கல்வி வணிகமயமாவதை ஒழிப்பதே நீட்டை ஒழிக்கும் வழி! – அரங்கக் கூட்டம்

நீட் தேர்வு என்பது, இந்திய உயர்கல்வியினை வணிகமயமாக்கித் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து கொள்ளையடிப்பதற்காக பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் திணித்துவரும் ‘கல்விச் சீர்திருத்தங்களின்’ (reforms) ஒருபகுதியாகும்.

கல்வி வணிகமயமாவதை ஒழிப்பதே
நீட்டை ஒழிக்கும் வழி!

அரங்கக் கூட்டம்
02.08.2026, ஞாயிறு., மாலை 4.30 மணி

இடம் :
மெட்ராஸ் கேரள சமாஜம் கட்டிடம், தாஷபிரகாஷ்,
நேருபார்க் மெட்ரோ அருகில்,
பூந்தமல்லிசாலை, சென்னை.


பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு – தமிழ்நாடு
Coordination Committee for Common Education (CCCE – TN)

📞 9551122884, 9489235387

அன்பார்ந்த மாணவர்களே, இளைஞர்களே, பெற்றோர்களே!

வினாத்தாள் கசிவுகள், நீட் முறைகேடுகளுக்கெதிராக தில்லியில் வெடித்த வீரஞ்செறிந்த மாணவர் போராட்டம், நாடெங்கும் பரவி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. 12 ஆண்டுகளாக எதற்கும் வாய்திறக்காத, பொறுப்பேற்காத பாசிச மோடி அரசு போராட்டத்திற்குப் பணிந்து, கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியுள்ளார். சுருங்கச் சொன்னால், உலகின் மிகப்பெரிய பாசிச சக்தியான மோடி கும்பல் முதன்முறையாக மாணவர்கள் முன் மண்டியிட்டு நிற்கிறது.

இவ்வெற்றி மகத்தானதுதான் என்றாலும், நீட் தேர்வு இரத்து செய்யப்படும் வரை இப்போராட்டத்தை நாம் தொடர வேண்டியுள்ளது. அதற்கு, முதலில் நீட் போன்ற உயர்கல்விச் சேர்க்கைக்கான ‘தேசிய அளவிலான போட்டித் தேர்வுகள்’ ஏன் கொண்டுவரப்பட்டன; இதன் பின்னால் யாருடைய நலன் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

நீட் தேர்வு என்பது, இந்திய உயர்கல்வியினை வணிகமயமாக்கித் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து கொள்ளையடிப்பதற்காக பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் திணித்துவரும் ‘கல்விச் சீர்திருத்தங்களின்’ (reforms) ஒருபகுதியாகும். உலகளவில், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இலாபத்தை அள்ளித்தரும் தொழிலாக இன்று கல்வி வியாபாரம் உள்ளது. இந்திய உயர்கல்வித்துறை பல இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சந்தையாக வளர்ந்துள்ளது. இச்சந்தையைத் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பன்னாட்டுக் கல்வி நிறுவனங்களும் நிதிமூலதனக் கும்பல்களும் துடிக்கின்றன. இதற்கு உலக வர்த்தகக் கழகம், உலகவங்கி உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களையும், காட்ஸ் போன்ற ஒப்பந்தங்களையும் பயன்படுத்துகின்றன.

‘கல்வியை பொதுச் சேவையாகவோ, அடிப்படை உரிமையாகவோ கருதக் கூடாது அதனை சந்தையில் விற்கப்படும் ஒரு பண்டமாகத்தான் பார்க்க வேண்டும்’ என்று காட்ஸ் ஒப்பந்தம் கூறுகிறது. இவ்வொப்பந்தத்தின் ஒரு அங்கமாக இந்தியா இருப்பதால், கல்வி குறித்த சட்டங்களும், கொள்கைகளும் இக்கண்ணோட்டத்திற்கு ஏற்பவே மாற்றியமைக்கப்படுகின்றன.

2015-ஆம் ஆண்டு உலக வர்த்தக கழகத்தின் நைரோபி மாநாட்டில் உறுதியளித்தபடி, காட்ஸ் ஒப்பந்தம் கோரிய சீர்திருத்தங்களை நிறைவேற்றும் வகையில், புதிய கல்விக் கொள்கையை (NEP) மோடி அரசு உருவாக்கியது. அதன்படி, உயர்கல்வியில் 100% அந்நிய முதலீட்டை அனுமதிப்பது; வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்காகச் சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்குவது; அரசுப் பல்கலைக் கழகங்களைத் ‘தன்னாட்சி’ நிறுவனங்களாக மாற்றுவது; நீட் போன்ற தேசிய அளவிலான ஒருங்கிணைந்த போட்டித் தேர்வுகளை நடைமுறைப்படுத்துவது – ஆகிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.

இந்திய உயர்கல்வியினை மாநில அரசுகளின் கீழ் இயங்கும் பல்கலைக் கழகங்களே கட்டுப்படுத்துகின்றன. இவை மாநில அரசின் நிதியிலிருந்து அந்தந்த மாநில மக்களின் தேவைகளுக்காக உருவாக்கப்பட்டவை. இவற்றின் அதிகாரத்தைப் பறித்தால்தான், இந்திய கல்விச் சந்தையில் பன்னாட்டு கல்வி வியாபாரிகள் நுழைய முடியும்.

ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தனித்தனியாக நுழைவுத் தேர்வு நடத்தும்போது அவற்றின் தன்னாட்சி பாதுகாக்கப்படும். அதுவே, நாடுமுழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு அமல்படுத்தப்படும்போது சேர்க்கைமுறை ஒரே மாதிரியாக்கப்படுகிறது. இதனால் தனியார் பல்கலைக் கழகங்களும் அதே மதிப்பெண்களைப் பயன்படுத்தி மாணவர்களை எளிதாக சேர்த்துக்கொள்ள முடியும். அதுமட்டுமன்றி, மாணவர் சேர்க்கை குறித்த அதிகாரமும் பல்கலைக் கழகங்களின் கையிலிருந்து பிடுங்கி ஒன்றிய அரசின் கைகளில் கொடுக்கப்படும்.

தற்போது மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதையே பொறியியல், உள்ளிட்ட எல்லா உயர்கல்விப் படிப்புகளுக்கும் விரிவுபடுத்த  வேண்டும் என புதிய கல்விக் கொள்கை கூறுகிறது. அதனைச் சாத்தியப்படுத்தவே கியூட் (CUET) போன்ற தேர்வுகள் திணிக்கப்படுகின்றன.  

மறுபுறம், நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் உருவாக்கியிருக்கும் கோச்சிங் சந்தை இன்று பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கார்ப்பரேட் வணிகமாக மாறியுள்ளது. இச்சந்தையைப் பிடிக்க பல்வேறு கோச்சிங் நிறுவனங்களும் தமக்குள் போட்டி போடுகின்றன. அதற்காகவே, அரசு எந்திரத்தையும் அரசியல்வாதிகளையும் தொடர்ச்சியாக ஊழல்படுத்தி, வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். எனவே, இத்தகைய ஊழல் முறைகேடுகளெல்லாம் தனிப்பட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகளின் தவறுகளால் மட்டும் நிகழ்வதல்ல. கோச்சிங் சந்தை பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்பதன் தவிர்க்கவியலாத விளைவுகளே! அமைச்சர்கள் பதவி விலகுவதோ, அதிகாரிகள் மாற்றப்படுவதோ ஒருபோதும் தீர்வைத் தராது!!

மொத்தத்தில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் பல்கலைக் கழகங்கள், அவற்றில் முதலீடு செய்திருக்கும் கல்வி முதலாளிகள், இவர்களின் நலனை முன்னிறுத்தும் உலக வர்த்தக கழகம் உள்ளிட்ட ஏகாதிபத்திய நிறுவனங்கள் – ஆகியவற்றின் கூட்டுதான் இந்தியாவின் கல்விக் கொள்கையைத் தீர்மானிக்கிறது. இத்தகைய மதயானைகளை எதிர்த்துதான் நாம் போராடுகிறோம்! நமது உண்மையான எதிரி ஒன்றிய மோடி அரசு மட்டுமல்ல, அதை ஆட்டிப் படைக்கும் மேற்கூறிய பன்னாட்டு முதலாளிகள்தான்!

நாம் யாரை எதிர்த்துப் போராடுகிறோம் என்பதுதான், நாம் எத்தகைய போராட்டத்தை நடத்த வேண்டும் என்பதையும் தீர்மானிக்கிறது. கல்வி கார்ப்பரேட்மயமாவதை எதிர்த்த மாபெரும் போராட்டங்களை நடத்தாமல், நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளை முறியடிக்க முடியாது.

வெல்லற்கரியது என்று பீற்றிக் கொள்ளப்பட்ட மோடி கும்பலை மண்டியிட வைத்த வீரஞ்செறிந்த போராட்டத்திற்குச் சொந்தக்காரர்கள் நாம். அதே உத்வேகத்தோடு, கல்வி வணிகமயமாவதற்கு எதிரான மகத்தான போராட்டங்களை முன்னெடுப்போம்! மதயானைகளைச் சிற்றெறும்புகள் வீழ்த்தும் கதையை மறுபடியும் இந்தியா பார்க்கட்டும்!!

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன