அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்களின் ஜனநாயக உரிமைகளை ஒடுக்கும் டிரம்ப் அரசு

"நாங்கள் ஹார்வர்டு பல்கலைக் கழகத்துக்கு நிதி கொடுக்கிறோம் நாங்கள் சொல்வதைக் கேட்க வேண்டும்; இல்லையென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க கூடும்" என எச்சரிதுள்ளது, டிரம்ப் அரசு.  

டிரம்ப் நிர்வாகம் விதித்த ஜனநாயக விரோதமான 10 விதிகளை ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஏற்காததால் 2.2 பில்லியன் டாலர் நிதி உதவியை நிறுத்தி வைத்துள்ளது, டிரம்ப் அரசு. அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ்பெற்ற மிகப் பழமையான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பல நாடுகளை சேர்ந்த மாணவர்கள் படிக்கிறார்கள். பல நாடுகளை சேர்ந்த ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். அதில் மருத்துவம், பொறியியல், அரசியல், சமூகம் , அறிவியல் சார்ந்து பல ஆய்வுகளையும் மேற்கொள்கிறார்கள்.  

இங்குள்ள மாணவர்கள், மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து அவ்வப்போது போராட்டங்களை நடத்துவது வழக்கம். உதாரணமாக, இஸ்ரேலின் இன அழிப்புப் போரால் பாலஸ்தீன மக்கள் பாதிக்கப்படுவதை கண்டித்து நீண்ட போராட்டத்தை மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். இது போன்ற போராட்டங்களை ஒடுக்கும் விதமாக டிரம்ப் நிர்வாகம் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.  

கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி டிரம்ப் நிர்வாகம் பத்து விதிகளை அடங்கிய ஒரு கடிதத்தை ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு அனுப்பியது. அதில், ஆசிரியர்கள் வெறும் பாடத்தைக் கற்றுக் கொடுக்கும் வேலை மட்டும் செய்ய வேண்டும். அதை விடுத்து சமூகம் சார்ந்து மற்றும் போராட்டம் போன்றவற்றில் ஈடுபடக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது. 

அதேபோல, மெரிட் அடிப்படையில் மாணவர்கள், ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும்; இனம், நிறம் ,மத , பாலியல், மற்றும் நாடுகள் ரீதியாக எந்தவிதமான முன்னுரிமைகளும் கொடுக்கக் கூடாது என்றும் மாணவர்களுடைய முழுப்பிண்ணனி (background) குறித்த முழு தரவுகளையும் அமெரிக்க நிர்வாகத்திற்கு பகிர வேண்டும், வெவ்வேறு நாடுகளில் இருந்து வரும் மாணவர்கள், அமெரிக்கா மீது என்ன மன நிலையில் உள்ளனர் என விசாரித்து பரிசோதிக்க வேண்டும் என்றும்; பல்கலைகத்தில் ஒவ்வொரு துறைகளிலும் என்ன கற்றுக் கொடுக்கிறார்கள் என்பதையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும்; அதை பல்கலைக்கழகத்திற்கு வெளியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஆய்வு செய்து அந்த தரவுகளை அமெரிக்க அரசுக்கு பகிரும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

மேலும், “நாங்கள் ஹார்வர்டு பல்கலைக் கழகத்துக்கு நிதி கொடுக்கிறோம் நாங்கள் சொல்வதைக் கேட்க வேண்டும்; இல்லையென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க கூடும்” என எச்சரிதுள்ளது, டிரம்ப் அரசு.  

இதற்கு பதிலடியாக ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தலைவர் ஆலன் கார்பர், இவை ‘சட்டவிரோதமானவை’ மற்றும்’ அரசியல் தலையீடு’ என்று கடுமையான விமர்சித்துள்ளார். மேலும் ஹார்வர்டுபல்கலைக்கழகமானது தனது சுதந்திரத்தை விட்டுக் கொடுக்காது என்றும், அரசியல் சாசன உரிமைகளை கைவிடாது என்றும் அறிவித்துள்ளார்.  

ஹார்வர்டு பல்கலைக்கழகம், டிரம்ப் நிர்வாக விதிகளை நிராகரித்ததை அடுத்து பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்ட 2.2 பில்லியன் டாலர் நிதி உதவிகளையும் 60 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களையும் முடக்கியுள்ளது.  

நிதியை நிறுத்தி வைத்தது சட்டவிரோதமானது என்றும் இது அரசின் அதிகாரத்தை மீறிய செயல் என்றும் இதை எதிர்த்து வழக்கு தொடுத்துள்ளது, ஹார்வர்டு பல்கலைக்கழகம். இதே போல பல பல்கலைக்கழகங்கள் டிரம்ப் அரசின் அடக்கு முறையை எதிர்கொண்டுள்ளன. அவற்றுக்கு வழங்க வேண்டிய நிதியையும் நிறுத்தி வைத்துள்ளது, டிரம்ப் அரசும்.  

கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கான 400 மில்லியன் டாலர்; கார்னல் பல்கலைக்கழகத்துக்கன 1 பில்லியன் டாலர்; நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்துக்கான 790 பில்லியன் டாலர்; பென்சில்வேனியா பல்கலைக்கழகத்துக்கான 175 மில்லியன் டாலர்; பிரவுன் பல்கலைக்கழகத்துக்கான 510 மில்லியன் டாலர் ஆகியவற்றை முடக்கியுள்ளது டிரம்ப் அரசு.  

டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு கல்வி, விளையாட்டு, அரசு நிர்வாகம், பின்தங்கிய சமூக மக்கள், பின்தங்கிய இன மக்கள், மாற்றுத் திறனாளிகள் என பல்வேறு சலுகைகளை நிறுத்தி வைப்பதாக கொள்கை முடிவு எடுத்துள்ளனர். 

பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போரில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பல்வேறு மாணவர்கள், மாணவர் அமைப்புகள் அமெரிக்காவில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீதும் அமெரிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை இரத்து செய்து அவர்களை அந்தந்த நாடுகளுக்கு வலுக்கட்டாயமாக, பாசிச டிரம்ப் அரசு, அனுப்பி வைத்தது.  

கல்வி வளாகங்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், இளைஞர்களிடையே ஜனநாயகத் தன்மையை ஒழித்துக் கட்டி தன்னுடைய வெள்ளை நிறவெறி, ஆணாதிக்க, கிருத்துவ மதவெறி ஆகியவற்றை நிலைநிறுத்தும் ஒருவகை பாசிச வெறியோடு செயல்பட்டு வருகிறது டிரம்ப் அரசு. டிரம்பின் அடியொற்றி இங்கு இந்தியாவிலும் ஜே.என்.யூ போன்ற அனைத்து கல்வி வளாகங்களிலும் இதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று காவி பாசிசக் கும்பலும் கூச்சலிட்டு வருகிறது.  

  • நிலவன். 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன