இராயக்கோட்டை புரட்சிகர மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்!

இராயக்கோட்டை பேருந்து நிலையத்தை போர்கால அடிப்படையில் சீர்படுத்திக்கொடு! அரசு மருத்துவமனையை 24 மணி நேரமும் இயங்கும் வகையில் தரம் உயர்த்த நடவடிக்கை எடு!  என்கிற தலைப்பில் 25-09-2026. வெள்ளிக்கிழமை அன்று இராயக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் புரட்சிகர மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இராயக்கோட்டை பகுதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம சந்தை பகுதியாக இருந்து தற்போது ஒரு நகரமாக உருவெடுத்து வளர்ந்து வருகின்றது. உள்ளூர் விவசாயிகளின் காய்கறிகள், பூக்கள் மற்றும் தக்காளிக்கான தனித்தனி சந்தைகள் இருப்பதால் எந்த நேரமும் போக்குவரத்து நிறைந்திருக்கும் பகுதியாக வளர்ந்துள்ளது. மேலும் அண்டை மாநிலம் தொடங்கி ஒசூரில் உள்ள பெரும் தொழிற்சாலைக்காக செல்லும் பேருந்துகள், கனரக வாகனங்கள் இராயக்கோட்டை வழியாக செல்கின்றன.

இது மட்டுமின்றி அரசு பேருந்துகள் தொடங்கி மற்ற தனியார் பேருந்துகள் வரை நூற்றுக்கணக்கான பேருந்துகள் இராயக்கோட்டை பேருந்து நிலையத்திற்கு தினமும் வந்து செல்கின்றன. குறிப்பாக அண்டை மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகள் இராயக்கோட்டை நகருக்குள் வந்து செல்கின்றன. டாடா போன்ற பெரிய அளவிலான தொழிற்சாலைகள் இராயக்கோட்டையை சுற்றி தற்போது உருவாகி இருப்பதால் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பேருந்துகளில் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு டாடா கம்பெனி வாகனங்களும் வந்து செல்கின்றன. இதனால் பெரும் போக்குவரத்து நெரிசல் எப்போதும் அதிகமாக உள்ளது. மேலும் குண்டும் குழியுமான சாலையாக இருப்பதால் இதுவும் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு காரணமாக உள்ளது.

இவ்வளவு மக்கள் நடமாடும் இப்பகுதியில் உள்ள பேருந்து நிலையமோ அல்லது இங்கு இருக்கும் அரசு மருத்துவமனையோ இங்கிருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு இல்லை. பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர்வதற்கான போதிய இடம் இல்லை. தூய்மையான சிறுநீர் கழிப்பிடம் இல்லை.

இவற்றை கண்டித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துத்தான் இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இராயக்கோட்டை போலீசு, போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதை காரணம் காட்டி அனுமதி மறுத்தது. பின்னர் உயர்நீதி மன்றம் சென்று அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சிகர மக்கள் அதிகாரத்தின் பகுதி செயலாளர் தோழர் தூருவாசன் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமை உரையில் இராயக்கோட்டையில் பல பகுதி பிரச்சினைகள் உள்ளன. கிராமங்களிலிருந்து நகரத்திற்கு வரும் பல சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. 1980-ல் கட்டப்பட்ட அரசு மருத்துவமனை இன்றுவரை தரம் உயர்த்தப்படவில்லை. 8 மணி நேரம்தான் அரசு மருத்துவமனை இயங்குகிறது என்றும் ஆனால் இவற்றை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த போலீசு அனுமதி மறுக்கிறது. ஆனால் சமீபத்தில் தொடங்கப்பட்ட டாடா கம்பெனிக்கு நான்கு வழி சாலை அமைத்துக்கொடுத்துள்ளது. இது மக்களுக்கான ஆட்சியா? முதலாளிகளுக்கான ஆட்சியா? என்று கேள்வி எழுப்பினார்.

புரட்சிகர மக்கள் அதிகாரத்தின் வழக்கறிஞர் தோழர் முரளி பேசுகையில் இராயக்கோட்டை என்ன கிராமமா? தாலுக்கா அளவில் வளர்ச்சி பெற்ற பகுதி ஆகும். பல இலட்சம் மக்கள் இங்கு வசிக்கின்றனர். ஆனால் மருத்துவம் எட்டாக்கணியாகவே உள்ளது. ஒரு விபத்து ஏற்பட்டால் 20 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள பாலக்கோடு அல்லது ஓசூர் அல்லது கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களுக்குத்தான் செல்ல வேண்டும் என்ற அவல நிலையை விளக்கி பேசிய அவர் இங்குள்ள ஓட்டுக்கட்சிகள், அரசு எந்திரம் என்ன செய்துகொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.

இலண்டனுக்கு அஜித்தின் கார் பந்தயத்தை பார்க்கவும் தனது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பல இலட்சங்களை செலவு செய்யும் முதலமைச்சர் விஜய் இராயக்கோட்டை மக்களின் அடிப்படை பிரச்சினைகளை பற்றி துளியும் அக்கறை இன்றி உள்ளார் என்று பேசினார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்த டாடா கம்பெனிக்கு நான்கு வழிச்சாலை போட்டுக்கொடுக்கும் ஆளும் வர்க்கம், நாம் கோரிக்கை வைத்தால் அப்படியொரு திட்டம் இல்லை என்று கைவிரிக்கிறது. டாடா மட்டும்தான் வரி கட்டுகிறானா? விவசாயிகளான நாங்கள் வரி கட்டவில்லையா என்று கேள்வி எழுப்பினார். இங்குள்ள வனத்துறையினர் வனப்பகுதியில் இப்போது கேமராவை வைத்து விவசாயிகளை ஆடு மாடு மேய்க்கிறார்களா என்று கண்காணிக்கின்றனர். இந்த வனத்தை உருவாக்கிய விவசாயிகளை கண்காணிக்க நீ யார் என்றும் கேள்வி எழுப்பினார்.

வாழும் உரிமை பேப்பரில் மட்டும் இருக்க கூடாது. பூமியில் இருக்க வேண்டும் என்று ஒரு நீதிபதி பேசியதை உதாரணம் காட்டி மக்கள் கண்ணியமாக வாழ்வதற்கு உரிமை உள்ளது. அதை அரசுகள் பாதுகாக்க வேண்டும் என்றார்.

ஒரு வாரத்திற்கு முன்னர் அட்டப்பள்ளம் என்ற கிராமத்தில் ஒரு கர்ப்பிணி பெண்ணை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல குண்டும் குழியுமான சாலை காரணமாக அரசு ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் அந்த கர்ப்பிணி பெண் இறந்துவிட்டார். சுற்றுவட்டார கிராம மக்கள் ஒன்று சேர்ந்து சாலை மறியல் செய்ததும் எஸ்பி, கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அப்பகுதிக்கு வந்து உடனடியாக சாலையை சரிசெய்வதாக எழுதி கொடுத்துவிட்டு சென்றனர். அந்த குடும்பத்திற்கு உரிய நட்ட ஈடும் கொடுத்தனர். ஆகவே, இது போன்ற போராட்டங்கள்தான் நம் கோரிக்கையை நிறைவேற்ற தீர்வு தரும் என்றார்.

அடுத்து பேசிய புஜதொமு-வின் இணை செயலாளர் சீனி இரவிச்சந்திரன் டிஜிட்டல் இந்தியா என்று மார்தட்டிக்கொள்கிறார்கள். ஆனால் இங்கு எந்த அடிப்படை வசதியும் இல்லை. கார்ப்பரேட் முதலாளிகளின் மேட்டுக்குடி மக்களின் வளர்ச்சியைத்தான் வளர்ச்சி என்று கூவுகிறார்கள் என்று அம்பலப்படுத்தினார். மத்திய கல்வி அமைச்சரை மக்கள் போராடி விரட்டியடித்ததைப் போல் போராட்டம் நடத்துவது ஒன்றே தீர்வு என்றார்.

மே 17 இயக்கத்தின் பகுதி தோழர் மோகன்ராஜ் நம்மை போன்ற இயக்கங்களும் அமைப்புகளும்தான் மக்கள் பிரச்சினைகளை பேசிக்கொண்டிருக்கிறோம். எந்த ஓட்டுக்கட்சிகளும் இதை பேசுவதில்லை. இதற்காக போராடுவதில்லை. ஆகவே பொதுமக்கள் இந்த கோரிக்கைகளை ஆதரித்து களத்தில் இறங்க வேண்டும் என்றார்.

இறுதியாக பேசிய புரட்சிகர மக்கள் அதிகாரத்தின் மாநில இணை செயலாளர் தோழர் கோபிநாத் அவர்கள், இப்பகுதியில் பிரசுரத்தில் குறிப்பிட்ட இவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரினால் போலீசு அனுமதி மறுக்கிறது. நம்மிடம் ஆதார் அட்டை கேட்கிறது. எதற்கு ஆதார் அட்டை? மேட்ரிமனி தளமா நடத்துகிறாய் என்றும் மக்கள் பிரச்சினையை தீர்க்க துப்பில்லை, இதில் பட்டினப்பாக்கம் மக்களை வெளியேற்றிவிட்டு 1200 கோடியில் புதிய தலைமை செயலகம் கட்டுவது ஒரு கேடா என்றும் அம்பலப்படுத்தினார்.

ஊழல் செய்வதற்கும் கார்ப்பரேட் கொள்ளைக்குமே பல திட்டங்களை கொண்டுவருகிறது விஜய் அரசு என்று அம்பலப்படுத்தினார். பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுகிறோம் என்று மார்தட்டிக்கொள்ளும் விஜய் அரசு அதற்காக கையகப்படுத்திய நிலத்தை விவசாயிகளிடம் ஒப்படைக்காமல் சிப்காட் அமைக்க போகிறோம் என்று கூறுகிறது என்று அம்பலப்படுத்தினார்.

இவ்வாறு ஊழல் செய்யவும் ஊதாரித்தனமான திட்டங்களுக்கும் வாரி இறைக்கும் ஆட்சியாளர்கள் மக்களின் அடிப்படை தேவைகளுக்கு கவனம் கொடுப்பதில்லை. உயர் நீதி மன்றத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி பெற்ற பிறகு பிடிஓ அதிகாரி போனில் தொடர்பு கொண்டு பேருந்து நிலையத்திற்கும் அரசு மருத்துவமனைக்கும் 49 இலட்சம் இப்போது உடனே ஒதுக்கியுள்ளோம். ஆகவே ஆர்ப்பாட்டத்தை நிறுத்த முடியுமா என்று கேட்கிறார். ஆகவே, போராடினால்தான் அரசு பணிகிறது என்று அம்பலப்படுத்தினார். இந்த கோரிக்கைகளை அரசு அதிகாரிகள் நிறைவேற்றவில்லை என்றால் அடுத்தகட்ட போராட்டத்தை அறிவிப்போம் என்று எச்சரித்தார்.

இறுதியாக தோழர் பிரசாத் நன்றியுரை ஆற்றினார்.

பகுதி பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை வெகுவாக சுற்றிநின்று கவனித்தனர். பகுதி மக்களிடம் இந்த ஆர்ப்பாட்டம் வெகுவாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படிக்கு
தோழர் தூருவாசன்
பகுதி செயலாளர்
புரட்சிகர மக்கள் அதிகாரம்
இராயக்கோட்டை

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன