ஆதார், பான் கார்டுடன் தேவாலயத்துக்கு வரும் கிறிஸ்தவர்கள்:
மகாராஷ்டிராவின் மதமாற்றத் தடைச் சட்டம்
உருவாக்கியிருக்கும் ஆபத்து!
கிறிஸ்தவ தேவாலயங்களுக்குச் செல்பவர்கள் கையில் மெழுகுவர்த்தி கொண்டு செல்வதை நாம் பார்த்திருக்கிறோம். சிலர் மலர்களைக் கொண்டு செல்வார்கள்; இன்னும் சிலர் இனிப்புகளைக்கூடக் கொண்டு செல்வார்கள். ஆனால், மகாராஷ்டிராவில் தேவாலயத்திற்குச் செல்லும் வழிபாட்டாளர்கள் கையில் ஆதார் அட்டையையும், பான் அட்டையையும் கொண்டு செல்கிறார்கள்.
தேவாலயத்திற்கு வரும் வழிபாட்டாளர்கள் தங்களது சொந்த விருப்பத்தின் பேரிலேயே வந்திருக்கிறார்கள் என்பதைப் பதிவு செய்வதற்காக, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பல தேவாலயங்கள் அவர்களிடம் ஒரு உறுதிமொழிப் படிவத்தை பூர்த்தி செய்து பெறுகின்றன. அந்தப் படிவத்துடன் அடையாளச் சான்றாக இணைப்பதற்காகத்தான் இந்த ஆவணங்களை அவர்கள் கொண்டு செல்கின்றனர்[1].
மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையில் உள்ள தேவாலயங்களில் மட்டுமன்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களுக்கு வழிபட வருபவர்களிடம் இது போன்ற படிவங்கள் வாங்கப்படுகின்றன.
இந்த உறுதிமொழிப் படிவம், அவர்கள் தங்கள் சொந்த “விருப்பத்தின்” பேரில் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதாகவும், “எந்த விதமான அழுத்தம், தூண்டுதல், ஆசை, கவர்ச்சி அல்லது அச்சுறுத்தலையும்” எதிர்கொள்ளவில்லை என்றும் குறிப்பிடுகிறது. மேலும், தேவாலயத்திற்குச் செல்வதற்கான அவர்களின் முடிவு “முற்றிலும் தனிப்பட்டது, தன்னார்வமானது மற்றும் சுதந்திரமானது” என்றும் அது கூறுகிறது. அந்தப் படிவத்தில் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் அல்லது பான் எண் கேட்கப்பட்டுள்ளது.
“சுய பாதுகாப்பு” கருதிப் பெறப்பட்ட இந்த பூர்த்தி செய்யப்பட்ட உறுதிமொழிப் படிவங்கள், அரசு அல்லது போலீஸ் அதிகாரிகள் கேட்டால் காண்பிப்பதற்காகத் தேவாலய அலுவலகங்களில் வைக்கப்படும் என்று பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாயைச் சேர்ந்த போதகர் சாம் மத்தாய் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்[2].
தேவாலயத்திற்கு வழிபட வருபவர்களிடமிருந்து படிவங்களைச் சேகரிக்கும் பணி கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார். சில தேவாலயங்கள் கிறிஸ்தவர்களாகப் பிறக்காத வழிபாட்டாளர்களிடமிருந்து படிவங்களைப் பெறுகின்றன, மேலும் சில வழக்கமான வழிபாட்டாளர்களிடம் கூட படிவங்களை நிரப்புமாறு கேட்கின்றன என்றும் அவர் கூறினார்.
கிறிஸ்தவ தேவாலயங்கள் இது போன்று உறுதிமொழிப் படிவங்களை வாங்குவதற்கு மகாராஷ்டிர மாநிலத்தில் கொண்டுவரப்பட்டுள்ள ஒரு சட்டம் தான் முக்கிய காரணமாக இருக்கிறது.
கடந்த மார்ச் மாதத்தில் அம்மாநில பாஜக அரசு, “மகாராஷ்டிர மதச் சுதந்திரச் சட்டம், 2026” என்ற பெயரில் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது. மதச் சுதந்திரச் சட்டம் என பெயரிடப்பட்டிருந்தாலும் உண்மையில் இது ஒரு மதமாற்றத் தடைச் சட்டம்தான். பாஜக ஆட்சிசெய்யும் மாநிலங்களில் 13வது மாநிலமாக மகாராஷ்டிராவில் கொண்டுவரப்பட்டுள்ள இந்தச் சட்டம், ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்று ஆகஸ்டு 28ஆம் தேதி முதல் அமுலாகியிருக்கிறது.
ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியும், கட்டாயப்படுத்தியும் நடைபெறும் மதமாற்றங்களைத் தடுப்பதை நோக்கமாக கொண்டே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாக அரசு கூறுகிறது. பணம்/பரிசு முதல் வேலை, இலவசக் கல்வி, திருமண வாக்குறுதி, சிறந்த வாழ்க்கை, தெய்வீக குணப்படுத்துதல், ஒரு மதத்தைப் புகழ்வது அல்லது மற்றொரு மதத்தை எதிர்மறையாகச் சித்தரிப்பது என எல்லாவற்றையும் ஆசைவார்த்தை கூறி ஏமாற்றுவது என இந்தச் சட்டம் கூறுகிறது.
அதாவது கிறிஸ்தவ மெசினரிகள் இலவச கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் நடத்துவது, தங்களது மதத்தைப் உயர்த்திப் பேசுவது என என்ன செய்தாலும் அது மதமாற்றம் செய்வதற்காகக் கூறப்படும் ஆசைவார்த்தைகள் என இந்தச் சட்டம் கூறுகிறது. இன்னும் ஒருபடி மேலே போய் இம்மை, மறுமை, பாவ மன்னிப்பு எனப் பேசுவதும் கூட மதமாற்றுவதைத் தூண்டும் ஆசை வார்த்தைகள் எனக் கூறுகின்றன.
மதங்களுக்கு இடையிலான காதல் திருமணங்களையும் இந்தச் சட்டம் தடை செய்கிறது. வெவ்வேறு மதத்தை சேர்ந்த இருவர் திருமணம் செய்து கொண்டால் திருமண ஆசை காட்டி மதம் மாற்றியதாக கைது செய்யவும் இது வழிவகுக்கிறது.
இந்தச் சட்டத்தின்படி, வேறொரு மதத்தைத் தழுவ விரும்பும் ஒருவர், குறைந்தது 60 நாட்களுக்கு முன்னதாகவே மாவட்ட நீதித்துறை நடுவருக்குத் தெரிவிக்க வேண்டும். மதம்மாற்றச் சடங்கை நடத்தும் நிறுவனமும், நபரும் யார் என்பதை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாக, அது குறித்து பொது மக்களின் கருத்துத்தைக் கேட்பதற்காக அது நோட்டீஸ் போர்டில் ஒட்டப்படும். 30 நாட்களுக்குள் யாராவது அதற்கு ஆட்சேபம் தெரிவித்தால், கட்டாய மதமாற்றம் நடைபெற்றிருக்கிறதா என விசாரணை செய்யப்படும். அதில் சட்டத்தில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை மீறியதாகத் தெரிய வந்தால் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன், ஐந்து இலட்ச ரூபாய் அபராதமும் விதிக்க இச்சட்டம் வகை செய்கிறது. மதம் மாறிய பிறகும் கூட 21 நாட்களுக்குள் தனது சுயவிருப்பத்தின் அடிப்படையில் தான் மதம் மாறியதாக சுய உறுதிமொழியை மதம் மாறியவர் சமர்பிக்க வேண்டும்
கிறிஸ்தவத்திற்கு மதம் மாற விரும்பி விண்ணப்பிக்கும் ஒருவர் அதற்கு முன்னதாக கிறிஸ்தவ நிறுவனங்கள் நடத்தும் பள்ளியில் படித்திருக்க கூடாது, மருத்துவமனைக்குச் சென்றிருக்கக் கூடாது, இவ்வளவு ஏன் கிறிஸ்தவ தேவாலயங்களில் நடக்கும் பிராத்தனைக் கூட்டங்களுக்குக் கூடச் சென்றிருக்கக் கூடாது. அவ்வாறு ஏதாவது ஒரு நிகழ்வு நடந்திருந்தாலும் கூட கட்டாய மதமாற்றம் எனக் கூறி அந்த கிறிஸ்தவ நிறுவனத்தைச் சேர்ந்த பாதிரியாருக்கோ, பாஸ்டருக்கோ சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
மேலும் மதமாற்றம் நடைபெற்றிருப்பதாகச் சந்தேகம் கொள்ளும் யார் வேண்டுமானாலும் அது குறித்துப் போலீசில் புகாரளிக்கவும் இந்தச் சட்டம் வசதி செய்து கொடுத்துள்ளது. எனவே காவி பாசிசக் கும்பல் எந்தவொரு தேவாலயத்திற்கும் எப்போது வேண்டுமானாலும் நுழைந்து அங்கே மதமாற்றம் நடைபெறுவதாகக் குற்றம்சாட்டிக் கலவரம் செய்யவும், தேவாலயத்தின் மீதும் திருச்சபையினர் மீதும் மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியவும் சட்டப்பூர்வ உரிமை வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி கட்டாய மதமாற்றம் செய்ததாக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டு இந்தச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுவிட்டால், அவர்தான் தன்னைக் குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும். குற்றம் சாட்டியவர் கட்டாய மதமாற்றம் நடைபெற்றதற்கான ஆதாரங்களைக் காட்டத் தேவையில்லை. ஆள்தூக்கிச் சட்டங்களான ஊபா, தேசிய பாதுகாப்புச் சட்டம் போன்றே, குற்றம் சாட்டப்பட்டவரே தன்னை குற்றமற்றவர் என நிரூபிக்காதவரை சிறையில் கிடக்கும் வகையில் இந்தச் சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது காவிக் கும்பலுக்கு மேலும் வசதி செய்து கொடுத்திருக்கிறது.
இந்தச் சட்டம், மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட போதிருந்தே காவி பாசிசக் கும்பல்கள் மாநிலம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாடு நடத்த வருபவர்களிடம் சென்று தகாரறு செய்து வருகின்றன. மும்பை புறநகர் பகுதிகளில் மட்டும் கடந்த ஐந்து மாதங்களில் 11 இடங்களில் காவிக் கும்பல் கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெறும் பிராத்தானைக் கூட்டங்களில் சென்று தகராறு செய்ததுடன் தாக்குதலும் நடத்தியிருக்கின்றனர். காவிப் பாசிசக் கும்பலுக்கு உறுதுணையாக இருக்கும் போலீசாரோ, தாக்குதல் குறித்து விசாரிப்பதற்கு பதிலாக, பிராத்தனைக் கூட்டத்தில் பங்கெடுத்தவர்கள் உண்மையிலேயே கிறிஸ்தவர்களா எனக் கேள்வியெழுப்புகின்றனர். ஆகையால்தான் கிறிஸ்தவ திருச்சபைகள் இது போன்ற உறுதிமொழிப் படிவங்களை வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மதப் பாதுகாப்பு என்ற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மதமாற்றத் தடைச் சட்டம், உண்மையில் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது மத நம்பிக்கைகளைப் பின்பற்றுவதற்கே அச்சத்தை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது. தேவாலயத்திற்குப் பிரார்த்தனை செய்ய வருபவர்கள் தாங்கள் எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல் வந்தவர்கள் என்பதை ஆதார் அட்டை, பான் அட்டை, புகைப்படம் உள்ளிட்ட விவரங்களுடன் உறுதிமொழியாக அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதே இதற்கு நேரடியான சாட்சியாகும். மத நம்பிக்கையைப் பின்பற்றுவது, சமூக சேவை, இலவசக் கல்வி, மருத்துவ உதவி, மதங்களுக்கு இடையிலான திருமணம் என ஒரு சமூகத்தின் இயல்பான செயல்பாடுகளைக்கூட மதமாற்றத்துடன் இணைத்து குற்றமாக்கும் வகையில் சட்டத்தின் வரம்புகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
இது தனித்து நிற்கும் ஒரு நடவடிக்கை அல்ல. சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்களுக்குள் அத்துமீறி நுழைந்து பிரார்த்தனைக் கூட்டங்களைத் தடுப்பது, மதமாற்றம் நடைபெறுவதாகக் கூறி தாக்குதல் நடத்துவது, தேவாலயங்கள் மற்றும் மத நிறுவனங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது போன்ற சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளும்; மறுபுறம் மதமாற்றத் தடைச் சட்டங்கள், பசுப் பாதுகாப்புச் சட்டங்கள், மதங்களுக்கு இடையிலான திருமணங்களைக் கண்காணிக்கும் சட்டங்கள் போன்ற சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் ஒன்றுக்கொன்று துணைபுரியும் வகையில் செயல்படுகின்றன. இதன் ஒட்டுமொத்த விளைவு, சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது மதத்தைப் பின்பற்றுவதற்கும், தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கும், தங்கள் விருப்பப்படி வாழ்வதற்கும் அச்சம் ஏற்படுத்துவதாகவே இருக்கிறது.
ஒருபுறம் சட்டத்தின் அதிகாரத்தையும், மறுபுறம் சட்டத்திற்கு அப்பாற்பட்ட காவிக் கும்பல்களின் வன்முறையையும் பயன்படுத்தி சிறுபான்மை மக்களைச் சமூக ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் கட்டுப்படுத்தும் இந்தப் போக்கை சாதாரணமான அரசியல் நடவடிக்கையாகக் கடந்து செல்ல முடியாது. இன்று தேவாலயத்தில் பிரார்த்தனை செய்பவரிடம் “நான் சுய விருப்பத்தில்தான் வந்தேன்” என்று சான்று கேட்கப்படுகிறது என்றால், அது நாளை இந்த நாட்டில் ஒவ்வொரு சிறுபான்மையினரும் தனது மத நம்பிக்கைக்கான விசுவாசச் சான்றிதழை எடுத்துக்கொண்டு நடக்க வேண்டிய நிலைக்கு இட்டுச் செல்லும்.
ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது இயல்பான மதச் செயல்பாடுகளுக்குக்கூட தங்கள் அடையாளத்தையும் சுதந்திரமான விருப்பத்தையும் ஆவணப்படுத்திக் காட்ட வேண்டிய நிலை உருவாகிறது என்பது ஒரு ஆபத்தான எச்சரிக்கை.
வரலாற்றில் ஒடுக்குமுறைகள் ஒரே நாளில் உச்சத்தை அடைந்ததில்லை; ஒரு சமூகத்தைத் தனித்துக் குறியிடுதல், சந்தேகத்தின் கீழ் நிறுத்துதல், கண்காணித்தல், அதன் இயல்பான உரிமைகளை ஒன்றன்பின் ஒன்றாகக் கட்டுப்படுத்துதல் போன்ற சிறியதாகத் தோன்றும் நடவடிக்கைகளின் வழியாகவே அவை வளர்ந்தன.
ஜெர்மனியில் யூதர்கள் பொதுவெளியில் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள மஞ்சள் நிற டேவிட் நட்சத்திரத்தை அணியக் கட்டாயப்படுத்தப்பட்டனர். அது வெறும் ஓர் அடையாளம் அல்ல; யூதர்களை மற்ற சமூகங்களிலிருந்து தனிமைப்படுத்தி, அவர்களைக் கண்காணிக்கவும், பாகுபாடு காட்டவும், இறுதியில் திட்டமிட்ட துன்புறுத்தலுக்கு உள்ளாக்கவும் பயன்படுத்தப்பட்ட பாசிசக் கும்பலின் நடவடிக்கைகளில் ஒன்றாக இருந்தது.
இன்று மகாராஷ்டிராவில் தேவாலயத்திற்குள் பிரார்த்தனை செய்ய வரும் ஒருவர், தாம் சுய விருப்பத்தில்தான் வந்ததாகப் புகைப்படத்துடனும் ஆதார் அல்லது பான் விவரங்களுடனும் உறுதிமொழி அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது, நாளை அந்த அடையாளமே அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கான காரணமாக பயன்படுத்த வாய்ப்பளிக்கிறது.
- சந்திரன்
தகவல் உதவி
[1] https://indianexpress.com/article/cities/mumbai/maharashtra-anti-conversion-law-mumbai-prayer-meetings-10847949/
[2] https://www.thehindu.com/news/cities/mumbai/anti-conversion-law-maharashtra-churches-seek-prayer-consent-forms-from-worshippers/article71388012.ece

