ஓசூர் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வலியுறுத்தி
கண்டன ஆர்ப்பாட்டம்
அன்பார்ந்த தொழிலாளர்களே,
ஒவ்வொரு தொழிற்சாலையிலும் நேரடி உற்பத்தியில் ஈடுபட்டு இரவு பகல் பாராது தங்கள் வியர்வையைச் சிந்தி உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள்.
தொழிற்சாலையின் தினசரி உற்பத்தி இலக்குகளை எட்டுவதிலும், நிறுவனத்தின் லாபத்தைப் பெருக்குவதிலும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு இணையான கடின உழைப்பை ஒப்பந்தத் தொழிலாளர்கள் செலுத்துகின்றனர்.
ஆனால், ஒப்பந்தத் தொழிலாளர்களிடம் உழைப்பைச் சுரண்டிவிட்டு நிரந்தர தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் எதுவும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. குறிப்பாக, தீபாவளிக்கு நிரந்தர தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் போனஸ் எந்த நிறுவனத்திலும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
போனஸ் சட்டம் 1965 (Payment of Bonus Act, 1965) மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் (முறைப்படுத்துதல் மற்றும் ஒழிப்பு) சட்டத்தின்படி, தொழிற்சாலைகளில் தொடர்ச்சியாக பணிபுரியும் அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் போனஸ் பெற முழு உரிமையுள்ளது. ஆனால், ஒப்பந்த தொழிலாளர்களை நிறுவனங்களுக்கு சப்ளை செய்கின்ற இடைத்தரகர்களும் நிர்வாகமும் இந்த உரிமையை மறுத்து வருகின்றனர்.
உழைப்புக்கேற்ற ஊதியம் கூட இல்லாமல் குறைந்த கூலிக்கு பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் தொகையும் வழங்க மறுப்பது சட்டவிரோதச் செயலாகும்.
தொழிற்சாலை நிர்வாகங்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களின் போனஸ் உரிமையை மறுக்கும் போது, தொழிலாளர் நலனைக் காக்க வேண்டிய தமிழ்நாடு அரசோ கண்டும் காணாமல் வேடிக்கைப் பார்க்கிறது.
ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டிய தொழிலாளர் ஆய்வாளர்களும் (Labor Inspectors) தங்கள் கடமை மறந்து தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர்
எனவே, தமிழக அரசு நேரடியாக தலையிட்டு மாவட்ட நிர்வாகமும் தொழிலாளர் ஆணையகமும் இணைந்து அனைத்துத் தொழிற்சாலைகளிலும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்க உத்தரவிட வேண்டும்.
தீபாவளிப் பண்டிகைக்கு முன்பாகவே இடைத்தரகர்களின் தலையீடின்றி போனஸ் தொகையை நேரடியாகத் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்.
போனஸ் வழங்க மறுக்கும் தொழிற்சாலை நிர்வாகங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது தொழிலாளர் சட்டங்களின் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஒப்பந்தத் தொழிலாளர்களின் நியாயமான உரிமைக்குக் குரல் கொடுப்போம்!
- ஒப்பந்தத் தொழிலாளர்களின் போனஸ் உரிமையைப் பறிக்கும் முதலாளித்துவத்திற்கு எதிராக அணிதிரள்வோம் !
📢 புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
📞 செல்: 9025213374 – ஓசூர்
📢 தமிழகத் தொழிலாளர் முன்னணி
📞 செல்: 9095513595 – ஓசூர்


