அளவற்ற அதிகாரத்துடன், காவிக் கும்பலுக்கு ஆதரவாக தன்னிச்சையாகச் செயல்படும் தலைமைத் தேர்தல் ஆணையர்
சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) என்ற பெயரில் இந்தியத் தேர்தல் ஆணையம், நாடு முழுவதும் உள்ள வாக்காளர்களது ஆவணங்களைப் பெற்று, வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணியினைக் கடந்த பத்து மாதங்களாகச் செய்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் பீகார் மாநிலத் தேர்தலை ஒட்டி தொடங்கப்பட்ட இந்தப் பணியினை, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், தில்லி, ஆந்திரா, கோவா, மகாராஷ்டிரா என எல்லா மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தியிருக்கிறது.
திடீரென நாடு தழுவிய அளவில் இவ்வளவு பெரிய நடவடிக்கையை ஏன் மேற்கொள்ள வேண்டும் எனக் கேள்வி எழுந்த போது, வாக்காளர் பட்டியலைத் திருத்துகிறோம், இறந்தவர்கள், இடம் மாறிச் சென்றவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிந்தவர்கள் ஆகியோரை நீக்கப் போகிறோம் என தேர்தல் ஆணையம் காரணங்களை அடுக்கியது.
இருந்த போதிலும், இது பாஜக எதிர்ப்பு வாக்காளர்களை, அதிலும் குறிப்பாக சிறுபான்மையினரை, இஸ்லாமியர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள நடைமுறை, என்ற விமர்சனம் பரவலாக முன்வைக்கப்பட்டது.
எஸ்.ஐ.ஆர். என்பது குடியுரிமையைப் பறிப்பதற்காகக் கொண்டுவரப்படும் ஒரு கருவி, காவி பாசிச சக்திகளின் தேர்தல் வெற்றியை உறுதி செய்வது மட்டுமன்றி, சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. – யைப் போன்று, இஸ்லாமியர்களது குடியுரிமை சம்பந்தமான தகவல்களைத் திரட்டி அவர்களை வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என முத்திரை குத்தி அவர்களை முகாம்களில் அடைத்து வைப்பதை நோக்கமாகக் கொண்டே இது நடைமுறைப்படுத்தப்படுகிறது என நாம் தொடர்ந்து கூறிவந்திருக்கிறோம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக எஸ்.ஐ.ஆர். படிவத்தில் கேட்கப்படும் கேள்விகள் எவ்வாறு தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) குறித்த கேள்விகளை ஒத்துப் போகின்றன என நாம் பார்த்திருக்கிறோம். பீகார், தமிழ்நாடு, மேற்கு வங்கம் என அடுத்தடுத்து நடந்த எஸ்.ஐ.ஆர்.-ல் எவ்வாறு பாஜகவின் எதிர்க்கட்சிகள் பலமாக உள்ள பகுதிகளில் அதிக அளவிலான எண்ணிக்கையில் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதும், இறுதி நேரத்தில் பல இலட்சம் வாக்காளர்கள் மீண்டும் பட்டியலில் இணைக்கப்பட்டிருப்பதும் களத்தில் இருந்து வந்த புள்ளிவிவரங்கள் மூலம் அம்பலப்பட்டது.
ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் போன்ற பத்திரிக்கைகள் கள ஆய்வு நடத்தி பாஜகவை வெற்றிபெறச் செய்வதற்கு எவ்வாறு எஸ்.ஐ.ஆர்.-ஐ தேர்தல் ஆணையம் பயன்படுத்தி வருகின்றது என்பதை வெளிக்கொண்டுவந்தது. எஸ்.ஐ.ஆர். என்பது எவ்வாறு சட்டவிரோதமானது, அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது, குடியுரிமையைச் சோதிக்க இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என இது குறித்த பல சட்ட வாதங்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏ.டி.ஆர்) போன்ற அமைப்புகள் உச்சநீதிமன்றம் வரைக் கொண்டு சென்று அம்பலப்படுத்தின.
இவ்வாறு வெளியிலிருந்து, களத்தில் இருந்து, எஸ்.ஐ.ஆர். தேவையில்லை என எதிர்த்து சமூகத்தின் பல பிரிவுகளில் இருந்தும் எழுந்த கண்டனக் குரல்கள். இவற்றையெல்லாம் தேர்தல் ஆணையம் சிறிதும் மதிக்கவில்லை. எஸ்.ஐ.ஆர்.-ஐ நடைமுறைப்படுத்துவதிலேயே தீவிரமாக இருந்தது. ஆனால் தற்போது அரசுக்கு வெளியிலிருந்து மட்டுமல்ல, அதற்கு உள்ளேயே, தேர்தல் ஆணையத்திற்கு உள்ளேயே எஸ்.ஐ.ஆர். நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு இருந்திருக்கிறது என்பதும், அதுவும் தேர்தல் ஆணையர்களில் பெரும்பான்மையானவர்கள் எஸ்.ஐ.ஆர்.க்கு எதிராக இருந்திருக்கிறார்கள் என்பதும், அவர்களது எதிர்ப்பை மீறித்தான் இது தலைமைத் தேர்தல் அதிகாரியால், தன்னிச்சையாக முன்னெடுக்கப்பட்டிருக்கிறது என்பதும் அம்பலமாகியிருக்கிறது.
‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் வெளியிட்டிருக்கும் புலனாய்வுக் கட்டுரையில், இந்தியத் தேர்தல் ஆணையர்களில் இருவர் கடந்த பத்து மாதங்களில் பதினான்கு முறை, எஸ்.ஐ.ஆர்.-க்கு எதிராக தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்திருப்பதும் அந்த எதிர்ப்புகளையெல்லாம் மீறித்தான் அது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதும் அம்பலப்படுத்தியிருக்கிறது.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் மூன்று ஆணையர்களைக் கொண்டது. அதில், எஸ்.ஐ.ஆர்.-ஐ நடத்தியே தீருவேன் என உறுதியாக நிற்கும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் குறித்து நாம் அறிவோம். மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகிய இருவரும் தான் இவ்வாறு எதிர்த்திருக்கிறார்கள். எஸ்.ஐ.ஆர். நடத்துவதாக அறிவிக்கப்பட்ட 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி, கடந்த ஆகஸ்டு மாதம் வரையில் அவர்கள் தொடர்ந்து பதினான்கு முறைத் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள்.
தங்களிடம் கருத்துக் கேட்காமல், தங்களது ஒப்புதல் இன்றி தலைமைத் தேர்தல் அதிகாரி எடுத்த முடிவுகள், பிறப்பித்த உத்தரவுகள் குறித்து அவர்கள் தங்களது ஆட்சேபனைகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் தேதியன்று மட்டும் 4 ஆட்சேபனைகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.
இவர்களால் எழுப்பப்பட்ட ஆட்சேபனைகள் வெறுமனே மேலோட்டமான நிர்வாக ரீதியிலான கருத்து வேறுபாடுகள் அல்ல. எஸ்.ஐ.ஆர். நடைமுறையின் மிக முக்கியமான பிரச்சனைகள் குறித்து அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள்.
- புதிய வாக்காளர்களைப் பதிவு செய்வது
- வாக்காளர்களின் பெயர்களை நீக்குவது, மீண்டும் சேர்ப்பது,
- எஸ்.ஐ.ஆர். முடிவுகள் தொடர்பான மேல்முறையீடுகள்
- படிவம் 6 (Form 6)
- வாக்காளர் பட்டியல் தரவுத்தளத்தை அணுகும் வசதிகள்
- வாக்காளர் பட்டியல்களைக் கையாளும் தகவல் தொழில்நுட்ப (IT) அமைப்புகள்
- இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) பெயரில் வெளியிடப்படும் தகவல் தொடர்புகள்
- தகவல் தொழில்நுட்பப் பிரிவிற்கான பொறுப்புகளை ஒதுக்குவது
என எவையெல்லாம் மக்கள் மத்தியிலிருந்து கேள்விகளாக, ஆட்சேபணைகளாக, நீதிமன்ற வழக்குகளாக முன்வைக்கப்பட்டனவோ அவற்றையெல்லாம், தேர்தல் ஆணையர்களே எழுப்பியிருக்கிறார்கள். அவற்றில் முக்கியமான சிலவற்றைப் பற்றி மட்டும் பார்ப்போம்.
படிவம் 6 (Form 6) என்பது புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்காக வாங்கப்படும் படிவமாகும். இதில் தற்போது ஒரு புதிய கேள்வியை தேர்தல் ஆணையம் சேர்த்திருக்கிறது. விண்ணப்பதாரரின் பெயர் முந்தைய எஸ்.ஐ.ஆர். வாக்காளர் பட்டியலில் (2003-04) இடம்பெற்றிருந்ததா, அவரது பெற்றோர் அல்லது தாத்தா-பாட்டியின் பெயர் அதில் இடம்பெற்றிருந்ததா அல்லது இருவருடைய பெயரும் அதில் இடம்பெறவில்லையா எனப் புதிதாக சேர்க்கப்பட்ட இந்தக் கேள்விக்கு பதிலளிக்காமல் படிவத்தைச் சமர்பிக்க முடியாது.
புதிய வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கான படிவத்தில் இணைக்கப்பட்டுள்ள இந்தக் கேள்வி, வாக்காளரின் குடியுரிமையைச் சோதிக்கின்ற கேள்வியாகும். 18 வயது பூர்த்தியான யாரும் வாக்களிக்க முடியும் என்பதால், விண்ணப்பிப்பவரது வயது, முகவரி குறித்த தகவல்களை மட்டும்தான் தேர்தல் ஆணையம் கேட்டிருக்க வேண்டும். அவரது பெற்றோர்கள், மூதாதையர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்ததா, எனக் கேட்பது எதற்காக? பெற்றோரோ தாத்தா பாட்டியோ முந்தைய வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்றால் அவர்களை இந்தியக் குடிமக்கள் இல்லை என்றும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும் முத்திரை குத்திட வசதி செய்து கொடுக்கவே இந்தக் கேள்வி படிவம் 6ல் இணைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு புதிய கேள்வியை இணைத்ததை எதிர்த்து, தேர்தல் ஆணையர் ஜோஷி மே மாதம் 16ஆம் தேதியன்று ஆட்சேபனை தெரிவித்திருக்கிறார். படிவம் 6 என்பது வாக்காளர் பதிவு விதிகள், 1960-ன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வமான படிவம் என்றும் அதனை எஸ்.ஐ.ஆர். குறித்த வழிகாட்டுதல் மூலமாகவோ அல்லது உத்தரவு மூலமாகவோ மாற்றியமைக்க முடியாது, என்று அவர் வாதிட்டிருக்கிறார். இதற்கான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டால் மட்டுமே புதிய கேள்விகளை இணைக்க முடியும் எனவும் ஜோஷி கூறியிருக்கிறார். ஜோஷியின் கருத்தை, மற்றொரு தேர்தல் ஆணையரான சந்து மே மாதம் 19ஆம் தேதியன்று ஏற்றுக் கொண்டிருக்கிறார். இருவரது எதிர்ப்பையும் மீறி அந்த மாற்றம் இணையதளத்தில் இடம்பெற்றது. இதனை எதிர்த்து, ஆகஸ்ட் 13 அன்று சந்து ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் அந்த மாற்றம் “அங்கீகரிக்கப்படாதது/சட்டவிரோதமானது” என்றும், அதை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்ததாக, வாக்காளர் பட்டியலுக்கு மையப்படுத்தப்பட்ட தரவுத்தளம் உருவாக்குவது குறித்த நடைமுறைக்கும் இவர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். ஒரு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியலுக்கு அந்தத் தொகுதியின் தேர்தல் பதிவு அதிகாரியே பொறுப்பானவர். பட்டியலில் யாரைச் சேர்க்க வேண்டும், யாரை நீக்க வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார். நடைமுறையில் மாவட்ட ஆட்சியர்தான் இந்தத் தேர்தல் பதிவு அதிகாரியாகச் செயல்படுவார். அவர்தான் வாக்காளர் பட்டியலைத் திருத்த முடியும்.
ஆனால் எஸ்.ஐ.ஆர். மூலமாக மையப்படுத்தப்பட்ட வாக்காளர் தரவுத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டது. அந்தத் தரவுத்தளத்தினைப் பயன்படுத்துவதற்கு, வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்ப்பதற்கோ, நீக்குவதற்கோ, சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பதிவு அதிகாரிக்கு அனுமதி இல்லை. தில்லியில் இருக்கின்ற தலைமைத் தேர்தல் ஆணையத்தின் ஐ.டி. பிரிவுக்கு மட்டுமே அதற்கான அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு வாக்காளர் பட்டியலுக்குப் பொறுப்பான, தேர்தல் பதிவு அதிகாரிகளிடமிருந்து அதிகாரத்தைப் பிடுங்கி ஐ.டி. பிரிவு ஊழியரின் கையில் ஒப்படைத்ததை இரண்டு தேர்தல் ஆணையர்களும் ஆட்சேபித்திருக்கிறார்கள்.
வாக்காளர் பட்டியலை மையப்படுத்துகிறோம் என்ற பெயரில் பட்டியலைத் திருத்தும் அதிகாரத்தை தலைமைத் தேர்தல் ஆணையம் தனது கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த அதிகாரத்தைக் கொண்டு நாட்டின் எந்தவொரு மூலையில் இருக்கும் வாக்காளரையும் தில்லியில் உட்கார்ந்து கொண்டு தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட முடியும்.
இவ்வாறு வாக்காளர் பட்டியல் மையப்படுத்தப்பட்ட போது ஏற்பட்ட தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகப் பல வாக்காளர்களது பெயர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. கோவா மாநிலத்தில் இவ்வாறு தவறுதலாக பட்டியலில் நீக்கப்பட்ட 97 வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதனை அந்தத் தொகுதியின் தேர்தல் பதிவு அதிகாரியால் செய்ய இயலவில்லை, தில்லியிலிருந்த ஐ.டி. பிரிவுக்கு மனு செய்துதான் சேர்க்க வேண்டியிருந்தது. இது போன்று பல குளறுபடிகள் இந்த மையப்படுத்தும் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ளது எனக் கூறும் தேர்தல் ஆணையர்கள் இது குறித்து எல்லா மாநில வாக்காளர் பட்டியலையும் தணிக்கை செய்ய வேண்டும், தவறுகளைக் கண்டறிந்து சரி செய்ய வேண்டும் என்று கோரியிருக்கிறார்கள். ஆனால் அவர்களது எதிர்ப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவேயில்லை.
மேற்கு வங்க மாநிலத்தில் நடத்தப்பட்ட எஸ்.ஐ.ஆர்.இல் ஆரம்பத்தில் 60 இலட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டது குறித்து விசாரித்த உச்சநீதிமன்றம், இதனைச் சரி பார்க்க மேல்முறையீடு செய்யலாம் என உத்தரவிட்டது. அதன்படி மேல்முறையீடுகளை விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டன.
இந்த தீர்ப்பாயங்களில் 38 லட்சம் மேல்முறையீடுகள் செய்யப்பட்டன. அவற்றில் 22.21 லட்சம் மேல்முறையீடுகள், நீக்கப்பட்ட வாக்காளர்களால் தங்கள் வாக்காளர் உரிமையை மீட்டெடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டவை. 16.10 லட்சம் மேல்முறையீடுகள், நீதித்துறை அதிகாரிகளால் பட்டியலில் சேர்க்கப்பட்ட வாக்காளர்களை, நீக்கக் கோரி தேர்தல் ஆணையத்தால் தாக்கல் செய்யப்பட்டவை.
இது குறித்து தேர்தல் ஆணையர் சந்து மிக முக்கியமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் அந்த 16.10 லட்சம் மேல்முறையீடுகளைத் தாக்கல் செய்தது யார்? மேல்முறையீடுகளுக்கு யார் அனுமதி அளித்தது? அவற்றை உண்மையில் தாக்கல் செய்தது யார்? எந்த அடிப்படையில் அல்லது செயல்முறையின் கீழ் அவை தாக்கல் செய்யப்பட்டன?
அந்த அடிப்படை அல்லது செயல்முறை குறித்து தனக்கோ, மற்றொரு தேர்தல் ஆணையரான ஜோஷிக்கோ அல்லது மேற்கு வங்கத்தின் தற்போதைய தலைமைத் தேர்தல் அதிகாரிக்குக் கூடத் தெரிவிக்கப்படவில்லையே ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மேற்கு வங்கத்தைப் பொருத்தவரை 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நடத்தப்பட்ட எஸ்.ஐ.ஆர்.-இல் மொத்தமாக 91 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இது மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 12 சதவீதமாகும். இவ்வளவு வாக்காளர்கள் நீக்கப்பட்டதன் காரணமாக அம்மாநிலத்தில் பாஜக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதுடன், இன்றைக்கு திரிணாமுல் காங்கிரஸ் என்ற கட்சியை இருந்த இடம் தெரியாமல் மொத்தமாக காலி செய்திருக்கிறது. தான் நடத்திய வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைக்குப் பிறகு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களை நீக்க வேண்டும் என தானே மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்திருக்கிறது தேர்தல் ஆணையம்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மற்ற இரண்டு தேர்தல் ஆணையருக்குத் தெரிவிக்காமல் தலைமைத் தேர்தல் ஆணையரான ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவெடுத்து அமுல்படுத்தியவை. இவ்வாறு தங்களுக்குச் சாதகமாக வேலை செய்ய வேண்டும் என்பதற்காகவே ஞானேஷ் குமாரை மோடி அமித்ஷா கும்பல் தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமித்திருக்கிறது.
தற்போது இந்த விவகாரம் அம்பலமான பிறகு பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. மம்தா பானர்ஜி ஞானேஷ் குமாரை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியதுடன், பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டுச் சேர்ந்து மேற்கு வங்கத் தேர்தலைக் கொள்ளையடித்தனர் என்று குற்றம் சாட்டியிருக்கிறார். அத்துடன் பழைய வாக்காளர் பட்டியலுடன் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கோரியிருக்கிறார்.
மம்தா பானர்ஜியின் அதே கருத்தை வலியுறுத்தியிருக்கும் அரவிந்த் கேஜ்ரிவாலும் ஞானேஷ் குமாரை கைது செய்வதுடன் தமிழ்நாடு, பீகார், மேற்கு வங்கம், கேரளா என எல்லா மாநில தேர்தலையும் இரத்து செய்து மீண்டும் பழைய வாக்காளர் பட்டியலின் படி தேர்தல் நடத்த வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.
இவர்கள் கூறுவது போல ஞானேஷ் குமாரைக் கைது செய்வது அவ்வளவு சுலபமல்ல. தலைமைத் தேர்தல் அதிகாரி, காவி கும்பலின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் செயல்பட்டால் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும், அவர் மீது வழக்குப் பதிய வேண்டும், கைது செய்ய வேண்டும் எனக் இது போன்ற கோரிக்கைகள் வரும் என எதிர்பார்த்துத்தான், 2023ஆம் ஆண்டிலேயே தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் பாதுகாப்புச் சட்டம் என்றதொரு சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது மோடி அரசு.
அந்தச் சட்டத்தின்படி தலைமைத் தேர்தல் ஆணையர் மீதோ அல்லது தேர்தல் ஆணையர் மீதோ, அவர் தனது அலுவல்ரீதியான கடமை அல்லது பணியைச் செய்யும்போது நடந்தவை அல்லது பேசிய வார்த்தைகள் தொடர்பாக, அவருக்கு எதிராக எந்தவொரு நீதிமன்றமும் உரிமையியல் அல்லது குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ அல்லது தொடரவோ முடியாது.
இது தேர்தல் ஆணையருக்கு யாராலும் தொடமுடியாத உயர்ந்த இடத்தைக் கொடுக்கிறது. அதே போல இன்றைக்கு ஒருவர் இந்தியாவின் குடிமகனா இல்லையா என்பதை அவர் பாஸ்போர்ட் வைத்திருந்தாலோ, ஆதார் அட்டை வைத்திருந்தாலோ, வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தால் கூட நிரூபிக்க முடியாது. வாக்காளர்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் தேசிய தரவுத் தர மையத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால் அவற்றிலிருந்து ஒருவரை நீக்குவதற்கும், புதிய நபர்களைச் சேர்ப்பதற்கும், தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது.
ஒட்டுமொத்தமாகச் சொன்னால் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அளவற்ற அதிகாரங்களை வழங்கியிருப்பதுடன், அவருக்கு எவ்விதப் பாதிப்பும் வராமல் பாதுகாக்கும் வகையில் சட்டத்திருத்தங்களையும் கொண்டுவந்திருக்கிறது இந்த மோடி அரசு.
இவையெல்லாவற்றையும் பார்த்த பிறகும் சிலர், இதற்கு எதிராக நீதிமன்றத்திற்குச் செல்வோம் எனக் கூறுகின்றனர். ஆனால் உச்சநீதிமன்றம்தான் எஸ்.ஐ.ஆர். நடைமுறைக்கு ஆதரவாகத் தான் இதுவரை தீர்ப்புகளை வழங்கி வருகிறது. பீகார் வழக்கில் முதலில் எஸ்.ஐ.ஆர்.ஐக் கண்டிப்பது போலப் பேசிவிட்டு பின்னர் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையில் பங்குபெறுமாறு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளுக்கு உத்தரவிட்டது.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற எஸ்.ஐ.ஆர். என்பது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோரைக் குறிவைத்து நடத்தப்பட்டது என்பது அம்பலமானது. வாக்காளர்களின் பெற்றோரின் பெயர்களின் எழுத்துப்பிழைகளில் உள்ள வேறுபாடு, பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான வயது வித்தியாசம் குறைவாக இருப்பது, அல்லது பெற்றோருக்கு ஆறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பது போன்ற, காரணங்களைக் கூறி தேர்தல் ஆணையம் அவர்களது வாக்களிக்கும் உரிமையைப் பறித்தது. இவ்வாறு பல இலட்சம் வாக்காளர்களது பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதைச் நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டிய போது, இந்த முறை வாக்களிக்காமல் விட்டு விட்டால் என்ன அடுத்த தேர்தலில் வாக்களித்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
உச்ச நீதிமன்றம் கூறியது போல அடுத்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றால் அங்கே எதிர்க்கட்சிகள் வேண்டுமே? எஸ்.ஐ.ஆர்.-ஐ பயன் படுத்தி வாக்காளர்களை நீக்கிவிட்டு மேற்கு வங்கத்தின் ஆட்சியை பிடித்திருக்கும் பாஜக இன்றைக்கு அம்மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் என்ற கட்சியே இல்லாமல் அழித்துவிட்டது. எதிர்க்கட்சிகளே இல்லாமல் செய்துவிடுவதற்கு பாஜக வீரியமாக வேலை செய்து வரும் பொது அதற்கு உதவி செய்வது போலத்தான் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இனியும் எஸ்.ஐ.ஆர்.-ஐ தடுத்து நிறுத்த நீதிமன்றம் போவோம் என யாரும் கூறினால், அவர்கள் நிச்சயமாக பட்டும் கெட்டும் திருந்தாதவர்களாகத்தான் இருக்க முடியும்.
அளவற்ற அதிகாரங்களுடனும், யார் நினைத்தாலும் தன்னை தண்டிக்கவோ, வழக்குப் பதியவோ கூட முடியாது என்ற அளவிற்குப் பலமான பாதுகாப்புடன், காவி பாசிஸ்டுகளின் உற்ற தோழனாக இந்திய தேர்தல் ஆணையம் மாற்றப்பட்டிருக்கிறது.
- அழகு



