நீட் : தனியார்மயத்தையும் ஊழலையும் நிறுவனப்படுத்தும் தேசியத் தேர்வு
கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் (இளநிலை) 2026 நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் இராஜஸ்தானில் முன்கூட்டியே கசிந்தது தொடர்பான செய்திகள் வெளியானதை அடுத்து, ஒன்றிய அரசின் ஒப்புதலோடு இத்தேர்வை நடத்தி வரும் தேசியத் தேர்வு முகமை (என்.டி.ஏ), நடந்து முடிந்த நீட் தேர்வு இரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. மேலும், இந்தத் தேர்வு மீண்டும் நடத்தப்படும் என்றும், அதற்கான புதிய தேர்வுத் தேதிகள் மற்றும் ஹால் டிக்கெட் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிடப்படும் என்றும் என்.டி.ஏ கூறியுள்ளது.
என்.டி.ஏ தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த விவகாரத்தை முழுமையாக விசாரணை செய்ய சிபிஐ-யிடம் ஒப்படைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த விசாரணைக்கு என்.டி.ஏ முழு ஒத்துழைப்பு வழங்கும்; தேவையான அனைத்து ஆவணங்களையும் தகவல்களையும் விசாரணை அமைப்பிடம் சமர்ப்பிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளது.
இப்படி செய்திகள் வெளிவருவது முதல் முறையல்ல. கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு போட்டித் தேர்வுகளில் 89 முறை வினாத்தாள் கசிந்துள்ளதாகவும், 48 முறை மறுதேர்வு நடைபெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படி பல்லிளிக்கும் தேசியத் தேர்வு முகமையும், ஒன்றிய அரசும் சேர்ந்து கொண்டு மீண்டும் தேர்வெழுதும்படி மாணவர்களைக் கட்டாயப்படுத்துகிறது.
நாடு முழுவதும் சுமார் 23 இலட்சம் மாணவர்கள் தேர்வெழுதியுள்ள நிலையில், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஏற்படும் சிரமங்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் தேசியத் தேர்வு முகமையும், ஒன்றிய அரசும் இதற்காகக் கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்று மாணவர்களுக்குக் கருணை காட்டுவது போல அறிக்கை விடுகின்றனர்.
தேர்வு இரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து தில்லியில் என்.எஸ்.யு.ஐ மாணவர் அமைப்பு போராட்டங்களை நடத்தியது. அதில் பேசிய அமைப்பின் தேசியத் தலைவர் வினோத் ஜாக்கர், நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் வீதிகளில் இறங்கிப் போராடுகிறார்கள்; அரசாங்கம் எங்கே இருக்கிறது என்றும், கடினமாக உழைத்துத் தேர்வுக்குத் தயாரான மாணவர்களின் எதிர்காலம் விற்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
அதேபோல், நாங்கள் அடுத்த தேர்வுக்கு எப்போது தயாராக வேண்டும் என்றே தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் இதுபோல நடந்தால் எங்கள் உழைப்புக்கு என்ன மரியாதை இருக்கிறது? என நுங்கம்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி ஒருவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இப்படி மாணவர்கள் போராடுவதும் முதல் முறையல்ல. ஒவ்வொரு முறையும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இருந்தும் செவிடன் காதில் ஊதிய சங்காக தேசியத் தேர்வு முகமையும், ஒன்றிய அரசும் நடந்துகொள்கிறதே அது ஏன்? அதேபோல் பாதிக்கப்படும் பொழுது மட்டும் மாணவர்களும், பெற்றோர்களும் போராடுவதும் பின்னர் அமைதியாகிக் கல்வியில் நடைபெற்றுவரும் மாற்றங்களை அட்டியின்றி ஏற்றுக்கொள்வது ஏன்? இந்த இரண்டு கேள்விகளையும் பரிசீலிக்கும் பொழுதுதான் அரசுக்கும், மக்களுக்குமான இடைவெளியையும், அரசுக்கும் முதலாளிகளுக்குமான தொடர்பையும் புரிந்துகொள்ள முடியும். அப்படிப் புரிந்துகொள்ளப்படும் போதுதான் அதனை எதிர்த்துச் சரியான போராட்டங்களைக் கட்டியமைக்க முடியும்.
“தகுதியான திறமையான மருத்துவர்களை உருவாக்கவே நீட்டைக் கொண்டு வருகிறோம்” என்று மோடி அரசு அளந்துவிட்டதெல்லாம் அண்டப் புளுகுகள் என அம்பலமாகி நாடே நாறுகிறது. புற்றீசல் போலப் பெருகியுள்ள கோச்சிங் சென்டர்கள் பெற்றோரின் இரத்தத்தை உறிஞ்சிக் கொள்ளை இலாபமடிக்கின்றன. அனிதா தொடங்கி ஜெகதீஸ்வரன் வரையில் நீட் தேர்வால் பல மாணவர்கள் தங்களது இன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். இருந்தும் தேசியத் தேர்வு முகமையும், ஒன்றிய அரசும் நரபலி கேட்கும் நாசகரத் தேர்வான நீட் தேர்வை நடத்தியே தீருவேன் எனக் கூறி மாணவர்களின் உயிரைக் குடித்து வருகிறது.
இதுபோன்று மோசடி செய்து மக்களின் தாலியை அறுப்பது பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பலுக்குப் புதிதல்ல. இந்திய அளவில் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முதன்முதலில் 2013-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அதே ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டதால் அது சில காலம் நிறுத்தப்பட்டிருந்தது. 2014-ஆம் ஆண்டு மோடி பிரதமராகப் பதவியேற்ற பின்னர் உச்சநீதிமன்றம் நீட் தேர்வைக் கட்டாயமாக்கியது.
போட்டித் தேர்வை நடத்திய வியாபத்தின் யோக்கியதை:
2016-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் நீட் தேர்வைக் கட்டாயமாக்குவதற்கு முன்பு பாஜக ஆண்டு வந்த மத்திய பிரதேசத்தில் மருத்துவம், உயர் தொழில்நுட்பக் கல்வி மற்றும் அரசுத் துறை வேலைகளுக்கான போட்டித் தேர்வை ’மத்திய பிரதேச தொழில்முறைத் தேர்வாணையம்’ (Madhya Pradesh Professional Examination Board – MPPEB) அதன் இந்தி மொழிப் பெயர்ப்பு– வ்யாவ்சாயிக் பரிக்ஷா மண்டல் (சுருக்கமாக – வியாபம்) நடத்தி வந்தது. புரியும்படி சொன்னால் தேசியத் தேர்வு முகமைக்குத் தாய் வியாபம்.
வியாபம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் நடந்த மாபெரும் ஊழல் அப்போது வட இந்திய ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கிறதா? வியாபம் ஊழல் என்பதைச் சுருக்கமாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், தகுதியற்றவர்கள் பணம் கொடுத்தோ அல்லது வேறு குறுக்கு வழிகளிலோ அரசு வேலை அல்லது மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் இடம் பிடிப்பது என்று சொல்லலாம். இந்தத் தகுதிகளின் அடிப்படையிலேயே தேசியத் தேர்வு முகமைக்குத் தாயாகிறாள். தந்தை ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இதனை இன்னும் பருண்மையாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் முறைகேடுகளின் செயல்பாட்டு முறை (Modus Operandi) என்னவென்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
- ஆள்மாறாட்டம்: தேர்வு எழுத வேண்டியவருக்குப் பதிலாக, தேர்வு எழுதுவதையே தொழிலாகக் கொண்ட வேறு ஒரு ‘திறமைசாலி’ தேர்வை எழுதுவது. தேர்வு மைய நுழைவுச் சீட்டை போர்ஜரி செய்வது, மேற்பார்வையாளருக்கு காந்தித்தாள் சப்ளை செய்வது மற்றும் மேல் மட்ட ‘கைகளை’ கவனித்துக்கொள்வது மூலம் இது நிகழ்த்தப்படுகிறது.
- இரயில் இன்ஜின்/இரயில் பெட்டி (Engine Bogie System): தேர்வு மையத்தில் உண்மையாகவே தேர்வு எழுத வந்திருப்பவர்களுக்கு இடையில் சம்பந்தமில்லாத (ஆனால், அந்தத் துறை பற்றி நன்கு அறிந்த) ஒருவரை நுழைத்து அவர் எழுத (இன்ஜின்) மற்றவர்கள் காப்பி அடிக்க (இன்ஜினைத் தொடரும் பெட்டிகள்) செய்வது. – உதாரணமாக, ஒரு மருத்துவ நுழைவுத் தேர்வு என்றால், தேர்வு எழுத வந்த ஒருவர் 4 அல்லது 5 இலட்சம் கொடுத்து இன்னொருவரை இன்ஜினாக அமர்த்திக்கொள்ளலாம்.
- காலி விடைத்தாள்கள்: அதாவது தேர்வு எழுத வந்தவர் விடைத்தாளைக் காலியாக வைத்துவிட வேண்டும். தேர்வு நேரம் முடிந்து தேவையான மதிப்பெண்களை முதலில் வழங்கிவிடுவார்கள் – பின்னர் அரசின் பாதுகாப்பில் உள்ள அந்தக் காலித்தாள்களில் கிடைத்த மதிப்பெண்களுக்கு ஏற்றாற்போல் விடை எழுதி, அதைத் திருத்துவது போல் திருத்தி, மதிப்பெண் போடுவது போல் போட்டு – தலைசுற்றுகிறதல்லவா? ஆனால், இப்படித்தான் நடந்துள்ளது.
இப்படி வியாபம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்தது. வியாபம் ஒரு பிரம்மாண்டமான ஊழல். ஆனால், இங்கே பிரம்மாண்டம் என்பது இந்த ஊழலில் புரளும் பணத்தின் அளவை மட்டும் கொண்டு தீர்மானிக்கப்படவில்லை.
முன்னெப்போதும் இல்லாத வகையில் வியாபம் ஊழல் புகாரில் சுமார் 1800 பேர் கைது செய்யப்பட்டனர். கைது பட்டியலில் உள்ள சுமார் 300 பேர் தலைமறைவாகினர். மத்திய பிரதேச ஆளுநர் ராம் நரேஷ் யாதவ், முன்னாள் ஆர்.எஸ்.எஸ் தலைவர் கே.சி. சுதர்ஷன், ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் அவரது மனைவி சாதனா உள்ளிட்டோர் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள பெரும் புள்ளிகளில் சிலர். தமக்கு வேண்டியவர்கள், தாம் கைநீட்டி லஞ்சம் பெற்றுக்கொண்டவர்களை இந்த ‘பெரும்’ புள்ளிகள் தேர்வுகளில் வெற்றி பெற இடைத்தரகர்கள் மூலம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட 1800 பேரில் பாரதிய ஜனதாவின் முன்னாள் மாநில கல்வி அமைச்சர் லட்சுமி காந்த் ஷர்மா, ஐ.பி.எஸ் அதிகாரி ஆர்.கே. ஷிவாரே, புகழ்பெற்ற மருத்துவர் வினோத் பண்டாரி மற்றும் மத்தியப்பிரதேச மாநிலத்தின் சுரங்க முதலை சுதீர் ஷர்மா ஆகியோரும் அடங்குவர்.
அதேபோல் வேறெந்த வழக்கிலும் நடந்திராத வகையில், குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் வழக்கின் சாட்சிகள் உள்ளிட்ட 50 பேர் மர்மமான முறைகளில் இறந்துள்ளனர். அதாவது கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு இறந்தவர்களில் மாநில ஆளுநர் ராம் நரேஷ் யாதவின் மகன் சைலேஷ் யாதவும் அடங்குவார்.
2009-ஆம் ஆண்டு வியாபம் முறைகேடுகள் குறித்து முதன் முறையாகப் பொது நல வழக்கைத் தொடர்ந்த வினோத் ராய், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மட்டும் ஆண்டொன்றுக்குச் சுமார் 40,000 கோடியை இருக்கை ஒதுக்கீடுகளின் மூலம் குவிக்கிறது என்றார். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட 42 சதவீத இடங்களுக்கும் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள 43 சதவீத இடங்களுக்கும் ஏராளமான தொகை கணக்கில் காட்டாமல் வசூலிக்கப்படுகிறது. 15 சதவீத இடங்கள் (அதாவது 300) தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன – ஆக மொத்தம் மத்திய பிரதேசத்தில் மருத்துவப் படிப்பில் 100 சதவீத இடங்களும் காசு கொடுப்பவர்களுக்கே என்று இருந்துள்ளது.
