ஓட்டுத்திருடன் ஞானேஷ்குமாருக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கும் பாஜக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
ஓட்டுத்திருடன் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரியும் எஸ்ஐஆரை ரத்துசெய்யக் கோரியும் நடைபெறும் போராட்டங்களை ஒடுக்கும் பாசிச பாஜக போலீஸை கண்டித்து 11-10-2026 அன்று மாலை 3 மணிக்கு தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் புரட்சிகர மக்கள் அதிகாரம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சிகர மக்கள் அதிகாரத்தின் மாவட்ட செயலாளர் தோழர் சிவா தலைமை தாங்கினார். அவர் தனது தலைமை உரையில் நாடு முழுதும் ஓட்டுரிமை பறிப்புக்கு எதிராக மாணவர்கள்-இளைஞர்கள் போராடுகிறார்கள். இதைக் கூட பொறுத்துக்கொள்ளாமல் டெல்லி பாஜக போலீஸ் போராட்டக்காரர்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்குகிறது என்றும் இதை கண்டிக்கும் வகையில்தான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று குறிப்பிட்டு பேசினார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக புரட்சிகர மக்கள் அதிகாரம் மற்றும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பில் எஸ்ஐஆருக்கு எதிராக மைய இயக்க பிரச்சாரத்தின் போது திமுக அரசு தங்கள் மீது பொய் வழக்கு போட்டதையும் இன்றைய தவெக அரசும் அதே வேலையைத்தான் செய்கிறது என்றும் அம்பலப்படுத்தி பேசினார்.
இவரை அடுத்து உரையாற்றிய புரட்சிகர மக்கள் அதிகாரத்தின் பென்னாகரம் வட்டார செயலாளர் தோழர் சத்தியநாதன் பேசுகையில் எஸ்ஐஆருக்கு எதிராக இன்று பெரிய அளவில் மாணவர் இளைஞர் போராட்டம் நடக்கிறது. ஆனால் பிகாரில் எஸ்ஐஆர் அமல்படுத்தப்பட்டபோதே இவ்வாறு எதிர்கட்சிகள் போராடியிருந்தால் மற்ற மாநிலங்களில் எஸ்ஐஆர் நடக்காமல் தடுக்கப்பட்டிருக்கும் என்று குறிப்பிட்டு பேசினார்.
தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் அமலுக்கு வந்த போது புரட்சிகர மக்கள் அதிகாரம் சார்பாக அன்றே இது எஸ்ஐஆர் அல்ல, சிறுபான்மை மக்களையும், ஜனநாயக சக்திகளின் குடியுரிமையை பறிக்கும் சதிச்செயல் என்று போராடியதை குறிப்பிட்டு பேசினார்.
கொளத்தூரில் ஒரு லட்சம் வாக்காளர்கள் அன்று நீக்கப்பட்டனர். இது குடியுரிமையை பறிப்பதோடு எதிர்கட்சிகளை ஒழிக்கும் செயல் ஆகும். இதை நடைமுறையில் ஓட்டுக்கட்சிகள் இப்போதுதான் தாமதமாக உணர்கின்றனர் என்று பேசினார்.
இன்றைக்கும் ஓட்டுரிமையை பாதுகாப்பதை விட ஞானேஷ்குமாரை பாதுகாப்பதையே முதன்மை வேலையாக கொண்டு போராட்டக்காரர்களை ஒடுக்கிவருகிறது என்று அம்பலப்படுத்தினார்.
இதை அடுத்து சுதந்திர வளர்ச்சிக்கான விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் முனுசாமி அவர்கள் தனது கண்டன உரையில் “மக்கள் ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்து ஞானேஷ்குமார் தான் சார்ந்திருக்கும் பாஜகவிற்கு சேவை செய்துள்ளார். ஏனென்றால் இவரை தேர்வு செய்ததே பாஜகாதான் என்று குறிப்பிட்டு பேசினார். கடந்த காலங்களில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை தேர்வு செய்யும் முறையில் மாற்றம் கொண்டுவந்து இவரை கள்ளத்தனமாக அதிகாரியாக்கியுள்ளனர் என்று குறிப்பிட்டும் அதைக் கூட மதிக்காமல் இரு அதிகாரிகளின் கருத்துக்களையும் மதிக்காமல் தன்னிச்சையாக எதேச்சதிகாரமாக செயல்பட்டுள்ளார்,” என்று அம்பலப்படுத்தினார். இப்போது நடைபெறும் எழுச்சியை புதிய ஜனநாயக புரட்சியை நோக்கி வளர்த்தெடுக்க வேண்டும். அதுதான் தீர்வு என்றார்.
நேற்று இணையம் முடக்கம், இரயில் சேவை முடக்கம், கர்ப்பான் பூச்சி கட்சியின் நிர்வாகிகள் கைது என அடக்குமுறை தொடர்ந்தாலும் 10 ஆம் தேதி அறிவிக்கப்பட்டபடி போராட்டம் நடக்கிறது, அந்த அளவிற்கு இந்த மோடி கும்பலுக்கு எதிராக மாணவர் இளைஞர்கள் ஆத்திரத்தில் உள்ளனர் என்று குறிப்பிட்டு பேசினார்.
நேற்று தர்மேந்திர பிரதானை பதவியிலிருந்து தூக்கியெறிந்தவர்கள், இன்று ஞானேஷ்குமாருக்கு எதிராகவும் எஸ்ஐஆருக்கு எதிராகவும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இத்தகைய போராட்டம்தான் பாசிச கும்பலை பணிய செய்துகொண்டிருக்கிறது என்றார்.
மாறாக, எஸ்ஐஆர் அறிவிக்கப்பட்டபோது தேர்தலை புறக்கணிக்க பல ஐஏஎஸ் அதிகாரிகளும் பரகல பிரபாகர் போன்ற அறிவு ஜீவிகளும் அறைகூவிய போது, இந்தியா கூட்டணி கட்சிகள் படிவத்தை எப்படி பூர்த்தி செய்வது, தேர்தலில் வெற்றி பெற எப்படி விழிப்புடன் வேலை செய்வது என்று தொண்டர்களுக்கு வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தனர். இன்று மாணவர் இளைஞர்கள் வீருகொண்டு போராடும்போது வேறு வழியின்றி நாடகம் ஆடுகின்றனர் என்று அம்பலப்படுத்தினார். கரப்பான்பூச்சி கட்சியினர் இந்த அரசுக்கு அச்சம் ஏற்படுத்தும்படி போராடுவதை போல் நாமும் போராடவேண்டும் என்று பேசினார்.
இறுதியாக, பேசிய முற்போக்கு இளைஞர் முன்னணியின் மாநில குழு தோழர் பழனி அவர்கள், மோடி அரசு கொண்டுவருகின்ற திட்டங்கள் அனைத்தும் அதிகாரத்தை மையப்படுத்தும் நோக்கம் கொண்டதாக உள்ளது. இதன் மூலம்தான் கார்ப்பரேட் கொள்ளையை தீவிரப்படுத்த முடியும் என்று பாசிச கும்பல் எண்ணுகிறது என்றும் இந்த எஸ்ஐஆர் என்பது இஸ்லாமிய மக்களை இரண்டாந்தர குடிமக்களாக்கும் நோக்கம் கொண்டுள்ளது என்றும் பாசிச இட்லரின் வழியில் இன்று பாசிச திட்டங்களை ஒவ்வொன்றாக அமல்படுத்துகிறது என்றும் அம்பலப்படுத்தி பேசினார்.
இறுதியாக, புரட்சிகர மக்கள் அதிகாரத்தின் தருமபுரி நகர செயலாளர் தோழர் இராமலிங்கம் நன்றியுரை ஆற்றினார்.
இடையிடையே ஓட்டுத்திருடன் ஞானேஷ்குமாரை கைது செய்யக்கோரியும் எஸ்ஐஆரை ரத்து செய்ய கோரியும் காவி பாசிச கும்பல் எஸ்ஐஆர் அமல்படுத்துவதன் நோக்கம் அதை முறியடிக்கும் போராட்டத்தீர்வு உள்ளிட்டவற்றை விளக்கி விண்ணதிர முழக்கம் இடப்பட்டது.
தகவல்
செங்கனல் செய்தியாளர்
தருமபுரி





