பாசிசத்தை வெல்லும் சக்தி – மார்க்சிய லெனினியமே

ஏப்ரல் 22, 2026
அரை நூற்றாண்டுகாலமாக பல்வேறு ஒடுக்குமுறைகளைக் கையாண்டு நக்சல்பாரி இயக்கத்தை முற்றிலுமாக அழித்துவிட வேண்டும் என அதிகார வர்க்கம் தொடர்ந்து முயன்று வருகிறது. ஆனால் ஒவ்வொருமுறையும் நக்சல்பாரி இயக்கம் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கிறது.

மார்க்சிய லெனினிய சித்தாந்தத்தையும் அதன் இந்திய வடிவமான நக்சல்பாரி இயக்கத்தையும் வேரறுக்கப் போவதாகக் கொக்கரிக்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. மார்க்சிய லெனினிய சித்தாந்தம் வளர்ச்சிக்கு எதிரானது என்று கூறும் அமித் ஷா, “இந்த இயக்கம் வறுமையிலிருந்து தோன்றவில்லை மாறாக நக்சல்பாரி இயக்கம்தான் வறுமையையே உருவாக்கியது” என்று கூறியிருக்கிறார். இன்று நக்சல்பாரி இயக்கத்தில் 90 சதவிகிதத்தை தாங்கள் அழித்துவிட்டதாகவும் எஞ்சியிருப்பதையும் அழித்து, கூடிய விரைவில் மார்க்சிய லெனினிய இயக்கங்கள் இல்லாத இந்தியாவை உருவாக்கப் போவதாகவும் கூறியிருக்கிறார்.

காவி கார்ப்பரேட் பாசிச மோடி அரசானது கடந்த ஓராண்டிற்கும் மேலாக, ஆபரேசன் காகர் என்ற பெயரில், ஒரு இலட்சத்திற்கும் அதிகமான துணை இராணுவப் படைகளைக் குவித்து பல்வேறு மாநிலங்களில் மாவோயிஸ்ட் கட்சியினரைக் குறிவைத்துத் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. அவர்கள் திட்டமிட்டு நடத்தும் போலி மோதல்களில் மாவோயிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பசவராஜ் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். தோழர் தேவ்ஜி உள்ளிட்ட தலைவர்கள் சிலர் சரணடைந்திருக்கின்றனர். ஆபரேசன் காகர் காரணமாக இன்றைக்கு மாவோயிஸ்ட் கட்சியானது மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதையெல்லாம் வைத்துக் கொண்டு தான் இனி இந்தியாவில் மார்க்சிய லெனினிய இயக்கங்களே இல்லாமல் போகும் என அமித் ஷா ஆணவமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்.

கார்ப்பரேட் முதலாளிகளின் நண்பனான அமித் ஷாவிற்கு மார்க்சிய லெனினிய இயக்கங்களின் மீது இத்தனை வன்மமும் வெறுப்பும் இருப்பது இயற்கையே. ஆனால் அவர் கூறியது போல நக்சல்பாரி இயக்கம் வறுமையிலிருந்து பிறக்கவும் இல்லை, வறுமையை உருவாக்கவும் இல்லை. நக்சல்பாரி இயக்கம் ஒடுக்குமுறைக்கு எதிரான உழைக்கும் மக்களின் போராட்டத்திலிருந்து பிறந்தது.

59 ஆண்டுகளுக்கு முன்னர், 1967ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங் மாவட்டம், சிலிகுரி வட்டத்தில் உள்ள நக்சல்பாரி கிராமத்தின் விவசாயிகள் – நிலப்பிரபுக்கள், கந்துவட்டிக்காரர்களின் சுரண்டலுக்கு எதிராகவும் – அரசு அதிகார வர்க்கத்தின், போலீசின் ஒடுக்குமுறைக்கு எதிராகவும், கிளர்ந்தெழுந்து, ஆயுதம் ஏந்தி நிலப்பிரபுக்களிடமிருந்து தங்களுக்குச் சொந்தமான நிலங்களைப் பறித்தெடுத்ததிலிருந்து நக்சல்பாரி இயக்கம் உருப்பெறத் தொடங்கியது.

ஆளும் வர்க்கம் கூறுவது போல நக்சல்பாரி இயக்கம் வறுமையின் காரணமாகத் தோன்றவில்லை, அது வெறுமனே நிலப்பிரபுக்களிடமிருந்து நிலங்களைப் பறிப்பதற்கான போராட்டமாக இல்லை. அது அரசியல் அதிகாரத்துக்கான போராட்டமாக, “உழுபவனுக்கே நிலம் உழைப்பவருக்கே அதிகாரம்” என்ற முழக்கத்துடன் தோன்றிய இயக்கம். மேற்கு வங்க மாநிலத்தின் சிறு கிராமத்தில் தோன்றிய இந்த முழக்கம் நாடு முழுவதும் எதிரொலித்தது. பல்லாயிரம் மாணவர்களும், இளைஞர்களும் இந்த முழக்கத்துடன் போராட்டக்களத்தில் நுழைந்தனர். அவர்களுடன் வலது இடது போலிக் கம்யூனிஸ்டுக் கட்சிகளைப் புறக்கணித்து நாடெங்கும் கம்யூனிசப் புரட்சியாளர்கள் ஒருங்கிணைந்து 1969ஆம் ஆண்டு இதே நாளில் (ஏப்ரல் 22) இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) என்ற புரட்சிகர கட்சியை லெனினின் நூற்றாண்டு தினத்தில் தோற்றுவித்தார்கள்.

இபொக (மாலெ) கட்சியானது தோன்றியது முதலே, அதனை அழித்துவிட வேண்டும் என்று இந்திய ஆளும் வர்க்கம் தொடர்ந்து முயன்று வருகிறது. 1970களில் மேற்கு வங்க மாநிலத்தை ஆண்ட இடது முன்னணி அரசு மார்க்சிய லெனினியத்தை அழித்தொழிக்க கல்கத்தா நகரத்து வீதிகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்களைச் சுட்டுக் கொன்றது. நாடெங்கும் அவசரநிலையைப் பிரகடனப்படுத்திய பாசிச இந்திராவின் போலீசும் மாலெ இயக்கப் புரட்சியாளர்களைக் கொன்று குவிப்பதன் மூலம் புரட்சிகர இயக்கத்தை முடக்கிவிடலாம் என மனப்பால் குடித்தது.

பீகாரின் நிலப்பிரபுக்கள் ஒன்றிணைந்து ரன்வீர் சேனா என்ற கொலைகாரப் படையை உருவாக்கி நக்சல்பாரிப் புரட்சியாளர்களை அழித்துவிடலாம் என நினைத்தார்கள். தமிழகத்தில் 80களில் தருமபுரி – வட ஆற்காடு மாவட்டங்களில் புரட்சியாளர்களை நரவேட்டையாடிய பாசிசக் கோமாளியான எம்.ஜி.ஆர். தேவாரம் கும்பலும், ஆந்திராவில் வெங்கல்ராவ், சென்னா ரெட்டி, என்.டி.ஆர். சந்திரபாபு நாயுடு என அடுத்தடுத்து வந்த முதலமைச்சர்களும் கொடுரமான ஒடுக்குமுறைகள் மூலம் நக்சல்பாரிகளை அழித்துவிடலாம் என நினைத்தார்கள்.

2000ம் ஆண்டுகளில், சத்தீஸ்கரில் சல்வாஜுடும் என்ற கொலைகாரப் படையை உருவாக்கி, தங்களது உரிமைகளுக்காகப் போராடிய பழங்குடியின மக்களின் வீடுகளைக் கொள்ளையிட்டுத் தீயிட்டுக் கொளுத்தி, ஆயிரக்கணக்கான பழங்குடியின இளைஞர்களைக் கொன்று குவித்ததுடன், பல ஆயிரம் துணை இராணுவப் படைகளை இறக்கிவிட்டு காட்டுவேட்டை என்ற பெயரில் தன் சொந்த நாட்டு மக்களின் மீதே போர் தொடுத்தது மன்மோகன் சிங் அரசு.

அரை நூற்றாண்டுகாலமாக பல்வேறு ஒடுக்குமுறைகளைக் கையாண்டு நக்சல்பாரி இயக்கத்தை முற்றிலுமாக அழித்துவிட வேண்டும் என அதிகார வர்க்கம் தொடர்ந்து முயன்று வருகிறது. ஆனால் ஒவ்வொருமுறையும் நக்சல்பாரி இயக்கம் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கிறது.

இன்றைக்கு ஆட்சியைப் பிடித்துள்ள மோடி தலைமையிலான பாசிசக் கும்பல் ஒருபக்கம் ஒடுக்குமுறையைத் தீவிரப்படுத்திக் கொண்டு, மறுபுறம் புரட்சிகர இயக்கங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என்று மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறது. இதன் மூலம் உழைக்கும் மக்கள் புரட்சிகர சக்திகளிடமிருந்து அந்நியப்பட்டுவிடுவார்கள் என மோடி கும்பல் நினைக்கிறது.

பாசிஸ்டுகளின் இந்த விருப்பத்திற்கு மாறாக, மோடி அரசு தீவிரமாக அமல்படுத்தி வரும் நவீன தாராளவாதக் கொள்கையின் தோல்வியானது வரலாறு காணாத வேலைவாய்ப்பின்மை, விலைவாசி ஏற்றம், அதிகரித்து வரும் பொருளாதார ஏற்றத் தாழ்வு என நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கிறது.

மோடி அரசு நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுவதாகவும், அதனை நக்சல்பாரிகள் தடுப்பதாகவும் கூறுகிறார்களே, யாருடைய வளர்ச்சிக்காக மோடி பாடுபடுகிறார் நாட்டின் ஏழை எளிய உழைக்கும் மக்களின் வளர்ச்சிக்காகவா? அல்லது கார்ப்பரேட் முதலாளிகளின் வளர்ச்சிக்காகவா?

மோடி ஆட்சிக்கு வந்தபின் கடந்த 14 ஆண்டுகளில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அள்ளி வீசிய சலுகைகள் ஏராளம். கார்ப்பரேட் முதலாளிகள் விரைவாகத் தொழில் தொடங்குவதற்கும் அவர்களை கொழுக்க வைப்பதற்கும் ஒற்றைச் சாளர முறை. நிலங்கள் ஒதுக்கப்படுவதில் சலுகைகள். தொழில் முதலீட்டிற்கான மானியம், வட்டிக்கான மானியம். மின்சார வரியிலிருந்து விலக்கு. சரக்கு மற்றும் சேவை வரிகளில் சலுகைகள் என நாட்டு மக்களின் பணத்தை வாரி வாரி வழங்கியிருக்கிறார்கள்.

நாட்டின் இயற்கை வளங்களை சூறையாட எந்த தடையும் இன்றி அனுமதி, சிறு குறு முதலாளிகளின் உடைமைகளை கைப்பற்றுவதற்கு சட்டப்பூர்வ உதவி, பொதுத் துறை நிறுவனங்கள் தாரை வார்ப்பு, என இவர்களது கார்ப்பரேட் சேவை நீண்டு கொண்டே செல்கிறது.

இப்படி நாட்டு மக்களின் உழைப்பையும், இயற்கை வளங்களையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிக்க, பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக நமது நாட்டைத் திறந்து விடுவதைத்தான் மோடி அமித் ஷா கும்பல் வளர்ச்சி என்று கூறுகிறது. இந்தப் பகற்கொள்ளைக்கு எதிராக போராடும் பழங்குடியின மக்களையும், அவர்களுக்கு ஆதரவாக நிற்கும் புரட்சிகர இயக்கங்களையும், வளர்ச்சிக்கு எதிரானவர்களாகச் சித்தரிக்கிறது.

பெரும்பான்மை உழைக்கும் மக்களின் விடுதலைக்காகப் போராடும் புரட்சிகர இயக்கங்களை மக்கள் மத்தியிலிருந்து தனிமைப்படுத்தி, அழித்துவிட்டால் தன்னை எதிர்க்கக் யாரும் இருக்க மாட்டார்கள் என காவி கார்ப்பரேட் பாசிச கும்பல் நினைக்கிறது. ஆனால் உண்மையில் தனது கார்ப்பரேட் விசுவாச நடவடிக்கைகளின் மூலமாக பாசிசம் தனக்கான சவக்குழியைத் தானே தோண்டிக் கொண்டிருக்கிறது. இவர்கள் விரும்புவது போல மார்க்சிய லெனினியத்தை அதிகார வர்க்கத்தால் அழித்துவிட முடியாது. உழைக்கும் மக்கள் மீதான சுரண்டலும் ஒடுக்குமுறையும் நீடிக்கின்றவரை அவர்களது விடுதலைக்கான சித்தாந்தமாக மார்க்சிய லெனினியம் நிலைத்திருக்கும். காவி பாசிஸ்டுகள் மற்றும் அவர்களது எஜமானர்களான ஏகாதிபத்திய முதலாளிகளின் ஆட்சியதிகாரம் எனும் கோட்டையைத் தகர்க்கும் ஆயுதமான மார்க்சிய லெனினியத்திற்கு அழிவென்பது இல்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன