திரைகிழியும் ‘மகளிர் நலத் திட்டங்களின்’ உண்மை முகம்!
இதோ ஐ.எல்.ஓ. வெளியிட்ட ஆதாரம்!!

பெண் தொழிலாளர்களின் வருமானத்தை ஆண்களின் வருமானத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், உலகளவில் பெண்கள் சராசரியாக ஆண்களின் வருமானத்தில் 52% மட்டுமே பெறுகின்றனர்.

சமீபத்தில் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (International Labour Organization – ILO) வெளியிட்ட ஓர் ஆய்வறிக்கை, உலகளவில், இந்தியா போன்ற குறைந்த நடுத்தர வருமான நாடுகளில்தான் (Lower Middle Income Countries) ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான பாலின ஊதிய வேறுபாடு மிகவும் அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளது.

பெண் தொழிலாளர்களின் வருமானத்தை ஆண்களின் வருமானத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், உலகளவில் பெண்கள் சராசரியாக ஆண்களின் வருமானத்தில் 52% மட்டுமே பெறுகின்றனர். உயர் வருமான நாடுகளில் கூட (Higher Income Countries) பெண்கள் ஆண்களின் வருமானத்தில் 61% மட்டுமே பெறுகின்றனர். அதிர்ச்சியளிக்கும் வகையில், கீழ் நடுத்தர வருமான நாடுகளில் (LMICs) பெண்கள் ஆண்கள் பெறும் வருமானத்தில் 30 சதவீதத்திற்கும் குறைவாக மட்டுமே பெறுகின்றனர். குறிப்பாக இந்தியா, வங்கதேசம் போன்ற தெற்காசிய நாடுகளில், பெண்களின் உழைப்பின் மூலம் கிடைக்கும் வருமானம் இன்னும் ஆண்களின் வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கு (22–23%) மட்டுமே உள்ளது!

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகம்; அதாவது, இந்தியாவின் தொழிற்சாலைகளில் பணிபுரியும் மொத்தப் பெண் தொழிலாளர்களில் (16 இலட்சம்பேர்) 42% பேர் தமிழ்நாட்டில்தான் (6.8 இலட்சம்) உள்ளனர். ஆனால், 2021 தரவுகளின் படி, தமிழ்நாட்டில் ஒரு ஆண் தொழிலாளி சம்பாதிக்கும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும், ஒரு பெண் தொழிலாளி வெறும் 78.4 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கிறார். இது இந்திய சராசரியான 87.06 ரூபாயை விட குறைவாகும்! இந்தியாவிலேயே மிகவும் “வளர்ச்சியடைந்த” மாநிலமாக, “சமூகநீதி” ஆட்சியாளர்களால் ஆளப்பட்ட, ஆளப்படுகிற தமிழ்நாட்டின் நிலை இதுதான்!

மோடி தொடங்கி ஸ்டாலின், விஜய் வரை, உற்பத்தியில் பெண்களின் பங்கையும், பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கையையும் உயர்த்துவதை தங்களின் நோக்கமாக பிரச்சாரம் செய்கின்றனர். அதற்காக பல மகளிர் “நலத் திட்டங்கள்” என்ற பெயரில் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி, பெண்களை உழைப்புச் சந்தைக்குள் கொண்டுவர முயற்சி செய்கின்றனர். அது பெண்களின் சமூக – பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக மட்டுமே செயல்படுத்தப்படுகிறது என்று சத்தியம் செய்கின்றனர். வெளிநாட்டுக் கம்பெனிகளை ஈர்த்தால் மட்டுமே பெண்களின் வேலைவாய்ப்புகள் பெருகும் என்று நம் காதில் பூ சுற்றுகின்றனர்.

ஆனால், பெண்களுக்கான இலவச பேருந்து பயணம், “திறன் தமிழ்நாடு” (முன்பு திமுகவால் “நான் முதல்வன்” என்று பெயரிடப்பத்திருந்தது), “தோழி” விடுதிகள் போன்ற அனைத்துமே உலக முதலாளிகளின் கைப்பாவையான உலக வங்கி தமிழ்நாட்டிற்காக பிரத்தியேகமாக வடிவமைத்த திட்டங்களாகும். இவை திமுகவோ, தவெகவோ தொடங்கிய திட்டங்களல்ல, வெளிநாட்டு கம்பெனிகளுக்காக, முதலாளிகளுக்காக அரசு பார்க்கும் தரகு வேலை தான்! பெண்களை வேலைக்கு தயார்படுத்தி, அவர்களை தொழிற்சாலைகளுக்கு இழுத்துவந்து ஒட்டச்சுரண்டுவதற்கே இத்திட்டங்களாகும்!

இந்தியா, வங்கதேசம், ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகள் போன்ற அரைக்காலனிய, ஏழை நாடுகளில் சமூகரீதியில் பெண்களின் நிலை பின்தங்கிய நிலையில் உள்ளதால், அவர்களை முதலாளித்துவ சுரண்டலுக்கு எளிதாக ஆளாக்க முடியும், இவர்களை குறைந்த கூலிக்கு சுரண்டிக் கொழுக்கமுடியும் என்ற காரணத்திற்காகவே முதலாளிகள் இங்கு படையெடுத்து வருகின்றனர்! இந்த முதலீடுகள் நமது வளர்ச்சிக்கு போடப்படும் அடித்தளமல்ல, முதலாளியின் வளர்ச்சிக்காக போடப்படும் அடித்தளம்! உழைக்கும் மக்களுக்கு அரசும், முதலாளிகளும் தோண்டும் புதைக்குழி!

வேலை செய்யும் இடங்களில் பல பெண் தொழிலாளர்கள் சொல்லொனா துயரங்களை அனுபவிக்கின்றனர். எந்தவித வேலைப் பாதுகாப்பும் இல்லாமல், மிகக்குறைந்த கூலிக்கு பகலும் இரவும் சுரண்டப்படுகின்றனர். முதலீடுகளை ஈர்க்கும் திமுகவோ, தவெகவோ, தாங்கள் கூறிக்கொள்வதைப்போல தங்களின் நிர்வாகத் திறமையால் ஈர்ப்பதில்லை. மாறாக, உழைக்கும் வர்க்கத்தின் நலன்களை ஃபாக்ஸ்கான், ஹுண்டாய், சாம்சங் போன்ற கம்பெனிகளுக்கு படையலிட்டே அழைத்து வருகின்றனர். முதலாளியின் நலன்களை உறுதிசெய்யும் அரசு, தொழிலாளர் நலனை ஒருபோதும் உறுதிசெய்வதில்லை. இதையும் மீறி தொழிலாளர்கள் போராடினால், இக்கம்பெனிகளுக்காக குண்டர்களாக மாறி அவர்களை ஒடுக்குகிறது அரசு.

பெண் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியத்தை வழங்குவது ஒருபுறமிருக்கட்டும், ஆண்களுக்கு இணையான ஊதியத்தைக் கூட எந்த கார்ப்பரேட் நிறுவனமும் வழங்குவதில்லை! திமுக, தவெக, பா.ஜ.க, போன்ற சகல ஓட்டுக் கட்சிகளும் ‘ஆண்களுக்கு இணையாக பெண்களை உழைப்புச் சந்தைக்குள் கொண்டுவருவோம்’ என்று கூறுகின்றனரே தவிர, ஆண்களுக்கு இணையான, நியாயமான ஊதியம் கொடுக்க பன்னாட்டுக் கம்பெனிகளை நிர்ப்பந்திப்போம் என்று வாயளவிலும் கூறுவதில்லை! தனக்குப் படியளக்கும் எஜமானனை எதிர்த்து, தரகர்களால் எப்படிக் குரல் எழுப்ப முடியும்!!

  • திருமாறன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன