பொது சிவில் சட்டம் – இந்துராஷ்டிரத்தை நிறுவத்துடிக்கும் காவிகள்!

செப்டம்பர் 29, 2026
காவிகளின் நீண்டகால அரசியல் நிகழ்ச்சி நிரலில் முக்கிய இடம் பெற்றிருந்த பாபர் மசூதியை இடித்துவிட்டு அயோத்தியில் இராமர் கோவிலைக் கட்டிவிட்டார்கள். அதேபோல், ஜம்மு–காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை இரத்து செய்துவிட்டு, அந்த மாநிலம் ஜம்மு–காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாகப் பிரித்துவிட்டார்கள். இந்நிலையில், தங்களது நீண்டகால நிகழ்ச்சி நிரலின் அடுத்த கட்டமாகவும் இறுதி இலக்காகவும் கருதப்படும் பொதுச் சிவில் சட்டத்தை நிறைவேற்றத் துடிக்கிறார்கள்.

இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட மொழி, இனம், பண்பாடு, வாழ்வியல் மரபுகளை ஒடுக்கி, அவற்றுக்குப் பதிலாக இந்துத்துவ அடிப்படையிலான ஒரே தேசிய அடையாளத்தை முன்னிறுத்தி, இந்துராஷ்டிர இந்தியாவைக் கட்டியமைப்பதே பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதன் உண்மையான நோக்கமாகும். பிரிட்டிஷ்–இந்திய ஆட்சிக்காலம் முதலே சநாதனிகள் இத்தகைய ஒருமைப்பாட்டுக் கருத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். இந்தியாவின் பன்முகத்தன்மையை விட ஒரே மத–பண்பாட்டு அடையாளத்தை மேலோங்கச் செய்வது தான் அவர்களின் நீண்டகால நோக்கங்களில் ஒன்றாக இருந்து வந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, காவிகளின் நீண்டகால அரசியல் நிகழ்ச்சி நிரலில் முக்கிய இடம் பெற்றிருந்த பாபர் மசூதியை இடித்துவிட்டு அயோத்தியில் இராமர் கோவிலைக் கட்டிவிட்டார்கள். அதேபோல், ஜம்மு–காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை இரத்து செய்துவிட்டு, அந்த மாநிலம் ஜம்மு–காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாகப் பிரித்துவிட்டார்கள். இந்நிலையில், தங்களது நீண்டகால நிகழ்ச்சி நிரலின் அடுத்த கட்டமாகவும் இறுதி இலக்காகவும் கருதப்படும் பொதுச் சிவில் சட்டத்தை நிறைவேற்றத் துடிக்கிறார்கள்.

இதனடிப்படையில் தான், 2023-ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசம் போபாலில் பேசிய அமித்ஷா, அயோத்தி இராமர் கோயில், குடியுரிமை திருத்தச் சட்டம், காஷ்மீரின் 370-வது பிரிவு, முத்தலாக் உள்ளிட்ட பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிட்டதாகவும், அடுத்ததாக பொது சிவில் சட்டத்தின் மீது கவனத்தை குவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல் உத்தரகாண்ட் சட்டமன்றத் தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி அங்கு UCC நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், உத்தரகாண்டைத் தொடர்ந்து பாஜக ஆளும் பிற மாநிலங்களிலும் சட்டப்பேரவைகள் மூலம் படிப்படியாக பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்றார்.

அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் (13.09.2026) மும்பையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமித்ஷா, ”தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆட்சியில் உள்ள 21 மாநிலங்களிலும் 2029-ஆம் ஆண்டுக்குள் பொது சிவில் சட்டம் (UCC) அமல்படுத்தப்படும்” என்று கூறியுள்ளார். மேலும், பொது சிவில் சட்டம் ஏற்கனவே பல மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் அனைத்து மாநிலங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.

இந்த விடயங்களில் இருந்தே ஆர்எஸ்எஸ்–பாஜக கும்பலின் நூற்றாண்டு காலக் கனவைப் புரிந்துகொள்ள முடியும். இருந்தபோதிலும், பொது சிவில் சட்டம் (UCC) உண்மையிலேயே இந்திய மக்களிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, அனைவருக்கும் பொதுவானக் கிரிமினல் சட்டம் இருப்பதைப் போல, அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற உண்மையான நோக்கத்தில்தான் கொண்டுவரப்படுகிறதா என்பதை ஆராய்வது அவசியம்.

இந்தியா உண்மையான மதச்சார்பற்ற நாடென்றால் எல்லா இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டியதுதானே என்ற பாஜகவின் கேள்விக்கு, அதன் எதிர்ப்பாளர்களால் முகம் கொடுக்க முடியவில்லை. எனவே இது முசுலீம்களுக்கு ஆதரவான போலி மதச்சார்பின்மை என்ற பாஜகவின் வாதம் பெரும்பான்மை ‘இந்து’க்களிடம் எடுபடுகிறது.

“அரசு மற்றும் சிவில் சமூகத்தின் மீது எவ்வித அதிகாரமும் செலுத்தவியலாமல் மதத்தைத் துண்டிப்பது” என்ற மதச்சார்பின்மைக் கோட்பாட்டுக்குப் பதிலாக, அனைத்து மதங்களையும் சமமாக நடத்துவது என்ற மோசடியான விளக்கம் இந்திய மதச்சார்பின்மைக்குத் தரப்பட்டுள்ளது. பாஜக இந்த விளக்கத்தை முன்வைத்து, ஒருபுறம் அரசியலிலிருந்து மதத்தைப் பிரிக்கக் கூடாது என்றும், மறுபுறம் குடும்பத்திலிருந்து மதத்தைப் பிரிக்க வேண்டும் என்றும் கூறிவருகிறது. எனவே, இது அடிப்படையிலேயே போலி மதச்சார்பின்மை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு கையில் மசூதிகளை இடிப்பதற்குக் கடப்பாரையையும், இன்னொரு கையில் ”ஒரே நாடு – ஒரே மக்கள்” என்ற சாட்டைக் குச்சியையும் வைத்திருக்கும் பாஜக அவ்வப் போது அதைச் சொடுக்குகிறது. உடனே கிளம்புகிற முசுலீம் தலைவர்களின் எதிர்ப்புக் குரலைக் காட்டி ‘மதச்சார்பற்ற சிவில் சட்டத்தின் எதிரிகள் முசுலீம்கள் மட்டும்தான்’ என்று நிறுவுகிறது. இந்த மோசடியைப் புரிந்து கொண்டால் பாஜகவின் பெரும்பான்மை வாதம் இங்கு எடுபடாது.

வரலாற்றுப் பழி தீர்ப்பதையே தனது கொள்ளையாக அறிவித்திருக்கும் பாஜக இந்துச் சட்டத்தின் வரலாறு பற்றிச் சாதிக்கும் மவுனம் பொருள் நிறைந்தது. இந்தச் சட்டத்தொகுப்பின் தயாரிப்பின் போது நடைபெற்ற விவாதங்கள் எந்த அளவு அம்பலமாகின்றதோ, அந்த அளவு பாஜகவின் இந்து ராஷ்டிரக் கனவு சிதைந்து போகும். எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் செயற்கை முறையில் பாராளுமன்ற மண்டபத்திற்குள் ‘தயாரிக்கப்பட்ட’இந்துமதத்தின் குட்டு வெளிப்பட்டுப் போகும்.

சாதி ஆதிக்கம் மற்றும் ஆணாதிக்கத்தின் அவமானகரமானச் சின்னமாகக் காட்சியளித்த இந்துச் சட்டத்தைச் சீர்திருத்த அம்பேத்கர் முயன்றபோது அதை மூர்க்கமாக எதிர்த்தவர்கள் பாஜகவின் மூதாதைகள்தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

“இச்சமூகம் ஒரு இயக்கமற்ற சமூகமாகும். கடவுள் அல்லது சுமிருதிகள் தான் சட்டத்தை உருவாக்க வேண்டும். ஆகவே இச்சட்டங்களை மாற்றுவதில் இந்துச் சமூகத்திற்கு எந்த உரிமையும் இல்லை என்றே இச்சமூகம் நம்பி வந்தது. இதனால்தான் இந்துச் சமூகத்தில் தலைமுறை தலைமுறையாகச் சட்டங்கள் மாறாமல் இருந்து வந்தன. தங்களின் சமூக, பொருளாதார, சட்ட வாழ்க்கையை உருவாக்குவதில் தங்களுக்கு இச்சமூகம் என்றும் ஒத்துக் கொண்டதே இல்லை. முதன் முறையாக இம்மாதிரியான நடவடிக்கைகளுக்கு இந்துச் சமூகத்தை நாம் தூண்டுகிறோம்”என்று அரசியல் நிர்ணயசபை விவாதங்களின்போது அம்பேத்கர் குறிப்பிட்டார்.

“கடவுளால் உருவாக்கப்பட்டச் சட்டங்களை மாற்றுவதற்கு மனிதனுக்கு“ உரிமையில்லை என்று கூறும் முசுலீம் மதவாதிகளை இன்று கேலி செய்கின்ற இந்து மதவாதிகள் தங்கள் முதுகைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு தார மணம், ஜீவனாம்சம், பெண்ணுக்கும் சொத்துரிமை, வாரிசுச் சட்ட திருத்தம் போன்ற சில திருத்தங்களை உள்ளடக்கிய இந்துச் சட்ட மசோதாவை 1951-இல் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார் அன்றைய சட்ட அமைச்சர் அம்பேத்கர்.

காங்கிரசுக்குள்ளிருந்த இந்து மகாசபையினரும் சநாதனிகளும் சர்தார் பட்டேலின் தலைமையில் இம்மசோதாவை மூர்க்கமாக எதிர்த்தனர். இம்மசோதா நிறைவேற்றப்பட்டால் தான் ராஜிநாமா செய்து விடுவதாக மிரட்டினார் இராசேந்திரப் பிரசாத்.

இந்து மசோதா மீதான விவாத்தையே தடை செய்யத் திட்டமிட்ட சநாதனக் கும்பல், எல்லா மதத்தினருக்கும் சேர்த்து பொது சிவில் சட்டம் கொண்டு வரக்கோரி பிரச்சினையைத் திசை திருப்பியது. அதன் மூலம் முசுலீம்களையும் தூண்டிவிட்டு இந்துச் சட்டத்திற்குச் சமாதி கட்ட முயன்றது.

“இந்துச் சட்ட மசோதாவை எதிரிப்பவர்கள் ஒரே நாளில் பொது சிவில் சட்டத்தின் தீவிர ஆதரவாளர்களாக மாறிவிட்டது எனக்கு வியப்பளிக்கிறது” என்று அவர்களின் முகத்திரையைக் கிழித்தார் அம்பேத்கர்.

பலதார மணம், வைப்பாட்டி முறை ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த இந்துப் பெண்களின் நலனை முன்னிட்டுக் கொண்டு வரப்பட்ட இம்மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றத்தின் வாயிலில் பெண்களைத் திரட்டை ஆர்ப்பட்டமொன்றை நடத்தி அரசை மிரட்டினார்கள், பாஜகவின் மூதாதைகள்.

திருமணம் மற்றும் மணவிலக்கு பற்றிய பிரிவை மட்டும் தனி மசோதாவாக ஆக்கிவிட்டு, மற்றவற்றைக் கைவிடலாம் என்ற சமரச யோசனையை அம்பேத்கர் ஏற்றார். ஆனால், மசோதாவின் இந்தப் பகுதிகூட நிறைவேற்றப்பட முடியாமல் கைவிடப்பட்டது. இந்நிலையில்தான், அமைச்சராகத் தொடர்ந்து நீடிப்பதில் அர்த்தமில்லை என்று கூறி அம்பேத்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காவது பகுதியில், ‘அரசின் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள்’ என்ற தலைப்பின் கீழ் உள்ள 16 சரத்துகளில் ஒன்று சட்டப்பிரிவு 44. இச்சட்டப்பிரிவு, “இந்தியா முழுவதுமுள்ள இந்நாட்டின் குடிமக்கள் அனைவரும் ஒரே சிவில் சட்டத்தினை எய்திடச் செய்வதற்கு அரசு முயல வேண்டும்” என்று கூறுகிறது.

அதாவது, ‘பொது சிவில் சட்டம் என்பது அரசின் கொள்கையாகவும் அதனை சட்டமாக்குவது அரசின் கடமையாகவும் இருக்க வேண்டும்’ என்று டாக்டர் அம்பேத்கர் நமக்கு வகுத்தளித்துள்ளதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 44-ஆவது பிரிவு எனக் கொஞ்சமும் கூச்சமின்றி சநாதனிகள் கூறிவருகின்றனர்.

ஆனால், அரசியலமைப்பின் சட்டத்தின் 44-வது பிரிவு என்பது அரசின் கொள்கையை நெறிப்படுத்தும் கோட்பாடுகளில் ஒன்றாகும். இது 25-வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள மதத்தைப் பின்பற்றவும், கடைப்பிடிக்கவும், பரப்பவும் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட்டுள்ள மனச்சாட்சி மற்றும் மதச் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையைப் போன்றது அல்ல. எனவே, 44-வது பிரிவு ஒரு வழிகாட்டும் கோட்பாடு என்பதற்காக, அதனை நடைமுறைப்படுத்துவதாகக் கூறி அரசு குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் புறக்கணித்தோ, அரசியலமைப்பின் வரம்புகளை மீறியோ அவர்களை நிர்பந்திக்க முடியாது. எந்தச் சட்டமும் 25-வது பிரிவு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்கும் அரசியலமைப்பின் பிற விதிகளுக்கும் உட்பட்டே இருக்க வேண்டும்.

இது மட்டுமின்றி, 2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பி.என். சவுகான் தலைமையிலான 21-வது சட்ட ஆணையம், பொது சிவில் சட்டம் குறித்து ஓர் அறிக்கையை அளித்தது. அதில், “இந்திய நாட்டிற்கு பொது சிவில் சட்டம் அவசியம் இல்லை; தற்போதைய சூழலில் அது விரும்பத்தக்கதும் அல்ல” என்று கூறப்பட்டுள்ளது. இருந்தும், மீண்டும் பொது சிவில் சட்டத்தை 22-வது சட்ட ஆணையத்தின் மூலம் கருத்துக்கேட்பு என்ற பெயரில் அமல்படுத்துவதற்கு பாசிச ஆர்.எஸ்.எஸ்.–பா.ஜ.க. கும்பல் துடிக்கிறது.

தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் நுழையக்கூடாது; அவர்கள் ஜனாதிபதியாக இருந்தாலும் நுழைந்தால் தீட்டுக் கழிப்போம்; அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது, பார்ப்பனர்களுக்கே அதற்கான தகுதியும் உரிமையும் உண்டு; இடஒதுக்கீடு கூடாது, அப்படிக் கொடுத்தால் பார்ப்பனர் உள்ளிட்ட ‘உயர்’ சாதியினருக்கும் இடஒதுக்கீடு வேண்டும் — என எந்நேரமும் சநாதன சாதிய ஒடுக்குமுறையைத் தூக்கிப் பிடிக்கும் காவிப் பாசிச கும்பல், தேர்தல் வந்துவிட்டால் மட்டும் “அனைவரும் சமம், எல்லோரும் இந்துக்கள்” என்று கூப்பாடு போடத் தொடங்கிவிடுகிறது.

அதே இரட்டை நிலைப்பாடுதான் பொது சிவில் சட்டத்திலும் வெளிப்படுகிறது. “இந்தியா மதச்சார்பற்ற நாடு கிடையாது; இந்தியா இந்து நாடு” என்று முழங்கும் காவிப் பாசிஸ்டுகள், பொது சிவில் சட்டம் வேண்டும் என்று கேட்கும்போது மட்டும், “இந்தியா மதச்சார்பற்ற நாடு; எனவே அனைத்து மதத்தினருக்கும் ஒரே சட்டம் தேவை“ என்று இரட்டை நாக்கில் பேசத் தொடங்கிவிடுகின்றனர்.

அமித்ஷா கூறுவதுபோல் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டத்தை கொண்டுவருவதற்கு முன், முதலில் இந்து மதத்திற்குள் உள்ள அனைத்துப் பிரிவினருக்கும் பொதுவான சிவில் சட்டத்தை கொண்டுவர பாஜக தயாரா என்பதை அமித்ஷா தெளிவுபடுத்தட்டும்.

ஏற்கனவே, இந்தியாவில் உள்ள பல்வேறு பிரிவினரும் “இந்து” என்ற வட்டத்திற்குள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக, இந்து தனிச்சட்டங்களில் பல்வேறு சமரசங்களும் விதிவிலக்குகளும் செய்யப்பட்டுள்ளன. இதற்கு திருமணம் மற்றும் வாரிசுரிமை ஆகிய இரண்டு விஷயங்களைப் பற்றி மட்டும் இங்கே பார்க்கலாம்.

திருமணத்தைப் பொறுத்தவரை, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாழும் இந்து சமூகங்களிடம் வெவ்வேறு திருமண மரபுகளும் நடைமுறைகளும் இருந்து வருகின்றன. சில சமூகங்களின் பாரம்பரிய திருமண முறைகளுக்கு சட்டத்தில் விதிவிலக்குகளும் அங்கீகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், வாரிசுரிமையிலும் மருமக்கள்வழி, அலியசந்தானா போன்ற பிராந்திய மற்றும் சமூக மரபுகளுக்கு வரலாற்று ரீதியாகத் தனித்த சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக:

தந்தை வழி வாரிசுரிமை மற்றும் கூட்டுக் குடும்பம் என்ற கோட்பாட்டையே இந்து சட்டம் பின்பற்றுகிறது. எனினும் கேரளத்தில் சில சமூகத்தினர் மத்தியில் நிலவும் “மருமக்கள்வழி“ மற்றும் “அலியசந்தானா“ எனும் தாய்வழிக் குடும்ப முறையும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, இந்துச் சட்டத்தால் தடை செய்யப்பட்ட மண உறவுகளில் (அதாவது சிறிய தந்தையின் மகனை அல்லது மகளை மணம் செய்யக்கூடாது என்பன போன்றவை) பழங்குடியினர் மற்றும் சில சமூகத்தினர் திருமணம் செய்வது நீண்டகால மரபாக இருப்பதால் அதுவும் இந்துச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கோவா மாநில இந்துக்களில் சில பிரிவினரிடையே நிலவும் இருதார மணமும் சட்டத்தால் அங்கீகரிக்கட்டுள்ளது. ஒருதார மணச் சட்டம் அவர்களுக்குச செல்லாது. அண்ணன் மறைவிற்குப் பின் அவரது மனைவியைத் தம்பி திருமணம் செய்து கொள்ளலாம் என்ற ஜாட் சாதியினரின் மரபும் இந்துச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒருதார மணச் சட்டம் இங்கேயும் செல்லாது.

கேரளத்து மாப்ளா முசுலீம்களும், சித்தூர் மாவட்ட கிறித்தவர்களில் சிலரும் (வன்னியர்கள்) வாரிசுரிமை குறித்த பிரச்சினையில் மட்டும் அவர்களது மரபுப்படி இன்றும் இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ்தான் வருகின்றனர்.

தனது பண்பாட்டுக்கு எள்ளளவும் தொடர்பற்ற குலமரபுகளையும், பண்பாடுகளையும் இந்துச் சட்டத் தொகுப்பிற்குள் பார்ப்பனியம் ஏன் அனுமதித்தது என்ற கேள்வி இங்கே எழலாம். மரபுகள் மற்றும் பண்பாடுகள் விசயத்தில் பார்ப்பனியம் தனக்குள்ளேயே வட்டார ரீதியாகப் பிளவுபட்டிருந்தது. மேலும், பார்ப்பனியப் பண்பாட்டின் எல்லைக்கு வெளியே இருந்த பலதரப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதியினரின் உட்குழுப் பண்பாட்டில் ‘வரம்பு’மீறி தலையிடுவதன் மூலம் ‘இந்து ஒற்றுமை’என்ற தனது அரசியல் நோக்கத்திற்குக் கேடு விளைவித்துக் கொள்ள இந்திய ஆளும் வர்க்கம் விரும்பவில்லை.

அப்படியானால், “அனைவருக்கும் ஒரே சிவில் சட்டம்” என்று பேசும் பாஜக, முதலில் இந்துக்கள் என்ற ஒரே வட்டத்திற்குள் இருக்கும் பல்வேறு பிரிவினருக்கும் ஒரே திருமணச் சட்டமும், ஒரே வாரிசுரிமைச் சட்டமும் கொண்டுவரத் தயாரா? என்பதை அமித்ஷா தெளிவுபடுத்தட்டும்.

இந்தக் கேள்விக்கு பதில் சொல்லாமல், கொல்லைப்புறம் வழியாக நீதிமன்றத் தீர்ப்பு மூலம் பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுத்தி, அதே இடத்தில் இராமர் கோயிலைக் கட்ட அனுமதி பெற்றதும், இராணுவத்தைப் பயன்படுத்தி “தேசநலன்” என்ற பெயரில் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு, ஜம்மு–காஷ்மீரின் 370-வது பிரிவை இரத்து செய்து, அதனை ஜம்மு–காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகத் துண்டாடியதையும் எவராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. அதேபோல், தற்போது 22-வது சட்ட ஆணையத்தின் மூலம் கருத்துக்கேட்பு நடத்தி, பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றிவிடுவார்கள் என்பதிலும் எந்தவித ஐயமுமில்லை.

இந்தச் சட்டம் நிறைவேறினால், இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைப்பதோடு, இசுலாமியர், கிறித்துவர், சுயமரியாதை, புரட்சிகரத் திருமணங்களுக்கான சட்ட அங்கீகாரமும் இரத்து செய்யப்பட்டு, “ஒரே திருமண முறை” என்ற பெயரில் புரோகிதத் திருமண முறை சட்டமாக்கப்படும் ஆபத்து உள்ளது. இதன் மூலம் பல்வேறு பண்பாடுகள், பழக்கவழக்கங்கள், திருமண முறைகள், வழிபாட்டு முறைகள் மற்றும் பகுத்தறிவுப் பண்புகளைக் கொண்ட இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாடு அச்சுறுத்தலுக்குள்ளாகி, அவை படிப்படியாக ஒழித்துக்கட்டப்படும்.

இதற்கு எதிராக, இந்திய மக்கள் அனைவரும் சாதி, மத, இனம், மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒன்றுபடுவோம்! நாட்டின் ஒட்டுமொத்த உழைக்கும் ஏழை–எளிய மக்களின் உரிமைகளையும், இந்தியாவின் பன்முகத்தன்மையையும் சிதைத்து, பொது சிவில் சட்டம் என்ற பெயரில் இந்துராஷ்டிரத்தைத் திணிக்க எத்தனிக்கும் காவிக் கும்பலின் முயற்சிகளை முறியடிப்போம்! மக்களின் ஒற்றுமையையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க ஒன்றுபட்டு நின்று போராடுவோம்!

  • மகேஷ்

செய்தி ஆதாரம்:

https://www.indiatoday.in/india/story/uniform-civil-code-ucc-implemented-in-all-21-nda-states-before-2029-home-minister-amit-shah-mumbai-press-conference-2993738-2026-09-13

https://newsonair.gov.in/hm-amit-shah-says-bjp-led-nda-governments-in-21-states-will-introduce-uniform-civil-code-before-2029/

https://senkanal.com/index.php/2024/02/12/ucc-in-uttarakhand/

https://senkanal.com/index.php/2023/03/30/prof-gopal-mohan-on-judiciary/

https://senkanal.com/index.php/2022/12/05/uniform-civil-code-in-bjp-states/

https://senkanal.com/index.php/2023/06/28/uniform-civil-code-next-agenda-of-fascist-forces/

https://www.vikatan.com/government-and-politics/policy/what-are-the-consequences-of-public-civil-law

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன