கல்வி வணிகமயமாவதை ஒழிப்பதே நீட்டை ஒழிக்கும் வழி – அரங்கக் கூட்டம் – செய்தி

நீட் தேர்வை ஒழிப்பதற்கு மாணவர்கள் மட்டுமல்லாமல், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து உழைக்கும் மக்களையும் ஒன்றிணைக்கும் பரந்த மக்கள் இயக்கம் அவசியம், அத்தகைய போராட்டத்தின் மூலமே கல்வி வணிகமயத்தையும் நீட்டையும் முறியடிக்க முடியும்.

கல்வி வணிகமயமாவதை ஒழிப்பதே நீட்டை ஒழிக்கும் வழி என்ற தலைப்பில் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு – தமிழ்நாடு, ஏற்பாடு செய்திருந்த அரங்கக் கூட்டம், ஆகஸ்டு 2ஆம் தேதி சென்னையில் வெற்றிகரமாக நடந்தது. நீட் தேர்வை ஒழிக்க வேண்டுமானால் கல்வி வணிகமயத்தை ஒழிக்க வேண்டும்; கோச்சிங் மையங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பன்னாட்டு கல்வி நிறுவனங்களின் ஆதிக்கமே நீட் முறைகேடுகளின் அடிப்படைக் காரணம் என அரங்கக் கூட்டத்தில் பல்வேறு தலைப்புகளில் பேசிய பேச்சாளர்கள் வலியுறுத்திப் பேசினார்கள்.

தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த, பேராசிரியர் கதிரவன், கூட்டத்தைத் தலைமையேற்று நடத்தினார். அவர் தனது தலைமை உரையில், நீட் அறிமுகமானது முதல் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், ஊழல் உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறினார். நீட் கல்வியை வணிகமயமாக்கி, கோச்சிங் மையங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளதாகவும், அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பாததால் மாணவர்கள் தனியார் பள்ளிகளை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மேலாண்மை ஒதுக்கீடு மூலம் கோடிக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், மருத்துவக் கல்வி தனியார்மயத்தை அரசுகள் ஊக்குவிப்பதாகவும் குற்றம்சாட்டினார். நீட் தேர்வு முறைகேடுகளைத் தடுக்க முடியாத நிலையில், நீட்டை முழுமையாக ரத்து செய்வதே ஒரே தீர்வு என்றும், அதற்காக மக்கள் தொடர்ந்து போராட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அவரை அடுத்து சிறப்புரையாற்றிய பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த பேராசிரியர் ரமேஷ், ஆளும் பாஜக அரசை எதிர்த்து மாணவர்கள் நடத்திய இந்தப் போராட்டம், இதுவரை தங்களது ஆட்சியில் நடந்த தவறுகள் எதற்கும் பொறுப்பேற்க மறுத்து வந்த அவர்களை இறங்கிவரச் செய்திருப்பதாகக் கூறினார். தற்போது நீட் தேர்வில் முறைகேடுகளைத் தடுப்பதாகக் கூறி ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் சட்டத்தைக் கொண்டு அதனைத் தடுக்க முடியாது என்பதை விளக்கினார். நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதிலிருந்து இன்றுவரை நடந்துள்ள பல்வேறு முறைகேடுகளைப் பட்டியலிட்ட அவர், தொடர்ந்து வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், தேர்வு மைய முறைகேடுகள் போன்றவை நடைபெறுவதற்கு நாடு முழுவதும் செயல்படும் கோச்சிங் மையங்களின் ஒழுங்கமைக்கப்பட்ட வலையமைப்பே காரணம் எனக் குற்றம்சாட்டினார். 2024 மற்றும் 2026 நீட் முறைகேடுகள், வினாத்தாள் கசிவு மற்றும் ஆள்மாறாட்டம் தொடர்பான பல சம்பவங்களை எடுத்துக்காட்டிய அவர், புதிய சட்டங்களும் குழுக்களும் இப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்றும், கோச்சிங் மையங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்வியின் வணிகமயத்தை கட்டுப்படுத்தாமல் முறைகேடுகளை தடுக்க முடியாது என்றும் கூறினார்.

தமிழ்நாட்டில் நடைபெறும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் நீட் தேர்வுக்கு நிகரான அளவிற்கு மாணவர்கள் தேர்வெழுதிய போதும் அந்தத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் ஏன் கசிவதில்லை எனக் கேள்வி எழுப்பிய அவர், நீட் தேர்வு மற்றும் மருத்துவக் கல்வியைச் சுற்றி எழுந்துள்ள மிகப்பெரிய வணிகச் சந்தைதான் கசிவுகளுக்கெல்லாம் காரணம் எனக் கூறினார். பத்தாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வளர்ந்துள்ள கோச்சிங் சந்தையில், பன்னாட்டு நிதிமூலதனத்துடன் இயங்கும் கோச்சிங் சென்டர்களுக்கு இடையிலான போட்டியின் காரணமாகத்தான் நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதாகக் கூறினார்.

இறுதியாக, நீட் முறைகேடுகளுக்கு அடிப்படைக் காரணமாக உள்ள கல்வி வணிகமயத்தை ஒழித்து, நீட் தேர்வை ரத்து செய்வதே நிரந்தரத் தீர்வாகும் என வலியுறுத்தினார்.

மக்கள் கல்வி கூட்டியக்கத்தின் பேராசிரியர் சிவகுமார் தனது உரையில், நீட் தேர்வு என்பது மருத்துவச் சேர்க்கை பிரச்சினை மட்டுமல்ல, மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் அரசியல் திட்டம் என்றும் கூறினார். கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டதன் விளைவாக மாநிலங்களின் அதிகாரம் பறிக்கப்பட்டதாகவும், ஒரே நாடு–ஒரே தேர்வு என்ற கொள்கை மொழி, கல்வி மற்றும் மாநில சுயாட்சிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும், கல்வி வணிகமயமாக்கல், கோச்சிங் மையங்களின் ஆதிக்கம் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் நுழைவு ஆகியவை மாநில உரிமைகளை மேலும் பலவீனப்படுத்துகின்றன என்றார். நீட் உள்ளிட்ட மையப்படுத்தப்பட்ட கல்விக் கொள்கைகளை எதிர்க்க மாநிலக் கட்சிகளும் ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து மாநில உரிமைக்கான வலுவான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பத்திரிக்கையாளர் தோழர் தேவா தனது உரையில், நீட் தேர்வு என்பது மருத்துவ மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு மட்டுமல்ல; கல்வியை முழுமையாக வணிகமயமாக்கும் பொருளாதாரக் கொள்கையின் ஒரு பகுதியாகும் என்று கூறினார். பன்னாட்டு கல்வி நிறுவனங்களின் நுழைவுக்கும், புதிய கல்விக் கொள்கை (NEP), ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுகள் மற்றும் கல்வித்துறையின் தனியார்மயத்துக்கும் நேரடி தொடர்பு இருப்பதாகக் கூறினார். காட்ஸ் ஒப்பந்தம் எவ்வாறு கல்வியை விற்பனைப் பண்டமாக மாற்றியது என்றும் இந்திய 2001ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சி தொடங்கி இன்றுவரை ஆட்சியாளர்கள் எவ்வாறு காட்ஸ் ஒப்பந்தத்திற்கு ஏற்ப நாட்டின் கல்விச் சூழலை மாறியமைத்தார்கள் என்பதை விளக்கினார்.

குறிப்பாக மோடி பதவியேற்ற பிறகு இது எவ்வாறு வேகமெடுத்தது, காட்ஸ் ஒப்பந்தத்தின் நிபந்தனைகளுக்கு ஏற்ப புதிய தேசியக் கல்விக் கொள்கை எவ்வாறு வடிவமைக்கப்பட்டது என்பதையும் விளக்கினார். கல்வியை சந்தைப் பொருளாக மாற்றும் நோக்கில் அரசு கல்வி நிறுவனங்கள் பலவீனப்படுத்தப்பட்டு, ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வுகள் திணிக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். நீட் தேர்வை ஒழிப்பதற்கு மாணவர்கள் மட்டுமல்லாமல், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து உழைக்கும் மக்களையும் ஒன்றிணைக்கும் பரந்த மக்கள் இயக்கம் அவசியம் என்றும், அத்தகைய போராட்டத்தின் மூலமே கல்வி வணிகமயத்தையும் நீட்டையும் முறியடிக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், நீட்டை ஒழிக்கக் கோரியும் மாணவர்கள் போராட்டம் நடந்த பிறகு, மிகக் குறுகிய காலத்திற்குள் இந்தக் கூட்டத்தினை பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்தது. கூட்டத்திற்கு மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள், பேராசிரியர்கள் எனத் திரளாக வந்து கலந்து கொண்டு இறுதிவரை அரங்கக் கூட்ட உரைகளை கவனித்தார்கள். நீட் எதிர்ப்பு போராட்டத்தை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஜனநாயக சக்திகள் இணைந்து தொடர வேண்டும் என்ற அழைப்புடன் அரங்கக் கூட்டம் நிறைவடைந்தது.

  • செங்கனல் பத்திரிக்கையாளர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன