கோடீஸ்வரர்களின் களமாக மாறிய தேர்தல் களம்!

அக்டோபர் 4, 2026
இந்திய தேர்தல் ஜனநாயகத்தில் வேட்பாளர்களே முதலீட்டாளர்கள். சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல் என்பது ஒருபணம் முதலீடு செய்து அபரிதிமாக இலாபம் ஈட்டும் ஒரு தொழில். இது தான் 75 ஆண்டுகால இந்திய தேர்தல் ஜனநாயகம் கண்ட வளர்ச்சி.  இந்த தேர்தல் ஜனநாயகத்தால் மக்களுக்கு மிஞ்சியது எது?

தேர்தல்கள் மக்கள் பங்கேற்கும் ஜனநாயகத் திருவிழா” என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போதும் இந்த ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்க வருமாறு மக்களிடம் அது பிரச்சாரம் செய்கிறது. பங்கேற்பு என்றால் வெறுமனே தேர்தலில் ஓட்டுப்போடுவது மட்டும்தானா, அதில் போட்டியிடுவது இல்லையா என்று கேட்டால், அதுதான் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாமே என்று பதிலளிக்கிறார்கள்.

ஆனால் இன்றைக்கு இந்தியத் தேர்தல் களம் என்பது, பெரும் கோடீஸ்வரர்கள் மட்டுமே போட்டியிடக் கூடிய மிகப்பெரிய தொழிலாக மாறியிருக்கிறது. இந்தத் தொழிலில் யாரால் அதிக மூலதனம் போட்டு, போட்டியாளர்களைப் பின்னுக்குத் தள்ள முடியுமோ அவர்களால் மட்டுமே வாக்காளர்களைச் சென்றடைய முடியும் என்ற நிலை இருக்கிறது. இதனை நிரூபிக்கும் வகையில், தேர்தல் செலவுக் கணக்கு குறித்த ஆய்வு ஒன்றை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏ.டி.ஆர்.) வெளியிட்டிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்னதாக நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் அரசியல் கட்சிகள் செய்த செலவுகள், வெற்றி பெற்ற வேட்பாளர்கள் செய்த செலவுகள் குறித்த புள்ளிவிவரங்களை தேர்தல் ஆணையத்தின் தரவுகளில் இருந்து சேகரித்து இந்த ஆய்வினை ஏ.டி.ஆர். அமைப்பு நடத்தியிருக்கிறது.

அரசியல் கட்சிகளில் பாஜக தான் மிக அதிகமாக 529.38 கோடி ரூபாய் செலவிட்டிருக்கிறது. அதிலும் அதிகபட்சமாக மேற்கு வங்கத் தேர்தலுக்கு மட்டும் 286.99 கோடி ரூபாயைச் செலவு செய்திருக்கிறது. அதாவது மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் அளவிற்கு பாஜக செலவு செய்திருக்கிறது. இது தவிற பாஜக கட்சியின் வேட்பாளர்கள் தனியாக ஒவ்வொருவரும் 40 இலட்சம் ரூபாய்வரைச் செலவு செய்திருக்கின்றனர்.

பாஜகவிற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி இந்த ஐந்து மாநிலங்களில் 248.55 கோடி ரூபாயும், திமுக 197.85 கோடி ரூபாயும், அதிமுக 112.40 கோடி ரூபாயும் செலவளித்திருக்கின்றனர். ஏழை, எளிய உழைக்கும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 39.04 கோடி ரூபாயைத் தேர்தலுக்காகச் செலவழித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக கேரளாவில் மட்டும் 29 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்திருக்கிறது.

பொது பிரச்சாரம், வேட்பாளர்களுக்கான கட்சியின் செலவுகள், ஊடகம், நட்சத்திரப் பேச்சாளர்களுக்கான செலவுகள் என இவற்றுக்குத்தான் ஏறக்குறைய எல்லாக் கட்சிகளும் செலவு செய்திருக்கின்றன. பெரிய அரசியல் கட்சிகள் அனைத்துமே ஏதாவதொரு தேர்தல் உத்தி மற்றும் அரசியல் ஆலோசனை வழங்கும் நிறுவனத்திற்கு பெருமளவில் பணம் கொடுத்திருக்கின்றன. தமிழ்நாட்டைப் பொருத்தவரை திமுக பென் (Populus Empowerment Network) நிறுவனத்திற்கு 65.28 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது. அதிமுக பிரமாண்யா ஸ்ட்ராடஜி கன்சல்டிங் நிறுவனத்திற்கு 104 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது.