இது மருத்துவத்துறையில் மட்டும்தான். இன்னும் பிற உயர் கல்வி நிலையங்களில் செய்யப்படும் இருக்கை ஒதுக்கீடுகள், போட்டித் தேர்வுகள் மூலம் அரசு வேலைகளுக்குச் செய்யப்படும் பணி நியமனங்கள் என்று தொகுப்பாகப் பார்த்தால், ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
அவ்வளவும் கருப்புப் பணம். யாருடைய ஆட்சியில்? கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகவே அவதாரம் எடுத்துள்ள மோடியின் ஆட்சியில், மோடியின் கட்சியைச் சேர்ந்த முதல்வர் ஆளும் மாநிலத்தில், ’நல்லவர்களை’ பிரசவிப்பதற்காகவே (Man making) செயல்படுவதாகப் பீற்றிக்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ்சின் பங்கேற்போடும், ஆசியோடும் தான் நடைபெற்றது.
நீட் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வு முகமையின் யோக்கியதை:
நீட் தேர்வு ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலே பல்வேறு குளறுபடிகள், மோசடிகள், வினாத்தாள் கசிவு, முறைகேடுகள் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதாவது 2013-ஆம் ஆண்டு நீட் தேர்வு முதன்முதலில் அறிமுகமானபோது தனியார் மற்றும் சிறுபான்மையினர் மருத்துவக் கல்லூரிகள் எதிர்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கில் சட்ட மற்றும் நிர்வாகக் குழப்பம் இருப்பதாகக் கூறி உச்சநீதிமன்றம் நீட் தேர்வைத் தற்காலிகமாக இரத்து செய்தது.
2016-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம், மோடி அரசின் வாதங்களை ஏற்றுக்கொண்டு நீட் தேர்வை அமல்படுத்தியது. அப்பொழுது தேர்வுக்கான கேள்விகளை சிபிஎஸ்சி பாடத்திட்டத்திலிருந்து எடுப்பதால் மாநிலக் கல்வித் திட்டத்தில் பயிலும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும், தேர்வுத்தாள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் இருப்பதால் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழி மாணவர்களுக்கும் அவரவர் மொழிகளில் வினாத்தாள் இருக்க வேண்டும், அப்பொழுதுதான் அனைத்து மாணவர்களுக்கும் சமவாய்ப்பு அளிக்க முடியும் என்றும், மாணவர்கள் தேர்வுக்குத் தயாராவதற்குக் குறுகிய கால அவகாசம் கொடுக்கப்படுகிறது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
2017-ஆம் ஆண்டு இயற்பியல் மற்றும் விலங்கியல் கேள்விகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டது. இதனால் தமிழில் தேர்வெழுதிய மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக வழக்குகள் தொடரப்பட்டன. மேலும் இதனைத் தவிர்க்கத் தேர்வெழுதிய மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இதே ஆண்டில் அனிதாவை மரணத்திற்குத் தள்ளினார்கள். இதனால் தமிழகத்தில் நீட் எதிர்ப்பு விவாதம் முன்னுக்கு வந்தது.
2019-ஆம் ஆண்டு தேர்வெழுதும் மாணவருக்குப் பதிலாக மற்றொருவர் எழுதும் (proxy Candidate) மோசடி தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்தது. குறிப்பாகத் தமிழகத்தில் தேனி மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் சர்ச்சையானது. இதற்குக் காரணமாக விரல்ரேகை மற்றும் புகைப்படப் பரிசோதனை சரியாக நடைபெறவில்லை என்று கூறினர்.
2020-ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் காரணமாகப் போதிய தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்படாமல் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவில்லை, மாணவர்கள் குறித்த நேரத்திற்குத் தேர்வு மையத்தை அடைய முடியாத நிலை, வெளியில் செல்ல முடியாமல் படிக்க முடியாமல் தேர்வை எதிர்கொள்ள வேண்டியதன் விளைவாக ஏற்பட்ட மன அழுத்தம்.
2021-ஆம் ஆண்டு சில மாநிலங்களில் ஆள்மாறாட்டமும், போலி ஆவணங்களைக் கொண்டு மருத்துவக் கல்லூரி சேர்க்கை நடைபெறுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்குக் கோச்சிங் சென்டர்களை நடத்தும் மாஃபியாக்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது.
ஜூன் 14, 2024 அன்று வெளிவரவேண்டிய நீட் தேர்வு முடிவுகள் மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஜூன் 4, 2024 அன்றே அறிவித்தது ஏன்? என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் அப்பொழுது எழுப்பப்பட்டது.
2024-ஆம் ஆண்டு பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வுக்கு முன்பே மிகப்பெரிய அளவில் வினாத்தாள் வெளியாகியது, சில மாணவர்களுக்கு மட்டும் வழக்கத்திற்கு மாறாகக் கருணை மதிப்பெண் கொடுக்கப்பட்டது, ஒரு குறிப்பிட்ட தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 6 மாணவர்கள் முழுமதிப்பெண் பெற்றிருந்தது நீட் தேர்வின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியது.
இப்படி முறைகேடுகளும், கேளிக்கூத்துகளும் நிரம்பி வழியும் நீட் தேர்வை ”தகுதியான திறமையான மருத்துவர்களை உருவாக்கவே” என்று மோடி கூறுவதை அறிவுடைய சமூகம் நிச்சயம் ஏற்காது.
அதேபோல் மோடியின் ஆசியுடன் உச்சநீதிமன்றத்தால் வழிந்து திணிக்கப்பட்ட நீட் தேர்வை அதே நீதிமன்றங்கள் வாயிலாகவே நிறுத்திவிட முடியும் எனக் கூறுவது, மக்களை நம்பவைத்துக் கழுத்தறுப்பதேயன்றி வேறொன்றுமில்லை.
மேலும், நீட் தேர்வை முழுமையாக இரத்து செய்ய வேண்டும், பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநிலங்களே மருத்துவச் சேர்க்கையை நடத்த அனுமதிக்க வேண்டும், கிராமப்புற, அரசுப் பள்ளி, தமிழ்வழி மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்கள் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஒன்றிய பாஜக அரசுக்கு விசில் அடிப்பதெல்லாம், செவிடன் காதில் ஊதிய சங்குதான்.
மோடி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், இவ்வாறு நடைபெறுவதற்கு நிர்வாகச் சீர்கேடுதான் காரணம் என்றும், இவையெல்லாம் சரிசெய்யப்படக்கூடிய விஷயங்கள்தான் என்றும் பேசிவருவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். ஏழை, எளிய மாணவர்கள் படிக்க முடியவில்லை என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் அரசியல்வாதிகள், கோச்சிங் சென்டர் என்ற பெயரில் பல இலட்சம் கோடி மக்களிடம் வழிப்பறி செய்யும் முதலைகளைப் பற்றியும், தேர்வுக்கு முன்னர் வினாத்தாள் வெளியிடுவது, ஆள்மாறாட்டம் செய்வது, தேர்வு முகமையே கருணை மதிப்பெண் கொடுப்பது, எந்தவித குற்ற உணர்வுமின்றி தேர்வை இரத்து செய்வது போன்ற விஷயங்கள் குறித்து மறந்தும் வாய்திறப்பதில்லை.
எனவே ஆட்சியாளர்களை நம்பி இனியும் பயனில்லை என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர வேண்டும். மக்கள் போராட்டங்களின் மூலம் மட்டுமே நீட் தேர்வை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறக்க வேண்டும். அதற்கு நம் முன் பல உதாரணங்கள் உள்ளன. தமிழகத்தில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டமாக இருக்கட்டும், ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிராக நடந்த போராட்டமாக இருக்கட்டும், தில்லியில் நடந்த மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிரான போராட்டமாக இருக்கட்டும், சிஏஏ-விற்கு எதிரான போராட்டமாக இருக்கட்டும், இவையனைத்தும் பெரும்பான்மையான மக்கள் போராட்டங்களின் விளைவாகவே ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்தனர் என்பது திண்ணம். வெறும் சட்டமன்றத் தீர்மானங்களோ, மசோதாக்களோ, நீதிமன்ற வழக்குகளோ இதனைச் சாதிக்கவில்லை. இது நீட்டுக்கும் பொருந்தும்.
- மகேஷ்
