பாசிச பயங்கரவாதப் படைகள்:
அமைதிவழிப் போராட்டத்திற்கே எதிரான புதிய அச்சுறுத்தல்!
பசுவதையைத் தடுப்பதற்குத்தான் ‘பசு காவலர்’ படை; இசுலாமிய ஆண்கள் இந்துப் பெண்களைத் திருமணம் செய்து மதமாற்றும் ‘லவ் ஜிகாத்’ நடவடிக்கையைத் தடுக்கவே ரோமியோ எதிர்ப்புப் படை (anti Romeo) படை; கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் புகுந்து “அந்நிய” மத பிரச்சாரத்தை தடுக்கவே விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள் போன்ற அமைப்புகள் – என்று இசுலாமியர்கள், கிறித்துவர்களைத் தாக்கி, அடித்து கொல்லும் (lynching) ஒரு குண்டர் படை என்பதுதான் காவி பாசிச படைகளைப் பற்றி நாடெங்கும் நிலவிவரும் பொதுக்கருத்து.
ஹிட்லர் உருவாக்கிய நாஜிப் படைகள் யூதர்களை மட்டும் அடித்துக் கொல்லவில்லை; வறுமை, வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்றவற்றுக்கெதிராகப் போராடிய ஜெர்மானியர்களைத்தான் பிரதானமாக தாக்கினர். தொடக்கத்தில் “பிற இனத்தவர், மதத்தவரை” எதிர்த்து “சொந்த இன, மதத்தவரைக்” மக்களைக் காப்பதுபோல இவர்கள் காட்டிக் கொண்டாலும், உண்மையில் உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராக நிதிமூலதன கும்பலின் நலனுக்குச் சேவை செய்யும் படைகள்தான் இவை.
என்னதான் இனம், மதம் போன்ற திரைகளிட்டு மூடிக் கொண்டாலும், மக்களின் போராட்டங்கள் இவர்களின் வர்க்கத்தன்மையைப் பளிச்சென அம்பலப்படுத்திவிடுகின்றன. அவ்வாறு இந்தியாவில் கார்ப்பரேட்டுகளையும் காவிகளையும் எதிர்க்கும், தங்கள் சாதாரண உரிமைகள், வாழ்வாதாரத்திற்காகப் போராடும் உழைக்கும் மக்களை அடித்துக் கொல்வதற்கான படைதான் காவி பாசிச குண்டர்படை என்ற உண்மையை ஜந்தர் மந்தர் போராட்டம் கண்கூடாகக் காட்டியுள்ளது.
ஜந்தர் மந்தர் போராட்டத்தில், தங்களது கல்விக் கனவு வீணாய் போகிறதே என கொதித்தெழுந்து போராட்டகளத்திற்கு வந்தவர்களில் கணிசமானோர் பாஜகவிற்கு வாக்களிக்கும் இந்து நடுத்தர வர்க்கத்தினரே. இந்துக்களைப் பாதுகாப்பதற்காக “பிறரை” “அந்நிய சதிகாரர்களை அழிக்கப் போவதாகக்” கூறிக் கொள்ளப்பட்ட இப்படைதான், பா.ஜ.க.விற்கு வாக்களித்த அதே இந்துக்களின்மீது தனது கொடிய தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
“பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க நான் பயன்படுத்திய அதே விரலை இன்று போலீஸ் லத்தியால் உடைத்துவிட்டது” ஜந்தர் மந்தரில் போராடிய இளைஞர் கூறிய வார்த்தைகள் இவை. அவ்விரலை போலீசுதான் உடைத்திருக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில், இப்போராட்டத்தை நசுக்குவதற்கு டெல்லி போலீஸ், மத்திய துணை ராணுவப்படையுடன், காவி பாசிச குண்டர் படையினரான பஜ்ரங்தள் போன்ற பயங்கரவாத அமைப்பைச் சார்ந்தவர்கள் சாதாரண உடையில் கையில் ஆணி அடித்த லத்திகளோடு இறக்கிவிடப்பட்டனர்.
ஆணியடித்த லத்திகளோடும், கற்களைக் கொண்டும் எந்த இந்துக்கள் தமக்கு வாக்களித்துள்ளார்களோ அவர்களின் உடலைக் கிழித்தெறிந்துள்ளது; அவர்களின் மண்டையைப் பிளந்துள்ளந்து; அந்த இந்துக்களின் வீட்டு இளம்பெண்களை பாலியல் ரீதியாகத் துண்புறுத்தியுள்ளது. இவை வெறும் ஊகங்களோ, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளோ அல்ல. “டெல்லி போலீஸ், தண்டா சலாவோ, ஹம் தும்ஹாரே சாத் ஹைன்” (டெல்லி போலீசே, தடியடி நடத்துங்கள்; நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்) என்று முழக்கமிட்டப்படி லத்தியைச் சுழற்றும் காவி பாசிச குண்டர் படையின் தலைவரான அபிஷேக் தாகூரின் பல இலட்சம் பார்வைகளைப் பெற்ற வீடியோவே இதற்கு சாட்சி.
இதுமட்டுமல்ல, சாதாரண உடையுடன் லத்தியோடு போராட்டக் களத்திற்குள் புகுந்து மாணவர்களைத் தாக்கிய கும்பல்கள் தொடர்பான ஏராளமான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளன. சில காவி பாசிசக் குண்டர்கள், பெயர் அட்டையில்லாமல் (name badge) போலிசு போல உடையணிந்துகொண்டும் கூட்டத்திற்குள் நுழைந்து கொலைவெறித் தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர். (மோடி அரசின் கட்டளைக்கு இணங்க மெட்டா நிறுவனத்தால் தற்போது அக்காணொளிகள் இணையத்தில் இருந்து அகற்றப்பட்டு வருகின்றன)
உதாரணமாக, சுவதந்திரா பரத்வாஜ் என்ற பாசிஸ்டு சமீபத்திய பேட்டியொன்றில், “என் கையிலிருந்த லத்தியும் காலணிகளும் போலிசுடையவைதான்; நிஷு என்ற போராட்டக்காரரின் தந்தையையு நான் தான் தாக்கினேன்; அவர் தலையில் இப்போது 60 தையல்கள் போடப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்; என்மீது கொலைவழக்குப் பதிய முடியாது; ஏனென்றால் சிராக் பாஸ்வான், மோடி எல்லாம் எனது அண்ணன்கள்தான்” என்று பகிரங்கமாகவே, இதைப் பெரிய சாதையைப் போலப் பேசியுள்ளான். உயிருக்குப் போராடி வரும் நிஷூவின் தந்தை சஞ்சய் ஷர்மா ஒரு இந்து!
இத்தகைய கொலைவெறித் தாக்குதலை நடத்தியதற்காக “நான் சிறையில் கூட இல்லை; வெளியில் சுதந்திரமாகத்தான் சுற்றித் திரிகிறேன்” என்று பகிரங்கமாக் கூறியுள்ளான். இதன் நோக்கம், அரசமைப்பின் அனைத்து உறுப்புகளும் நம்பக்கம் இருக்கிறது நம்மையாரும் எதுவும் செய்யமுடியாதென்று நாடெங்கும் உள்ள பாசிஸ்டுகளை இதுபோன்ற கொலைவெறியாட்டங்களுக்குத் தூண்டுவதன்றி வேறில்லை!
ஒருபுறம் போராட்டக் களத்தில் மாணவர்கள் மீது இவ்வாறான கொலைவெறித் தாக்குதல் நிகழ்த்தப்படுகிறதென்றால், மறுபுறம், களத்தில் உள்ள மாணவர்கள் மீது உளவியல் ரீதியான, இணையத் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டன. குறிப்பாக, மும்பையில் போராடும் மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தை ஒற்றைக் கையால் தடுத்து தன் நெஞ்சுரத்தை வெளிப்படுத்திய இளம்பெண் ரியா அஹிர் என்பவருக்கு இணையத்தில் கொலை மிரட்டலும், வல்லுறவு மிரட்டலும் (rape threat) விடுக்கப்பட்டதோடு, அவரது தனிப்பட்ட தகவல்களை வெளியே கசியவிட்டு மிகப்பெரிய உளவியல் தக்குதலைத் தொடுத்தது, பாசிசப் படை.
போராட்டம் முடிவடைந்து பல நாட்களுக்குப் பின்னரும் இத்தாக்குதல்கள் நிற்கவில்லை. “சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டிருந்த மாணவர்களைத் தடுத்து நிறுத்தியவள் நான். அந்த ஒரே காரணத்திற்காக தினமும் மோசமான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வருகிறேன். ஒரு கட்சியின் தொண்டர்கள் என்னைப் பற்றி அவதூறான கருத்துக்களைப் பதிவிடுகின்றனர். நான் 40 ரூபாய்க்கு என் உடலை விற்கிறேன் என்கின்றனர். போலீசில் புகார் அளித்தும், இதுவரை FIR நகல் கூட எனக்குக் கிடைக்கவில்லை” என்று கண்ணீர்மல்க பேட்டியளித்துள்ளார், ரியா அஹிர்.
ரியா அஹிர் மட்டுமல்ல, போராட்டத்தில் ஈடுபட்ட, மோடிக்கெதிராக முழங்கி பிரபலமடைந்த பல்வேறு மாணவ, மாணவிகளையும் இணையத்தில் கேடான முறையில் அவமதித்து உளவியல் தாக்குதலைத் தொடுத்து வருகின்றன, இப்படைகள். மோடி அரசை எதிர்த்து கேலி, கிண்டல் செய்த, முழக்கமிட்ட மாணவர்களைத் தேடித்தேடி டாக்ஸிங் செய்து வருகின்றனர். (Doxxing – இணையத்தில் தங்களது சொந்த பெயர்களை வெளிப்படுத்தாமல் இயங்கும் கணக்குகளை பின்னோக்குப் பொறியியல் (Reverse Engineering) மூலம் ஒருவரின் இயற்பெயர், ஊர், தொலைபேசி எண் போன்றவற்றை கண்டுபிடித்து, பொதுவெளியில் கசியவிடுவது)
இணையத் தாக்குதலோடு நிறுத்திக் கொள்ளாமல், அவர்களின் வீட்டிற்கே நேரில் சென்று கொலை மிரட்டல் விடுவது, வல்லுறவு மிரட்டல்கள் விடுவது போன்றவற்றைச் செய்து வருகின்றனர். ருச்சிகா சிங் எனும் 15 வயதே ஆன இந்து சிறுமியின் மீது “ஜன்சாட்டா தள்” எனும் காவி குண்டர் படையின் பெண்கள் பிரிவு சார்பாக 6 FIR-கள் பதியப்பட்டுள்ளன. காரணம் என்னவென்று தெரியுமா? மோடிக்கு எதிராக காணொளி வெளியிட்டதுதான். வழக்குப் பதிவு செய்தது மட்டுமின்றி, ருச்சிகாவின் வீட்டிற்கே சென்ற காவி கும்பல் அவரின் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்து, மன்னிப்பு வீடியோ ஒன்றையும் வெளியிடவும் வைத்துள்ளது. பரேலியில், ஜந்தர் மந்தர் போராட்டத்தை முடித்த பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்த 16 வயது ‘இந்து’ மாணவரை வழிமறித்த ‘ராஷ்ட்ரீய இந்து வீர் சேனா’ என்ற பயங்கரவாத கும்பல், அவரின் கழுத்தை நெருக்கி, அவர் யார் என்னவென்று விசாரித்துள்ளது.
பொதுவில் மோடி மூன்றாம் முறை ஆட்சியமைத்த பிறகு இத்தாக்குதல்கள் மிகவும் தீவிரமடைந்தன என்றாலும், ஜூலை 20 போராட்டத்திற்குப் பிறகு மேன்மேலும் பன்மடங்கு தீவிரமடைந்துள்ளன. மேற்கு வங்கத்தில் கடந்த மாதம், CJP தலைவர் அபிஜித் தீப்கேவின் “பள்ளிகளை சீர் செய்வோம்” அறைகூவலை ஏற்று தனது ஊரில் இருக்கும் பள்ளியை பார்வையிட்ட அப்துல் ஹஃபிஸ் என்ற இளைஞரின் தந்தை அதேபகுதியைச் சேர்ந்த காவி குண்டர்களால் அடித்தே கொலை செய்யப்பட்டுள்ளார். ஹஃபிஸ் செய்த குற்றம் என்ன? தனது ஊரில் தான் படித்த பள்ளியில் ஏதேனும் பிரச்சனைகள் இருக்கிறதா, குழந்தைகளுக்கு சுகாதாரமான குடிநீரும், கழிப்பறை வசதிகள் இருக்கிறதா என ஆய்வு செய்ததுதான்!
இதே “பள்ளிகளை சீர் செய்வோம்” இயக்கத்தின் கீழ் ராஜஸ்தான் மாநிலம் ராம்பூரா கிராமத்தில் CJP கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் ஆசுதோஷ் ரங்கா தலைமையிலான செயற்பாட்டாளர்கள், அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியை ஆய்வு செய்ய முற்பட்டபொழுது அக்கிராமத்தை சேர்ந்த பாஜக குண்டர் படையினர் கற்களை வீசி அவர்களை விரட்டியடித்துள்ளனர். இந்தியா கூட்டணியின் ஹேமந்த் சோரன் கட்சி ஆட்சியில் இருக்கும் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேர்வு முறைகேடுகளை எதிர்த்துப் போராடியபோது, அனைத்து இந்திய மாணவர் கழகத்தின் (AISA) தலைவர் நேஹா போராவின் மீது கருப்பு மை ஊற்றித் தாக்குதல் நடத்தியுள்ளது, காவிப் படை. நன்றாக நினைவில் கொள்ளுங்கள்! அங்கே அவர் மோடிக்கு எதிரான ஹேம்ந்த் சோரன் அரசை விமர்சித்துப் பேசியுள்ளார்! எனவே, மோடியை மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளையே விமர்சித்தாலும் நிதிமூலதனத்தின் நலனுக்கெதிரானவர்களைக் காவி பாசிசப் படை வேட்டையாடும் என்பதே இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய உண்மை!!
கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாதில், மலாலா யூசுப்சாய், ஆணி பிராங்க், சே குவேரா, நேரு, காந்தி போன்றோரின் நூல்களை வைத்து சிவில் சமூக அமைப்போன்று நடத்திய வாசகர் வட்டத்தை பஜ்ரங் தள், விஷ்வ இந்து பரிஷத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட காவி குண்டர்கள் நிறுத்தியத்தோடு மட்டுமில்லாமல், அங்கு கூடியிருந்த மாணவர்கள்-இளைஞர்கள், ஜனநாயக சக்திகளின் மீது இரும்புத் தடிகள், மரக்கட்டைகளைக் கொண்டு தாக்கியுள்ளது.
இவ்வாறாக சம்பவங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். மேற்கூறிய அனைத்து சம்பவங்களிலும் இப்பாசிச கொலைவெறிப் படைகளால் பாதிக்கபட்டவர்கள் அனைவரும் என்ன மாட்டுக்கறி வைத்திருந்தார்களா?! லவ் ஜிகாத் செய்தவர்களா?! அல்ல மதமாற்ற பிரசாரத்தில் ஈடுப்பட்டவர்களா?! காவி பாசிசக் கும்பல் பாதுகாப்பதாகச் சொல்லும் இந்துக்கள்தானே இவர்கள்! அதுவும் கணிசமானோர் பா.ஜ.க.வுக்கு வாக்களித்த இந்துக்கள்தானே!
இதே பாசிச குண்டர்படைதான் சி.ஏ.ஏ. சட்டத்திற்கு எதிராகப் போராடிய ஜே.என்.யூ. மாணவர்கள் மீதும் கொலைவெறித் தாக்குதலைத் தொடுத்து; அவர்களின் மண்டையைப் பிளந்தது. இதே பாசிசப் படைதான் மூன்று வேளான் சட்டங்களை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் கூட்டத்திற்குள் புகுந்து அவர்கள் உணவு சமைப்பதற்கான, துணி துவைப்பதற்கான இயந்திரங்களையும் அடித்து நொறுக்கி அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதலை நிகழ்த்தியது. இதே பாசிசப் படைதான் நீட் முறைகேடுகள் எதிர்ப்புப் போராட்டத்திலும் நுழைந்து கொலைவெறித் தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. நாளை இந்து உழைக்கும் தொழிலாளிகள் கூலி உயர்வு கேட்டுப் போராடினால், இளைஞர்கள் வேலை கேட்டுப் போராடினால், மக்கள் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடினால் இதே பாசிசப் படைதான் அவர்களை ஒடுக்கவும் இறக்கிவிடப்படும்!
இச்சம்பவங்கள் ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடப்பதில்லை. பாசிச பயங்கரவாத வலைப்பின்னலை நாடு முழுவதும் வெற்றிகரமாக உருவாக்கி வைத்துள்ள காவி கும்பல் இதுபோன்ற நடவடிக்கைகளை மிக எளிதாகவும், வேகமாகவும் செய்கிறது. இந்த வலைப்பின்னல் காஷ்மீர் முதல் குமரி வரை, குஜராத் முதல் அசாம் வரை அனைத்து பகுதிகளிலும் வேரூன்றி வேலை பார்த்து வருகிறது என்பதனை நாம் நினைவில் கொள்ளவேண்டும். பாஜக எதிர்ப்பு மண், பெரியார் மண் என்று பீற்றிக் கொள்ளப்படும் தமிழகத்திலும் இத்தகைய படைகள் அதிவிரைவாக வளர்ந்துவருகின்றன. இத்தகைய படைகளை உருவாக்கவே தமிழகமெங்கும் தினந்தோறும் ஆர்.எஸ்.எஸ். 1400+ ஷாகா வகுப்புகளை நடத்தி வருகிறது! துப்பாக்கிப் பயிற்சி உள்ளிட்ட ஆயுதப் பயிற்சிகளை வழங்கி வருகிறது!!
பிற கட்சியினரும் கூடத்தான் குண்டர் படைகளை வைத்துள்ளனர், தமது கட்சியை, தலைவரை விமர்சிப்போரைத் தாக்குகின்றனர்; ஆனால் அதுவும் இதுவும் ஒன்றல்ல. நிதிமூலதனத்தையும் பாசிசத்தையும் எதிர்த்துப் போராடும் மக்கள், ஜனநாயக சக்திகளைக் கொன்றொழிக்க, ஆயுதமேந்தி இயங்கும் இரகசிய, அரை இரகசியப் படைகளான இப்பாசிசப் படைகள், சித்தாந்த ரீதியாக ஆயுதபானியாக்கப்பட்டவயாகும். தன் உடலின் ஒவ்வொரு அணுவிலும் பாசிச வெறியேற்றப்பட்ட படையாகும். “எங்கள் கையில் இருக்கும் ஆயுதங்கள் பெருமாள் கையிலிருக்கும் சக்கரம் போன்றவை; அவை அரக்கர்களை அழிப்பதற்கானவை” என்று கல்புர்கி, பன்சாரே, தபோல்கரைக் கொன்றொழித்த சனாதன் சன்ஸ்தாவினரின் வாக்குமூலமே இதற்கு சாட்சி!
அரக்கர்கள் என்று இவர்கள் வருணிப்பது நிதிமூலதனத்தின் நலன்களையும் பாசிசக் கும்பலின் இந்துராஷ்டிரக் கனைவையும் எதிர்க்கும் விவசாயிகள், தொழிலாளிகள், இளைஞர்கள், அறிவு ஜீவிகள் உள்ளிட்ட அனைவரையும்தான்! சுருங்கச் சொன்னால், இவர்கள் கூலிக்குக் கொலை செய்பவர்களல்ல, கொள்கைக்காகக் கொலைசெய்பவர்கள்!!
எனவே, இத்தகைய படையைப் பற்றி மக்களிடம் பிரச்சாரம் செய்வதும், இவர்களை எதிர்கொள்வதும், இதை எதிர்கொள்ளும் ஒரு கொள்கை, சித்தாந்த ரீதியிலான படையைக் கட்டியமைப்பதும், அல்லது அதற்கான ஆரம்ப கட்டப் பணிகளை மேற்கொள்வதும் இன்றைய சூழலில் ஒரு அமைதியான போராட்டத்தை நடத்தவே முன் நிபந்தனையாகியுள்ளது. இனி ஒவ்வொரு போராட்டத்தின் போதும் அதில் ஈடுபடுவோரைத் தாக்கவும் கொன்றொழிக்கவும் இப்பாசிசப்படை வரும். இவர்களை எதிர்கொள்ள நாம் முன் தயாரிப்போடு இல்லையென்றால், ஒரு அமைதிவழிப் போராட்டத்தைக்கூட நடத்த இயலாத சூழல் உருவாகியுள்ளது. சி.ஏ.ஏ. எதிர்ப்பு, டெல்லி விவசாயிகள், நீட் முறைகேடு எதிர்ப்பு ஆகிய போராட்ட அனுபவங்கள் நமக்குத் தெளிவாகக் கற்றுக் கொடுத்திருக்கும் ஒரு முக்கியமான பாடம் இதுவாகும்.
- கார்த்தி




