தனியார்மயத்தைத் தீவிரப்படுத்தும் தவெகவின் பட்ஜெட் – 1: மாணவர் விடுதிகளில் தனியார்மயம்
நடந்துவரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் 2026ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் தவெக அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் தொலைநோக்குப் பார்வையுடன் அனைத்துத் தரப்பு மக்களின் முன்னேற்றத்துக்கும் புதிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக விஜய் பாராட்டியிருக்கிறார். அதேசமயம் இது தங்களது முந்தைய அரசின் திட்டங்களுக்குப் பெயரை மாற்றி ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பட்ஜெட் என திமுக மற்றும் அதிமுக கட்சிகள் விமர்சனம் செய்திருக்கின்றன.
பொதுவாக இந்த பட்ஜெட் குறித்துப் பேசுபவர்கள் தவெக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளான, மகளிர் உதவித் தொகையை ₹2,500 ஆக உயர்த்துவது, வருடத்திற்கு 6 சிலிண்டர் இலவசமாக கொடுப்பது உள்ளிட்ட பல விடுபட்டுள்ளதைச் சுட்டிக்காட்டுகின்றனர். தவெகவும், அதன் அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணிக்கட்சிகளும் இந்த பட்ஜெட்டையும் அதில் அறிவிக்கப்பட்டுள்ள தாய்மாமன் சீர், அண்ணன் சீர் உள்ளிட்ட திட்டங்களையும் பாராட்டிப் பேசுகின்றன.
அதேசமயம் இந்த பட்ஜெட்டில் பல்வேறு அரசுத் துறைகளைத் தனியார்மயமாக்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருப்பது கவனம் பெறவில்லை அல்லது மிகக் குறைந்த அளவிலேயே விவாதிக்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் கூட்டு (PPP) மாதிரி என்ற பெயரில் கல்வி, மின்சாரம், போக்குவரத்து, வீட்டு வசதி ஆகிய அரசுத் துறைகள் அனைத்திலும் தனியார்மயம் புகுத்தப்படவிருக்கிறது.
பள்ளிக் கல்வித்துறையைப் பொருத்தவரை இந்த ஆண்டுக்கு ₹44,527 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி மாத இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு ₹48,534 கோடி என மதிப்பிடப்பட்டிருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது தற்போதைய பட்ஜெட்டில் ₹4,000 கோடி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவே கடந்த 2025-26ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டுடன் ஒப்பிடும்போது ₹2,000 கோடி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வித்துறையில் தனியார்மயத்தைப் புகுத்தும் நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு சுடர் என பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் ஒரு இலட்சம் படுக்கை வசதிகளுடன் கூடிய, 200 புதிய மாணவர் விடுதிகள் தனியார் பங்களிப்புடன் கட்டப்படும் என்று கூறப்பட்டுள்ளது. “தமிழ்நாடு மாணவர் தங்கும் விடுதி மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனம்” என்ற புதிய நிறுவனம் ஒன்று இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. ₹3,200 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டில் கொண்டுவரப்படும் இந்த திட்டத்தில் தமிழக அரசு ₹640 கோடி, அதாவது திட்ட மதிப்பீட்டில் 20 சதவீதத்தை மூலதன மானியமாக வழங்கும்; மீதமுள்ள 80 சதவீதமான ₹2,560 கோடியை PPP முறையில் தனியார் முதலாளிகள் முதலீடு செய்வார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கு ₹10 கோடி ஒதுக்கியிருக்கும் தமிழ்நாடு அரசு அடுத்த இரண்டு ஆண்டுகளில் மீதமிருக்கும் ₹630 கோடியும் ஒதுக்கப் போவதாக அறிவித்திருக்கிறது.
அரசே மாணவர் விடுதிகளைக் கட்டி இயக்கும் தற்போதைய நடைமுறை போல் இல்லாமல், தனியார் நிறுவனங்கள் இனி மாணவர் விடுதிகளைக் கட்டி, அவற்றை இயக்கும் வேலையைச் செய்யவிருக்கின்றன.
குளிர்சாதன வசதிகளுடன் கூடிய படிக்குமிடங்கள், 24 மணி நேரப் பாதுகாப்பு, சுகாதாரமான சமையலறை, நவீன தங்குமிடம் என சகல வசதிகளுடன் உருவாக்கப்படும் இந்த மாணவர் விடுதிகளுக்கான சேர்க்கை என்பது “பன்முகத்தன்மை மற்றும் சமூக சமத்துவத்தை” ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மென்பொருள் மூலம் மாணவர்களுக்கு விடுதி இடங்களைத் தானாக ஒதுக்கும் அமைப்பு பயன்படுத்தப்படும் எனவும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே ஆயிரக்கணக்கான மாணவர் விடுதிகளை அரசே நடத்தி வருகிறது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை 1,350 மாணவர் விடுதிகளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை 500க்கும் மேற்பட்ட மாணவர் விடுதிகளையும் நடத்தி வருகின்றன. இதில் பெரும்பாலான விடுதிகளின் கட்டிடங்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல் பழுதடைந்து கிடக்கின்றன. இந்த விடுதிகளில் கொடுக்கப்படும் உணவின் தரம் மிகவும் மோசமானதாக இருப்பதாக மாணவர்கள் தொடர்ந்து புகாரளித்து வருகின்றனர்.
சமீபத்தில் சென்னையில் உள்ள எம்.சி.ராஜா சமூகநீதி மாணவர் விடுதிக்கு ஆய்வுக்குச் சென்ற முதலமைச்சர் விஜயிடமே மாணவர்கள் விடுதியில் வழங்கப்படும் உணவில் புழுக்கள் மற்றும் பூச்சிகள் இருப்பதாகப் புகாரளித்தனர். போதுமான குடிநீர் வசதி இல்லை, கழிப்பறைகள் சுத்தமாக இல்லை, பணியாளர்கள் பற்றாக்குறை எனப் பல பிரச்சினைகளை மாணவர்கள் முதலமைச்சரிடம் பட்டியலிட்டனர்.
இந்த எம்.சி. ராஜா விடுதியின் புதிய 10 மாடிக் கட்டிடம் ₹44.50 கோடி செலவில் கட்டப்பட்டு, 2025 ஏப்ரல் 14 அன்று திறக்கப்பட்டது; மாநிலத்தின் தலைநகரில், புதிதாகக் கட்டப்பட்ட நவீன அரசு விடுதியிலேயே உணவு, சுகாதாரம், பாதுகாப்பு, பணியாளர் பற்றாக்குறை போன்ற நிர்வாகப் பிரச்சினைகள் இருப்பதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அப்படியென்றால் மற்ற பகுதிகளில் பழைய கட்டிடங்களில் இயங்கும் அரசு விடுதிகள் குறித்துச் சொல்ல வேண்டியதில்லை.
இதுபோன்ற அரசு விடுதிகளில் உணவுக்கு ஒரு மாணவருக்கு மாதம் ₹1,000 ரூபாயை அரசு ஒதுக்குகிறது. அதாவது நாளொன்றுக்கு சராசரியாக ₹33. இவ்வளவு குறைவான தொகையைக் கொண்டு அரசு வெளியிட்டுள்ள உணவுப் பட்டியலில் உள்ள படி காலை, மதியம், மாலை, இரவு என நான்கு வேளையும் சத்தான உணவை நிச்சயமாக வழங்க முடியாது.
இந்நிலையில், ஏற்கெனவே இயங்கி வரும் அரசு விடுதிகளின் கட்டமைப்பைப் புதுப்பிக்கவும், உணவின் தரத்தை மேம்படுத்தவும், போதுமான பணியாளர்களை நியமிக்கவும் நிதியை அதிகரிப்பதற்குப் பதிலாக, அரசு ₹3,200 கோடி மதிப்பிலான 200 புதிய விடுதிகளை PPP முறையில் உருவாக்க முனைகிறது. அவற்றைக் கட்டுவதற்கு மட்டுமல்லாமல், இயக்குவதற்கும் தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. ஏற்கெனவே உள்ள பொதுக் கட்டமைப்பைச் சரிசெய்வதற்குப் பதிலாக, பொதுப் பணத்தைப் பயன்படுத்தி தனியார் முதலீட்டை ஈர்த்து புதிய மாணவர் விடுதிக்கான சந்தையை உருவாக்குவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கமாக இருக்கிறது.
அரசு PPP முறையைத் தேர்ந்தெடுப்பதற்குக் கூறும் முக்கிய காரணம், மிகப்பெரிய அளவிலான உள்கட்டமைப்பை குறைந்த அரசுச் செலவில் உருவாக்க முடியும் என்பதாகும். தமிழ்நாடு மாநில அரசால் தற்போது ₹3,200 கோடி நிதி ஒதுக்கி ஒரு இலட்சம் படுக்கை வசதி கொண்ட 200 விடுதிகளை உடனடியாகக் கட்டும் திட்டத்தைத் தொடங்க இயலாது என்பதாலும், தனியார் துறையின் கட்டுமானத் திறனையும் நிர்வாகத் திறனையும் பயன்படுத்துவதன் மூலம் சிறப்பான சேவையை மாணவர்களுக்கு வழங்க முடியும் எனவும் PPP மாதிரிக்கு ஆதரவாக வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
அப்படியென்றால் இந்த திட்டம் முழுவதையும் தனியார் முதலாளிகளின் கைகளில் விட்டிருக்கலாம். ஆனால் மாணவர் விடுதி போன்ற திட்டங்களில் தனியார் முதலாளிகள் முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள் என்பதால் அவர்களை ஈர்ப்பதற்காக திட்டச் செலவில் 20 சதவீதத்தை அரசு மூலதன மானியமாக கொடுக்கிறது.
அதாவது, இந்தத் திட்டத்தில் அரசு முன்வைத்திருக்கும் PPP மாதிரி என்பது அரசு-தனியார் கூட்டு என்ற பெயரில் இருதரப்பும் சமமாகப் பங்களிக்கும் முறை அல்ல. தனியார் நிறுவனங்கள் முழுமையான மூலதனத்தை முதலீடு செய்து விடுதிகளைக் கட்டி நடத்துவதற்குப் பதிலாக, அரசு அவர்களுக்குச் சலுகையாக/மானியமாக மொத்த மூலதனத்தில் 20 சதவீதத்தைக் கொடுத்து அவர்களைத் தொழில் நடத்த அழைக்கிறது.
தனியார் முதலாளிகள் ₹2,560 கோடி முதலீடு போட்டு கட்டிடங்களைக் கட்டி அவற்றை குறிப்பிட்ட காலத்திற்கு இயக்குவார்கள். அவர்கள் போட்ட மூலதனத்திற்கு வட்டியுடன் கூடிய இலாபத்தை எடுத்த பிறகு விடுதிகளை அரசின் கைகளில் ஒப்படைத்துவிடுவார்கள்.
தனியார் நிறுவனங்கள் இந்த இலாபத்தை எவ்வாறு எடுப்பார்கள் என்பதுதான் இங்கே முக்கியமான விஷயம். அந்த நிறுவனங்கள் விடுதிக் கட்டணங்களின் மூலமாக மாணவர்களிடமிருந்து வசூலித்துத்தான் இந்தப் பணத்தை எடுக்க முடியும். தற்போது ₹640 கோடி வழங்குவது போல எதிர்காலத்தில் முதலாளிகளின் இலாபத்தை உறுதி செய்வதற்காக மாணவர்களின் கட்டணங்களை முழுமையாகவோ பகுதியளவிற்கோ அரசு ஏற்பதற்கு முன்வரலாம். அந்த வகையில் பார்த்தால் கட்டிடங்களைக் கட்டுவதற்கு மட்டுமல்ல, முதலாளிகளின் முதலீட்டை வட்டியுடன் திரும்பச் செலுத்துவதற்காகவும் அரசு மக்கள் பணத்திலிருந்து எடுத்துக் கொடுக்க வேண்டியிருக்கும். இவ்வாறு காதைச் சுற்றிப் சாப்பிடுவதற்குப் பதிலாக அரசே விடுதிகளைக் கட்டி இயக்கிவிடலாம்.
இந்தத் திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டிய மற்றொரு முக்கியமான அம்சமும் உள்ளது. புதிய விடுதிகளில் மாணவர்களுக்கு இடங்களை “பன்முகத்தன்மை மற்றும் சமூக சமத்துவத்தை” ஊக்குவிக்கும் வகையில் மென்பொருள் மூலம் தானாக ஒதுக்கும் அமைப்பு பயன்படுத்தப்படும் என்று பட்ஜெட் கூறுகிறது. இந்த வார்த்தைகள் மேலோட்டமாகப் பார்க்கும்போது சமூகநீதியைப் பாதுகாப்பதாகத் தோன்றினாலும், இதன் நடைமுறை விளைவுகள் குறித்து தீவிரமான கேள்விகள் எழுகின்றன.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே இயங்கி வரும் அரசு மாணவர் விடுதிகள் வெறுமனே அனைவருக்கும் பொதுவான தங்குமிடங்களாக உருவாக்கப்பட்டவை அல்ல. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் உள்ளிட்ட சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்கு உதவும் வகையில் சமூகநீதி அடிப்படையில் உருவாக்கப்பட்ட அமைப்புகளாகவே இவ்விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், குறிப்பிட்ட சமூகங்களுக்கான அரசு விடுதிகளில் அவர்களுக்கென வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு என்பது வெறும் தங்குமிட ஒதுக்கீடு அல்ல; வரலாற்று ரீதியாக கல்வியிலும் சமூகத்திலும் பின்தங்கிய சமூகங்களுக்கு அரசு வழங்கும் ஒரு சமூகநீதி பாதுகாப்பாகும்.
ஆனால் “பன்முகத்தன்மை” மற்றும் “சமூக சமத்துவம்” என்ற பெயரில், இந்த சமூகநீதி அடிப்படையிலான இலக்கு சார்ந்த விடுதி முறைக்கு மாற்றாக அனைத்து சமூகத்தினருக்கும் பொதுவான விடுதிகளை உருவாக்கி, மென்பொருள் மூலம் இடங்களை ஒதுக்கும் முறை கொண்டுவரப்படுமானால், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சமூக அடிப்படையிலான இடஒதுக்கீடுகள் எவ்வாறு பாதுகாக்கப்படும் என்பது முக்கியமான கேள்வியாகிறது. புதிய அமைப்பில் சமூகநீதிக்கான இடஒதுக்கீடுகள் தெளிவாக உறுதி செய்யப்படாவிட்டால், “அனைவருக்கும் பொதுவானது” என்ற பெயரில் ஏற்கெனவே பின்தங்கிய சமூகங்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்புகள் படிப்படியாக நீர்த்துப்போகும் அபாயம் உள்ளது.
அதைவிட முக்கியமாக, இந்த விடுதிகள் தனியார் நிறுவனங்களால் கட்டப்பட்டு இயக்கப்படவிருக்கின்றன. அவற்றின் கட்டுமானத்திற்கே அரசு ₹640 கோடியை மூலதன மானியமாக வழங்குகிறது. இந்நிலையில், மாணவர்களிடம் எவ்வளவு விடுதிக் கட்டணம் வசூலிக்கப்படும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு என்ன சலுகை வழங்கப்படும், அரசின் உதவித்தொகை அல்லது கட்டண மானியம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பவை தெளிவுபடுத்தப்பட வேண்டியவை. இல்லையெனில், குளிர்சாதன வசதியுடன் கூடிய படிப்பறை, நவீன தங்குமிடம், 24 மணி நேரப் பாதுகாப்பு போன்ற வசதிகள் பணம் செலுத்தும் திறன் கொண்ட மாணவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் சிறப்புச் சேவைகளாக மாறும் அபாயமும் உள்ளது.
அதாவது, ஒருபுறம் சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டிருந்த இலக்கு சார்ந்த அரசு விடுதி முறையை “பன்முகத்தன்மை” என்ற பெயரில் பொதுவான முறையாக மாற்றும் அபாயம்; மறுபுறம், அந்தப் பொதுவான விடுதிகளை தனியார் நிறுவனங்கள் இயக்குவதன் மூலம் அவற்றை கட்டண அடிப்படையிலான சேவையாக மாற்றும் அபாயம். இதன் விளைவாக சமூகநீதிக்காக உருவாக்கப்பட்ட அரசு விடுதி என்ற கருத்தே, அனைவருக்கும் பொதுவானது என்ற பெயரில் சந்தை சார்ந்த விடுதி சேவையாக மாற்றப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.
மாணவர் விடுதி என்பது ஒரு வணிகப் பொருள் அல்ல; அது மாணவர்களின் கல்வியைத் தொடர்வதற்குத் தேவையான அடிப்படை நலச் சேவை. பொருளாதார வசதி இல்லாத மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர்வதற்காகவே அரசு விடுதிகள் உருவாக்கப்பட்டன. எனவே, இந்த விடுதிகளை அமைப்பதன் நோக்கம் அவற்றிலிருந்து தனியார் நிறுவனங்கள் முதலீட்டையும் இலாபத்தையும் ஈட்டுவதல்ல; மாணவர்களுக்கு பாதுகாப்பான தங்குமிடம், தரமான உணவு, சுகாதாரம் மற்றும் கல்விச் சூழலை உறுதி செய்வதே அரசின் பொறுப்பு.
ஆனால், மாணவர் விடுதிகளைக் கட்டுவதற்கும் இயக்குவதற்கும் தனியார் நிறுவனங்களை அழைத்து, அவர்களது முதலீட்டிற்கு வருவாயையும் இலாபத்தையும் உறுதி செய்யும் வகையில் PPP முறையைப் புகுத்துவது, மாணவர் தங்குமிடத்தையே ஒரு சந்தையாக மாற்றுவதற்கான நடவடிக்கையாகும். அரசு தனது நேரடி பொறுப்பிலிருந்து விலகி, பொதுப் பணத்தைப் பயன்படுத்தி தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் இந்த அணுகுமுறை, கல்வியை அரசின் சமூகப் பொறுப்பாகப் பார்ப்பதற்குப் பதிலாக அதை முதலீடு மற்றும் இலாபத்திற்கான துறையாகப் பார்க்கும் கொள்கையின் வெளிப்பாடாகும்.
ஏற்கெனவே அரசு நடத்தி வரும் விடுதிகளில் உணவு, சுகாதாரம், கட்டமைப்பு, பணியாளர் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கும்போது, அவற்றைச் சரிசெய்ய வேண்டிய நிதியை அதிகரிப்பதற்குப் பதிலாக, தனியார் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்ப்பதற்காக ₹640 கோடியை மூலதன மானியமாக வழங்கி புதிய விடுதிகளை உருவாக்குவது எதைக் காட்டுகிறது? இது மாணவர்களின் தங்குமிடப் பிரச்சினைக்கான தீர்வைத் தேடும் நடவடிக்கையா, அல்லது மாணவர் விடுதி என்ற புதிய சந்தையைத் தனியார் நிறுவனங்களுக்கு உருவாக்கித் தரும் நடவடிக்கையா?
கல்வி வணிகமயமாக்கல் என்பது பள்ளி, கல்லூரி, பயிற்சி மையம் ஆகியவற்றை மட்டும் தனியார் கைகளில் ஒப்படைப்பதல்ல. மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்குத் தேவையான ஒவ்வொரு சேவையையும் சந்தையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதும் அதன் ஒரு பகுதிதான். அந்த வகையில், மாணவர் விடுதிகளைக் கட்டுவதிலும் இயக்குவதிலும் PPP முறையைப் புகுத்தும் தமிழ்நாடு சுடர் திட்டம், கல்வியின் வணிகமயமாக்கலின் இன்னொரு வடிவமாகவே பார்க்க வேண்டியுள்ளது.
அரசின் கடமை தனியார் முதலீட்டாளர்களுக்கு புதிய சந்தைகளை உருவாக்கித் தருவது அல்ல; மாணவர்கள் எந்தப் பொருளாதாரப் பின்னணியில் இருந்து வந்தாலும் தரமான கல்வியையும் அதற்குத் தேவையான அடிப்படை வசதிகளையும் உரிமையாகப் பெறுவதை உறுதி செய்வதே. ஏற்கெனவே உள்ள அரசு விடுதிகளைச் சீரமைத்து, அவற்றின் எண்ணிக்கையை அதிகரித்து, உணவு, சுகாதாரம், பாதுகாப்பு, பணியாளர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் மேம்படுத்துவதற்குப் பதிலாக தனியார் பங்களிப்புடன் புதிய விடுதிகளை உருவாக்கும் பாதையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், தவெக அரசு கல்வியை சமூக நலத்திலிருந்து சந்தை நோக்கி மேலும் நகர்த்துகிறது.
– தொடரும்
- அழகு


