மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்ற பெயரில்
என்.ஆர்.சி.க்கான தரவுகளைத் திரட்டும் மோடி அரசு!
ஒரு நாட்டில் எவ்வளவு மக்கள் வாழ்கிறார்கள், அவர்களின் வயது, பாலினம், கல்வி, தொழில், வீட்டு வசதி, சமூகப் பின்னணி என்ன? இவற்றைத் தெரிந்துகொள்வதற்காக நடத்தப்படுவதுதான் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு (Census).
இந்தியாவில் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய சென்சஸ், கொரோனா பெருந்தொற்றின் காரணமாக 2021-ல் நடைபெறவில்லை. தற்போது 2027-ம் ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக வீடுகள் மற்றும் வீட்டு வசதிகள் குறித்த கணக்கெடுப்பு; இரண்டாவது கட்டமாக ஒவ்வொரு தனிநபர் குறித்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.
ஆனால் இந்த சென்சஸ் கேள்வித்தாளில் இடம்பெற்றுள்ள சில புதிய கேள்விகள், இது வெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பா அல்லது எதிர்காலத்தில் குடியுரிமையைத் தீர்மானிப்பதற்கான மிகப்பெரிய தரவுத்தளத்தை உருவாக்கும் நடவடிக்கையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளன.
ஏனெனில் கடந்த பத்து பன்னிரெண்டு ஆண்டுகளாக இந்தியாவில் குடியுரிமை தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களையும், என்.பி.ஆர்., என்.ஆர்.சி. தொடர்பான அரசின் நடவடிக்கைகளையும் பின்னோக்கிப் பார்த்தால், இந்த அச்சத்திற்குப் பின்னால் காவி பாசிஸ்டுகள் இதனை எவ்வாறாகினும் நிறைவேற்றிட வேண்டும் எனத் தொடர்ந்து முயன்று வருவது தெளிவாகத் தெரியும்.
இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றத் துடிக்கும் காவி பாசிஸ்டுகள், அதற்காக அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் தங்களது நிகழ்ச்சி நிரலில் இருந்து ஒருபோது பின்வாங்குவதில்லை. காவி பாசிஸ்டுகளின் திட்டங்களுக்கு எதிராக, மக்கள் போராட்டங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தினால் ஒருவேளை அவர்கள் தற்காலிகமாகப் பின்வாங்க நேரிட்டாலும், தங்களது நோக்கத்தை வேறு வகையில் புறக்கடை வழியாக எப்படியாவது நிறைவேற்றிட அவர்கள் தொடர்ந்து முயன்று கொண்டே இருக்கிறார்கள்.
மோடி அரசின் மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக ஓராண்டுக்கும் மேலாக தலைநகர் தில்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் நடத்திய மாபெரும் போராட்டத்தின் காரணமாக மூன்று சட்டங்களையும் கைவிடுவதாக அறிவித்தாலும் அதனை பல்வேறு வகையில் சட்டத்திருத்தங்களாக, அரசாணைகளாக நடைமுறைப்படுத்தி வருவதையும் அதற்கு எதிராக விவசாய சங்கங்கள் தொடர்ந்து போராடி வருவதையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
சிறுபான்மையினரை அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக மாற்றும் நோக்கில் அவர்களது குடியுரிமை என்நேரமும் பரிக்கபடலாம் என்ற அச்சத்தில் அவர்களை நிரந்தரமாக வைத்திருக்க வேண்டும் என்ற காவி பாசிஸ்டுகளின் அஜண்டாவினை நிறைவேற்றுவதற்காக கொண்டு வரப்பட்டதுதான் தேசிய குடிமக்கள் பதிவேடு எனும் என்.ஆர்.சி.
என்.ஆர்.சி என்பது இந்தியாவில் வசிக்கும் சட்டப்பூர்வமான இந்தியக் குடிமக்களை மட்டும் அடையாளம் கண்டு பதிவு செய்யும் ஒரு அதிகாரப்பூர்வ அரசு ஆவணம் எனவும், நாட்டில் சட்டவிரோதமாக நுழைந்து தங்கியிருக்கும் வெளிநாட்டினரைக் கண்டறிந்து வெளியேற்றுவதே இதன் முக்கிய நோக்கம் எனவும் மோடி அரசு கூறுகிறது.
ஆனால் நாடுமுழுவதிலும் உள்ள இஸ்லாமியர்களின் குடியுரிமையைக் கேள்விக்குள்ளாக்கி அவர்களை வெளிநாட்டிலிருந்து இங்கே வந்து குடியேறியவர்கள் என முத்திரை குத்தி முகாம்களில் அடைப்பதுதான் என்.ஆ.சி.யின் உண்மையான நோக்கம்.
என்.ஆர்.சி.யில் தங்களை இணைத்துக் கொண்டு தனது குடியுரிமையை நிரூபிக்க ஒருவர் தங்களின் முன்னோர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு முன்பே இந்தியாவில் வசித்தார்கள் என்பதற்கான முறையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என மோடி அரசு கூறுகிறது. அதன்படி தமது முன்னோர்களின் பிறப்புச் சான்றிதழ் இல்லாத ஒருவர் இந்தியக் குடிமகனாக இருக்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்துகின்றனர். இது சிறுபான்மையினரது குடியுரிமை எப்போது வேண்டுமானாலும் பறிக்கப்படலாம் என்ற சூழலை உருவாக்குகிறது.
முதன் முதலில் என்.ஆர்.சி. அசாம் மாநிலத்தில் 2019ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அசாம் மாநிலத்தில் வசிக்கும் ஒவ்வொருவரும் தங்களது முன்னோர்கள் 1971 மார்ச் மாதம் 24ஆம் தேதி நள்ளிரவுக்கு முன் இந்தியாவில் வசித்தார்கள் என்பதற்கான முறையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது. அவ்வாறு ஆவணங்களை சமர்பிக்க இயலாதவர்கள் தேசியக் குடியுரிமைப் பதிவேட்டில் சேர்க்கப்படமாட்டார்கள், இதன் மூலம் அவர்கள் குடியுரிமையை இழக்க நேரிடும்.
ஒரு மனிதர் இந்தியாவில் பல தலைமுறைகளாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் அதை நிரூபிக்கும் ஆவணங்கள் அவரிடம் இல்லாவிட்டால் என்ன செய்வது? நிலமற்ற விவசாயி, கூலி தொழிலாளி, புலம்பெயர் தொழிலாளர்கள், வீடு மாறிக்கொண்டே இருக்கும் ஏழைக் குடும்பம், பிறப்பு பதிவு செய்யப்படாத வயதானவர்கள், பேரிடர் அல்லது கலவரத்தில் ஆவணங்களை இழந்தவர்கள் எனப் பலரிடமும் தலைமுறை தலைமுறையாகச் சேமித்து வைத்த பிறப்புச் சான்றிதழ்கள், நில ஆவணங்கள், பள்ளிச் சான்றிதழ்கள் இருக்க வாய்ப்பில்லை.
அப்படிப்பட்டவர்களிடம் “உங்கள் பெற்றோர் எங்கே பிறந்தார்கள் என?” என்று ஆவணங்களைக் கேட்கும்போது, அவர்களால் கொடுக்க முடியாவிட்டால் குடியுரிமையை இழக்க நேரிடும்.
அசாமில் நடத்தப்பட்ட என்.ஆர்.சி.யில் 12 இலட்சம் இந்துக்கள் 7 இலட்சம் இஸ்லாமியர்கள் என 19 இலட்சம் பேரால் தமது குடியுரிமையை நிரூபிக்க இயலவில்லை. தமது முன்னோர்களின் ஆவணங்கள் இல்லாதவர்கள் அவர்கள் இந்துக்களாக இருந்தாலும், இஸ்லாமியராக இருந்தாலும் என்.ஆர்.சி.யின் படி அவர்களது குடியுரிமை என்பது பறிக்கப்படும். இதற்கு அசாம் மாநிலத்திலேயே கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. ஆகையால் என்.ஆர்.சி.யினை நாடு முழுவதும் அமுல்படுத்தும் முடிவை மோடி அரசு தற்காலிகமாக நிறுத்திவைத்தது.
இதன் தொடர்ச்சியாக தங்களது முன்னோர்களின் ஆவணத்தைக் கொடுக்க இயலாத இஸ்லாமியர்களைத் தவிர்த்து பிற மதங்களைச் சேர்ந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் வகையில் சி.ஏ.ஏ. எனும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினை மோடி அரசு 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கொண்டு வந்தது. இதன் மூலம் தங்களது முன்னோர்களின் ஆவணங்களைக் கொடுக்க முடியாமல், தேசியக் குடியுரிமைப் பதிவேட்டில் இனைக்கப்படாத இஸ்லாமியர்கள் அல்லாத பிற மதங்களைச் சேர்ந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும். இஸ்லாமியர்களது குடியுரிமை மட்டுமே கேள்விக்குள்ளாக்கப்படும் என்ற நிலைமை ஏற்பட்டது.
சி.ஏ.ஏ. என்.ஆர்.சி.யை எதிர்த்து நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் மட்டுமன்றி பல்வேறு ஜனநாயக சக்திகளும் முற்போக்கு இயக்கங்களும் பரந்த அளவிலான போராட்டங்களை நடத்தினார்கள். இதன் காரணமாக சி.ஏ.ஏ. சட்டம் இயற்றப்பட்டாலும், அதற்கான விரிவான வழிமுறைகள் (Rules) வகுக்கப்படாமல் மோடி அரசால் நிறுத்திவைக்கப்பட்டன. ஆனால் ஒன்றிய உள்துறை அமைச்சகம் மார்ச் 11, 2024 அன்று இதற்கான ‘குடியுரிமை திருத்த விதிகள் 2024’ (Citizenship Amendment Rules 2024) என்ற அரசாணையை வெளியிட்டு, சி.ஏ.ஏ. சட்டத்தை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவந்தது.
சி.ஏ.ஏ. சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டபடியால், அடுத்ததாக தங்களது முன்னோர்களின் ஆவணங்கள் இல்லாத இஸ்லாமியர்களைக் கணக்கெடுப்பது மட்டும்தான் காவி பாசிஸ்டுகளின் திட்டத்தில் மீதமிருக்கிறது. அதனைத் தற்போது பல்வேறு வழிகளில் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம், எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் பீகார், தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், என நாடு முழுவதும் எல்லா மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியலைத் திருத்துவதாகக் கூறிக்கொண்டு இந்தியத் தேர்தல் ஆணையம், என்.ஆர்.சி.யில் குடியுரிமையைச் சோதிக்க கேட்கப்பட்ட ஆவணங்களை வாக்காளர் பட்டியலில் சேர்வதற்கான ஆவணங்களாக நிர்ணயித்து மறைமுகமாக என்.ஆர்.சி.க்கான கணக்கெடுப்புகளை நடத்தி வருகிறது.
அந்த வகையில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பையும் தனது நோக்கங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள காவி பாசிஸ்டுகள் முயற்சிக்கிறார்கள். 2027 சென்செஸ்சுக்கான கேள்வித்தாளில் முந்தைய கணக்கெடுப்புகளில் இடம்பெறாத 12 கேள்விகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் பத்து கேள்விகள் 2020-ல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.பி.ஆர்.) தொடர்பான கேள்விகளாக இருக்கின்றன[1].
பெற்றோரின் பெயர், பிறந்த தேதி, பிறந்த இடம், மதம், தேசியத்தன்மை போன்ற தனிப்பட்ட விவரங்கள் இதில் முக்கியமானவை. ஒருவருடைய பெற்றொரின் பின்னணி மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்கள் எந்த வகையிலும் மக்கள் தொகை பற்றிய புள்ளிவிவரங்களைத் தயாரிப்பதற்கு நேரடியாகப் பயன்படாது. ஆனால் இதே தகவல்கள் ஒருவரின் குடியுரிமையைச் சரிபார்க்கும் நடவடிக்கைக்கு நிச்சயமாகப் பயன்படுத்த முடியும். மக்கள் தொகையைக் கணக்கிடுவதற்கு தேவையான தகவல்களைப் பெறுவதாக கூறிக்கொண்டு, குடியுரிமையை நிரூபிப்பதற்குத் தேவையான தகவல்களை திரட்டுகிறது மோடி அரசு.
2003 ஆண்டு குடியுரிமைத் திருத்தத்தச் சட்டத்தின் மூலமாக, இந்தியக் குடிமக்களின் தேசியப் பதிவேடு (என்.பி.ஆர்.) மற்றும் மக்கள் தொகைப் பதிவேடு (சென்சஸ்) ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பு சட்டரீதியாக வரையறுக்கப்பட்டது. இதன் மூலம் சென்செஸ்சில் சேகரிக்கப்படும் தகவல்கள் என்.பி.ஆர்.இல் இணைக்கப்படும். அவை வெறும் புள்ளிவிவரங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படாமல், குடியுரிமை தொடர்பான பதிவை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்படுவதற்கு சட்டப்பூர்வ வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது சென்செஸ்சில் கேட்கப்படும் கேள்விகளையும், திரட்டப்படும் தரவுகளையும் தேசிய குடிமக்கள் பதிவேடு – என்.ஆர்.சி.யை உருவாக்கிடப் பயன்படுத்த முடியாது. ஆனால் நாளையே ஒன்றிய அரசு ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவந்து இதனைச் சாத்தியமாக்க நினைத்தால் யாராலும் தடுக்க முடியாது.
இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமான அச்சுறுத்தல் மட்டுமல்ல. இதனை இப்போது முறியடிக்காவிட்டால் மோடி அரசை எதிர்த்துக் கேள்வி கேட்கும் ஜனநாயக சக்திகள், மாணவர் தலைவர்கள், முற்போக்கு இயக்கங்கள் என அனைவரும் தமது குடியுரிமையை இழக்கும் ஆபத்தினை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
- சந்திரன்
தகவல் உதவி
[1] https://scroll.in/article/1095279/is-census-2027-the-first-step-to-a-national-register-of-citizens



