பென்னாகரம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவனைக்கு சிறப்பு மருத்துவர்களை நியமி! ஏழைகளுக்குத் தரமான மருத்துவம் வழங்கிடு!
பென்னாகரம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைக்குச் சிறப்பு மருத்துவர்களை நியமி! ஏழைகளுக்குத் தரமான மருத்துவம் வழங்கிடு! என்ற முழக்கத்தின் கீழ் 25.2.2025 அன்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் புரட்சிகர மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை உரையாற்றிய புரட்சிகர மக்கள் அதிகாரத்தின் பென்னாகரம் வட்டார இணை செயலாளர் தோழர் மாரியப்பன், பென்னாகரம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவனை பெயரளவில் தரம் உயர்த்தப்பட்டிருக்கிறதே ஒழிய உண்மையிலேயே அதற்கு உரிய மருத்துவ கட்டமைப்பு இல்லை. ஒரு மாவட்டத் தலைமை மருத்துவமனை என்றால் அதற்கு 32 மருத்துவர்கள் இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு மருத்துவர்கள் இல்லை. காது மூக்கு தொண்டைக்கு சிகிச்சை மருத்துவர் இருக்கவில்லை. மேலும் சிறுநீரகம், இதயம், கண் முதலியவற்றிற்குச் சிறப்பு மருத்துவர்கள் இல்லை. மேலும் மத்திய மாநில அரசுகள் இதற்காக நிதி ஒதுக்குவதும் இல்லை. பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் தொகையை ஒவ்வொருவருக்கும் பிரித்தால் ரூ 650 தான் வருகிறது. இந்த தொகையில் ஓராண்டிற்கு மருத்துவம் பார்க்க முடியுமா என்று கேள்வி எழுப்பிப் பேசினார்.
அதற்குப் பிறகு பேசிய மாவட்டச் செயலாளர் தோழர் சிவா கியூபாவில் 12 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் மருத்துவர்கள் உள்ளனர். ஆனால் இந்த பென்னாகரம் அரசு மருத்துவமனையில் 2 லட்சம் மக்களுக்கு 3 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். இது என்ன நிலை என்று கேள்வி எழுப்பி அம்பலப்படுத்தி பேசினார்.
இதற்குப் பிறகு பேசிய புரட்சிகர மக்கள் அதிகாரத்தின் மாநில செயலாளர் தோழர். முத்துக்குமார், அரசு மருத்துவமனைகளில் உள்ள சீர்கேடுகளை, கட்டமைப்பு குறைபாடுகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்யவேண்டும் என்றால் மத்திய மாநில அரசுகள் சுகாதாரத் துறைக்கு அதிகம் நிதி ஒதுக்கி அரசு மருத்துவனைகளைக் காப்பாற்ற வேண்டும். ஆனால் உள்கட்டமைப்புக்கு 11 லட்சம் கோடி வரை நிதி ஒதுக்குகின்ற ஒன்றிய அரசு, சுகாதாரத் துறைக்கு 99000 கோடிதான் ஒதுக்குகிறது. இது யானைப் பசிக்கு சோளப்பொறி போன்றதுதான் என்று பேசினார்.
மேலும் இருக்கின்ற கட்டமைப்பையும் ஒழித்துக் கட்டுகின்ற வகையில் அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு பிரிவுகளாகத் தனியாரிடம் கொடுத்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, டயாலிசிஸ் பிரிவைத் தனியாரிடம் கொடுக்கத் தமிழக அரசு முயற்சித்து வருகிறது. இதே போல் சிறுநீரக நோயாளிகளுக்கு டயாலிசிஸ் செய்கிற போது கொடுக்கப்படும் மாத்திரைகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கான இன்சுலின் முதலியவற்றைத் தனியார் மருந்தகங்களில் மட்டுமே கிடைக்கும் வகையில் அரசு மருத் துவ மனைகளில் கிடைக்காமல் தனியார் மருந்தகங்களில் வாங்கிக்கொள்ளும் வகையில் அரசு மக்களை நெட்டித்தள்ள ஏற்பாடு செய்கிறது.
அது போல் மருத்துவம் மற்றும் அது தொடர்பான தொழிற்நுட்ப பயிற்சிகளைப் படித்துவிட்டு அரசு வேலை கிடைக்காத நிலையில் தமிழகத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இரத்தப் பரிசோதனை நிலையங்களை நடத்திவருகின்றனர். அதில் மண் அள்ளிப் போடும் வகையில் தமிழக அரசு 390 என்ற அரசாணையை வெளியிட்டுள்ளது. இவை எல்லாம் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் கொள்ளைக்காகவே நடைபெறுகிறது. குறிப்பாக நெட்மெட் என்ற ஆன்லைன் மூலம் மருத்துவப் பொருட்களை விற்பனை செய்யும் கம்பெனியின் 60 சதவீதப் பங்குகளை அம்பானி வாங்கியிருக்கிறார். மேலும் இது போல் காப்பீட்டுத் துறையில் 100 சதவீகிதம் அன்னிய மூலதனம் நுழைய இந்த ஆண்டு பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கார்ப்பரேட் மருத்துவக் கொள்ளை கொடிகட்டி பறக்கப் போகிறது. இதற்காகத்தான் அரசு மருத்துவனைகளில் கான்டிராக்ட்மயம் புகுத்தப்படுகிறது. தனியார்மயம் ஆக்கப்படுகிறது என்று அம்பலப்படுத்திப் பேசினார். அரசு மருத்துவமனைகளைக் காக்கவில்லை என்றால் கொரானாப் போன்ற பெருந்தொற்றுக் காலத்தில் செத்து மடிந்ததைப் போல் இலட்சக்கணக்கானோர் செத்து மடியும் நிலை ஏற்படும் என்று பேசினார்.
இதைத் தொடர்ந்து இறுதியாகப் பேசிய மாநில இணை செயலாளர் தோழர் கோபிநாத் பென்னாகரம் அரசு மருத்துவனையைக் காக்க நாங்கள் தொடர்ந்து போராடிவருகிறோம். இதன் மூலம் சிறை செல்லும் நிலையும் ஏற்பட்டது என்றும் எல்லாத்துறைகளிலும் எப்படித் தனியார்மயம் புகுத்தப்படுகிறது என்பதையும் விளக்கிப் பேசினார். இறுதியில் புரட்சிகர மக்கள் அதிகாரத்தின் பென்னாகரம் வட்டார செயலாளர் தோழர் சத்தியநாதன் நன்றியுரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டமானது பகுதி மக்களிடம் அரசு மருத்துவமனையை நாம் பாதுகாக்கப் போராட வேண்டிய தேவையை உணர்த்தியுள்ளது என்றால் மிகையல்ல.
தகவல்
தோழர் சத்தியநாதன்
வட்டார செயலாளர்
புரட்சிகர மக்கள் அதிகாரம்
பென்னாகரம் வட்டம்
97901 38614
