மரணத்தைப் பரிசளிக்கும் பணியிடங்கள் : முதலாளிகளைப் பாதுகாக்கும் அரசு, பலியாகும் தொழிலாளர்கள்

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) கூற்றுப்படி, உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்யும் பணியிடங்களில் ஏற்படும் விபத்துகள் காரணமாகவும், வேலையில் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி ஏற்படும் நோய்கள் காரணமாகவும் மரணமடைகின்றனர். இந்தியாவில் மட்டும், மரணத்தைப் பரிசளிக்கும் பணியிடங்களின் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 48,000 தொழிலாளர்கள் மரணமடைகின்றனர்.

மனித உழைப்பின்றி இந்த உலகம் இல்லை. இந்த உலகில் எல்லாமே இயற்கையிலிருந்து பெறப்பட்டவைதான் என்றபோதும், மனிதர்கள் வாழ்வதற்கு, இன்பம் துய்ப்பதற்கு, அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்வதற்குக் காரணம் மனித உழைப்பு. மனிதனை மிருகங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது உழைப்பு மட்டுமே.

19-ஆம் நூற்றாண்டில் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 8 மணி நேர வேலை உரிமையை வலியுறுத்தி, அமெரிக்காவில் சிகாகோ நகரில் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தையும், தியாகத்தையும் நினைவுகூரும் வகையில் மே 1-ஆம் தேதி உலகம் முழுவதும் மே நாள் அல்லது சர்வதேச தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது தொழிலாளர்களின் ஒற்றுமை, உரிமைகள் மற்றும் உழைப்பை அங்கீகரிக்கும் நாளாகும்.

21-ஆம் நூற்றாண்டில் தொழிலாளர்களின் நிலை என்ன? உழைப்பிற்கேற்ற ஊதியம், படிப்பிற்கேற்ற வேலை, 8 மணி நேர வேலை, பணிப்பாதுகாப்பு என எதற்காவது உத்தரவாதம் உண்டா? குறைந்த பட்சம் 19-ஆம் நூற்றாண்டில் போராடிப் பெற்ற உரிமையையாவது நம்மை ஆண்ட அல்லது ஆளும் ஆட்சியாளர்கள் பாதுகாத்து வைத்திருக்கிறார்களா?

இல்லை என்பது நிதர்சன உண்மையாக இருக்கும் பொழுது, நம்மை ஆண்டவர்களும், ஆளுபவர்களும் யாருக்காக ஆட்சி செய்தார்கள் என்ற கேள்வி இயல்பாக எழுமல்லவா? அதற்கான விடை தேடும் முயற்சிதான் ”மரணத்தைப் பரிசளிக்கும் பணியிடங்கள் – அதனைப் பாதுகாக்கும் கருவியாக அரசு” என்ற இந்தக் கட்டுரை. இது பிரண்ட்லைனில் வந்த கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) கூற்றுப்படி, உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்யும் பணியிடங்களில் ஏற்படும் விபத்துகள் காரணமாகவும், வேலையில் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி ஏற்படும் நோய்கள் காரணமாகவும் மரணமடைகின்றனர். இந்தியாவில் மட்டும், மரணத்தைப் பரிசளிக்கும் பணியிடங்களின் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 48,000 தொழிலாளர்கள் மரணமடைகின்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்திலுள்ள சங்கர்கர் கிராமத்தில் சிலிக்கா கற்களை உடைக்கும் தொழிலாளர்கள்.

இன்னும் ஒருபடி மேலே சென்று, திட்டக் குழுவின் பன்னிரெண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்திற்கான (2012–2017) அறிக்கையில் “அமைப்புசாராத் தொழிலாளர்கள் வேலை செய்யும் தொழில்களில் சுகாதாரமோ, பணிப் பாதுகாப்போ அறவே இல்லை” என்று கூறியுள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், சர்வதேச தொழிலாளர் அமைப்பும் (ILO) உலக சுகாதார அமைப்பும் (WHO) அமைப்புசாராத் தொழிலாளர்கள் வேலை செய்யும் தொழில்களில் சுகாதாரத்தைப் பாதுகாக்க, பணியிடங்கள் சுகாதாரத்தைப் பாதுகாப்பதில் இருந்து விலகுவதைத் தடுத்தல், தொழில்களில் ஏற்படும் அபாயங்களைக் கட்டுப்படுத்துதல், வேலையை மக்களுக்கு ஏற்றவாறும், மக்களை அவர்களின் வேலைகளுக்கு ஏற்றவாறும் மாற்றுவதன் மூலம், அனைத்துத் தொழில்களிலும் உள்ள தொழிலாளர்களின் உடல், மன மற்றும் வாழ்க்கையை மேம்படுத்தவும், பராமரிக்கவும் முடியும் எனக் கூறியுள்ளது.

இவையெல்லாம் ”சீனி சக்கரை சக்கப்பா சீனின்னு எழுதி நக்கப்பா” என்பது போன்றவைதான். ஏனென்றால் இந்தப் பாதிப்புகள் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுடன் முடிந்து விடுவதில்லை. மாறாக, கொடிய நச்சின் காரணமாக பணியிடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதேபோல் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பு அவர்களின் வீடுகளுக்கும் பரவுகின்றது.

இந்தியாவில் மரணத்தைப் பரிசளிக்கும் பணியிடங்களின் அபாயங்களைக் கையாள்வதற்காக தொழிலாளர் மாநில காப்பீட்டுக் கழகத்தை (ESIC) உருவாக்கியுள்ளனர். இருப்பினும், 1952-ல் ESIC நிறுவப்பட்டதிலிருந்து கடந்த 74 ஆண்டுகளில், அமைப்புசார்ந்த துறைகள் (organised sector) சுருங்கியுள்ளன, அதே நேரத்தில் அமைப்புசாராத் துறைகள் (unorganised sector) வளர்ந்துள்ளன. அதே நேரத்தில் மாநிலம் விட்டு மாநிலம் சென்று வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், ESIC பெரும்பாலும் அமைப்புசார் துறைகளைச் சேர்ந்த தொழிற்சாலை மற்றும் ஆலைத் தொழிலாளர்களுக்கு மட்டுமே உள்ளது. அமைப்புசாராத் துறைகளைச் சேர்ந்த பெரும்பான்மையான தொழிலாளர்களுக்கு கிடையாது.

அர்ஜுன் சென்குப்தா தலைமையிலான அமைப்புசாராத் துறை நிறுவனங்களுக்கான தேசிய ஆணையத்தின்படி, நாட்டின் தொழிலாளர் சக்தியில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் அமைப்புசாராத் துறையில் ஈடுபட்டுள்ளனர். சட்டவிரோதமாகவும், அங்கீகரிக்கப்படாத சுரங்கங்களிலும் பணிபுரியும் தொழிலாளர்கள், மாநிலம் விட்டு மாநிலம் சென்று வேலை செய்யும் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் சேவை நிபந்தனைகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டம் இருந்தபோதிலும், பெரும்பாலும் பாதுகாப்பற்றவர்களாகவே உள்ளனர். முந்தைய சட்டங்களுக்குப் பதிலாக நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் கொண்டுவரப்பட்டுள்ளதால், பணியிடப் பாதுகாப்பு தற்போது மேலும் கவலைக்குரியதாக மாறியுள்ளது.

இந்தியா முழுவதும், இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் தூசி, இரசாயனங்கள், இரைச்சல், வெப்பம் மற்றும் அபாயகரமான பொருட்கள் நிறைந்த சூழல்களில் தினமும் வேலை செய்து வருகின்றனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிவரும் இந்தத் தொழிலாளர்களின் உழைப்பை அட்டைகளும் (முதலாளிகள்), அட்டைகளைப் பாதுகாக்கும் ஆட்சியாளர்களும் சுரண்டிக் கொழுக்கின்றனர். ஆனாலும் இவற்றைச் சகித்துக்கொள்ளும் மக்கள் புறக்கணிக்கப்பட்டவர்களாகவும் பாதுகாப்பற்றவர்களாகவும் இருக்கின்றனர்.

அமைப்புசாராத் துறைத் தொழிலாளர்கள் (தொழிலாளர் சக்தியில் 92 சதவீதம் பேர்) பெரும்பாலும் மோசமான காற்றோட்டம், தொடர்ச்சியான தூசி, அபாயகரமான இரசாயனங்கள், கதிர்வீச்சு, இரைச்சல், வெப்பம் ஆகியவற்றை எதிர்கொள்கின்றனர். தொழிலாளர்கள், புலம்பெயர் சுரங்கத் தொழிலாளர்கள், கல் உடைப்பவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், ராம்மிங்-மாஸ் இயக்குபவர்கள், சிலேட் பென்சில் தயாரிப்பாளர்கள், அகேட் மெருகேற்றுபவர்கள் என அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் கொடுப்பதில்லை, அதேபோல் மருத்துவக் கண்காணிப்பு எதுவுமின்றிப் பணியாற்றி வருகின்றனர்.

