திருப்பரங்குன்றமும் சபரிமலையும்
நீண்ட இழுபறிக்குப் பிறகு நடிகர் விஜய் தமிழ்நாட்டு முதலமைச்சராகப் இன்று பதவியேற்கவிருக்கிறார். விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக் கட்டிலில் ஏறிய உடனேயே அவர் முகம் கொடுக்க வேண்டிய முக்கியப் பிரச்சனைகள் பல காத்துக்கொண்டிருக்கின்றன. பி.எம்.ஸ்ரீ. பள்ளிகள் மூலமாக மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் முயற்சி, நான்கு தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்புகளை அமல்படுத்துவது என ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் பாசிச சக்திகள் அடுத்தடுத்த தாக்குதல்களைத் தொடுக்கத் தயாராக இருக்கின்றன.
இவற்றில் முக்கியமானது திருப்பரங்குன்றம் பிரச்சனை. கடந்த ஆண்டு கார்த்திகை தீபத்தை ஒட்டி திருப்பரங்குன்றம் மலையின் மீது சிக்கந்தர் தர்காவிற்கு அருகில் இருக்கும் நில அளவைக் கல்லின் மீதுதான் தீபம் ஏற்ற வேண்டும் எனக் காவி பாசிச சக்திகள் போரடின. மதுரை உயர்நீதிமன்றத்தில் தங்களுக்குச் சாதகமான தீர்ப்பினை வாங்கி, தீபம் ஏற்றவும் முயற்சித்தனர். இதனை எதிர்த்து முந்தைய திமுக அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாலும் அவை தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கு விசாரணை கூடிய விரைவில் வரவிருக்கிறது.
தமிழ்நாட்டு அனுபவத்தைப் பொருத்தவரை தில்லைக் கோயிலை தீட்சிதப் பார்ப்பனர்களின் தனிச் சொத்தாக அங்கீகரித்ததிலும், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது கோயில்களின் ஆகம விதிக்கு உட்பட்டது என தீர்ப்பளித்ததிலும் உச்சநீதிமன்றம் என்றைக்கும் உச்சிக் குடுமி மன்றம்தான் என்பதும், அங்கே காவிக் கும்பலின் வாதம்தான் எடுபடும் என்பதும் தெள்ளத் தெளிவு. எனவே உச்சநீதிமன்றத்தில் திருப்பரங்குன்றம் வழக்கிற்குக் கொடுக்கப்படும் தீர்ப்பு என்பது நிச்சயமாக காவி பாசிச சக்திகளுக்கு ஆதரவானதாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
அவ்வாறு உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியானவுடன் த.வெ.க தலைவர் விஜய், சி.பி.ஐ., சி.பி.எம்., வி.சி.க, ஐ.யூ.எம்.எல் கட்சிகள் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது. அதன் மூலம் பாஜக தமிழகத்தில் காலுன்றிவிடும் அபாயம் இருக்கிறது என்ற காரணத்திற்காக மட்டுமே தங்களது ஆதரவை த.வெ.க.விற்கு கொடுத்துள்ளனர் என்பதை மனதில் கொண்டு மதவாத சக்திகளுக்குப் பணிந்து போகாமல், திருப்பரங்குன்றம் மலையின் மீது தீபம் ஏற்றுவதைத் தடுத்து நிறுத்துவாரா என்றால் நிச்சயமாகச் செய்யமாட்டார் என்பது தான் விஜயைப் பற்றிய கடந்த கால நடவடிக்கையின் மூலம் மக்களுக்குக் கிடைத்த அனுபவம். எனவே உச்சநீதிமன்றத் தீர்ப்பினைக் காரணம் காட்டி அவர் காவிக் கும்பல் மலையின் மீது தீபம் ஏற்றச் செல்வதை அனுமதிக்கவே செய்வார். அவரை வெளியிலிருந்து ஆதரிக்கும் சி.பி.ஐ., சி.பி.எம்., வி.சி.க., ஐ.யூ.எம்.எல் கட்சிகளும் எதுவும் செய்யாமல் வாய்மூடிக் கிடப்பார்கள் என்பது திண்ணம்.
ஏற்கெனவே திருப்பரங்குன்றத்தை மற்றுமொரு அயோத்தியாக மாற்றிக் காட்டுவோம் என சவால்விட்டுக் காத்திருக்கும் எச்.ராஜா கும்பல், மலையின் மீது அமைதியான முறையில் தீபம் ஏற்றுவார்களா என்றால் அவர்கள் கண்டிப்பாக சிக்கந்தர் தர்காவின் மீது தாக்குதல் நடத்துவார்கள். இதன் மூலம் திருப்பரங்குன்றத்திலும், மதுரையிலும் ஒரு மதரீதியான பிளவை உண்டாக்கி, மோதலைத் தூண்டுவார்கள். ஏனெனில் மதக் கலவரங்களின் மூலமாக மக்கள் மத்தியில் வேரூன்றுவதுதான் காவி பாசிஸ்டுகள் காலம் காலமாகப் பயன்படுத்திவரும் யுக்தி.
இது எல்லாம் எதிர்காலம் குறித்துக் கூறப்படும் ஆருடங்கள் அல்ல. கடந்த கால அனுபவங்களையும், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காவி பாசிச சக்திகள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளையும் தொகுத்துப் பார்க்கும்போது இதுதான் நடக்கும் என நாம் நிச்சயமாகக் கூறமுடியும். இன்றைய சூழலில் முற்போக்கு சக்திகள் இதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பதுதான் தற்போது முக்கிய கேள்வியாக இருக்கிறது.
திருப்பரங்குன்றம் பிரச்சனையை காவி பாசிஸ்டுகள் கையில் எடுத்த உடனேயே அதனைத் தடுத்து நிறுத்துவதாகக் கூறிக்கொண்டு அன்றைய திமுக அரசு, பிரச்சனையைச் சட்டவாதத்திற்குள் தள்ளும் வேலையைச் செய்தது. திருப்பரங்குன்றம் பகுதி மக்களுக்கோ அல்லது மதுரை மக்களுக்கோ திருப்பரங்குன்றம் மலையின் மீது தீபம் ஏற்றும் பிரச்சனை என்பது தேவையில்லாத பிரச்சனை என்ற கருத்துதான் இருந்தது. காவி பாசிச கும்பல் தங்களது அரசியல் நோக்கத்திற்காக வேண்டுமென்றே பிரச்சனை செய்கிறார்கள் என்றுதான் அப்பகுதி மக்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்து முன்னணி, திருப்பரங்குன்றத்தில் முருகன் மாநாடு நடத்திய போதும் கூட அதில் கலந்துகொண்டவர்களில், பெரும்பாலானவர்கள் மாநிலம் முழுவதிலிருந்து திரட்டி வரப்பட்டவர்கள்தான். உள்ளூர் மக்கள் அதிக அளவில் கலந்து கொள்ளவில்லை. உள்ளூர் மக்களின் இந்த நிலைப்பாட்டை காவி பாசிச சக்திகளின் அரசியலுக்கு எதிராக மாற்றியிருக்க வேண்டும். ஆனால் பாசிசத்தை எதிர்ப்பதில் முன்னணியில் நிற்கிறோம் என்று கூறிய திமுக உள்ளிட்ட ஓட்டுக் கட்சிகள் எதுவும் மக்கள் மத்தியில் அவர்களை அம்பலப்படுத்துவதற்கு ஒரு சிறு துரும்பையும் கிள்ளிப்போடவில்லை.
அதன் விளைவு இன்றைக்கு திருப்பரங்குன்றம் தொகுதியில் தவெக வேட்பாளரான சி.டி.ஆர். நிர்மல்குமார் வெற்றி பெற்றிருக்கிறார். தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் ஐ.டி. பிரிவுச் செயலாளராக இருந்தபோது இவர், உத்திரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்துத்துவக் காலிகளால் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டபோது இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக நின்றார். அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது அவதூறுப் பிரச்சாரம் செய்ததுடன், அவரது புகைப்படத்தையும் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டார்.
அதுமட்டுமல்லாமல் இது போல பல சம்பவங்களில், தமிழ்நாட்டில் காவி பாசிஸ்டுகள் முன்னெடுத்த எல்லா நிகழ்வுகளிலும் அவர் காவிக் கும்பலின் முகமாக, சமூக ஊடகங்களில் அவர்களது தாக்குதலைத் தலைமையேற்று நடத்தினார்.
இப்படிப்பட்ட ஒரு நபர் திருப்பரங்குன்றத்தில் போட்டியிடும்போது குறைந்தபட்சம் இவர் யார் என்பதையாவது திமுக உள்ளிட்ட கட்சிகள் அம்பலப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதனைச் செய்யவில்லை. விளைவு, மாற்றத்திற்காக விஜய்க்கு வாக்களிக்கிறோம் என நினைத்து வேட்பாளர் யார் என்று கூடப் பார்க்காமல் மக்கள் நிர்மல்குமாருக்கு வாக்களித்துவிட்டனர். தற்போது இவர் அமைச்சராகவும் ஆகவிருக்கிறார். திருப்பரங்குன்றத்தில் மக்கள் மத்தியில் காவிக் கும்பலுக்கு எதிராக திமுக உள்ளிட்ட ஓட்டுக் கட்சிகள் உருவாக்கியிருக்கும் ‘விழிப்புணர்வு’ இவ்வளவுதான்.
அவர்களைப் பொருத்தவரை மக்களை வெறுமனே பார்வையாளர்களாக வைத்துக்கொண்டு செயல்படுவதுதான். எங்களை நம்புங்கள் நாங்கள் காவி பாசிசத்தின் தாக்குதலில் இருந்து உங்களைக் காப்பாற்றுகிறோம். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் எங்களுக்கு ஓட்டுப்போட வேண்டியது மட்டுமே எனப் பிரச்சாரம் செய்தனர். அதனை மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டியிருக்கின்றன.
சரி தற்போது திமுக ஆட்சியில் இல்லை. இப்போது திருப்பரங்குன்றம் பிரச்சனையில் மலையில் தீபம் ஏற்ற காவி பாசிஸ்டுகளுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்தால் அதனை எவ்வாறு தடுப்பது? ஆட்சியில் இருக்கும் தவெக நிச்சயமாக எதுவும் செய்யாது. ஆட்சியை இழந்த திமுகவும் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கைதான் பார்க்கப் போகிறது. உழைக்கும் மக்களாகிய நாம் இவ்விஷயத்தில் என்ன செய்யப் போகிறோம்? கேரளத்தில் சபரிமலைப் பிரச்சனையின் போது காவி பாசிஸ்டுகள் என்ன செய்தார்கள் என்பதை இங்கே பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது.
2018-ஆம் ஆண்டில் சபரிமலையில் 10-50 வயதுடைய பெண்களை அனுமதிக்க வேண்டும் எனத் தொடரப்பட்ட ஒரு பொது நல வழக்கில், பெண்கள் சபரிமலைக்குச் செல்லலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து சில முற்போக்கு அமைப்புகளும் பெண்ணியவாதிகளும் சபரிமலைக்கு பெண்கள் செல்வதை ஆதரித்து அதனை நடைமுறைப்படுத்த முயற்சித்தனர். அப்போது கேரளத்தை ஆட்சி செய்த சி.பி.எம். அரசுக்குக் கொள்கை ரீதியாக இதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் உச்சநீதிமன்றத் தீர்ப்பினை நடைமுறைப்படுத்த முடியாதபடி ஆர்.எஸ்.எஸ். அங்கே முட்டுக்கட்டை போட்டது.
சபரிமலைக்குள் பெண்கள் செல்வதைத் தடுத்து நிறுத்துவதற்காக அம்மாநிலம் முழுவதிலும் மிகப்பெரிய அளவிற்குப் பிரச்சாரத்தை முன்னெடுத்தது. பல பத்தாயிரம் பேரைத் திரட்டி சபரிமலையை முற்றுகையிட்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பை கேரள அரசு நடைமுறைப்படுத்த முடியாதபடிச் செய்தது. இன்னும் சொல்லப்போனால் இந்தப் பிரச்சனையை வைத்துத்தான் கேரள மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ். வலுவாகக் காலூன்றியது.
நாமும் இங்கே அதைத்தான் செய்ய வேண்டியிருக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பினை அமல்படுத்த முடியாதபடிக்கு முட்டுக் கட்டை போட்டால் மட்டுமே திருப்பரங்குன்றத்தில் காவி பாசிஸ்டுகளை முறியடிக்க முடியும். காவி பாசிஸ்டுகளின் கலவர அரசியலை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு எதிராகப் போராடி முறியடிக்க, மக்களை அணிதிரட்டவும் வேண்டியிருக்கிறது.
இது திருப்பரங்குன்றம் பிரச்சனையில் மட்டுமல்ல, புதிய கல்விக் கொள்கை, நான்கு தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்புகளை அமல்படுத்துவது எனக் காவி பாசிச சக்திகள் மேலிருந்து தொடுக்கும் ஒவ்வொரு தாக்குதலில் இருந்தும் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள திமுக வரும், காங்கிரஸ் வரும், நாளையிலிருந்து த.வெ.க-வும் வரும் என இனியும் காத்திருக்க முடியாது. காவி பாசிஸ்டுகளை உழைக்கும் மக்களாகிய நாம்தான் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்.
- அறிவு

