குழந்தைகளை அடிமையாக்கி பல லட்சம் கோடி சம்பாதிக்கும்
சமூக ஊடகக் கொள்ளையர்கள்!
இன்றைக்கு சமூக ஊடகங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸாப் போன்றவை பெரும்பாலானவர்களுக்கு ஒரு நாளின் மிக முக்கியமான நேரங்களை விழுங்கிவிடுகின்றன. இன்ஸ்டாகிராமில் நுழைந்து ஒரு ரீலைப் பார்க்கத் துவங்குபவர்கள் அடுத்து, அடுத்து என முடிவே இல்லாமல் ஸ்கிரோல் செய்து கொண்டே இருக்கின்றனர். ரீல்ஸ் மட்டுமல்ல லைக் வாங்குவது அல்லது போடுவது, பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை (follower count), பரிந்துரை (recommendation), நோட்டிபிகேசன் என பல வசதிகள் இன்ஸ்டாகிராமில் மட்டுமல்ல பல சமூகஊடக பக்கங்களிலும் நிறைந்திருக்கின்றன.
இந்த வசதிகளின் ஒரே நோக்கம், பயனர் அதிக நேரம் வெளியேறாமல் தங்களது தளத்திற்குள்ளேயே இருக்க வேண்டும். இவன்றின் மிகப்பெரிய இலக்கு யாரென்றால் இளம் வயதினர் தான். அதிலும் குறிப்பக பதின்ம வயது சிறுவர், சிறுமியரைக் குறிவைத்துத்தான் இந்த வசதிகள் அனைத்தும் கொண்டுவரப்பட்டுள்ளன.
நம்மில் பலரும் வீட்டில் இருக்கும் குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதையும், சமூக ஊடகங்களில் மூழ்கிக் கிடப்பதையும் பார்த்துக் கவலைக் படுகிறோம். அவர்கள் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் எனக் கண்டிக்கிறோம். ஆனால் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் குழந்தைகளை அதிக நேரம் தங்களது பக்கங்களில் இருக்கச் செய்வது, அல்லது தங்களது பக்கங்களை விட்டு அவர்கள் வெளியேற முடியாமல் தடுக்கும் வகையில் அவற்றைத் திட்டமிட்டு வடிவமைக்கின்றன என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியவாய்ப்பில்லை.
இந்த சமூக ஊடகச் செயலிகள் பயன்படுத்தும் மென்பொருள் அல்காரிதம்கள் பயனரின் விருப்பம் என்ன, அவர்களது வயது, பாலினம், படிப்பு, பின்புலம் ஆகியவற்றை வைத்து அவர்கள் எதை நோக்கி ஈர்க்கப்படுவார்கள் என்பதைக் கணித்து அதற்குத் தகுந்தது போல கண்டண்ட்களை அடுத்தடுத்து அவர்களுக்குக் காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தனது இலாப நோக்கங்களுக்காக குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிட்டுச் சீரழிக்கும் இந்த வேலையில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டு வந்திருப்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது. மெட்டா நிறுவனம் என்பது பேஸ்புக், வாட்ஸாப், இன்ஸ்டாகிராம் போன்ற சமுக ஊடகத் தளங்களின் தாய் நிறுவனம் ஆகும்.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் மெட்டா நிறுவனம், சமீபத்தில் அமெரிக்காவின் 29 மாநிலங்களுடன் சமரச உடன்படிக்கை செய்து கொண்டிருக்கிறது. இந்த உடன்படிக்கையின்படி மெட்டா நிறுவனம் 1.5 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கான இழப்பீட்டுத் தொகை கொடுத்து தனக்கெதிராக இந்த 29 மாநிலங்களும் தொடுத்துள்ள வழக்குகளைத் திரும்பப் பெறச் செய்திருக்கிறது.
மெட்டா நிறுவனத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகள் என்ன?
மெட்டா நிறுவனத்திற்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் பல்வேறு வழக்குகள் அமெரிக்க நீதிமன்றங்களில் பதியப்பட்டுள்ளன.
- பெற்றோரின் சம்மதம் இன்றி குழந்தைகள் குறித்த தரவுகளை சேகரித்தது.
- குழந்தைகள் / பதின்ம வயதினரை நீண்ட நேரம் தங்களது தளத்தில் வைத்திருக்கும் அடிமையாக்கும் அம்சங்களை (addictive features) திட்டமிட்டு உருவாக்கி பயன்படுத்தியது.
- இதனால் குழந்தைகளுக்கும், பதின்ம வயதினருக்கும் ஏற்படும் மனநல பாதிப்புகள் குறித்தும், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள குறித்தும் அறிந்திருந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது மெட்டா நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் பாதுகாப்பு அதிகாரி (safety engineer), பல முக்கியமான தகவல்களை வெளியிட்டிருக்கிறார். மெட்டா நிறுவனத்தின் சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்தும் குழந்தைகள், பாலியல் ரீதியில் வேட்டையாடுபவர்களை எதிர்கொள்ளும் ஆபத்தைச் சந்திப்பதாகவும், வன்முறை மற்றும் ஆபாச உள்ளடக்கங்களைப் பார்ப்பதாகவும், குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிக்கும் பயனர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார். மேலும் இது குறித்து மேல் அதிகாரிகளிடம் தான் முறையிட்டதாகவும் ஆனால் அவர்கள் இதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
மெட்டா நிறுவனத்தின் தரவுகளின் படியே, பேஸ்புக் பயனர்களிடம் அவர்கள் நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில், பிரிட்டனைச் சேர்ந்த பதின்ம வயதுச் சிறுமிகளில் 13.5% பேர், தங்களுக்கு தற்கொலை எண்ணங்கள் அதிகரித்திருப்பதாக கூறியிருக்கின்றனர்.
அதே போல இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது பயனாளர்களிடம் நடத்திய ஆய்வில், “பிறருடன் தன்னை ஒப்பிட்டுப் பார்க்கும் மனநிலை” பயனாளர்கள் மத்தியில் அதிகரித்திருப்பது தெரிய வந்திருக்கிறது. வால் ஸ்டிரீட் ஜர்னல் நடத்திய ஒரு விசாரணையின்படி, இன்ஸ்டாகிராம் செயலி, உடல் தோற்றம் மற்றும் வாழ்க்கைமுறையை மையப்படுத்தி இயங்குவதால், பயனர்கள் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் நிலை உருவாகி, தாழ்வு மனப்பான்மை மற்றும் தாம் போதுமானவர்களாக இல்லை என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.
தமது தளங்களைப் பயன்படுத்தும் குழந்தைகள் இத்தனை ஆபத்துகளைச் சந்திக்கிறார்கள் என்பது தெரிந்தும் மெட்டா நிறுவனம் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. காரணம் அவற்றிலிருந்து தனக்குக் கிடைக்கும் விளம்பர வருவாயை இழப்பதற்கு அந்நிறுவனம் தயாராக இல்லை.

விளம்பர வருவாய் என்றால் சிறிய அளவிலானது என நினைக்க வேண்டாம். இந்தியாவில் மெட்டா மற்றும் ஆல்பபெட் நிறுவனங்களின் மொத்த விளம்பர வருவாய் மட்டும் ஆண்டுக்கு ரூ.64,000 கோடியைத் தாண்டுகிறது. இவர்களது வருவாய்க்கு இந்திய அரசு வரிவிலக்கு வேறு அளித்துள்ளது. உலக அளவில் அவர்களது ஆண்டு வருவாய் என்பது சுமார் 50 இலட்சம் கோடி ரூபாய். இவ்வளவு பெரிய வருவாயைக் கொண்டு இந்த நிறுவனங்களால் உலகின் எந்த நாட்டு அரசையும் ஆட்டுவிக்க முடியும். இந்த வழக்குகள் குறித்தெல்லாம் அவர்கள் கவலை கொள்ளப்போவதில்லை.
தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மெட்டா நிறுவனம், தாங்கள் குழந்தைகளது பாதுகாப்பு குறித்து அக்கறை கொள்வதாகவும், பத்து இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைப் பயனாளர்களின் கணக்குகளை தங்களது செயலிகளில் இருந்து நீக்கியிருப்பதாகவும் கூறியிருக்கிறது.
விளம்பர இலாபத்திற்காக குழந்தைகளைப் பலிகடாவாக்குவது என்பது மெட்டா நிறுவனத்தின் தளங்களில் மட்டுமல்ல டிக்டாக், யூடியூப், ஸ்னாப்சாட் என எல்லா சமூக ஊடகத் தளங்களும் இதனைப் பல்வேறு அளவுகளில் செய்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றுக்கு எதிராகப் பல வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்ற நடுவர் குழு, மெட்டா மற்றும் ஆல்பபெட் (கூகிள்) நிறுவனங்களின் சமூக ஊடகத் தளங்கள் ‘அடிமையாக்கும் வகையில்’ வடிவமைக்கப்பட்டிருந்ததற்காக, அவை 6 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கைத் தொடர்ந்த பெண், சிறு வயதிலேயே குறிப்பாக யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களுக்கு அடிமையாகிவிட்டதாகவும், அதன் காரணமாக தனது மனநலம் மோசமடைந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
கடந்த மார்ச் மாதத்தில், நியூ மெக்சிகோ நீதிமன்றத்தில், குழந்தைகளுக்கு அதன் தளங்கள் ஏற்படுத்தக்கூடிய ஆபத்துகள் குறித்து பயனர்களைத் தவறாக வழிநடத்தியதாக மெட்டா நிறுவனத்தின் மீது தொடரப்பட்ட வழக்கில் அந்நிறுவனம் 375 மில்லியன் டாலர் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. 2023-ஆம் ஆண்டு நியூ மெக்சிகோ அரசு தொடர்ந்த இந்த வழக்கில், குழந்தைகள் மற்றும் இளம் வயதினரை பாலியல் ரீதியான உள்ளடக்கங்கள், அதிர்ச்சியூட்டும் காட்சிகள் மற்றும் வன்முறைக் காட்சிகளை நோக்கி மெட்டா திட்டமிட்டு ஈர்த்ததாகவும், இதன் மூலம் அவர்கள் பாலியல் சுரண்டல் மற்றும் மனிதக் கடத்தல் முயற்சிகளுக்குக்கூட இலக்காகும் சூழல் உருவானதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
டிக்டாக் செயலிக்கு எதிராக இளம் வயதினர் தொடர்ந்த மூன்று வழக்குகளும் சமரசத்தின் மூலம் முடிவுக்கு வந்தன. டிக்டாக் செயலியைப் பயன்படுத்தியதால் தங்களுக்கு சுய காயப்படுத்திக் கொள்ளும் எண்ணம், பதற்றம், மனச்சோர்வு, அடிமைத்தனம் மற்றும் உணவுக் கோளாறுகள் ஏற்பட்டதாக அந்த இளைஞர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். மேலும், கடந்த மாதத்தின் தொடக்கத்தில், அமெரிக்க நீதித்துறையுடன் டிக்டாக் நிறுவனம் 400 மில்லியன் டாலர் மதிப்பிலான சமரசத்தையும் செய்துகொண்டது. குழந்தைகளின் தனியுரிமை தொடர்பான கூட்டாட்சி சட்டங்களை (federal laws) அந்நிறுவனம் மீறியதாக அமெரிக்க நீதித்துறை குற்றம்சாட்டியிருந்தது.
இந்த வழக்குகள் அனைத்தும் முறையாக விசாரிக்கப்பட்டிருந்தால் இந்த நிறுவனங்கள் அனைத்தும் தண்டிக்கப்பட்டு அவற்றின் செயலிகள் தடைசெய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் முதலாளிகளைத் தண்டிக்கப்படுவதை அமெரிக்க அரசு என்றைக்கும் விரும்பாது. ஆகையால் நீதிமன்றங்களுக்கு வெளியே இந்தப் பிரச்சனையை பணம் கொடுத்துச் சரி செய்யும் சமரச நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாகவே அது அங்கீகரிக்கிறது. அமெரிக்காவிலாவது முதலாளிகளின் இது போன்ற முறைகேடுகளுக்கு எதிராக வழக்குத் தொடுக்க முடிகிறது. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் அதற்கும் கூட வழியில்லை. ஏனென்றால் இந்நாடுகளில் குழந்தைகளின் உரிமைகளை மெட்டா, ஆல்பெபட் போன்ற சமூக ஊடகக் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாக்கும் சட்டங்கள் எதுவும் இல்லை.
குழந்தைகளைச் சுரண்டி இலாபம் பார்க்கும் பிரச்சனை பெரிய அளவில் வெடித்து விவாதப் பொருளாக மாறியிருப்பதால், தற்போது மெட்டா நிறுவனம் தனது செயலிகளில் சில மாற்றங்களைச் செய்யவிருப்பதாக கூறியிருக்கிறது. தினசரி சமூக ஊடகப் பயன்பாட்டை இரண்டு மணி நேரத்துக்கு மட்டுமே என வரையறுப்பது, ‘பள்ளி நேரம்’ மற்றும் ‘இரவு நேரம்’ ஆகிய நேரங்களில் நோட்டிபிகேசன் வசதியை முடக்குவது, ‘லைக்’ எண்ணிக்கையை மறைக்கும் வசதி, அளவுக்கு மீறிய மேக்கப் மற்றும் அழகை மாற்றிக் காட்டும் ஃபில்டர்களுக்கும் தடை எனப் பல மாற்றங்களை அறிவித்திருக்கிறது.
ஆனால் இந்த மாற்றங்கள் எல்லாம் கண்துடைப்புதான். குழந்தைகளை, பதின்ம வயதினரைப் பயன்படுத்தி பல இலட்சம் கோடிகள் இலாபம் சம்பாதிக்கும் இந்த நிறுவனங்கள் நிச்சயமாகத் தங்களை மாற்றிக் கொள்ளப் போவதில்லை.
ஏனென்றால் பிரச்சினை இரண்டு மணி நேரத்துக்கு மேல் குழந்தைகள் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்துகிறார்கள் என்பதில் மட்டும் இல்லை. குழந்தைகள் அந்த இரண்டு மணி நேரத்தையும் இன்ஸ்டாகிராமிலேயே செலவிடும் வகையில் அந்தச் செயலி வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதுதான். முடிவில்லாத ஸ்க்ரோலிங், தனிப்பட்ட விருப்பங்களைக் கணித்து அடுத்தடுத்து உள்ளடக்கங்களைத் திணிக்கும் அல்காரிதம், லைக் மற்றும் ஃபாலோவர் எண்ணிக்கைகள், தொடர்ந்து வரும் நோட்டிபிகேசன்கள் என ஒவ்வொன்றும் பயனரின் கவனத்தை முடிந்தவரை நீண்ட நேரம் கைப்பற்றுவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள
அந்தக் கவனம்தான் விளம்பரதாரர்களிடம் விற்கப்படுகிறது. எனவே குழந்தை அதிக நேரம் சமூக ஊடகத்தில் செலவிடுவது மெட்டாவுக்கு ஒரு பிரச்சினை அல்ல; அதுவே அதன் வணிகத்தின் அடிப்படையாக இருக்கிறது.
இதிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு தற்போது பெற்றோர்களின் மேல் சுமத்தப்பட்டிருக்கிறது.
- அறிவு
தகவல் ஆதாரம்
- ஆகஸ்ட் 30 2026 – தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியான “why is meta’s $17.1-billion settlement significant?” கட்டுரை
- https://www.thehindu.com/sci-tech/technology/understanding-the-historic-171-billion-meta-settlement/article71395002.ece
- https://www.nytimes.com/2026/08/26/technology/meta-settlement-social-media-addiction-lawsuit.html

