ஜார்க்கண்ட்: தேர்வு முறைகேடுகளை எதிர்த்துப் போராடும் மாணவர்கள் மீது கொடிய ஒடுக்குமுறையை ஏவும் ஹேமந்த் சோரன் அரசு!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்துப் போராடிய இளைஞர்கள் மீது அம்மாநில அரசு கடுமையான தடியடி நடத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் பொதுப் பணி ஆணையம் (JPSC) மற்றும் அரசு பணியாளர் தேர்வாணையம் (JSSC) ஆகியவை நடத்திய பல்வேறு தேர்வுகளில் வினாத்தாள் கசிவு போன்ற பல முறைகேடுகள் நடந்துள்ளதைக் கண்டித்து, கடந்த 10 நாட்களாக அம்மாநிலத்தின் மாணவர்களும் இளைஞர்களும் போராடி வருகிறார்கள். ஜார்க்கண்ட் லோக்தந்திரிக் கிராந்திகாரி மோர்ச்சா (JLKM) தலைவர் தேவேந்திர நாத் மஹ்தோ, இந்தத் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து 10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து, தற்போது உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போராடும் இளைஞர்கள் ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் சட்டமன்றத்தை நோக்கிப் பேரணி சென்றார்கள். அவர்கள் சட்டமன்றத்தை நோக்கிச் செல்வதைத் தடுக்க, போலீஸ் பல தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அவற்றையெல்லாம் கடந்து போராட்டக்காரர்கள் சட்டமன்ற நுழைவாயிலை அடைந்தனர். அங்கிருந்து நகர மறுத்த போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படைகளை ஏவித் தாக்குதல் நடத்தியிருக்கிறது ஜார்க்கண்ட் அரசு.

தண்ணீர் பீரங்கிகளையும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் கொண்டு போராட்டக்காரர்களைத் தாக்கியிருக்கிறது ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் அரசு. இந்தக் காட்டுமிராண்டித்தனமான போலீஸ் தாக்குதலைப் படம் பிடித்துக்கொண்டிருந்த யூடியூப் செய்தியாளர் ஒருவரின் கேமராவையும் போலீசார் உடைத்திருக்கிறார்கள்.

போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்டது குறித்து முதல்வர் ஹேமந்த் சோரன் வெளியிட்டிருந்த அறிக்கையின் முதல் வரியில், மாணவர்களைத் தாக்கிய ‘அரசு நிர்வாகம் மற்றும் போலீஸ்துறைக்கு நன்றி தெரிவித்துள்ளார்’. தங்களது உரிமைக்காகப் போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீஸை, ‘நிலவிய சூழலை நிதானம், உணர்வுப்பூர்வமான அணுகுமுறை மற்றும் முழுமையான பொறுப்புணர்வுடன் கையாண்டதாக’ பாராட்டுகிறார் ஹேமந்த் சோரன். இந்த ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி ‘பாசிசத்தை’ எதிர்ப்பதாகப் பீற்றிக்கொள்ளப்படும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறது!

இந்த மாணவர்கள் எதற்காக 10 நாட்களுக்கு மேல் போராடி வருகிறார்கள்? எதற்காக உண்ணாவிரதம் இருக்கிறார்கள்?

ஜார்க்கண்ட் அரசு தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து நடத்தப்பட்ட இந்தப் போராட்டம், ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் மட்டுமல்லாமல், பல்வேறு மாவட்டங்களிலும் நடந்து வருகிறது. இந்தத் தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் குறித்து CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; மேலும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்ட நிறுவனங்களிடம் இந்தத் தேர்வுகளை நடத்த ஒப்பந்தம் செய்துள்ளது ஜார்க்கண்ட் அரசு. இதுவும் இந்தத் தேர்வு முறைகேடுகள் நடக்கக் காரணமாக இருந்திருக்க வேண்டும். இதனால், இந்தத் தேர்வுகளை நடத்தும் முகமைகளையும் சேர்த்து விசாரிக்க வேண்டும். இவைதான் மாணவர்களின் அடிப்படையான கோரிக்கைகள்.

ஜார்க்கண்ட் அரசு பணியாளர் தேர்வாணையம் (JSSC) நடத்தும் தேர்வுகள் குறிப்பாக Group B, Group C பணிகளுக்கானவை. இந்தத் தேர்வுகளை எழுத, ஒருவர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதாவது பட்டதாரிகள்தான் (graduates) இந்தத் தேர்வுகளை எழுத முடியும்.

இந்தத் தேர்வுகளில் ஆண்டுதோறும் நடந்துவரும் முறைகேடுகள், இந்தத் தேர்வுகளுக்காகத் தங்களது இளமையின் முக்கியமான ஆண்டுகளைப் பணயம் வைத்துத் தயாராகி வரும் இளைஞர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

2024-ல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த அரசு பணிகளுக்கான தேர்வில் வினாத்தாள் கசிந்து முறைகேடு நடந்துள்ளது. இதனை விசாரித்த ஜார்க்கண்ட் மாநில குற்றப் புலனாய்வுத் துறை, இந்தத் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அறிக்கை அளித்துள்ளது. ஆனால், மாநில அரசு இந்த அறிக்கையைக் கிடப்பில் போட்டு, புதிதாக ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. அக்குழு, வினாத்தாள் கசிவு எதுவும் நடக்கவில்லை என்று அறிக்கை அளித்தது.

‘தேர்வு முறைகேடுகள் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையிலான நீதித்துறை கண்காணிப்புக் குழு அமைக்கப்படும்; முறைகேடுகளை விசாரிக்க நிபுணர் குழுக்கள் மற்றும் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்’ என்று அரசு வாக்குறுதி கொடுத்தாலும், போராடும் மாணவர்கள் நம்பத் தயாராக இல்லை.

படித்த படிப்பிற்கான வேலை கிடைக்காத இன்றைய பொருளாதாரச் சூழ்நிலையில், அரசு வேலைகளில் சேர்ந்து தங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக்கொள்ள மாணவர்கள் போராடி வருகிறார்கள். ஆண்டுக்கணக்கில் இதற்காகக் கடுமையாக உழைத்துத் தயாராகிறார்கள். ஆனால் தொடர்ந்து வினாத்தாள் கசிவுகள் நடப்பதும், அதன் காரணமாகத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதும் மாணவர்களை விரக்தியின் விளிம்பிற்குத் தள்ளுகிறது. தங்களது குடும்பத்தின் பிழைப்பிற்கு அரசு வேலை மட்டுமே ஒரே வழி என்று இதற்காக ஆண்டுக்கணக்கில் உழைத்த இளைஞர்கள், தாங்கள் தொடர்ந்து இந்த அரசால் வஞ்சிக்கப்படுவதாக உணர்கிறார்கள். அதனால்தான் இந்தப் போராட்டம் வெடித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து டெல்லியில் போராடிய மாணவர்கள் பாசிச மோடி அரசைப் பணிய வைத்தார்கள். ஆனால், ஒரு பாசிஸ்ட் கட்சியான பாஜக செய்து வரும் அதே வேலையைத்தான், பாஜகவை எதிர்ப்பதாகச் சொல்லிக்கொள்ளும் மாநிலக் கட்சிகளும் செய்து வருகின்றன.

மாநிலத்தையே கட்டியாளும் அரசால், தனது பணியாளர்களைத் தேர்வு செய்யும் தேர்வைத் தானே நடத்த முடியாதா? அரசால் முடியும்! ஆனால் அது ஏற்றுக்கொண்டிருக்கும் தனியார்மயக் கொள்கை அதனைச் செய்யவிடாது. தனியார் தேர்வு முகமைகளிடம் இந்தத் தேர்வு நடத்தும் பணியை அவுட்சோர்சிங் (Outsourcing) செய்து, தனியார் முதலாளிகள் கொள்ளையடிக்க ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது அரசு. இந்தத் தனியார் நிறுவனங்கள் கோச்சிங் சென்டர்களுடன் அல்லது பிற குற்றக் கும்பல்களுடன் பிணைப்பு வைத்துக்கொண்டு, வினாத்தாள் கசியவிடுவது போன்ற முறைகேடுகளைச் செய்கின்றன. இதுதான் கடுமையாக உழைத்துத் தேர்வு எழுதும் மாணவர்களின் வாழ்க்கையைக் காவு வாங்குகிறது. இந்த அநீதியான தேர்வு அமைப்பை மாற்றியமைக்கும் போக்கை நோக்கித்தான் இந்த மாணவர்களின் போராட்டம் இருக்கிறது.

  • கலைச்செல்வன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன