது, நீட் உள்ளிட்ட பொதுத்தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுப்பதற்காகச் சட்டத்திருத்தம் கொண்டுவருவது, தேசிய தேர்வு முகமையை (NTA) மறுகட்டமைப்பு செய்வதற்கான குழு அமைப்பது ஆகிய வாக்குறுதிகளைக் கொடுத்தார்.
அடுத்த ஒருவாரத்திலேயே, பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுப்பதற்கான சட்டம்-2026 ஐ நாடாளுமன்றத்தில் விவாதிக்காமலேயே நிறைவேற்றினர். கூடவே NTA வை மறுசீரமைப்பு செய்வதற்காகத் தனியார்மயத்தின் தீவிர ஆதரவாளர்களைக் கொண்ட குழுவையும் அமைத்தனர். செய்தி ஊடகங்களும், நீட் ஆதரவாளர்களும், போராட்டச் செய்திகளை இருட்டடிப்பு செய்து மோடியின் வாக்குறுதியையும் புதிய சட்டத்தினையும் நம்புமாறு பிரச்சாரம் செய்தன.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. அதுபோல, புதிய சட்டங்களும் கடுமையான தண்டனைகளும் ஒருபோதும் குற்றங்களைக் கட்டுப்படுத்தியதும் இல்லை, குற்றங்களை ஒழித்ததும் இல்லை. இது நீட் முறைகேடுகளைத் தடுக்கும் சட்டத்திற்கும் பொருந்தும். இது ஒரு கண்துடைப்பு நடவடிக்கை என்பதை இச்சட்டத்தின் பரிந்துரைகளைச் சற்று ஆழமாகப் பரிசீலித்தாலே நாம் புரிந்து கொள்ள முடியும்.
முதலில் பாஜக சொல்லிக் கொள்வது போல இது ஒன்றும் புதிய சட்டம் அல்ல. ஏற்கனவே பொதுத்தேர்வு முறைகேடுகளைத் தடுப்பதற்காக 2024 பிப்ரவரியில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின் நீட்சியே ஆகும். ஒன்றிய அல்லது மாநில அரசுகள் நடத்தும் பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களைத் தண்டிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட இச்சட்டத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டதாக 45 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்குப் பதியப்பட்டு இரண்டாண்டுகளாகியும் வழக்கு இன்னும் முடியவில்லை. குற்றஞ்சாட்டப்பட்ட 45 பேரில் 44 பேர் பிணையில் வெளிவந்துவிட்டனர். இம்முறைகேட்டின் முக்கிய குற்றவாளியாகச் சொல்லப்பட்ட சஞ்சீவ் குமாரை CBI இவ்வழக்கிலிருந்தே விடுவித்துவிட்டது.
தற்போது ஏற்கனவே இருந்த சட்டத்தில் கூடுதலாக, பொதுத்தேர்வு முறைகேடு வழக்குகள் அனைத்தும் விரைவு நீதிமன்றங்களின் மூலம் விசாரிக்கப்படும், முதல் இரண்டு மாதங்களில் விசாரணையை முடித்து அடுத்த மூன்று மாதங்களில் நீதிமன்ற வாதங்களையும் முடித்துத் தண்டனை வழங்கிவிட வேண்டும், குற்றத்தின் தன்மையைப் பொறுத்து ஐந்திலிருந்து பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோடு பத்து கோடி அபராதம் ஆகியவற்றைப் புதிதாகச் சேர்த்துள்ளனர்.
இப்புதிய சட்டத்தின் படி, விரைவு நீதிமன்றங்கள் மூலமாகத் தேர்வு முறைகேடு வழக்குகள் விசாரிக்கப்படுவதால் இக்குற்றங்களில் ஈடுபடுபவர்கள் உடனுக்குடன் தண்டிக்கப்படுவார்கள் என பாஜகவினர் நம்மை நம்பச் சொல்கின்றனர். முதலில் விரைவு நீதிமன்றங்கள் என்பது நீட் தேர்வு முறைகேடுகளை விசாரிப்பதற்காகப் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டதல்ல. பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகள், போஸ்கோ வழக்குகள், தலித் மக்கள் மீதான வன்கொடுமை வழக்குகள் போன்றவற்றை விரைந்து விசாரித்துத் தண்டனை வழங்குவதற்காக இவ்வழக்குகளை விரைவு நீதிமன்றங்கள் தான் விசாரித்து வருகின்றன. அவ்வகையில் தற்போது பொதுத்தேர்வு முறைகேடு வழக்குகளையும் விரைந்து விசாரித்து முடிக்க விரைவு நீதிமன்றங்களை அமைக்கிறோம் என்கின்றனர்.
இந்தியாவில் தற்போது 775 விரைவு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் 398 விரைவு நீதிமன்றங்கள் போஸ்கோ வழக்குகளை மட்டுமே விசாரித்து வருகின்றன. இவை விரைவு நீதிமன்றங்கள் என்று சொல்லிக் கொண்டாலும், ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான வழக்குகள் இந்நீதிமன்றங்களில் முடிக்கப்படாமல் தேங்கியே உள்ளன. உதாரணமாக 2025 ஆம் ஆண்டில் மட்டும் ஒரு லட்சத்து நாற்பத்து ஓராயிரம் போஸ்கோ வழக்குகள் விரைவு நீதிமன்றங்களில் பதியப்பட்டுள்ளன. அதில் 50 சதவீதத்திற்கும் குறைவான வழக்குகளே விசாரித்து முடிக்கப்பட்டுள்ளன. சட்ட அமைச்சகத்தின் மற்றொரு தரவின் படி, விரைவு நீதிமன்றங்களில் ஒரு வழக்கை விசாரித்து முடிப்பதற்குச் சராசரியாகப் பத்து மாதத்திலிருந்து நான்கரை வருடங்கள் வரை ஆவதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் விரைவு நீதிமன்றங்கள் மூலம் ஐந்து மாதத்திற்குள் வழக்குகள் விசாரிக்கப்பட்டுத் தண்டனை வழங்கப்படும் என்று மோடி சொல்வது சாத்தியமில்லாதது என்று பாஜக ஆதரவாளர்களே விமர்சிக்கின்றனர். பிறகு நாம் எப்படி நம்புவது?
மேலும் தேசிய தேர்வு முகமையை மறுசீரமைப்பதன் மூலம் நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுத்துவிட முடியும் என்கிறது மோடி அரசாங்கம். அதற்காக நந்தன் நீலகேணி தலைமையில் குழுவையும் அமைத்துள்ளது. தனியார்மயத்தின் தீவிர ஆதரவாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இக்குழு, செயற்கை நுண்ணறிவு, கணினி வழியிலான தேர்வு முறை மூலமாக முறைகேடுகளைத் தடுத்துவிடுவோம் என்கிறது.
2024 நீட் வினாத்தாள் கசிவின்போது, NTA வை சீரமைக்க ராதாகிருஷ்ணன் குழுவை மோடி அரசாங்கம் நியமித்தது. அக்குழு கொடுத்த 101 பரிந்துரைகளில் 75% பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டுவிட்டதாக அரசாங்கமே கூறுகிறது. அப்படி இருந்தும் இரண்டு வருடங்களுக்குள் மீண்டும் வினாத்தாள் கசிவு ஏன் நடந்தது என்ற கேள்விக்குப் பதில் சொல்லாமல், முறைகேடுகளைத் தடுப்பதற்காக NTA வை மறுகட்டமைப்பு செய்யப்போகிறோம் என்று சொல்லி நந்தன் நீலகேணி தலைமையில் புதிய குழுவை அமைத்துள்ளனர்.
இவ்விரு குழுக்களுமே, நிர்வாக கடமைப்பு, தேர்வு நடத்துவது, விடைத்தாள் திருத்துவது என NTA வின் அனைத்து நிலைகளிலும் தனியாரை அனுமதிப்பதன் மூலம் முறைகேடுகளைத் தடுக்க முடியும் என்கிறது. தேர்வுகளைக் கணினி வாயிலாக நடத்துவதன் மூலம் முறைகேடுகளைத் தடுக்க முடியும் என்றது ராதாகிருஷ்ணன் குழு. ஒவ்வொரு வருடமும் இருபது லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வை எழுதுவதால், அதற்கான கணினி கட்டமைப்பை உருவாக்குவதிலும் தேர்வை நடத்துவதிலும் தனியாரை அனுமதிக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. தற்போது அமைக்கப்பட்டுள்ள நந்தன் நீலகேணி குழுவும் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு முறைகேடுகளைத் தடுத்துவிடலாம் என்கிறது. இது முழுக்க முழுக்கத் தனியாரை அனுமதிப்பதைத் தாண்டி வேறொன்றும் இல்லை.
2026 இல் நீட் முறைகேட்டில் வினாத்தாள்களைக் கோச்சிங் மையங்களுக்குக் கொடுத்ததே அவ்வினாத்தாளைத் தயாரித்த பேராசிரியர்கள் தான். ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் பிரதான முறைகேடாக இருப்பதே ஆள்மாறாட்டம் தான். இவற்றையெல்லாம் கணினி வழித்தேர்வு முறையும் செயற்கை நுண்ணறிவும் எவ்வாறு தடுக்கும்? மேற்சொன்ன முறைகளைக் கொண்டும் மென்பொருளைப் பயன்படுத்தியும் நடத்தப்படும், “மிகவும் பாதுகாப்பான” தேர்வாகச் சொல்லப்படும், JEE தேர்வில் அபினிடி எஜுகேஷன் என்ற தனியார் கோச்சிங் மையம் மென்பொருளை ஹேக் செய்து 825 மாணவர்களைத் தேர்ச்சியடைய (2022) வைத்ததாக CBI கூறுகிறது. இந்நிலையில், நவீனத் தொழில்நுட்பங்களைக் கொண்டு நீட் முறைகேடுகளை ஒழித்துவிடலாம் என்ற வாக்குறுதியை எவ்வாறு நம்புவது? அடிப்படையில் இவர்களது நோக்கமே, நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு தந்திரமாகத் தனியார்மயத்தைப் புகுத்துவதே அன்றி முறைகேடுகளைத் தடுப்பதல்ல.
எனவே சட்டங்களைக் கடுமையாக்கியதோ அல்லது குழு அமைத்ததோ மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக எடுக்கப்பட்ட ஒரு கண்துடைப்பு நடவடிக்கையே தவிர, அது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கானதல்ல என்பதே உண்மை. கல்வி வணிகமயமே நீட் முறைகேடுகளுக்கு அடிப்படை. ஆள்மாறாட்டமோ, வினாத்தாள் கசிவோ அல்லது வேறு வகையான நீட் முறைகேடுகளுக்குப் பின்னால் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள நீட் கோச்சிங் சந்தையும் மருத்துவக் கல்வித் தனியார்மயமுமே மூலக்காரணமாக உள்ளன. இது மோடி கும்பலுக்குத் தெரியாமலும் இல்லை. தற்போதைய சட்டமும் சீர்திருத்த நடவடிக்கைகளும் தனியார் கோச்சிங் மையங்களுக்கிடையேயான லாபப்போட்டியையோ தனியார் மருத்துவக் கல்லூரிகளையோ கட்டுப்படுத்தப்போவதில்லை. மறைமுகமாக அவற்றுக்கு ஆதரவாகவே உள்ளன. எனவே அடுத்த வருடமோ அல்லது அதற்கடுத்த வருடமோ புதிய முறையிலான நீட் தேர்வு முறைகேடுகளை ஒருவர் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம்.
நீட் தேர்வு ஒரு தேங்கிய குட்டை என்றால் அதிலிருந்து உருவாகும் கொசுக்களே இந்த முறைகேடுகள். மருந்தடிப்பதன் மூலம் தற்காலிகமாகக் கொசுக்களைக் கட்டுப்படுத்தலாமே ஒழிய கொசுக்களே இல்லாமல் செய்ய முடியாது. அதற்குக் குட்டையை அகற்ற வேண்டும். எனவே நீட் முறைகேடுகளை ஒழிக்க நீட் கோச்சிங் சந்தையை ஒழிக்க வேண்டும். அதற்கு முதலில் நீட் தேர்வை ஒழிக்க வேண்டும்
- மாணிக்கம்