ஆந்திரப் பிரதேசம், பிரகாசம் மாவட்டம், கோத்தப்பட்டினத்தில் உப்புத் தொழிலாளிகள்.

சுரங்கங்களில் பணிபுரியும் அமைப்புசாராத் தொழிலாளர்கள் அபாயகரமான தூசிக்கு ஆளாகின்றனர். அவர்கள் சிலிக்கோசிஸ், நியூமோகோனியோசிஸ், ஆஸ்பெஸ்டோசிஸ், தொழில்சார்ந்த புற்றுநோய்களால் பாதிக்கப்படுகின்றனர். செவித்திறன் இழப்பு, தோல் அழற்சி, உலோக நச்சுத்தன்மை ஆகியவை மற்ற சில அபாயங்களாகும். பாதரசம், ஈயம், குரோமியம், துத்தநாகம் மற்றும் பல உலோகங்களுக்கு அவர்கள் ஆளாக நேரிடலாம். தொழிற்சாலைத் தொழிலாளர்கள் இரைச்சல், வெப்பம், தூசி, கதிரியக்கப் பொருட்கள், அபாயகரமான இரசாயனங்களால் பாதிக்கப்படுகின்றனர். பாதுகாப்பற்ற நகரும் பாகங்களைக் கொண்ட இயந்திரங்கள், உயர் அழுத்தத் துளைபோடும் இயந்திரங்கள் ஆகியவை தொழிலாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

அபாயகரமான இரசாயனம், கண்ணாடி மற்றும் கிராக்கர் தொழில்களில் உள்ள பல தொழிலாளர்களுக்கு இன்னும் போதுமான காப்பீடு இல்லை. இந்தியாவில் பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த தேசியக் கொள்கை (2009) மற்றும் சுரங்கச் சட்டம், தொழிற்சாலைச் சட்டம் போன்ற சட்டங்கள் அனைத்தும் முதலாளிகளின் கழிவறைக் காகிதங்களாகவே உள்ளன.

அதேபோல் தொழில்சார்ந்து ஏற்படும் காயங்கள், நோய்கள், இறப்புகள் குறித்த நம்பகமான தரவுகளைச் சேகரிப்பதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படுவதில்லை. உதாரணமாக, ESIC அறிக்கையில், இந்தியாவில் ஆண்டுதோறும் 1.7 கோடி உயிரிழக்காத தொழில்சார்ந்த காயங்கள் ஏற்படுவதாகவும் (இது உலகளாவிய அளவில் 17 சதவீதம்), மேலும் 45,000 உயிரிழப்புக் காயங்கள் ஏற்படுவதாகவும் (இது உலகின் பங்கில் 45 சதவீதம்) மதிப்பிடப்பட்டுள்ளது. இது உலகளாவிய மதிப்பீடுகளுக்காக 1999-ஆம் ஆண்டு ஆய்வையும், இந்தியாவிற்கான பிரத்யேகத் தரவுகளுக்காக 2017-ஆம் ஆண்டு வெளியீட்டையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.

மேலும் 1999-ஆம் ஆண்டில், சிலிக்கா தூசிக்கு ஆளான தொழிலாளர்களின் எண்ணிக்கை 3 மில்லியன் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) மதிப்பிட்டிருந்தது; ஆனால் 2018-ஆம் ஆண்டிற்குள், 10 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் ஆபத்தில் இருப்பதாக அரசுத் தரப்புப் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டின. செப்டம்பர் 2024-இல் வெளியான ஒரு ஊடக அறிக்கை, 2025-ஆம் ஆண்டிற்குள் 52 மில்லியன் தொழிலாளர்கள் சிலிக்கா தூசிக்கு ஆளாகக்கூடும் என்றும், அதன் விளைவாக அவர்களுக்கு ‘சிலிக்கோசிஸ்’ (Silicosis) நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது. தேசிய தொழில்சார் சுகாதார நிறுவனத்தின் (NIOH) தகவல்படி, 90-க்கும் மேற்பட்ட பல்வேறு தொழில் துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் சிலிக்கா தூசிக்கு ஆளாகும் வாய்ப்புள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கரௌலி மாவட்டத்தில் உள்ள ஆராம்புரா மஹு கிராமத்தில், சிலிக்கோசிஸ் நோயாளிகளும், இந்நோயால் தங்கள் கணவர்களை இழந்த பெண்களும்.

நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைந்துள்ள 44,155 சுரங்கங்களில், 2,35,447-க்கும் மேற்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள் சிலிக்கோசிஸ் நோய் ஏற்படும் அபாயத்தில் இருப்பதாகத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகமும், சுரங்கப் பாதுகாப்புத் தலைமை இயக்குநரகமும் (DGMS) தெரிவித்துள்ளன. தேசிய சுரங்கத் தொழிலாளர் சுகாதார நிறுவனம் (NIMH) நடத்திய ஒரு தேசிய அளவிலான ஆய்வில், சுரங்கத் தொழிலாளர்களிடையே சிலிக்கோசிஸ் நோயின் பாதிப்பு விகிதம் 40 சதவீதமாக இருப்பது கண்டறியப்பட்டது; இதன் மூலம் 94,000 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் 2017 நிலவரப்படி, 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிலிக்கா தூசிக்கு ஆளாகி, சிலிக்கோசிஸ் நோயால் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,19,821 என ஒன்றிய அரசு நடத்திய ஒரு முதற்கட்ட ஆய்வு மதிப்பிட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் மன்ட்சூரில் 1985-ஆம் ஆண்டு NIOH நடத்திய ஓர் ஆய்வில், ஸ்லேட் பென்சில் தயாரிக்கும் தொழிலாளர்களிடையே அதிர்ச்சியூட்டும் வகையில் அதிக இறப்பு விகிதம் இருப்பது தெரியவந்தது; அதாவது இறப்பின் சராசரி வயது 35 எனக் கூறுகிறது. சிலிக்கோசிஸை காசநோயாக (TB) தவறாகக் கண்டறிவது இந்த நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்துகிறது. இது தவறான சிகிச்சை, இழப்பீடு கொடுப்பதை மறுப்பது, நோயினைக் கண்டறிந்து அதனைச் சரிசெய்ய வழிவகை செய்யாமல், நோய் மேலும் வளர்வதற்கு வழிவகுக்கிறது. ஸ்லேட் பென்சில் தொழிற்சாலைகளுக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு சிலிக்கோசிஸ் பாதிப்பு 12.6 சதவீதமாகவும், சிலிக்கோ-காசநோய் பாதிப்பு 6.3 சதவீதமாகவும், காசநோயின் அறிகுறிகளைக் கொண்ட பாதிப்புகள் 8.2 சதவீதமாகவும் குறிப்பிடத்தக்க அளவில் காணப்பட்டன. இந்தத் தொழிற்சாலைகளின் சுற்றுவட்டாரத்தில் சிலிக்கா கலந்த தூசியின் அளவு அதிகமாக இருப்பதையும் NIOH ஆய்வு காட்டியது.

முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, மத்தியப் பிரதேசத்தில் சிலிக்கோசிஸ் குறித்து ஆகஸ்ட் 2016-இல் உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஒரு குழு, காற்றில் பரவும் தூசியின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவை விட 40 முதல் 50 மடங்கு அதிகமாக இருப்பதாகக் கூறியது.

வேலை தேடி மத்தியப் பிரதேசத்திலிருந்து அண்டை மாநிலங்களான குஜராத் மற்றும் ராஜஸ்தானுக்குப் புலம்பெயர்ந்த பல தொழிலாளர்கள் சிலிக்கோசிஸ் மற்றும் பிற தொழில்சார்ந்த நோய்களால் இறந்துள்ளனர்.

சிலிக்கோசிஸ் பீடிட் சங் (சிலிக்கோசிஸ் பாதிக்கப்பட்டோர் சங்கம்) 2017-ல் வெளியிட்டு, டிசம்பர் 2025-ல் புதுப்பிக்கப்பட்ட (இறக்க விதிக்கப்பட்டவர்கள், தொகுதிகள் 1-5) ஆய்வின்படி, மத்தியப் பிரதேசத்தில் மட்டும் ஆறு மாவட்டங்களில் (தார், ஜாபுவா, அலிராஜ்பூர், மந்த்சூர், விதிஷா, பன்னா) மொத்தம் 3,442 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் கண்டறியப்பட்டனர்; இவர்களில், கடந்த இருபது ஆண்டுகளில் 1,467 பேர் இறந்துள்ளனர். இறந்தவர்களில், 65 சதவீதம் பேர் 19 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள். தங்கள் பெற்றோருடன் அபாயகரமான தொழிற்சாலைகளுக்குப் பயணம் செய்த சிறு குழந்தைகள், சிலிக்கா தூசியால் பாதிக்கப்பட்டு, சிறிது காலம் கண்டறியப்படாமல் இருந்த சிலிக்கோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டனர். இந்தக் குழந்தைகள் சிலிக்கோசிஸ் நோயால் தங்கள் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ இழந்தனர்.

உத்தரப் பிரதேசத்தில், லலித்பூர் மற்றும் மஹோபா ஆகிய இரண்டு மாவட்டங்களில், டிசம்பர் 2025-க்குள் 78 சிலிக்கோசிஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டன. குடும்பங்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பலரின் மருத்துவ சிகிச்சைக்காக அதிகப் பணத்தைச் செலவிட்டன. அவர்களில் பலர் விவசாய நிலங்களையும் கால்நடைகளையும் விற்று, அதிக வட்டிக் கடன்களின் சுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.

‘உத்தரப் பிரதேசத்தின் புந்தேல்கண்ட் பகுதியில் உள்ள கல் உடைக்கும் தொழிலாளர்களின் சுவாச நோய்கள்’ என்ற தலைப்பில் மகேந்திர குமார் உபாத்யாய் மற்றும் சூர்ய காந்த் சதுர்வேதி ஆகியோரால் எழுதப்பட்டு, ‘சர்வதேச அறிவியல் மற்றும் ஆராய்ச்சி இதழின்’ அக்டோபர் 2016 பதிப்பில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, கல் உடைப்பதால் ஏற்படும் தூசி சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது என்று கூறுகிறது. பாரத் கூப், பந்தா, கப்ராய் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய இந்த ஆய்வில், பெரும்பாலான கல் உடைக்கும் ஆலைகளில் தூசி கட்டுப்பாடு இல்லை என்பது தெரியவந்துள்ளது. தொழிலாளர்கள் இருமல், எடை இழப்பு, காய்ச்சல், நெஞ்சு வலி ஆகியவற்றால் பாதிக்கப்படுவதோடு, அவர்களுக்கு காசநோய் ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது. குறைந்தது ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த, 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் காசநோயால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்.

இதற்கிடையில், 2024-ஆம் ஆண்டில் 27 இலட்சத்திற்கும் அதிகமானோர் காசநோயால் பாதிக்கப்பட்டதாகவும், 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும் ஒன்றிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

அதேபோல், சிலிக்கோசிஸ் பீடிட் சங்கத்தின்படி (2017 நிலவரப்படி), 17 மாநிலங்களில் இருந்து 3,99,810 வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும், சிலிக்கோசிஸ் நோயால் உயிரிழந்த அமைப்புசாராத் துறை தொழிலாளர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு ரூ.3 இலட்சம் முதல் ரூ.5 இலட்சம் வரையிலான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆகஸ்ட் 6, 2024 அன்று பிறப்பிக்கப்பட்ட நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு, சிலிக்கோசிஸைத் தடுப்பதற்காக தொழிற்சாலைகள் குறிப்பிட்ட குறைந்தபட்ச தரநிலைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், அவற்றை மீறினால் தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. மேலும், மாநிலங்கள் முழுவதும் இழப்பீடு வழங்கும் செயல்முறையை மேற்பார்வையிடுமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு (NHRC) அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு நிறுவனங்களுக்கு வழக்கமான தூசி கண்காணிப்பை நடத்துவதற்குத் தேவையான மனிதவளம், உபகரணங்கள், அதிகாரம் பெரும்பாலும் இருப்பதில்லை. மனிதவளம் மற்றும் வளப் பற்றாக்குறை காரணமாக, ஆய்வுகளின் போது சுரங்கங்களில் காற்றில் பரவும் சிலிக்கா அளவை அளவிடுவது சாத்தியமில்லை என்று சுரங்கத் தலைமை இயக்குநர் (DGMS) ஜூன் 29, 2019 தேதியிட்ட ஒரு பிரமாணப் பத்திரத்தில் வலியுறுத்தினார்.

அனைத்து மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் சுரங்கங்களை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து, அனுமதிக்கப்பட்ட தூசி அளவைப் பராமரிக்காத மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் சுரங்கங்களை மூடுவதை உறுதிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த நிலை அறிக்கையை வழங்க வேண்டும் என்றும் அது பரிந்துரைத்தது. உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவின்படி, பல சுரங்கங்கள் சட்டவிரோதமானவை.

ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில், சுட்டெரிக்கும் வெயிலில் செங்கல் சூளை ஒன்றில் பணிபுரியும் தொழிலாளி. சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பல புலம்பெயர் தொழிலாளர்கள், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள செங்கல் சூளைகளில் பணிபுரிகின்றனர்.

2023–24 ஆம் ஆண்டில், ESIC-இன் வருமானம் ரூ.25,185.04 கோடியாகும், அதே நேரத்தில் மொத்த செலவினம் ரூ.14,520 கோடியாகவே இருந்தது. தேசிய DMF இணையதளத்தில் கிடைக்கும் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, மாவட்ட கனிம அறக்கட்டளை நிதியின் கீழ் 2015 மற்றும் 2026-க்கு இடையில் ரூ.1,44,322 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நிதி உருவாக்கப்பட்டு பத்தாண்டுகள் ஆன பிறகும், செலவிடப்படாத தொகை ரூ.81,025 கோடியாக (56.14 சதவீதம்) உள்ளது.

இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் மேற்கொண்ட செயல்திறன் தணிக்கைகள் உட்பட, பேரிடர் மேலாண்மை நிதியத்தின் (DMF) செலவினங்களை நுணுக்கமாக ஆய்வு செய்ததில், சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சுரங்கத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் வாழ்வில் உண்மையான மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய திட்டங்களுக்குப் பணம் செலவு செய்வதற்குப் பதிலாக, கனிம அகழ்வுத் தொழில்களுக்கு வசதி செய்து தரும் உள்கட்டமைப்புத் திட்டங்களிலேயே அது செலவிடப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

ஒன்றிய அரசு தொழில்சார்ந்த சுகாதார அபாயங்களை முன்கூட்டியே கண்டறியாதது, பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காமல் மறுப்பது, தவறு செய்யும் தொழிற்சாலைகள், சுரங்கங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஆகியவற்றின் விளைவாக அமைப்புசாராத் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதை அரசின் புள்ளிவிவரங்களே அம்பலப்படுத்துகின்றன.

இந்த அமைப்பு ரீதியான தோல்வியை இருக்கின்ற சட்டங்களுக்குப் பதிலாகப் புதிய நான்கு சட்டத் தொகுப்பு சரிசெய்துவிடும் என்று யாராவது சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? இன்னும் சொல்லப்போனால், முதலாளிகளுக்கு எதிராக உள்ள அறைகுறை சட்டங்களையும் ”Ease of doing business” என்ற பெயரில் நீர்த்துப்போகச் செய்துள்ளது ஒன்றிய மோடி அரசு.

அதேபோல், இந்த உலகம் இயங்குவதற்கு உந்துவிசையாக உள்ள தொழிலாளர்கள், இது முன்வினை, கர்மா, பாவம்-புண்ணியம் என்று தங்களைச் சுருக்கிக்கொள்ளாமல், ஆளும் வர்க்கத்தையும், அதிகார வர்க்கத்தையும் எதிர்த்துப் போராட வேண்டும். அதற்கு, உலகின் தத்துவச் சிந்தனையாளர்கள் பலரும் தனிமனித ஆன்ம விடுதலை குறித்துப் பல நூறு ஆண்டுகளாகச் சிந்தித்தும் பேசியும் மறைந்தவர்களைப் புறந்தள்ளிவிட்டு, மனிதர்கள் இந்த மண்ணில் வாழும் காலத்திலேயே அவர்களுக்கு விடுதலை அளிக்கும் தத்துவம் குறித்து முதன்முறையாகப் பேசிய கார்ல் மார்க்சையும், அவரது தத்துவத்தையும் ஆயுதமாகக் கையிலெடுத்துக் களத்தில் இறங்கிப் போராடுவோம் என மே தினத்தில் சூளுரைப்போம்.

  • மகேஷ்

 

நன்றி: பிரண்ட்லைன்
https://frontline.thehindu.com/the-nation/occupational-health-crisis-india-informal-workers-silicosis/article70793947.ece

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன