தூய்மையான நகரங்கள்; சுரண்டப்படும் தொழிலாளர்கள்!
ஒரு நகரத்தின் தூய்மைக்குப் பின்னால் யாருடைய உழைப்பு இருக்கிறது? அந்த உழைப்பால் உருவாகும் சமூகப் பயனை யார் அனுபவிக்கிறார்கள்? அந்த உழைப்பைச் செய்பவர்கள் ஏன் இன்னும் வறுமையிலும் பாதுகாப்பற்ற நிலையிலும் வாழ்கிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கான விடையைத் தேடும்போதுதான், இந்திய நகரங்களின் தூய்மைப் பிரச்சினை என்பது குப்பை மேலாண்மை தொடர்பான நிர்வாகக் குறைபாடு மட்டுமல்ல; அது மனிதனின் உழைப்பைச் சுரண்டும் பொருளாதார அமைப்பு, சாதிய ஒடுக்குமுறை, அரசியல் அதிகாரம் ஆகியவை ஒன்றிணைந்து உருவாக்கும் சமூகப் பிரச்சினை என்பது தெளிவாகும்.
நகரங்களைத் தூய்மையாக வைத்திருக்கும் தொழிலாளர்கள், தாங்கள் உருவாக்காத கழிவுகளை அகற்றுவதற்காகத் தங்கள் உடல்நலத்தையும் உயிரையும் பணயம் வைக்கின்றனர். ஆனால், அவர்களின் உழைப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் நிர்வாகமும் ஒப்பந்ததாரர்களும் அதற்குரிய ஊதியம், பாதுகாப்பு, உரிமைகள் ஆகியவற்றை வழங்குவதில்லை. நகரத்தின் தூய்மை என்பது அங்கு வாழும் அனைவருக்கும் பொதுவான தேவையாகக் கருதும் சமூகம், அந்தத் தூய்மையை உருவாக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையையும் நலனையும் பாதுகாப்பது ஒட்டுமொத்தச் சமூகத்தின் பொதுப் பொறுப்பாகக் கருதுவதில்லை.
இதுதான் இந்திய நகர்ப்புற நாகரிகத்தின் அடிப்படை முரண்பாடாகும்.
சாதிய ஒடுக்குமுறையின் மீது கட்டப்பட்ட உழைப்புச் சந்தை
இந்தியாவில் தூய்மைப் பணி என்பது வெறுமனே பொருளாதாரத் தேவையின் அடிப்படையில் உருவான தொழில் அல்ல. குறிப்பிட்ட சாதியினரின் மீது தலைமுறை தலைமுறையாகச் சுமத்தப்பட்ட சமூகக் கடமையாக அது மாற்றப்பட்டது. பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரித்து, சிலரின் உழைப்பை இழிவானதாகக் கருதி, அவர்களையே அந்த வேலைகளுக்குள் கட்டிப்போட்டது சாதிய அமைப்பு.

வட இந்தியாவில் நிலவிய ஜஜ்மானி முறை, குறிப்பிட்ட தலித் சமூகங்களின் மீது தூய்மைப் பணியைப் பரம்பரைக் கடமையாகத் திணித்தது. தென்னிந்தியாவில் வெட்டி (vetti) போன்ற கட்டாய உழைப்பு முறைகள், ஒடுக்கப்பட்ட மக்களின் உழைப்பையும் வாழ்க்கையையும் ஆதிக்கச் சமூகங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தன. இத்தகைய அமைப்புகளில் தொழிலாளர்களுக்கு வேலையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இல்லை; தங்கள் உழைப்பின் மதிப்பைத் தீர்மானிக்கும் அதிகாரமும் இல்லை; அந்தத் தொழிலிலிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்பும் தொடர்ந்து மறுக்கப்பட்டது.
இது கடந்த காலத்தில் மட்டுமே இருந்த பிரச்சினையல்ல. பழைய சமூகக் கட்டுப்பாடுகள் புதிய பொருளாதார உறவுகளுக்குள் புகுந்து, இன்றும் வெவ்வேறு வடிவங்களில் செயல்படுகின்றன.
பொருளாதார வரலாற்றாசிரியர் தீர்த்தங்கர் ராய், Sardars, Jobbers, Kanganies: The Labour Contractor and Indian Economic History என்ற ஆய்வில், காலனிய இந்தியாவில் தொழிலாளர்களைத் திரட்டுவதிலும் கட்டுப்படுத்துவதிலும் இடைத்தரகர்கள் வகித்த பங்கை விளக்குகிறார். அதில் வட இந்தியாவின் சர்தார்களும் சென்னை மாகாணத்தின் கங்காணிகளும், வறுமை மற்றும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து தொழிலாளர்களைத் திரட்டி தோட்டங்களிலும் சுரங்கங்களிலும் பணியமர்த்தினர். தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது மட்டுமல்லாமல், அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்தையும் இவ்விடைத்தரகர்களே பெற்றிருந்தனர்.
காலனிய முதலாளித்துவம், ஏற்கெனவே நிலவிய சாதியப் படிநிலைகளைத் தகர்த்தெறியவில்லை. மாறாக, மலிவான உழைப்பைப் பெறுவதற்கும் தொழிலாளர்களை ஒழுங்குபடுத்துவதற்கும் அவற்றைப் பயன்படுத்திக்கொண்டது. இவ்வாறு, பழைய சமூக ஒடுக்குமுறையும் புதிய பொருளாதாரச் சுரண்டலும் ஒன்றையொன்று வலுப்படுத்தின.
இன்று ஒப்பந்ததாரர்கள் வகிக்கும் பங்கிற்கும் இந்த வரலாற்றுக்கும் இடையே நீண்ட தொடர்பு இருக்கிறது. இடைத்தரகர்களின் பெயர்களும் நிர்வாக முறைகளும் மாறியிருக்கலாம்; ஆனால், தொழிலாளர்களின் உழைப்பைக் கட்டுப்படுத்தி, அவர்களின் உரிமைகளை மறுத்து, அவர்களிடமிருந்து மிகை (அதிக) உழைப்பைப் பெற்றுக்கொள்ளும் அதிகார உறவு தொடர்ந்து நீடிக்கிறது.
ஒப்பந்ததாரர் ராஜ்ஜியம்: சுரண்டலுக்கான புதிய நிர்வாக வடிவம்
1990-களில் தாராளமயமாக்கல் கொள்கை அறிமுகமான பிறகு, நிரந்தரப் பணியிடங்களைக் குறைத்து, ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பயன்படுத்தும் போக்கு பல்வேறு துறைகளில் விரிவடைந்தது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் நேரடியாகத் தொழிலாளர்களைப் பணியமர்த்தி அவர்களின் உரிமைகளுக்குப் பொறுப்பேற்பதற்குப் பதிலாக, அந்தப் பொறுப்புகளை ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கத் தொடங்கின.
தொழிலாளர்களைத் திரட்டுவது, பணியில் அமர்த்துவது, ஊதியத்தைக் கட்டுப்படுத்துவது, அவர்களின் பணியை ஒழுங்குபடுத்துவது போன்ற அதிகாரங்கள் ஒப்பந்ததாரர்களிடம் குவிக்கப்பட்டது. இந்த அமைப்பு முறையே ‘ஒப்பந்ததாரர் ராஜ்ஜியம்’ எனப்படுகிறது.
இந்த முறையின் மூலம் முதலாளித்துவ நிறுவனங்கள் பெரும் பயனடைகிறது. அதாவது நிரந்தரத் தொழிலாளர்களுக்கான ஊதியம், ஓய்வூதியம், சமூகப் பாதுகாப்பு, பிற பணிசார் உரிமைகள் போன்ற செலவுகளைக் குறைக்கவும், தொழிலாளர்களைத் தேவைக்கேற்பப் பயன்படுத்திக்கொண்டு, அவர்களின் வாழ்க்கைப் பாதுகாப்புக்கான பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளவும் முடிகிறது.
இந்திய உற்பத்தித் துறையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் இருப்பதையும், தூய்மைப் பணித் துறையில் பல நகரங்களில் அவர்கள் மொத்தத் தொழிலாளர்களில் 50 முதல் 80 சதவீதம் வரை உள்ளனர்.

தில்லி, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களில் நிரந்தரத் தொழிலாளர்கள் மாதம் சுமார் ரூ.40,000 ஊதியம் பெறும் நிலையில், ஒப்பந்தத் தொழிலாளர்கள் ரூ.8,000 முதல் ரூ.20,000 வரை மட்டுமே பெறுகின்றனர். ஒரே வேலையைச் செய்தாலும் ஊதியத்தில் பெரும் வேறுபாடு நிலவுகிறது. ஊதியம் தாமதமாக வழங்கப்படுவதும், சமூகப் பாதுகாப்பு மறுக்கப்படுவதும், பணியிடத்தில் பாதுகாப்பு இல்லாதிருப்பதும் அவர்களின் வாழ்வை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுகின்றன.
இது தனித்தனியான ஒப்பந்ததாரர்களின் தவறுகளால் மட்டும் உருவாகும் பிரச்சினையல்ல. குறைந்த செலவில் அதிக உழைப்பைப் பெறுவதையும், தொழிலாளர்களின் உரிமைகளுக்கான செலவுகளைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்ட பொருளாதார அமைப்பு முறையின் விளைவாகும்.
ஆனால், இந்தியாவில் இந்தச் சுரண்டல் வர்க்க அடிப்படையில் மட்டுமே செயல்படுவதில்லை. அது கூடவே சாதிய அமைப்புடன் இணைந்து செயல்படுகிறது. ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணியாற்றுபவர்களில் பெரும்பாலானோர் விளிம்புநிலைச் சமூகங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க, ஒப்பந்தங்களைக் கட்டுப்படுத்துபவர்கள் பெரும்பாலும் நிலவுடைமையும் அரசியல் செல்வாக்கும் கொண்ட ஆதிக்கச் சமூகங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.
இதனால், தொழிலாளர் சந்தையில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வு, சாதிய அதிகாரத்தால் மேலும் வலுப்படுத்தப்படுகிறது.
சாதியமும் வர்க்கமும் ஒன்றையொன்று வலுப்படுத்தும் இடம்
சாதியம் என்பது வெறும் சமூகப் பாகுபாடு மட்டுமல்ல; அது யார் எந்த வேலையைச் செய்ய வேண்டும், யாருடைய உழைப்பு மலிவாகக் கருதப்பட வேண்டும், யாருடைய வாழ்க்கை எளிதில் கைவிடப்படக்கூடியதாகக் கருதப்பட வேண்டும் என்பதையும் தீர்மானிக்கும் அதிகார அமைப்பாகச் செயல்படுகிறது.
அதேவேளையில், பொருளாதாரச் சுரண்டல் என்பது சாதிய ஒடுக்குமுறையைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதற்கான பொருளாதார அடித்தளத்தையும் வழங்குகிறது. ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட வேலைகளில் அதிகமாகக் குவிக்கப்பட்டால், அவர்களுக்குக் கிடைக்கும் மாற்று வேலைவாய்ப்புகள் குறைகின்றன. குறைந்த ஊதியத்தையும் பாதுகாப்பற்ற பணிச்சூழலையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் உருவாகிறது. இதனால், அவர்களின் பொருளாதாரச் சார்புநிலை அதிகரிக்கிறது.
மறுபுறம், அவர்களுடைய வறுமையும் பாதுகாப்பற்ற நிலையும், அவர்கள் செய்யும் தொழில் இயல்பாகவே அவர்களுக்குரியது என்ற சாதியக் கருத்தை மீண்டும் வலுப்படுத்துகின்றன.
இவ்வாறு ஒரு சுழற்சி உருவாகிறது: சாதியம் தொழிலாளர்களை மலிவான உழைப்புக்குள் தள்ளுகிறது; மலிவான உழைப்பைச் சுரண்டும் பொருளாதார அமைப்பு அவர்களை அதே தொழிலுக்குள் தொடர்ந்து வைத்திருக்கிறது; அந்தத் தொழிலில் அவர்கள் குவிந்திருப்பது சாதியப் பாகுபாட்டை மேலும் இயல்பானதாக்குகிறது.
பெங்களூருவில் குப்பை அகற்றும் ஒப்பந்தங்கள் மீது குறிப்பிட்ட நிலவுடைமைச் சமூகத்தினரின் ஆதிக்கம் நிலவுகிறது. ஒப்பந்ததாரர்கள், அரசியல் தொடர்புகள், உள்ளூர் அதிகாரம் ஆகியவை ஒன்றிணையும்போது, தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும் பணிநிலையும் அவர்களின் உரிமைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதில்லை; மாறாக, அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பத்திற்கும் செல்வாக்கிற்கும் உட்பட்டதாக மாறுகின்றன. இதனால், நகராட்சி நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்கள்கூட தங்களுக்குரிய ஊதியம், வேலைப் பாதுகாப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட உரிமைகளை நேரடியாக நிர்வாகத்திடம் கோர முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் ஒப்பந்ததாரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுவதால், வேலை இழந்துவிடுவோம் என்ற அச்சமும் அவர்களைத் தொடர்ந்து அடிபணியச் செய்கிறது.
இவ்வாறு, சாதிய அமைப்பு குறிப்பிட்ட சமூகங்களை மலிவான உழைப்புக்குள் தள்ளுகிறது; ஒப்பந்த முறை அந்த உழைப்பைச் சுரண்டுவதற்கான வழிமுறையாகச் செயல்படுகிறது. சாதியப் பாகுபாடும் பொருளாதாரச் சுரண்டலும் தனித்தனியாகச் செயல்படுவதில்லை; ஒன்றையொன்று வலுப்படுத்துகின்றன. இதன் விளைவாக, தலைமுறை தலைமுறையாக ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதே வகையான வேலைகளில் தொடர்ந்து முடக்கப்படுவதுடன், அவர்களின் உழைப்பைப் பயன்படுத்திப் பொருளாதார ஆதாயம் பெறுபவர்கள் அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் தக்கவைத்துக் கொள்கின்றனர்.
நவீனமயமாக்கல் யாருடைய வாழ்க்கையை மாற்றுகிறது?
தூய்மை இந்தியா இயக்கம், நகர்ப்புற நவீனமயமாக்கல், இயந்திரமயமாக்கல் போன்ற திட்டங்கள் நகரங்களின் தோற்றத்தையும் உள்கட்டமைப்பையும் மாற்றுவதாகக் கூறப்படுகின்றன. ஆனால், அந்த மாற்றங்களின் பயன் யாருக்குச் செல்கிறது என்பதே முக்கியமான கேள்வி.
நகரின் சாலைகள் தூய்மையாக இருக்க வேண்டும்; குப்பைகள் அகற்றப்பட வேண்டும்; கழிவுநீர் முறையாகக் கையாளப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. ஆனால், இவற்றைச் செய்வதற்காகத் தொழிலாளர்கள் கூடுதல் உழைப்பைச் செலுத்த வேண்டியிருக்கிறது; அவர்களின் உடல்நலமும் உயிரும் ஆபத்துக்குள்ளாகின்றன; அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய ஊதியமும் பாதுகாப்பும் மறுக்கப்படுகின்றன என்றால், அந்த நவீனமயமாக்கலின் யோக்கியதையை நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டுமா?
வீடுகளில் குப்பைகளை வகைப்படுத்தாமல் கொடுப்பது, பயனாளர்கள் கட்டணம் செலுத்த மறுப்பது போன்றவற்றால் ஏற்படும் சுமைகள் தூய்மைப் பணியாளர்கள் மீது திணிக்கப்படுகின்றன. நிர்வாகத்தின் குறைபாடுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் தப்பித்துக்கொள்ள, நகரம் தூய்மையாக இல்லாததற்குத் தொழிலாளர்களே குற்றவாளிகள் என சித்தரிக்கப்படுகின்றனர்.
இதில் தொழில்நுட்பாத்தை அறிமுகப்படுத்தப்படுவதினால், தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்துவதாக ஆகிவிடாது. அமைப்பியல் ஆய்வறிஞர் பீட்டர் ஃப்ளெமிங், Robots and Organization Studies: Why Robots Might Not Want to Steal Your Job என்ற ஆய்வில், ஆபத்தான வேலை என்பதற்காக மட்டும் தொழில்நுட்பம் மனித உழைப்பை மாற்றீடு செய்வதில்லை என்பதை விளக்குகிறார். அதில் மனித உழைப்பு மலிவாகக் கிடைக்கும் வரை, ஆபத்தான வேலைகளிலும் மனிதர்களையே தொடர்ந்து பயன்படுத்தும் போக்கு நிலவுவதாகவும், மேலும் இதனை அவர் ‘வரம்புக்குட்பட்ட தானியக்கமயமாக்கல்’ என்றும் குறிப்பிடுகிறார்.
தூய்மைப் பணித் துறையில் இந்த முரண்பாடு மிகத் தெளிவாகத் தெரிகிறது. சாக்கடைகளையும் கழிவுநீர்த் தொட்டிகளையும் இயந்திரங்கள் மூலம் பாதுகாப்பாகச் சுத்தம் செய்யும் திறன் இருந்தபோதும், நடைமுறையில் மனிதர்கள் நேரடியாக இறங்கிப் பணியாற்ற வேண்டிய அவலநிலை தொடர்கிறது. ஏனெனில், மலிவான மனித உழைப்பைத் தொடர்ந்து பயன்படுத்தும் அமைப்பில், தொழிலாளர்களின் உயிரைப் பாதுகாப்பதற்கான முதலீடு முன்னுரிமை பெறுவதில்லை.
சில நேரங்களில் இயந்திரமயமாக்கல் வேலைவாய்ப்பைப் பறிக்கும் அச்சத்தையும் தொழிலாளர்களிடையே உருவாக்குகிறது. இதனால், தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது மட்டுமே தீர்வாகாது. தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம், உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாக்கும் வகையில் இயந்திரமயமாக்கல் நடைமுறைப்படுத்தப்படும் பொழுதே சாத்தியமாகும்.
நகரத்தின் உள்கட்டமைப்பு நவீனமடைகிறது என்பதற்காக, அந்த நகரத்தின் உழைப்புறவுகளும் நவீனமடைந்துவிட்டன என்று கூற முடியாது. தொழில்நுட்பம் வளர்ந்தாலும், தொழிலாளர்கள் இன்னும் சாதிய அடிப்படையில் ஒதுக்கப்பட்டு, மலிவான உழைப்புக்குள் கட்டுப்படுத்தப்பட்டு, பாதுகாப்பற்ற நிலையில் வைக்கப்பட்டால், அது பழைய சுரண்டலின் புதிய வடிவமே.
மனித உயிரைவிட மலிவான உழைப்புக்கு மதிப்பு அளிக்கும் அமைப்பு
கையால் மலம் அள்ளும் நடைமுறை, இந்தச் சுரண்டல் அமைப்பின் மிகக் கொடூரமான வெளிப்பாடாகும். பல தசாப்தங்களாகச் சட்டங்கள் இயற்றப்பட்டும், சமூக இயக்கங்கள் போராடியும் இந்த நடைமுறை முழுமையாக ஒழிக்கப்படவில்லை. இதற்குக் காரணம், இயற்றப்பட்ட சட்டங்களின் மூலம் ஆளும் வர்க்கத்தினரைப் பாதுகாக்கும் போக்கும், இந்த ஒடுக்குமுறையைத் தொடர்ந்து அனுமதிக்கும் சமூகத்தின் சாதிய மனப்போக்கும் மாறாமல் நீடிப்பதும்தான்.

2017-ஆம் ஆண்டில் ஹைதராபாத் நகரம் சாக்கடைகளை மனிதர்கள் நேரடியாக இறங்கிச் சுத்தம் செய்யும் முறையை இயந்திரமயமாக்கல் மூலம் ஒழித்துவிட்டதாகக் கூறியது. இருப்பினும், 2021-ஆம் ஆண்டில் சிவா, அனந்தையா என்ற இரு தலித் தொழிலாளர்கள் சாக்கடைகளைச் சுத்தம் செய்யும்போது உயிரிழந்தனர். பாதுகாப்பு உபகரணங்களின்றி அவர்கள் சாக்கடைக்குள் இறங்கியதற்கு ஒப்பந்ததாரரின் அழுத்தமே காரணமாகும்.
இத்தகைய மரணங்களைத் தனிப்பட்ட விபத்துகளாக மட்டும் கருத முடியாது. ஆபத்தான பணியை மனிதர்களே செய்ய வேண்டிய நிலையை உருவாக்கிய நிர்வாக அமைப்பு, தொழிலாளர்களின் உயிரைப் பாதுகாக்கத் தவறிய ஒப்பந்த முறை, சாதிய அடிப்படையில் குறிப்பிட்ட மக்களையே இந்த வேலைகளில் தொடர்ந்து ஈடுபடுத்தும் சமூகக் கட்டமைப்பு ஆகியவற்றின் விளைவுதான் என்பது திண்ணம்.
தூய்மைப் பணியாளர்களின் உயிரிழப்புகள், நவீன நகரத்தின் முன்னேற்றம் எந்த அடித்தளத்தின் மீது கட்டப்பட்டுள்ளது என்ற கேள்வியை எழுப்புகின்றன. நகரத்தின் வசதிகளும் வளர்ச்சியும் ஒருபுறம் அதிகரிக்கும்போது, அந்த வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை உழைப்பைச் செய்பவர்களின் வாழ்க்கை ஏன் இன்னும் பாதுகாப்பற்றதாக இருக்கிறது?
இதற்கான பதில், தொழில்நுட்பத்தில் மட்டும் இல்லை. உழைப்பை மலிவாகப் பெறுவதையும், அதன் செலவுகளைத் தொழிலாளர்களின் மீது சுமத்துவதையும், அவர்களின் பாதுகாப்பையும் வாழ்வாதாரத்தையும் இரண்டாம் நிலைக்குத் தள்ளுவதையும் அனுமதிக்கும் பொருளாதார மற்றும் சமூக உறவுகளில்தான் நீடிக்கிறது.
தொழிலாளர்களைக் குற்றவாளிகளாக்கும் அதிகாரம்
நகரின் தூய்மை என்பது குடிமக்கள், நிர்வாகம், தொழிலாளர்கள் என அனைவரும் பகிர்ந்துகொள்ள வேண்டிய பொறுப்பு. ஆனால், நடைமுறையில் இந்தப் பொறுப்பு சமமாகப் பகிரப்படுவதில்லை. கழிவுகளை உருவாக்குபவர்களும் அவற்றை நிர்வகிக்கும் அதிகாரம் கொண்டவர்களும் தங்கள் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள முடிகிறது. அதேவேளையில், கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் மீது முழுப் பொறுப்பும் சுமத்தப்படுகிறது.
ஆனந்த் தெல்டும்டே, No Swachh Bharat without Annihilation of Caste என்ற கட்டுரையில், சாதிய ஒழிப்பின்றித் தூய்மை இந்தியா இயக்கத்தின் இலக்கை உண்மையாக அடைய முடியாது என்பதை வலியுறுத்துகிறார். தூய்மைப்படுத்தும் வேலை என்பது வேறு யாரோ ஒருவரின் கடமை என்ற எண்ணத்தைச் சாதிய அமைப்பு வளர்க்கிறது. இதனால், தாங்கள் உருவாக்கும் கழிவுகளுக்குப் பொறுப்பேற்காமல், அவற்றை அகற்றுவதை ஒடுக்கப்பட்ட சமூகங்களின் கடமையாகப் பலர் கருதுகின்றனர்.
பெங்களூருவில் தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரியபோது, அமைச்சர் கிருஷ்ண பைரே கௌடா அவர்களைக் குறைத்து மதிப்பிடும் வகையில் பேசியது இந்த அணுகுமுறையின் வெளிப்பாடுதான். தொழிலாளர்களின் வருகையின்மையை நகரின் தூய்மைப் பணிகள் பாதிக்கப்படுவதற்கான காரணமாக அவர் பேசியுள்ளார். ஆனால், குறைந்த ஊதியம், ஊதியத் தாமதம், வேலைப் பாதுகாப்பின்மை, ஒப்பந்ததாரர்களின் ஆதிக்கம் போன்ற அடிப்படைப் பிரச்சினைகளைப் பற்றி பேச மறுக்கிறார்.
இவ்வாறு, உழைப்பைச் சுரண்டும் அமைப்பு உருவாக்கும் பிரச்சினைகளுக்குத் தொழிலாளர்களே பொறுப்பாளிகளாகச் சித்தரிக்கப்படுகின்றனர். நிர்வாகத்தின் தோல்வி தனிநபர் தொழிலாளரின் தவறாக மாற்றப்படுகிறது. உரிமைகள் மறுக்கப்படும் நிலையில் இருப்பவர்களே, தங்களின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்படுகின்றனர்.
இது வெறும் அவமதிப்புப் பிரச்சினையல்ல. தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகக் கூட்டாகப் போராடுவதைத் தடுக்கும் அதிகார உறவின் ஒரு பகுதியாகும். வேலை இழப்போம் என்ற அச்சமும், ஒப்பந்ததாரர்களைச் சார்ந்திருக்கும் நிலையும், நிரந்தர வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையும் தொழிலாளர்களை அடிபணியச் செய்வதற்கான கருவிகளாகப் பயன்படுத்தப்படுகிறது.
பணி நிரந்தரம் என்பது வாழ்வாதாரக் கோரிக்கை மட்டுமல்ல
பெங்களூருவில் சுமார் 16,000 தூய்மைப் பணியாளர்களில் 12,800 பேர் நீண்டகாலப் போராட்டத்திற்குப் பிறகு நிரந்தரப் பணியாளர்களாக்கப்பட்டனர். ஆனால், குப்பை வாகனங்களை ஓட்டுபவர்கள், குப்பைகளை ஏற்றி இறக்குபவர்கள் உள்ளிட்ட பல தொழிலாளர்கள் இன்னும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்றனர்.
இந்த அனுபவம் ஒரு முக்கியமான உண்மையை வெளிப்படுத்துகிறது: தொழிலாளர்களின் உரிமைகள் தானாகக் கிடைப்பதில்லை; அவை கூட்டுப் போராட்டத்தின் மூலம் வென்றெடுக்கப்படுகின்றன. தனித்தனியாக இருக்கும் தொழிலாளர்கள் ஒப்பந்ததாரர்களின் அதிகாரத்துக்கு எளிதில் உட்படுத்தப்படலாம். ஆனால், சங்கங்களாக ஒன்றிணைந்து கோரிக்கைகளை முன்வைக்கும்போது, தங்கள் உழைப்பின் மதிப்பையும் உரிமைகளையும் வலியுறுத்தும் ஆற்றலைப் பெறமுடியும்.
பணி நிரந்தரம் என்பது மாதந்தோறும் நிலையான ஊதியம் கிடைப்பதற்கான வழி மட்டுமல்ல. ஒப்பந்ததாரரின் விருப்பத்தைச் சார்ந்திருக்கும் நிலையிலிருந்து விடுபடுவதற்கான வழியும் ஆகும். வேலை இழப்பின் அச்சமின்றி உரிமைகளைக் கோருவதற்கும், ஊதியத் தாமதம் மற்றும் பாதுகாப்பற்ற பணிச்சூழலுக்கு எதிராகக் குரல் கொடுப்பதற்கும், சமூகப் பாதுகாப்பைப் பெறுவதற்கும் அது அடித்தளமாக அமைகிறது.
எனவே, அனைத்து தூய்மைப் பணியாளர்களும் நிரந்தரப் பணியாளர்களாக்கப்பட வேண்டும். அவர்களுக்கு உரிய ஊதியம், சமூகப் பாதுகாப்பு, பாதுகாப்பான பணிச்சூழல், மருத்துவப் பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஒப்பந்ததாரர்களின் கட்டுப்பாட்டிலிருந்து அவர்களை விடுவித்து, நேரடி ஊதிய வழங்கல் முறையைக் கொண்டுவர வேண்டும்.
ஆனால், இந்த மாற்றங்களுடன் சாதிய அடிப்படையில் தொழில்களை ஒதுக்கும் அமைப்பையும் உடைக்க வேண்டும். தூய்மைப் பணியை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் பிறப்புரிமை அல்லது பரம்பரைக் கடமை என்று கருதும் மனப்போக்கு ஒழிக்கப்பட வேண்டும். மேலும் தொழிலாளர்கள் தாங்கள் விரும்பும் தொழிலைத் தேர்ந்தெடுப்பதற்கும், வேறு வேலைவாய்ப்புகளுக்குச் செல்வதற்கும் தேவையான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
நகரத்தை மட்டுமல்ல, அதை ஆளும் உறவுகளையும் மாற்ற வேண்டும்
இந்திய நகரங்களின் தூய்மைப் பிரச்சினை என்பது குப்பைகளை எவ்வாறு அகற்றுவது என்ற கேள்வியோடு முடிவடைவதில்லை. யார் அந்த வேலையைச் செய்கிறார்கள், யார் அதிலிருந்து பயனடைகிறார்கள், யார் அதன் செலவையும் ஆபத்தையும் சுமக்கிறார்கள் என்பதையும் அது சேர்த்தே எழுப்புகிறது.
காலனிய ஆட்சிக் காலத்தில் தொழிலாளர்களைத் திரட்டவும் கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்பட்ட இடைத்தரகர் அமைப்புகள், இன்றைய ஒப்பந்ததாரர் முறையில் புதிய வடிவில் தொடர்கின்றன. சாதியக் கட்டமைப்பு குறிப்பிட்ட மக்களை மலிவான உழைப்புக்குள் தள்ளுகிறது; ஒப்பந்த முறை அவர்களின் உரிமைகளைப் பலவீனப்படுத்துகிறது; அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரங்கள் இந்த உறவுகளை மாற்றாமல் தொடர்ந்து அனுமதிக்கும்போது, சுரண்டல் மேலும் உறுதிப்படுகிறது.
இதனை மாற்றுவதற்கு, சில தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்வதோ, சில இயந்திரங்களை அறிமுகப்படுத்துவதோ மட்டும் போதாது. உழைப்பை மலிவாகப் பெறுவதையே நோக்கமாகக் கொண்ட ஒப்பந்த அமைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும். சாதிய அடிப்படையில் தொழில்களை ஒதுக்கும் நடைமுறையை ஒழிக்க வேண்டும். நகரத்தின் தூய்மையை உருவாக்கும் உழைப்புக்குச் சமூக மதிப்பும் பொருளாதார மதிப்பும் வழங்கப்பட வேண்டும்.
ஒரு நகரத்தின் தூய்மை, அங்கு வாழும் மக்களின் நாகரிகத்தை மட்டும் காட்டுவதில்லை; அந்த நகரம் தனது உழைப்பாளர்களை எவ்வாறு நடத்துகிறது என்பதையும் சேர்த்தே வெளிப்படுத்துகிறது.
தூய்மைப் பணியாளர்களின் உழைப்பைச் சுரண்டிக்கொண்டு, அவர்களையே இழிவுபடுத்தும் நகரம் நாகரிகமானதாக இருக்க முடியாது. அவர்களின் உழைப்பைப் பயன்படுத்திக்கொண்டு, அவர்களின் உயிருக்கும் உரிமைகளுக்கும் பொறுப்பேற்க மறுக்கும் நிர்வாகம் உண்மையான நவீனமயமாக்கலை எட்ட முடியாது.
நகரத்தைத் தூய்மைப்படுத்துவது என்பது அதன் தெருக்களில் உள்ள குப்பைகளை அகற்றுவது மட்டுமல்ல; மனிதர்களைச் சாதியின் பெயராலும் உழைப்பின் பெயராலும் கீழ்நிலையில் வைத்திருக்கும் சமூக உறவுகளையும் அகற்றுவதாகும். அந்த மாற்றம் நிகழும்போதுதான் தூய்மை என்பது ஒரு அரசுத் திட்டமாக இல்லாமல், சமத்துவத்தையும் மனிதக் கண்ணியத்தையும் அடிப்படையாகக் கொண்ட சமூக நடைமுறையாக மாறும்.
- மகேஷ்
செய்தி ஆதாரம்:
https://frontline.thehindu.com/social-issues/social-justice/contract-sanitation-workers-caste-contractor-raj-india/article71494774.ece
