பஞ்சாப் : போதைப் பழக்கத்தின் மூலக் கிருமி ஆளும்வர்க்கமே!
போதைப் பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளால் கஞ்சா செடி அழிக்கப்பட்டது; பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்; போதைப் பொருள் கடத்திய கும்பலை போலீசார் மடக்கிப் பிடித்தனர் என பத்திரிகைகள் நாள்தோறும் செய்திகளை வெளியிடுகின்றன.
போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவது கடந்த பத்து ஆண்டுகளில் ஐந்து மடங்கு அதிகமாகி இருக்கும் அதே வேளையில் அதன் விற்பனையும் இதற்கு அடிமையாகி பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 26 இலட்சம் கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்பு 2014 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை 1 கோடியே 20 லட்சம் கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி 10 ஆண்டுகளில் ₹40,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை பறிமுதல் செய்திருக்கிறது. பாஜக அரசு ஐந்து மடங்கு அதிகமாக, ₹1,90,000 கோடி மதிப்புள்ள பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளது என்று அரசு தரப்பு புள்ளி விவரங்களே கூறுகிறது.
இதிலிருந்தே ஆண்டுக்கு ஆண்டு போதைப் பொருளை பறிமுதல் செய்வது குறைந்த பாடில்லை. அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்பதை யாரும் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
பஞ்சாப் என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது புரட்சியாளர் பகத்சிங், ஜாலியான் வாலாபக் படுகொலை தான். பின்பு அம்மாநிலத்தில் பொன் நிறத்தில் மின்னிடும் கோதுமை வயல்கள், வீரம் செறிந்த விவசாயிகளின் போராட்டம், அரிசி உற்பத்தியில் முதலிடம், சீக்கியர்களின் தலைப்பாகை, பொற்கோயில் என நம் மனதில் ஒரு கணம் வந்து போகும். ஆனால் இந்நினைவுகள் எல்லாம் கடந்த இருபது ஆண்டுகளாக மெல்ல மெல்ல மறைந்து வருகின்றன.
இன்றைய பஞ்சாப்பின் இளைஞர்களோ போதைப் பொருட்கள் புழக்கத்தினால் அடிமையாகி வீதிகளில் விழுந்து கிடக்கின்றனர். பஞ்சாப்பின் கிராமப்புறங்களில் உப்பு விற்பது போல எளிதாக போதைப் பொருட்கள் விற்கப்படுகின்றன.
பஞ்சாப்பில் வசிக்கும் 2.7 கோடி பேரில் சுமார் 41 இலட்சம் பேர் (15%) ஏதேனும் ஒரு வகை போதைப் பொருளை பயன்படுத்துவதாக சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
பஞ்சாப்பில் உள்ள ஆண்களில் மூன்று பேரில் ஒருவரும், பெண்களில் பத்து பேரில் ஒருவரும் தங்கள் வாழ்நாளில் ஏதேனும் ஒரு காரணத்திற்காக போதைப் பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனர். மேலும் அங்கு 1.7 லட்சம் பேர் ஓபியாய்டுகளை உட்கொள்கின்றனர். பஞ்சாப்பில் 19.5% பேர் ஊசி மூலம் போதைப் பொருளை பயன்படுத்துகின்றனர் என்கிறது இந்நிறுவனத்தின் ஆய்வு முடிவு.
ஒருவர் பயன்படுத்திய போதை மருந்து ஊசியை பிறர் பயன்படுத்துவதால் எச்.ஐ.வி பாதிப்பும் அங்கு அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே எச்.ஐ.வி.யோடு உயிர் வாழ்பவர்களில் 5% பேர் பஞ்சாப்பில் வசிக்கின்றனர்.
அம்மாநிலத்தில் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு கட்சியும் தான் ஆட்சிக்கு வந்த ஒரு சில மாதங்களிலேயே போதைப் பொருள் புழக்கத்தை ஒழித்து விடுவோம் என வாக்குறுதி கொடுத்தே ஆட்சிக் கட்டிலில் அமருகின்றன.
கடந்த 20 ஆண்டுகளாக பஞ்சாப்பை ஆட்சி செய்த அகாலி தளம் – பாரதிய ஜனதா கூட்டணி, காங்கிரஸ் மற்றும் தற்போதைய ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் பஞ்சாப்பின் போதைப் பழக்கத்தை ஒழிக்கத் துப்பில்லாமல் ஒருவர் மீது மற்றவர் என குற்றம் சுமத்துகின்றனர்.
கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை ஆட்சியிலிருந்த அகாலி தளம்- பாஜக கூட்டணி ஆட்சியில் போதைப் பொருள் பயன்பாடு செழித்து வளர்ந்தது. அகாலி தளம்- பா.ஜ.க உள்ளூர் தலைவர்களும், போலீஸ் அதிகாரிகளும் போதைக் கடத்தலில் உடந்தையாக இருந்தனர் என்பது வெட்ட வெளிச்சமானது.
அகாலி தளம்- பாஜக கூட்டணி ஆட்சியில் தலைவிரித்தாடிய போதைப் பழக்கத்தை ஒழிக்கப் போகிறோம் என 2017 ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் அமரிந்தர் சிங் பிரச்சாரம் செய்தார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நான்கு வாரங்களிலேயே போதைப் பொருள் புழக்கத்தை ஒழிப்போம் என குரு கிரந்த் சாஹிப்பின் புனித வசனங்களைக் கொண்ட ஒரு புத்தகத்தின் மீது சத்தியப்பிரமாணமே செய்தார். போதைப் பொருள் அச்சுறுத்தலின் முதுகெலும்பை உடைப்பேன் என்றார். காங்கிரஸ் கட்சி 2017 ஆம் ஆண்டு முதல் 2022 வரை ஆட்சி செய்தது.
அதன் பின்னர் 2022 ஆம் ஆண்டில் ஆம் ஆத்மி கட்சி, இதே போதை ஒழிப்பு பிரச்சாரத்தை மையப்படுத்தி பிரச்சாரம் செய்து ஆட்சியைப் பிடித்தது. ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் நான்கு மாதங்களில் போதைப் பொருள் புழக்கத்தை ஒழிப்பதாக தேர்தல் வாக்குறுதி கொடுத்தது. ஆனால் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளாகியும் போதைப் பொருள் அதிகரிப்பு பிரச்சினை பஞ்சாப் மக்களை வாட்டி வதைக்கிறது.
வரும் 2027 ஆம் ஆண்டில் பஞ்சாப் மாநிலத்தின் 117 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இதுவரை பஞ்சாப் மாநிலத்தில் தனித்து காலூன்ற முடியாத காவிப் பாசிஸ்டுகள் வரும் சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வென்று விட வேண்டும் என தனது பிரச்சார யுக்தியை வடிவமைக்க தொடங்கியுள்ளனர். போதைக்கு அடிமையாகியுள்ள பஞ்சாப் இளைஞர்களை மீட்கப் போவதாக பாரதிய ஜனதா தற்போது ‘போதை இல்லாத பஞ்சாப் யாத்ரா’ எனும் பாதயாத்திரையை தொடங்கியிருக்கிறது.
இதையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தத் தேர்தலில் நீங்கள் பாஜகவை ஆதரித்து தாமரைக்கு வாக்களித்தால், 2029 டிசம்பர் 31-க்குள் பஞ்சாபை சிட்டா (ஹெராயின்) வர்த்தகத்திலிருந்து விடுவிப்போம் என்று பஞ்சாப்பின் பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் நான் உறுதியளிக்கிறேன் என்கிறார். அகாலி தளம், காங்கிரஸ், ஆம் ஆத்மிக்கு அடுத்தபடியாக பஞ்சாப்பில் போதைப் பொருளை ஒழிக்கும் வரிசையில் தற்போது நிற்கிறது பா.ஜ.க.
பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் இருந்த போது போதைப் பழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வக்கற்று ஈரான் – ஆப்கான் – பாகிஸ்தான் எல்லைகளை ஊடுருவிப் பாயும் “தங்கப் பிறை” (Golden Crescent) நாடுகளில் இருந்தே போதைப் பொருள் கடத்தப்படுகிறது என பா.ஜ.க இஸ்லாமிய நாடுகள் மீது பழியைப் போட்டது.
ஆனால் சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது பஞ்சாப் மாநிலத்திற்குள் வரும் போதைப் பொருட்களில் 20% மட்டுமே பாகிஸ்தானிலிருந்து வருகிறது. மீதி 80% போதைப் பொருட்கள் பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், இராஜஸ்தான், ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் டெல்லியிலிருந்தே வருகின்றன.
பாஜக, தான் ஆளும் மாநிலங்களில் போதைப் பொருள் வர்த்தகத்தைத் தடுக்கத் தவறிவிட்டதா அல்லது அதைத் தடுக்க விரும்பவில்லையா? குஜராத்தில் பா.ஜ.க அரசு 30 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது, அங்குதான் அதிகபட்ச போதைப் பொருள் வர்த்தகம் நடைபெறுகிறது என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
பஞ்சாப்பில் போதைப் பொருளை ஒழிப்போம் என்கிற அரசியல் கட்சிகள் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதிகள் கொடுக்கின்றன. ஆனால் அங்கு தலை விரித்தாடும் போதைப் பொருள் புழக்கம் குடும்பங்களைச் சிதைத்து இளைஞர்களை பாழாக்கியுள்ளது.
அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைகள் விவசாயத்தை நலிவடையச் செய்துள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலையின்மை, அதிகரித்து வரும் நுகர்வுக் கலாச்சாரம் போன்ற காரணங்கள் பஞ்சாப் இளைஞர்களை மன அழுத்தத்திற்குள் தள்ளுகின்றன.
எல்லைக்கு வெளியிலிருந்தும், பக்கத்து மாநிலங்களிலிருந்தும் எளிதாக கைக்குக் கிடைக்கும் போதைப் பொருட்கள் – வேலையின்மையால் பெருகும் இளைஞர் பட்டாளம், நலிவுற்ற விவசாயம் என பஞ்சாப் மாநிலமும் போதைக்கு அடிமையாக நிற்கிறது. அங்கு கடந்த 20 ஆண்டுகளாக ஆட்சி செய்த மாநில அரசாங்களால் போதைப் பொருள் மாபியா வலைப்பின்னலும் ஒழிக்க முடியாமல் வக்கற்று போய் நிற்கின்றன.
நாட்டில் உள்ள பிற மாநிலங்களைப் போல பஞ்சாப்பிலும் போதைப் பொருளை ஒழிப்பதற்கென சட்டம் & ஒழுங்கு மற்றும் குற்றப் பிரிவு போலீசார் போதாது என தனியான புலனாய்வுப் பிரிவு, விஜிலன்சு படை, போதைப் பொருள் கட்டுப்பாடு பணியகம் (NCB), வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) முதலான துறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற பல்வேறு போதை தடுப்பு பிரிவு அமைப்புகளின் அதிகாரிகள், போதை மருந்து கடத்தியதாக இலட்சக்கணக்கான வழக்குகளை பதிவு செய்கிறார்கள்; கைது நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த 2004-14 ஆம் ஆண்டுகளின் போது 1,73,000 போதைப் பொருள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,95,000 பேர் கைது செய்யப்பட்டனர். மோடி அரசு பதவியேற்ற 2014 ஆம் ஆண்டிலிருந்து 2026 ஆம் ஆண்டு வரை போதைப் பொருள் வழக்கு 8,75,000 ஆக உயர்ந்துள்ளதோடு 10,97,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் தற்போதைய நிலவரத்தின் படியே நாடு முழுவதும் சுமார் 3.96 இலட்சம் போதைப் பொருள் வழக்குகள் நீதிமன்ற விசாரணையின்றி நிலுவையில் உள்ளன. இதில் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் அதிகபட்சமாக 60,000 போதைப் பொருள் கடத்தல் சம்பந்தமான வழக்குகள் விசாரிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன.
இவ்வாறு தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பளிப்பதற்கென ஒன்றிய அரசு கொண்டு வந்த சிறப்பு NDPS (Narcotic Drugs and Psychotropic Substances) நீதிமன்றங்களை பஞ்சாப் மாநிலம் இதுவரை அமைக்காமல் இருக்கிறது. போதை தடுப்பு அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் இலட்சக்கணக்கான பேரின் கைதுகளும், பதிவு செய்யப்படும் வழக்குகளும் பஞ்சாப்பில் போதைப் பொருள் புழக்கத்தை ஒழிக்கப்போவதில்லை.
மும்பையைச் சார்ந்த ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம். 2017-18 ஆம் ஆண்டுகளில் NDPS சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட 10,669 வழக்குகளை ஆய்வு செய்ததில் 97% பேர் அவர்களது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக போதைப் பொருளை வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டனர் என கூறுகிறது.
இப்படி கைது செய்யப்படுவர்கள் பெரும்பாலும் மெக்கானிக், கார் கழுவுபவர், சுமை தூக்கும் கூலித் தொழிலாளி, பழைய துணியை சேகரிப்பவர், ஆட்டோ ஓட்டுநர், டெலிவரி செய்பவர் போன்ற அடித்தட்டு மக்கள் போதை ஒழிப்பு என்ற பெயரில் கைது செய்யப்படுகின்றனர் என அம்பலப்படுத்துகிறது அவ்வறிக்கை.
அடித்தட்டு மக்களை பிடித்து பொய்வழக்கு ஜோடிக்கும் அதிகாரிகள், பொதுமக்கள் சார்பான சாட்சிகளுக்காக சில நபர்களை தயார் செய்து வைத்திருக்கிறார்கள். இரவோடு இரவாக நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பிவிடுகின்றனர்.
பஞ்சாப் மாநில போதை கடத்தல் தடுப்பு பிரிவினரால் கடத்தல் பேர்வழிகள் என்று கைது செய்யப்படுவர்களில் பெரும்பான்மையானவர்கள் ‘போதை மருந்தை புகைக்கும்’ தனிநபர்களே ஆவர் என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.
கைதானவர்களில் முதல் தகவல் அறிக்கைகளை ஆய்வு செய்து பார்த்த போது, இவர்களெல்லாம் கீழ் நிலையில் ஒரு சில கிராம் அளவு மட்டும் போதை மருந்துகளை விநியோகிப்பவர்களாகவோ அல்லது போதை மருந்துக்கு அடிமையானவர்களாகவோ இருக்கிறார்கள். கைதானவர்களிடம் வெறும் ஐந்து கிராமுக்கும் குறைவான போதை மருந்தே (சொந்த பயன்பாட்டுக்கு வைத்திருந்தது) பிடிபட்டுள்ளது.
NDPS சட்டம்- போதை மருந்து தடுப்பு சட்டம் 50-வது பிரிவு, ஒருவர் போதைப் பொருள் வைத்திருந்தார் அல்லது கடத்தினார் என சந்தேகத்துக்குரிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொழுது அரசு உயர் அதிகாரிகள் (ACP, DCP) அல்லது நீதிபதிகளில் ஒருவர் உடன் இருக்க வேண்டும் என்று கூறுகிறது.
பொதுமக்கள் சார்பில் சமூக நலனில் அக்கறையுள்ள ஒருவர் குற்றவாளி என சாட்சியம் அளிக்கும் போதே வழக்குகள் பதிவு செய்ய முடியும் என்கிறது இச்சட்டத்தின் 100 வது பிரிவு. ஆனால் இது போன்ற சட்டங்களை போதை தடுப்பு பிரிவுகள் சிறிதளவும் மதிப்பதில்லை.
அடித்தட்டு மக்களை பொய் வழக்கில் கைது செய்யும் போலீசார், போதைப் பொருள் மாபியா கும்பலையோ அல்லது அதன் தலைவர்களையோ இதுவரை கைது செய்ததாக நாம் கேள்விப்பட்டதில்லை. அப்படியே யாரையாவது கைது செய்தாலும் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி தப்பித்துக் கொள்வதற்கு வேண்டிய உதவிகளையும் செய்து விடுகிறார்கள்.
அனைத்து மட்டத்திலுள்ள போலீஸ் அதிகாரிகளுக்கும் போதை மருந்து கடத்தும் கிரிமினல் மற்றும் மாபியா கும்பலுக்குமான மறைமுக தொடர்பு பஞ்சாப் மாநிலத்தில் அப்பட்டமாக வெளிவந்து கொண்டே இருக்கிறது.
கடந்த ஜூன் 2017 ஆம் ஆண்டு போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பஞ்சாப் போலீஸ் ஆய்வாளர் இந்தர்ஜித் சிங் என்பவரை சிறப்பு அதிரடிப் படை கைது செய்தது என்பதிலிருந்து போதைப் பொருள் புழக்கத்தில் பஞ்சாப் போலீஸின் உடந்தையை புரிந்து கொள்ளலாம். அவரது வீட்டிலேயே பெருமளவு ஹெராயின், சட்டவிரோத ஆயுதங்கள், வெடிமருந்துகள், கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு பணம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
போதைப் பொருட்களை வீட்டில் வைத்திருந்தது, மக்களை பொய்யாக போதைப் பொருள் வழக்கில் சிக்கவைத்தல், தடவியல் மாதிரிகளை தாமதப்படுத்துதல், மற்றும் போதைப் பொருள் வழக்குகளை பயன்படுத்தி பணம் பறித்தல் உட்பட போதைப் பொருள் வழக்குகளை நீர்த்துப் போகச் செய்வதில் இந்தர்ஜித் சிங் ஈடுபட்டதாக அவர் மீது வழக்கு பதியப்பட்டது.
இந்தர்ஜித் சிங்கோடு போதை கடத்தலில் உடந்தையாக இருந்த கூடுதல் இன்ஸ்பெக்டர் ஜெனரல் இராஜ்ஜித் சிங் என்ற உயர் போலீஸ் அதிகாரியோ இச்சம்பவத்திற்கு பின்பு மூன்று ஆண்டுகள் தலைமறைவானார். பஞ்சாப் மாநில அரசு மூன்று நாட்களுக்கு முன்பே இந்த உயர் அதிகாரியையும் கைது செய்திருக்கிறது.
கடந்த வாரம் போதைப் பொருள் கடத்தல் பிரிவின் இன்ஸ்பெக்டரான பல்வீர் சிங் எனும் அதிகாரியின் காரில் இருந்து 3 கிலோ ஹெராயினை பஞ்சாப் போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
இது மட்டுமில்லாமல் போதைப் பொருள் கடத்தலில் பஞ்சாப் போலீஸ் உடந்தையாக இருந்திருக்கிறது என்பதை அம்மாநில முன்னாள் முதல்வரான அமரிந்தர் சிங்கே வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார். அவரது ஆட்சி நடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆண்டு வரை 66 போலீஸ் அதிகாரிகள் மீது போதைப் பொருள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டதோடு 88 போலீசார் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டதாக அமரிந்தர் சிங் கூறுகிறார்.
1985-ல் கடத்தல் கும்பலை பிடிக்கும் போதை கட்டுப்பாடு அமைப்பினருக்கு, பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் மதிப்பில் 20% தொகை வெகுமதியாக அரசு வழங்கும் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தை புதுப்பித்து ஆம் ஆத்மி அரசு ஒரு புதிய சட்டத்தை அங்கு கடந்த 2021-ல் அறிமுகப்படுத்தியது.
இதன் படி பஞ்சாப்பில் போதைக் கடத்தல் கும்பலிடமிருந்து ஒரு கிலோ ஹெராயினை பறிமுதல் செய்யும் போதை கட்டுப்பாடு பிரிவினருக்கு ரூ 1.2 இலட்சம் தொகையை வெகுமதியாக அரசு அளிக்கும். இச்சட்டத்தின் படி பறிமுதல் செய்யப்படும் ஹெராயின் தரத்தை உறுதி செய்வதற்காக அதில் 90% அளவு டயாசின் மார்பின் கலந்திருக்க வேண்டும்.
கடந்த 2025-ல் ஹெராயின் போதைப் பொருளின் பறிமுதல் செய்வதற்கான வெகுமதியை பெற அதன் தரத்தை பரிசோதிக்க வேண்டிய தேவையில்லை என இச்சட்டத்தை ஆம் ஆத்மி மாநில அரசு திருத்தியது.
அரசு அறிவிக்கும் வெகுமதி தொகையை சுருட்டுவதற்காக போதை கடத்தல் கும்பலை பிடிப்பதற்கு உதவி என தனிப்பட்ட முறையில் இரகசியமாக ஆள்காட்டிகளை அதிகாரிகள் அமர்த்த முடியும். இப்படி அரசின் அங்கீகாரத்தோடு அமர்த்தப்படும் ஆள்காட்டிகள், கடத்தல் கும்பலை பிடிப்பதற்காகப் பயன்படாமல் போதை மருந்து கடத்தல் கும்பலோடு கூட்டுவைத்து கொள்ளையடிப்பதற்கும் பேரம் பேசுவதற்கும் இடைத் தரகர்களாக பயன்படுத்தப்பட்டனர் என்பதற்கு சாட்சியாகத் தான் பஞ்சாப் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது இருக்கிறது.
போதை மருந்து கடத்தல் கும்பலிடமிருந்து கிலோ கணக்கில் போதைப் பொருளை பெற்று அரசுக்கு கணக்கு காட்டி வெகுமதி தொகையைப் பெற்றுக் கொண்ட பின் அக்கும்பலிடமே திருப்பி கொடுத்து விடுவதற்கும் இது போன்ற சட்டங்கள் பாதை அமைத்து கொடுக்கின்றன என்றால் அது மிகையல்ல.
அதிகார வர்க்கம் இப்படி போதைப் பொருள் புழக்கத்திற்கு உடந்தையாக இருக்கிறது என்றால் போதைப் பொருளை ஒழிப்போம் என ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி அரசோ, தம் ஆட்சியின் பெயருக்கு களங்கம் வந்து விடக் கூடாது என்பதற்காக போதைப் பொருள் ஒழிப்பிற்காக குரல் கொடுப்பவர்களை ஒடுக்கும் வேலையில் இறங்கியிருக்கிறது.
ஆம் ஆத்மி மாநில அரசின் நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் கூலித் தொழிலாளியான குல்சார் சிங் என்பவர், தனது கிராமத்தில் ஹெராயின் அதிகளவில் கிடைப்பதனால் தனது மகன் மற்றும் அவர் வசிக்கும் கிராமத்தின் இளைஞர்கள் போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டனர். இதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து அவர் வசிக்கும் கிராமத்தை சார்ந்த ஆம் ஆத்மி பஞ்சாயத்து உறுப்பினர்கள், கூட்டத்தில் பேசியதற்காக அமைச்சரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவரை மிரட்டியிருக்கின்றனர். இதனால் மனமுடைந்த குல்சார் சிங் தனது இறப்புக்கு பஞ்சாயத்து தலைவர்களும், ஆம் ஆத்மி நிதியமைச்சருமே காரணம் என வீடியோவில் பதிவு செய்து விட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதே போல பஞ்சாப் முதல்வர் பகவந்த மான் கலந்து கொண்ட பொதுக்கூட்டமொன்றில் போதைப் பொருள் அச்சுறுத்தலை ஆம் ஆத்மி அரசு கையாளும் விதத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒருவர் கருப்புக் கொடி காட்டினார் என்பதற்காக சித்திரவதை செய்யப்பட்டுள்ளார் என ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் செய்தி வெளியிட்டுள்ளது.
சித்தா எனும் ஒரு பத்திரிகையாளர் ஆம் ஆத்மி அமைச்சரான குட்டியான் என்பவரின் சொந்த கிராமத்திலேயே ஹெராயினும், போதை ஊசிகளும் அதிகமாக விற்கப்படுகின்றன என்பதை அம்பலப்படுத்தும் பொருட்டு காணொளி ஒன்றை வெளியிட்டார். அக்காணொளியில் சித்து அம்பலப்படுத்திய ஒரு சிறு போதைப் பொருள் வியாபாரி ஒருவர் சில நாட்களுக்கு பின்பு தற்கொலை செய்து கொண்டார். இத்தற்கொலையை தூண்டியதாக பத்திரிகையாளர் சித்துவின் மீது வழக்கு பதிவு செய்து அரசு அவரை சிறையில் அடைத்திருக்கிறது ஆம் ஆத்மி அரசு.
இவ்வாறு பஞ்சாப்பில் தற்போது ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி அரசு போதைப் பொருள் புழக்கத்தையும், அதன் மூலம் இளைஞர்கள் அடிமையாகி வருவது பற்றிய புள்ளி விவரங்களை மறைத்து வருகிறது. இதை வெளிக் கொண்டு வருபவர்களை கடுமையாக ஒடுக்கும் வேலையில் இறங்கியிருக்கிறது.
போதைப் பொருள் போன்ற சமூக நோய்களின் மூலக் கிருமியே ஆளும் வர்க்க கும்பல் தான். இதை மறைப்பதற்காகவும், அதிகார வர்க்கம் மேலும் ஊதிக் கொழுப்பதற்காகவுமே ஆட்சியாளர்கள் பல போலீஸ்ப் படைப் பிரிவுகளையும் பல சட்டங்களையும் உருவாக்குகிறார்கள். அதிகார வர்க்கமும் தம் பங்கிற்கு ஒரு புறம் மாபியாக்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு மறுபுறம் போதை மருந்தை ஒழித்து விடுவதாகவும் கிரிமினல் கும்பலை கூண்டோடு பிடித்துவிட்டதாகவும் கடந்த 20 ஆண்டுகளாக பஞ்சாப் மக்களை ஏய்த்து வருகிறார்கள்.
போதைக்கு ஒரு மாநிலத்தையே ஆழ்த்தி வைத்திருப்பது தேர்தல் வெற்றிகளுக்கு உத்தரவாதமளிக்கும் வழிமுறையாக அரசியல் கட்சிகளுக்கு இருக்கிறது. காவிப் பாசிஸ்டுகளும் மதப் போதையோடு தற்போது நேரடியான பஞ்சாப் இளைஞர்களின் போதைப் பழக்கத்தை தனது பிரச்சார யுக்தியாக கையில் எடுத்திருக்கிறார்கள்.
போதைப் பொருள் புழக்கத்தை ஓட்டுக் கட்சிகள் ஒழிப்பார்கள் என நம்பியதால் பஞ்சாப்பின் ஒரு தலைமுறையே போதைக்கு அடிமையாகிய அவலநிலையே மிஞ்சி நிற்கிறது. பஞ்சாப்பில் போதைப் பொருளை ஒழிக்க வேண்டுமானால் அதன் மூலக் கிருமியான ஆளும் வர்க்க கும்பலை முதலில் பஞ்சாப் மக்கள் ஒழிக்க வேண்டும்!
- தாமிரபரணி