அதே போல டிஜிடல் விளம்பரங்களுக்கும் அதிக அளவில் பணம் செலவழிக்கப்பட்டிருக்கிறது. மேற்கு வங்கத்தில் மட்டும் கூகுள் விளம்பரத்திற்காக 24 கோடி ரூபாயையும், பேஸ்புக் நிறுவன விளம்பரத்திற்காக 5 கோடி ரூபாயையும் பாஜக கொடுத்திருக்கிறது. மற்ற கட்சிகள் பாஜக அளவிற்கு இல்லையென்றாலும் தங்களது சக்திக்கு ஏற்பல பல கோடிகளைக் கொடுத்து டிஜிட்டல் விளம்பரங்களைப் பயன்படுத்தியிருக்கின்றன. இதற்கு அடுத்த படியாகத்தான் நட்சத்திரப் பேச்சாளர்களுக்கான செலவுகள், ரோடு ஷோக்களுக்கான செலவுகள் என அடுத்தடுத்த வகையினங்கள் வருகின்றன.

ஒரு காலத்தில் நவீன பிரச்சார வடிவமாக கருதப்பட்ட தானியங்கி தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் அனுப்புவது எல்லாம் இன்றைக்குக் கட்டாயம் செய்ய வேண்டிய செலவுகளாக மாறியிருக்கின்றன. இன்றைக்கு எல்லா ஓட்டுக் கட்சிகளும் தங்களுக்கென்று தனியாகவோ அல்லது ஆதரவாகவோ ஒன்றுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிறுவனங்களை வைத்திருகின்றன. அந்த நிறுவனங்கள் மூலம் 24 மணி நேரமும் பிரச்சாரத்தை வீடுகளின் வரவேற்பறை வரை கொண்டு செல்கின்றனர்.

தற்போது டிரெண்டிங்கில் இருப்பது, சமூக ஊடக இன்ப்ளூயன்சர்களை வைத்துக் கொண்டு நேரடியாகவும், மறைமுகமாகவும் பிரச்சாரம் செய்வது. யூடியூப் சேனல்கள் மூலம் விவாதங்கள் நடத்துவது. இவற்றிற்கு அரசியல் கட்சிகள் கொடுக்கும் பணம் என்பது தேர்தல் செலவுக் கணக்கில் வராது தனியாக கொடுக்கப்படுகின்றன.

இவையெல்லாம் அரசியல் கட்சிகள் பொதுவாகவும், வேட்பாளர்களுக்காகவும் செய்கின்ற செலவுகள். இதையெல்லாம் தாண்டித்தான் ஒவ்வொரு வேட்பாளரும் தனக்கென தனியாகச் செலவு செய்கின்றனர். வேட்பாளர்களது அன்றாடப் பிரச்சாரகளைத் திட்டமிடுவது தொடங்கி பிரச்சாரம் செய்ய ஆட்களை அமர்த்துவது, மேளதாளங்களையும், வாகனங்களையும் ஏற்பாடு செய்வது, நோட்டீசு அச்சடிப்பது, உணவு ஏற்பாடு என சகல வேலைகளையும் செய்வதற்குத் தனியாக பிரச்சார மேலாண்மை நிறுவனங்களை அமர்த்திக் கொள்கின்றனர்.

இவ்வளவு கோடிகள் செலவிடப்படும் ஒரு தேர்தல் களத்தில், எந்தவொரு சாதாரண மனிதரும் வெறும் சட்டபூர்வமான தகுதியை வைத்துக்கொண்டு போட்டியிட்டு மக்களைச் சென்றடைய முடியுமா.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்த இந்தியக் குடிமகன், சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பெற்றிருந்தால் தேர்தலில் போட்டியிடலாம். இதன் மூலம் தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்ட உரிமை அனைவருக்கும் சமமாக இருப்பது போலத் தெரிகிறது. ஆனால் அந்த உரிமையை நடைமுறையில் பயன்படுத்துவதற்கு தேவையான பொருளாதார வாய்ப்பு அனைவருக்கும் சமமாக இல்லை.

ஒரு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தனது பெயரை வேட்பாளர் பட்டியலில் பதிவு செய்துவிட்டால் மட்டும் வாக்காளர்களிடம் சென்று சேர முடியாது. அவருடைய பெயரையும் சின்னத்தையும் வாக்காளர்களுக்கு தொடர்ந்து நினைவூட்ட வேண்டும். தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்ய வேண்டும். நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பிரச்சாரப் பணியாளர்களை ஒருங்கிணைக்க வேண்டும். வாகனங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். துண்டறிக்கைகள், பதாகைகள், விளம்பரங்கள் ஆகியவற்றை வெளியிட வேண்டும். பொதுக்கூட்டங்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள், ஊர்வலங்கள் நடத்த வேண்டும். ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் தனது பிரச்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும்.

இன்றைய தேர்தலில் இதோடு விஷயம் முடிவதில்லை. வாக்காளர்களின் மனநிலையை ஆய்வு செய்வதற்கும், எந்தப் பகுதியில் எந்தப் பிரச்சினையை முன்னிறுத்துவது என்பதைத் தீர்மானிப்பதற்கும், சமூக ஊடகப் பிரச்சாரத்தை வடிவமைப்பதற்கும், விளம்பரங்களை உருவாக்குவதற்கும், தொலைக்காட்சி மற்றும் இணைய ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கும் தனித்தனி நிறுவனங்களே களத்தில் இறங்கியுள்ளன. தேர்தல் பிரச்சாரம் என்பது ஒரு முழுமையான தொழில்முறை மேலாண்மைத் துறையாக மாறியுள்ளது.

இவையெல்லாம் தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகளும் அதன் வேட்பாளர்களும் தாக்கல் செய்திருக்கும் செலவுக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட புள்ளி விவரங்கள். இவை தவிர கணக்கில் கொண்டுவராமல் இவர்கள் செய்யும் செலவுகள் இன்னும் பல கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும். வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்காத அரசியல் கட்சிகளே இல்லை எனும் அளவிற்கு ஏறக்குறைய எல்லா அரசியல் கட்சிகளும் ஓட்டுக்குப் பணம் கொடுக்கின்றனர். அதையும் கணக்கில் கொண்டால் மொத்த தேர்தல் செலவு என்பது பல ஆயிரங்களைத் தாண்டிவிடும்.

வழமையான பிரச்சார வடிவங்களான சுவரெழுத்து, போஸ்டர் போன்றவற்றைத் தடைசெய்து சாமானியர்களுக்கு பிரச்சாரம் செய்ய இருந்த ஒரு சில வாய்ப்புகளையும் தேர்தல் ஆணயம் ஏற்கெனவே பிடுங்கிவிட்டது. இந்தச் சூழலில் ஒரு தொழிலாளியோ, சிறு வியாபாரியோ, விவசாயியோ, ஆசிரியரோ அல்லது எந்தவொரு சாதாரண குடிமகனோ தனது சொந்தப் பணத்தில் இதே அளவிலான பிரச்சாரத்தை நடத்த முடியுமா? சட்டம் அவருக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி அளித்தாலும், நடைமுறையில் இந்தப் போட்டியில் நிலைத்து நிற்பதற்குத் தேவையான பணமும் அமைப்பும் இல்லாமல் இப்படி ஒரு வேட்பாளர் இருக்கிறார் என்றே வாக்காளர்களுக்குத் தெரியும் படி செய்ய முடியாது.

தற்போது இந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினர்களகப் பதவியேற்றிருப்பவர்களில் 600 பேர் அதாவது சுமார் 74 சதவீதம்பேர் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளை வைத்திருப்பதாகத் தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் 83 சதவீதமும், அசாமில் 85 சதவீதமும், கேரளாவில் 69 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 61 சதவீதமும், புதுச்சேரியில் 97 சதவீதமும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.

மொத்தத்தில் இந்தத் தேர்தல் முறையும், அதனைப் பயன்படுத்தி உருவாக்கப்படுவதாக கூறப்படும் இந்த ‘ஜனநாயக’ அமைப்பும், கோடீஸ்வரர்களால், கோடீஸ்வரர்களுக்காக, கோடீஸ்வரர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்பாக மாறியிருக்கின்றது.

  • அறிவு

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன