சமூக ஊடக ஒடுக்குமுறை : ஸ்டார் அரசியலின் நார்சிஸ்ட் மனநிலை
நேற்று வரை “கருத்துச் சுதந்திரம்”, “மக்களின் குரல்”, “அடக்குமுறைக்கு எதிரான அரசியல்” என்று மேடைகளில் உரக்கப் பேசிய விஜய், இன்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்த முதல் நாளிலேயே விமர்சன குரல்களை ஒடுக்க முயன்றிருப்பதன் மூலம் தனது உண்மை முகத்தைக் காட்டியிருக்கிறார். அரசியலுக்கு வந்தபோது தன்னை “மாற்றத்தின் முகம்” என்று விளம்பரப்படுத்தியவர், ஆட்சியினைக் கைப்பற்றி ஒரு நாள் முடிவதற்குள் தமிழ்நாடு போலீசின் சைபர் பிரிவைப் பயன்படுத்தி சமூக ஊடக பதிவுகளை அகற்ற முயற்சிப்பதன் மூலம், அவர் கூறிய அரசியல் கொள்கைகள் வெறும் தேர்தல் வசனங்கள் மட்டுமே எனக் காட்டியிருக்கிறார்.
தவெக குறித்தும் விஜயைப் பற்றியும் விமர்சித்ததாகக் கூறப்படும் எக்ஸ் தளப் பதிவுகளை நீக்குமாறு தமிழ்நாடு போலீசின் சைபர் கிரைம் பிரிவு எக்ஸ் தளத்தை நிர்வகிக்கும் எக்ஸ்-கார்ப் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பது சாதாரண நிர்வாக நடவடிக்கை அல்ல. அது ஒரு அரசியல் எச்சரிக்கை. “எங்களை விமர்சித்தால் உங்களது குரல்களை ஒடுக்குவோம்” என்ற அதிகார மொழி.
தேர்தல் காலத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தனது அரசியல் பிரச்சாரத்தைக் கட்டியெழுப்பிய விஜய், இன்று அதே சமூக ஊடகங்களில் எழும் எதிர் குரல்களைச் சகித்துக்கொள்ள முடியாமல் இருப்பது அவரது அரசியல் சகிப்புத்தன்மையின் உண்மையான அளவை வெளிப்படுத்துகிறது. நேற்று வரை “மக்களின் குரல்” என்று பேசியவர், இன்று “எதிர் குரல்” கேட்டவுடன் போலீசை அனுப்புகிறார்.
இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அந்த நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது என்றாலும், தற்போது சமூக ஊடகங்களில் அரசை விமர்சிப்பது கூட குற்றமாக்கப்படும் அபாயகரமான சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. அரசியல் நையாண்டி, மீம்கள், விமர்சன பதிவுகள் இவை எல்லாம் கருத்துச் சுதந்திரத்தின் இயல்பான பகுதிகள். ஆனால் அவற்றையே “பொது அமைதிக்கு ஆபத்து” என்று கூறி போலீசைப் பயன்படுத்தி ஒடுக்க முயற்சிப்பது, அதிகாரத்தின் ஆணவத்தை மட்டுமே காட்டுகிறது.
ஒரு தலைவரின் மீதான உண்மையான நம்பிக்கை, அவரைப் பாராட்டும் குரல்களை எப்படி நடத்துகிறார் என்பதில் இல்லை; அவரைக் கடுமையாக விமர்சிக்கும் குரல்களை எவ்வளவு பொறுத்துக்கொள்கிறார் என்பதில்தான் இருக்கிறது.
விஜயின் அரசியல் பயணத்தைக் கவனித்தவர்கள் ஒரு விஷயத்தைத் தெளிவாகக் கண்டிருப்பார்கள்: அது கொள்கை மைய அரசியல் அல்ல; முழுக்க முழுக்க “விஜய்” மைய அரசியல். அவரது கூட்டங்கள், பேரணிகள், பிரச்சாரங்கள் அனைத்தும் அவரை மட்டுமே சுற்றி கட்டப்பட்டிருந்தன. மக்கள் பிரச்சனைகள், நிர்வாகக் கொள்கைகள், பொருளாதாரத் திட்டங்கள் போன்றவை கடுகளவும் பேசப்படவில்லை; மக்கள் முன் நிறுத்தப்பட்டது ஒரு “பிம்பம்”. அந்தப் பிம்பத்தை உருவாக்கிய விதமும் சாதாரண அரசியல் நடைமுறை அல்ல; அது ஒரு சினிமா ஹீரோவின் ரசிக மனநிலையின் உச்சக்கட்ட உளவியலை அரசியலுக்குள் கொண்டு வந்த நடைமுறை.
பிரச்சார வாகனத்திற்குள் விஜய் அமர்ந்துகொண்டு, வாகனத்தின் விளக்குகளை மீண்டும் மீண்டும் அணைத்து ஏற்றி ரசிகர்களை உச்சக்கட்ட பரபரப்புக்குள் தள்ளிய காட்சிகள் இன்னும் மக்களின் நினைவில் இருக்கின்றன. அது ஒரு அரசியல் உரையாடல் அல்ல; அது ஒரு “ஸ்டார் தரிசனம்”. ஆயிரக்கணக்கான மக்கள் தனது வாகனத்தைப் பின்தொடர வேண்டும், தன்னைப் பார்த்துக் கத்த வேண்டும், தன்னைச் சுற்றி ஒரு மாபெரும் வெறி உருவாக வேண்டும் என்ற உளவியல் அதில் வெளிப்பட்டது. ஒரு தலைவராகப் பொதுமக்களுடன் உரையாட விஜய் விரும்பவில்லை; அவர் ஒரு நார்சிஸிஸ்ட்டாக கூட்டத்தின் ஆராதனையை விரும்பினார்.
கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த பிறகும் எந்த அடக்க மனப்பான்மையும் அவரிடம் தோன்றவில்லை. ஒரு சரியான தலைவர் அப்படிப்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிறகு தனது அரசியல் நிகழ்வுகளின் தன்மையை மறுபரிசீலனை செய்வார். கூட்ட வெறியைக் குறைக்க முயல்வார். ஆனால் விஜயின் அரசியல் பாணியில் எந்த மாற்றமும் காணப்படவில்லை. மக்கள் உயிரிழப்பும் கூட அவரது “விளம்பர வெறி” அரசியலை நிறுத்தவில்லை.
இன்று சமூக ஊடகங்கள் மீதான அடக்குமுறையை இந்தப் பின்னணியில் இருந்துதான் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் நார்சிஸிஸ்ட் அரசியலின் அடிப்படை குணம் என்னவென்றால், அது விமர்சனத்தைச் சகிக்காது. பாராட்டு வேண்டும். ஆராதனை வேண்டும். ஆனால் கேள்வி கேட்கும் குரல் வந்துவிட்டால், அதை எதிரியாகப் பார்க்கும். விஜயின் அரசியல் பயணம் முழுவதும் அவரை “தலைவர்”, “தளபதி”, “மாற்றத்தின் முகம்” என்று வழிபடும் ரசிகர் கலாச்சாரத்தின் மீது கட்டப்பட்டது. அந்த அமைப்புக்குள் விமர்சனத்திற்கு இடமே இல்லை. இப்போது அதிகாரம் கைக்கு வந்தவுடன் அதே மனநிலை அரசின் ஒடுக்குமுறையாக மாறத் தொடங்கியுள்ளது.
தவெகவையும், விஜயையும் விமர்சித்த சமூக ஊடக பதிவுகளை அகற்ற போலீசின் சைபர் பிரிவைப் பயன்படுத்தியது, அது ஒரு தனிமனித அரசியலின் மனநிலையை வெளிப்படுத்துகிறது. “என்னை விமர்சிக்க எப்படித் துணிகிறாய்?” என்ற அதிகார அகங்காரம் அதற்குள் இருக்கிறது. தேர்தல் காலத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மக்கள் மனதில் இடம்பிடித்தவர், இன்று அதே சமூக ஊடகங்களில் வரும் எதிர் கருத்துகளை அழிக்க முயற்சிப்பது சாமானிய முரண்பாடு அல்ல; அது அதிகாரம் பெற்ற நார்சிஸிஸத்தின் இயல்பான அடுத்த கட்டம்.
- சந்திரன்
