வேலையில்லாத் திண்டாட்டம் – தனியார்மயத்தை ஒழிப்பதே தீர்வு!
அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் வேலைவாய்ப்பை பெருக்க முடியும் என்கின்றனர் மோடியும் ஸ்டாலினும். ஆனால் கடந்த நாற்பதாண்டுகளில் வேலையின்மை அதிகரித்துள்ளதாக அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழக அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் அதிகம் விவாதிக்கப்படுகின்ற அல்லது பேசப்படுகின்ற விஷயங்களில் ஒன்று வேலையின்மை. முதலாளிகளின் லாபத்திற்காக, உழைப்புச் சக்தியை முதலாளி வர்க்கத்திற்கு விற்றால் மட்டுமே உயிர் வாழ்வதற்கான பொருளை வாங்கமுடியும் என்ற உற்பத்தி உறவுகளில் நாம் பிணைக்கப்பட்டுள்ளதால் வேலை என்பது நாம் உயிர்வாழ்வதற்கே அவசியமாகிறது.
ஆனால் அனைவருக்குமான வேலைவாய்ப்பினை முதலாளிவர்க்கத்தினரும் அதன் அரசியல் முகமான ஆளும் கட்சிகளும் உருவாக்கியுள்ளார்களா? என்று கேட்டால் ஆட்சியாளர்கள் மற்றும் பெரும்பான்மை மக்கள் சொல்லும் பதில்கள் வேறுபட்டதாகவும் நேரெதிரானதாகவும் இருக்கும்.
ஒருபுறம், பல லட்சம் கோடி அந்நிய முதலீடுகளை ஈர்த்துள்ளோம்; பல கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம், இதனால் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது என்கிறார் மோடி. மோடியின் வழியையே பின்பற்றும் முதல்வர் ஸ்டாலின், நான் முதல்வன் திட்டத்தால் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாகப் பிரச்சாரம் செய்கிறார். படித்து முடித்தவுடன் நிரந்தர வேலை என்று ஆசை காட்டி மாணவர் சேர்க்கை நடத்துகின்றன தனியார் கல்லூரிகள். அடிப்படையில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவே தன்னலம் கருதாது ஓய்வில்லாமல் உழைப்பதாக தம்பட்டம் அடித்துக்கொள்கிறது ஆளும் வர்க்க கும்பல்.
மறுபுறத்திலோ, நிரந்தர வேலை வேண்டியும், ஊதிய உயர்வுக்காகவும் பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்துகின்றனர். கடந்த நாற்பது வருடங்களில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இரு வாரங்களுக்கு முன்பு, State of Working India Report என்ற அறிக்கையை அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் வெளியிட்டது. அவ்வறிக்கை இந்தியாவிலுள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பு, அவர்களது உயர்கல்வி நிலைமைகள், உயர்கல்வி கற்றல் வெளிப்பாடுக்கும் தொழிற்சாலை தேவைக்கும் உள்ள தொடர்பு ஆகிய தகவல்களை வெளியிட்டது. அதில்,
-
கல்லூரிப் படிப்பை முடித்த இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 40 சதவீதமாக இருப்பதாகவும், இது கடந்த நாற்பதாண்டுகளில், 35 சதவீதத்திலிருந்து (1983) 40 சதவீதமாக (2023) அதிகரித்துள்ளதாகவும் கூறுகிறது.
-
கல்லூரி படிப்பை முடித்த ஒருவருடத்திற்குள், ஏழு சதவீதப் பட்டதாரிகளுக்கு மட்டுமே நிரந்தர வேலை (அரசு அல்லது தனியார் துறைகளில்) கிடைக்கிறது. 43 சதவீதத்தினர் பகுதிநேரமாகவோ அல்லது கிடைக்கின்ற வேலைகளையோ செய்கின்றனர். மீதமுள்ள 50 சதவீதத்தினர் எந்த வேலைக்கும் செல்வதில்லை.
-
2004-2005 இலிருந்து 2017-2018 வரை உயர்கல்வி சேர்க்கை விகிதம் உயர்ந்து, 2017-18 க்குப் பிறகு குறையத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஆண் சேர்க்கை விகிதம் 38 இலிருந்து 34 ஆக குறைந்துள்ளது. இதற்கு காரணம் படிப்பிற்கேற்ற வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படாததாலும், உயர்கல்விக்கான செலவுகள் அதிகரித்துள்ளதாலும் குடும்ப பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்ய இளைஞர்கள் வேலைக்குப் போகவேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது என்கிறது அறிக்கை.
வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வியின் கற்றல் வெளிப்பாடுகள் குறித்து இவ்வறிக்கை முன்வைக்கும் விவரங்கள் ஆளும் வர்க்கத்தின் “வளர்ச்சி” என்ற பிரச்சாரத்தின் உண்மைத்தன்மையை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளன.
நேரடி அந்நிய முதலீடுகள் இந்தியாவிற்குள் வருவதால் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படும். வேலைவாய்ப்புகள் பெருகும், நவீன தொழில்நுட்பங்களையும், மேலாண்மை நுணுக்கங்களையும் நாம் கற்றுகொள்ள முடியும். கூடவே உள்நாட்டு உற்பத்தியும் அதிகரிக்கும். என்பதையே வளர்ச்சிக்கான சூத்திரமாக திரும்பத்திரும்பச் சொல்கின்றனர்.
காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் அமல்படுத்தப்பட்ட தொழிற்கொள்கைகளாகட்டும், மோடி வந்த பிறகு அறிவிக்கப்பட்ட மேக் இன் இந்தியா, PLI திட்டம், அம்ரித்கல், விக்சித் பாரத் என எல்லாவற்றுக்குமான அடிப்படையாக இருப்பது அந்நிய நேரடி முதலீடே. இதற்கு உதவும் வகையிலே கல்விக்கொள்கைகளும் வகுக்கப்படுகின்றன.
எனவே வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்ததிற்கும், உயர்கல்வியின் சீரழிவிற்கும், உண்மை ஊதியம் தேக்கமடைந்துள்ளதிற்கும், வேலை வேண்டி நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு மக்கள் (விவசாய வேலைகளுக்காக) செல்வதற்கும் முக்கியக் காரணம், 1985 களிலிருந்து அமல்படுத்தப்பட்டு வரும் தனியார்மயக் கொள்கையே என்பது வெளிப்படையான உண்மை.
ஆனால் மேற்சொன்ன அறிக்கையோ தனியார்மயத்தைப் பேசாமல் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான புதிய திட்டங்கள் மற்றும் தரமான உயர்கல்விக்கான செயல் திட்டங்கள் வேண்டும் என்ற பரிந்துரையோடு நிறுத்திக்கொள்கிறது. இதே தொனியில் தான் மோடி தொடங்கி மாநில முதல்வர்கள், உள்ளூர் கல்வித் திட்ட அதிகாரிகள், பல்கலைக்கழக பேராசிரியர்களும் பேசி வருகின்றனர்.
தொழிற்சாலைகளின் தேவைக்கேற்ற வகையில் (வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில்) பாடத்திட்டத்தினை மாற்றப் போகிறோம் என்றார் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர். தேசிய கல்விக் கொள்கையினால் இந்திய உயர்கல்வி உலகத்தரத்திற்கு உயரப் போகிறது எனப் பிரச்சாரம் செய்தது பாஜக. தொழில் வளர்ச்சி-வேலைவாய்ப்பிற்கு சட்டத்திருத்தங்கள் அவசியம் என்கின்றனர் மோடியும், ஸ்டாலின் உள்ளிட்ட பிற மாநில முதல்வர்களும்.
உள்நாட்டு முதலாளிகள்/நிதிமூலதனங்கள்/பன்னாட்டு நிறுவனங்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதன் மூலம் வேலையில்லா திண்டாட்டத்தை குறைத்து விட முடியும் என்பதே இவர்களது கருத்து.
ஆனால், வேலையில்லா திண்டாட்டத்திற்கும் தனியார் கல்லூரிகளின் அவலத்திற்கும் மூலகாரணம் இருக்கின்ற பாடத்திட்டங்கள்/சட்டங்களின் போதாமையா அல்லது அந்நிய முதலீடுகளுக்காக காத்துக்கிடக்கும் இவர்களது மறுகோலக் கொள்ளை நிலப்படமா?
பொதுவாக, ஒரு நாட்டிற்குள் வரும் அந்நிய நேரடி முதலீடு என்பது வெறும் தொழில் தொடங்குவதற்கான பணமாக மட்டும் இருப்பதில்லை. அது தன்னோடு சேர்ந்து, தான் முதலீடு செய்யப்படும் நாட்டில் அமல்படுத்தப்பட வேண்டிய சீர்திருத்தங்களையும் (விதிமுறைகளையும்) நிபந்தனைகளாகக் கொண்டுவருகிறது.
கல்வி, மருத்துவம், பொது சுகாதாரம் உள்ளிட்ட சேவை துறைகளையும், விவசாயம், தொழிற்சாலை, வர்த்தகம் ஆகியவற்றையும் தனியாருக்குத் திறந்து விடுவதையும், அத்துறைகள் மீதான அரசின் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதையும், அதற்கான சட்ட திருத்தங்களையும் அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் கோருகின்றனர்.
எந்தளவிற்கு அந்நிய முதலீடுகள் இந்தியாவிற்குள் அனுமதிக்கப்படுகிறதோ, அதற்கேற்றவகையில் தனியார் நிறுவனங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் மீதான அரசின் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுகின்றன. அமெரிக்க நிதிமூலதனக் கும்பலின் கோரிக்கைக்கு அடிபணிந்து தான் மூன்று வேளாண் சட்டங்களையும், தொழிலாளர் சட்டத் தொகுப்பையும், அணு உலைக்கான சாந்தி சட்டத்தையும் மோடி அரசாங்கம் கொண்டுவந்தது.
இந்தியாவில் முதலீடு செய்யும் அந்நிய முதலீட்டாளர்களின் நோக்கமோ, உள்நாட்டுச் சந்தையையும் தொழிற்துறையையும் கைப்பற்றுவது மற்றும் மிகவும் குறைவான கூலிக்கு உழைப்புச் சக்தியை சுரண்டுவதன் மூலம் அதிக லாபம் ஈட்டுவது மட்டுமே. உதாரணமாக, அமெரிக்காவிற்கும் சீனாவிற்குமான வர்த்தகப் போரின் காரணமாக ஆப்பிள் உள்ளிட்ட பல அமெரிக்க நிறுவனங்கள் சீனாவிலிருந்து தனது உற்பத்தியை வேறு நாடுகளுக்கு மாற்றப்போவதாக அறிவித்தன. அந்நிறுவனங்களை இந்தியாவில் உற்பத்தி தொடங்க வைப்பதற்கு Production Linked Incentive என்ற திட்டத்தை மோடி கும்பல் அறிவித்தது.
இத்திட்டத்தின் கீழ் உற்பத்தியைத் தொடங்கிய Foxconn, ஒரு ஆப்பிள் செல்போனுக்கு அதன் விலையில் 6 சதவீதத்தை மானியமாகப் பெறுகிறது. ஒரு செல்போனை அசெம்பிள் செய்ய Foxconn க்கு ஆகும் செலவு அச்செல்போனின் விலையில் வெறும் 4 சதவீதம் மட்டுமே. மீதமுள்ள 2 சதவீத மானியம், ஆப்பிள் செல்போன் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதற்கு மோடி அரசாங்கம் Foxconn க்குத் தரும் இனாம் என்றே சொல்லலாம்.
வேறொரு நாடு இந்தியாவை விட கூடுதலாக, 10 சதவீத மானியமும் தொழிலாளர்களுக்கான குறைந்த சம்பளத்தையும் கொடுக்க ஒத்துக்கொண்டால் Foxconn அந்நாட்டுக்கு தனது உற்பத்தியை மாற்றிவிடும். அந்நிய நேரடி முதலீடு என்பது வெட்டுக்கிளி கூட்டம் போல, வளர்ச்சி-வேலைவாய்ப்பு என்ற போர்வையில் ஒரு நாட்டுக்குள் புகும் இக்கூட்டம் மொத்தத்தையும் சூறையாடிய பிறகு மற்றொரு சூறையாடலுக்கு வேறொரு நாட்டிற்கு சென்றுவிடும். இதன் மூலம் அந்நிய முதலீட்டாளர்களின் லாபம் அதிகரிக்குமே ஒழிய படித்த அனைவருக்குமான நிரந்தர வேலைவாய்ப்பை கொடுக்க முடியாது. ஆனால் கல்வியாளர்களோ, பேராசிரியர்களோ, கொள்கை வகுப்பாளர்களோ, அரசு அதிகாரிகளோ அல்லது அமைச்சர்களோ இவ்வுண்மைகளை மறைத்து வேலைவாய்ப்பு என்ற போர்வையில் முதலாளிகளின் கட்டற்ற சுரண்டலுக்கு ஏஜெண்டுகளாக வேலை பார்க்கின்றனர்.
- மாணிக்கம்
சான்றுகள்:
https://www.indiatoday.in/jobs/story/indias-graduate-unemployment-crisis-millions-of-graduates-no-jobs-educ-2885165-2026-03-21
https://www.financialexpress.com/opinion/job-deficit-gaps-in-economic-policymaking/4186369/
https://www.thenewsminute.com/news/40-of-graduates-unemployed-in-india-future-cohorts-face-same-crisis-azim-premji-report
https://thewire.in/labour/nearly-40-of-indian-graduates-under-the-age-of-25-are-unemployed-azim-premji-report
https://www.indiatoday.in/jobs/story/four-decades-same-crisis-40-of-indias-graduates-still-cant-find-jobs-educ-2883532-2026-03-18
https://www.business-standard.com/economy/news/two-thirds-of-unemployed-youth-are-graduates-state-of-working-india-report-126031701278_1.html
