வரலாற்றுப் புரட்டுகளே காவி பாசிஸ்டுகளின் அடிப்படை

சாகாக்கள் மற்றும் பைடக்களில் இந்திய வரலாறு என்ற பெயரில் பேசிவந்த புனைவுக் கதைகளையும் தாண்டி தற்போது பொய்யான வரலாற்றை உருவாக்கி இந்துத்துவா முலாம்பூசி அதற்கு அரசு அங்கீகாரம் கொடுத்து அதன் மூலம் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு மதவெறி ஊட்டுகின்ற வேலையை செய்துவருகின்றது ஆர்.எஸ்.எஸ்.-பாஜக கும்பல்.

வரலாற்றைத் திரிப்பது சங்கிகளுக்கு ஒன்றும் புதிதல்ல. தங்களது இந்துத்துவ கொள்கைகளுக்கு அதரவாக இந்திய வரலாற்றை எப்படியேனும் மாற்றி எழுதிவிட வேண்டும் என்ற நூற்றாண்டுகால கனவை நிறைவேற்ற ஏற்ற சூழலாக உள்ள மோடி ஆட்சியில் அதற்காக பலவகையான முயற்சிகளை செய்து வருகின்றது காவி பாசிச கும்பல். தங்களது சாகாக்கள் மற்றும் பைடக்களில் இந்திய வரலாறு என்ற பெயரில் பேசிவந்த புனைவுக் கதைகளையும் தாண்டி தற்போது பொய்யான வரலாற்றை உருவாக்கி இந்துத்துவா முலாம் பூசி அதற்கு அரசு அங்கீகாரம் கொடுத்து அதன் மூலம் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு மதவெறி ஊட்டுகின்ற வேலையை செய்துவருகின்றது ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல். கடந்த சில வருடங்களில் இதுபோன்ற பல வரலாற்றுப் பொய்களை அவிழ்த்துவிட்டு இந்துத்துவ அரசியலின் கீழ் மக்களை அணித்திரட்டுகின்ற வேலையை காவி கும்பல் செய்துள்ளது. அதன் மூலம் தேர்தல் வெற்றியைத் தாண்டி மக்களிடம் செல்வாக்கையும் பெற்றுள்ளது. இந்த பாசிச கும்பல் உருவாக்கிய வரலாற்று பொய்களைப் பற்றியும் அதன் மூலம் எவ்வாறு மக்களை திரட்டினர் என்பதைப் பற்றியும்தான் நாம் பார்க்கப் போகிறோம்.

கும்பமேளா உயிர்பெற்ற கதை

கடந்த வாரம் தி டெலிகிராப் ஆங்கில நாளிதழில் “Toxic Agenda” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. அலன் மொரினிஸ் என்ற அக்கட்டுரையாளர், தனது முனைவர் பட்ட ஆய்வை ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல் திரித்து தங்களது இந்துத்துவா அரசியலுக்கு பயன்படுத்தியுள்ளது என்று அக்கட்டுரையில் குற்றம் சாட்டியிருந்தார். அறிவு நேர்மையற்ற உள்நோக்கம் கொண்ட இந்த அறிவு திருட்டு வேலையில் திருவாளர் மோடிக்கும் பங்கு உண்டு.

2023 பிப்ரவரி மாதம் மங்கிபாத் நிகழ்ச்சியில் பேசிய மோடி, “நண்பர்களே, இந்த மாதம், மேற்கு வங்கத்தில் உள்ள ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள பான்ஸ்பேரியாவில் ‘திரிபேனி கும்போ மஹோத்சவ்’ ஏற்பாடு செய்யப்பட்டது. எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்……அது ஏன் இவ்வளவு சிறப்பு என்று தெரியுமா? 700 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பழக்கம் மீண்டும் புத்துயிர் பெற்றிருப்பதுதான் சிறப்பு… துரதிர்ஷ்டவசமாக வங்காளத்தின் திரிபேனியில் நடைபெற்று வந்த இந்த விழா 700 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு இது தொடங்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அதுவும் நடக்கவில்லை…..” என்று பேசினார்.

இங்கே மோடி குறிப்பிடுவது, மேற்குவங்க மாநிலத்தின் ஹூக்ளி மாவட்டத்திலுள்ள பான்ஸ்பெரியா பகுதியில் 2023 பிப்ரவரியில் காவி கும்பல் மற்றும் TMC அரசாங்கம் சேர்ந்து நடத்திய கும்பமேளாவைப் பற்றிதான். இப்பகுதியில் 700 வருடங்களுக்கு முன்பு வரை கும்பமேளா நடைபெற்று வந்ததாகவும் இஸ்லாமியர்கள் படையெடுப்பின் காரணமாக இது நிறுத்தப்பட்டதாகவும் கூறி அதற்கான ஆதாரமாக அலன் மொரினிஸின் முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரையைக் காட்டுகின்றது காவி கும்பல்.

கனடாவை சேர்ந்த மானுடவியலாளரான அலன் மொரினிஸ் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் முனைவர் பட்டம் பெற்றவர்(1979). தனது முனைவர் பட்ட ஆய்விற்காக மேற்கு வங்க மாநிலத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் இந்து மத புனித யாத்திரைகள் குறித்து ஆய்வு செய்து 740 அளவிலான ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதன் 74 வது பக்கத்தில், “கங்காசாகராவைத் தவிர, ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள பான்ஸ்பெரியா நகரத்திற்குள் அமைந்துள்ள திரிபேனி மட்டுமே தொல்பழமை கொண்டது.. ஒரு காலத்தில் சமஸ்கிருதக் கற்றலின் சிறந்த இடமாக இருந்த திரிபேனி, இப்போது வீழ்ச்சியடைந்து வருகிறது. தற்போது, ​​திரிபேனியின் முக்கிய ஈர்ப்பு புனிதமான கங்கை நதியாகும். ஒவ்வொரு வருடம் சைத்ரா மாதத்தில் (மார்ச்-ஏப்ரல்) சங்கராந்தி (அப்போது கங்கையில் குளிப்பது புனிதமானது) கொண்டாடப்படுகிறது. கங்கையை கௌரவிக்கும் விதமாக அசதா மாதத்தில்(ஜூன்-ஜூலை) தசரா கொண்டாடப்படுகிறது…..” என்று எழுதியுள்ளார்.

 

 

ஆனால் சங்கிகளோ, அடைப்புக்குறிக்குள் இருந்ததை “ஒவ்வொரு வருடம் சைத்ரா மாதத்தில் (மார்ச்-ஏப்ரல்) சங்கராந்தி (கும்பமேளா கடந்த காலத்தில் நடைபெற்றது) கொண்டாடப்படுகிறது” என்று திருத்தியுள்ளனர். இதனை அடிப்படையாகக் கொண்டு கும்பமேளாவிற்கு ஆதரவு திரட்டும் வேலையை ஆரம்பித்துள்ளனர். ஆனால் அலனோ, “வரலாற்று உண்மை என்னவென்றால், திரிபேனியில் கும்பமேளா ஒருபோதும் இருந்ததில்லை, மேலும் ‘புத்துயிர்ப்பு’ என்று அழைக்கப்படுவது பொய்யான ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டது.” என்கிறார்.

கும்பமேளாவைப் பற்றிய விவாதத்தை முதன் முதலில் ஆரம்பித்ததே காவி கும்பல்தான். 2019ல் கொல்கத்தாவில் நடைபெற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மேற்குவங்க பாஜக தலைவரும், ஆர்எஸ்எஸ்-ன் முக்கிய பிரமுகருமான மோகித் ராய், திரிபேனியில் கும்பமேளாவை தொடங்க வேண்டும் என்று பேசினார். அவர், “அந்த இடம் ஒரு திரிபேனி அல்லது சங்கமம் ஆகும். உத்தரப்பிரதேசத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சந்திக்கின்றன. ஹூக்ளியின் திரிபேனியில், கங்கா (பாகிரதி-ஹூக்ளி), ஜமுனா (வட இந்தியாவின் யமுனை போன்றது அல்ல) மற்றும் சரஸ்வதி (வட இந்தியாவில் இன்னும் கண்டறியப்படாத சரஸ்வதியைப் போன்றது அல்ல) பிரிந்துபோகின்றன…..” “திரிபேனியில் பிரயாக் யாத்திரையை தொடங்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும், ஜஃபர் கான் காஜியின் தர்கா மற்றும் மசூதியைச் சுற்றி (கோயில் மறுசீரமைப்பு) இயக்கத்தை உருவாக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நான் நினைக்கிறேன்.” என்றார்.  மோகித் ராயின் பேச்சிலிருந்து பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல் இந்த விசயத்தை கையில் எடுத்ததற்கான உள்நோக்கத்தை புரிந்து கொள்ளலாம்.

ஹூக்ளியில் கும்பமேளா நடத்துவதற்காக திரிபேனி கும்போ பொரிசலோனா சமிதி (Tribeni Kumbho Porichalona Shomiti) என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். அதில் ஆர்எஸ்எஸ் ஆதரவு வெளிநாட்டுவாழ் இந்தியர்கள், உள்ளூர் ஆர்எஸ்எஸ்-பாஜக ஆதரவாளர் மற்றும் மேட்டுக்குடியினர், உள்ளூர் TMC தலைவர்கள் உள்ளனர். அமெரிக்க வாழ் இந்தியரான கான்ஞ்சன் பானர்ஜி என்பவர் தான் கும்பமேளா உருவாக்கத்திற்கு முக்கியப் பங்காற்றியவர். திரிபேனி கும்போ பொரிசலோனா சமிதி முழுமையாகவே ஆர்எஸ்எஸ்-பாஜகவினால் வழி நடத்தப்படுவதாகவே இருந்துள்ளது. இதன் தலைமையில் முதல் கும்பமேளாவை 2022 பிப்ரவரியில் நடத்தியுள்ளனர். 2023 பிப்ரவரியில் நடத்தப்பட்ட கும்பமேளாவில் எட்டு லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளனர்.

 

 

திரிபேனி கும்போ பொரிசலோனா சமிதி சார்பாக 2022ல் வெளியிட்ட புத்தகத்தில் “முஸ்லீம் படையெடுப்பாளர்கள் வங்காளத்தை கைப்பற்றிய ஆரம்ப கட்டத்தில் திரிபேனியையும் கைப்பற்றினர், இது பதின்மூன்றாம் நூற்றாண்டின் துருக்கிய வெற்றி என்றும் குறிப்பிடப்படுகிறது. 703 ஆண்டுகளுக்கு முன்பு, ஜாபர் கான் காஜி ஒரு விஷ்ணு கோயிலை மசூதியாக மாற்றினார், அன்றிலிருந்து, கும்பஸ்னான் மற்றும் கும்பமேளா நிறுத்தப்பட்டது. 1319க்குப் பிறகு கும்பஸ்னான் சில முறை நடத்தப்பட்டது. ஆனால் இறுதியில், அது நிரந்தரமாக நிறுத்தப்பட்டது.” என்று உள்ளது.

சங்கிகளே ஏற்றுக்கொண்ட மேற்குவங்க வரலாற்று நூல்களான ரகல்தாஸ் பானர்ஜியின் பெங்கலர் இதிஹாஸ் தொகுதிகள் 1 மற்றும் 2, ஜாதுநாத் சர்க்காரின் தி ஹிஸ்டரி ஆஃப் பெங்கால்: முஸ்லீம் காலம் – 1200 முதல் 1757 (தொகுதி II), பினோய் கோஷ் பஸ்சிம்பங்கர் சமஸ்கிருதி போன்ற எந்த நூலிலும் ஹூக்ளியில் கும்பமேளா நடந்ததாகவோ அல்லது நிறுத்தப்பட்டதாகவோ எந்த குறிப்பும் இல்லை.

கும்பமேளா தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு, 12 பிப்ரவரி 2022 அன்று, மோஹித் ரே தலைமை வகிக்கும் பிஜேபி ஆதரவு தளமான Paschimbanger Jonyoவின் ஒரு பேஸ்புக் பக்கத்திலிருந்து கீழ்கண்டவாறு எழுதப்பட்டிருந்தது. “703 ஆண்டுகளுக்கு முன்பு, ஜாபர் கான் காஜி திரிபேனியின் விஷ்ணு கோயிலை மசூதியாக மாற்றினார். அன்றிலிருந்து கும்ப நீராடல், திருவிழா நிறுத்தப்பட்டது. 1319க்குப் பிறகு, இந்த ஆண்டு கண்காட்சி மீண்டும் தொடங்கப் போகிறது.”  

 

 

700 ஆண்டுகளுக்கு முன்பு துருக்கிய தளபதி  ஜாபர் கான் காஜி மேற்குவங்கத்தின் மீது படையெடுத்து கைப்பற்றியதாகவும் திரிபேனியில் உள்ள விஷ்ணு கோவிலை இடித்து தர்கா மற்றும் மசூதி கட்டியதாகவும் அவர் கும்பமேளாவையும் நிறுத்தியதாகவும் தற்போது மோடி ஆட்சியில் இந்தியப் பாரம்பரியம் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் சங்கிகள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதனை மோடியின் ஜால்ரா மீடியாக்களும் பிரச்சாரம் செய்தன.

மேற்குவங்க மாநிலத்தில் கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்) கட்சியின் வீழ்ச்சிக்கு பிறகு கடந்த பத்தாண்டுகளில் பாஜகவின் வளர்ச்சி அபரிமிதமானது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 18 இடங்களை கைப்பற்றியது. சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று பாஜக முயற்சித்து வருகிறது. இதையொட்டி பல இந்துத்துவ நடவடிக்கைகளையும் அதையொட்டிய கலவரங்களையும் செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியிலேயே முஸ்லீம் படையெடுப்பாளர்கள் திரிபேனியில் உள்ள விஷ்ணு கோவிலை இடித்து மசூதி கட்டியதாக பிரச்சாரத்தையும் பொய்யான வரலாற்று ஆதாரங்களையும் முன்வைத்து கும்பமேளாவை நடத்தியுள்ளனர்.     

(தொடரும்)

  • அழகு

ஆதாரம்.

https://article-14.com/post/hindutva-a-tampered-research-paper-pm-s-endorsement-drive-effort-to-revive-kumbh-mela-in-trinamool-ruled-west-bengal-645daf6b521bc

https://scroll.in/latest/1049329/scholar-says-his-paper-was-tampered-to-falsely-proclaim-the-revival-of-kumbh-mela-in-west-bengal

https://www.telegraphindia.com/opinion/toxic-agenda-hindutvas-falsification-of-scholarly-research/cid/1937676

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன