தமிழ்நாட்டு மக்கள் ஏன் விஜயைத் தேர்ந்தெடுத்தார்கள்?
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, நடிகர் விஜய் அடுத்த முதல்வராகப் பதவியேற்கவிருக்கிறார். இந்தத் தேர்தலில் தாங்கள் தான் வெற்றி பெறுவோம் என நம்பியிருந்த திமுக, அதிமுக கட்சிகளுக்கு விஜயின் தவெக 108 இடங்களில் வெற்றிபெற்றிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியைத் தந்திருக்கிறது என்று கூறுவதை விட, நடிகர் விஜய்க்கே இது நம்பமுடியாத அதிர்ச்சியைத் தந்திருக்கிறது என்றுதான் கூற வேண்டும். தன்னுடைய கட்சிக்குத் தமிழ்நாட்டு மக்கள் இவ்வளவு பெரிய ஆதரவைத் தருவார்கள் என அவர் நிச்சயமாக நினைத்திருக்க மாட்டார்.
விஜயின் இந்த வெற்றிக்குக் காரணம் என்ன என்று பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டு விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. திமுகவின் ஆதரவு பெற்ற ஊடகங்கள், சமூக ஊடகங்கள், யூடியூப் சேனல்களில், தமிழக மக்கள் விஜயின் கதாநாயகப் பிம்பத்தைக் கண்டு ஏமாந்துவிட்டார்கள் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். தங்களது தோல்விக்கான காரணத்தைப் பரிசீலிக்கிறோம் என்ற பெயரில், “நாம் தமிழ்நாட்டை அரசியல் ரீதியில் முற்போக்கு மாநிலமாகப் பார்த்தது தவறு. வடநாட்டில் மோடியின் முகத்தைப் பார்த்து பாஜகவிற்கு வாக்களித்தது போல, இங்கே விஜயின் முகத்தைப் பார்த்து தவெகவிற்கு வாக்களித்துள்ளனர்” என்று கூறுகிறார்கள்.
தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது, மக்கள் தங்களது தொகுதியில் யார் வேட்பாளர்களாக நிற்கிறார்கள் என்று கூடப் பார்க்காமல் ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். தேர்தல் பிரச்சாரத்திற்கு விஜய் வராத பகுதிகளிலும் கூட ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். தேர்தல் அறிவிப்பு வருவதற்குப் பல நாட்களுக்கு முன்னதாகவே பிரச்சாரத்தைத் தொடங்கி, நூற்றுக்கணக்கான தொகுதிகளுக்கு நேரடியாகச் சென்று பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுக 101 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. அதற்கு நிகராக மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்த திமுகவும் படுதோல்வி அடைந்திருக்கிறது. ஆனால் தேர்தல் பிரச்சாரத்திற்காக வீட்டைவிட்டு வெளியே வராத, மொத்தமாகவே 15 நாட்களுக்கும் குறைவாகப் பிரச்சாரம் செய்த விஜய்க்கு மக்கள் ஆதரவளித்திருக்கின்றனர்.
திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்குத் தேவையான அமைப்பு பலத்தைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 15 முகவர்களை நியமித்ததுடன், மொபைல் செயலி மூலமாக அவர்களை ஒருங்கிணைத்து திமுகவிற்கு வாக்குகள் பதிவாவதை உறுதி செய்யும் அளவிற்குக் கட்டமைப்புப் பலம் இருக்கிறது. ஆனால் முறையான பூத் ஏஜெண்டுகள் கூட இல்லாமல், கட்சி நிர்வாகிகள் இல்லாமல், தேர்தல் பிரச்சாரத்தின் போது தங்களது தொகுதியின் எல்லை என்னவென்றே தெரியாமல் பக்கத்துத் தொகுதியில் சென்று வாக்குக் கேட்ட வேட்பாளர்களைக் கொண்ட கட்சியாக தவெக தேர்தலை எதிர்கொண்டது. இருந்தும் மக்கள் தவெகவிற்கு வாக்களித்திருக்கின்றனர்.
இதையெல்லாம் ஜீரணிக்க முடியாத திமுக ஆதரவாளர்கள், “விஜயின் கதாநாயகப் பிம்பத்தைப் பார்த்து வாக்களித்துவிட்டார்கள்; நன்றாக நடனமாடுகிறார், நன்றாக நடிக்கிறார் என்று அவரைத் தேர்ந்தெடுத்துவிட்டார்கள்” என மக்கள் மீது வசைபாடுகின்றனர். “மக்களை நேரடியாகச் சந்திக்காத விஜய், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மக்கள் முன் நடித்தார். விர்ச்சுவல் வாரியர்ஸ் என்ற பெயரில் கூலிக்கு ஆள் அமர்த்தி, தனது ஐ.டி. விங் மூலமாக மக்களை ஏமாற்றினார். தங்களது பெற்றோர் விஜய்க்கு வாக்களிக்க வேண்டும் என அடம் பிடிக்குமாறு சிறு குழந்தைகளைத் தூண்டிவிட்டார். இதற்கெல்லாம் பலியாகி மக்கள் விஜயைத் தேர்ந்தெடுத்துவிட்டனர்” என்று கூறுகிறார்கள்.
தமிழ்நாட்டு மக்களுக்காக கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பல திட்டங்களைக் கொண்டு வந்து, நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திய திமுகவிற்கு தமிழக மக்கள் துரோகம் செய்துவிட்டதாகச் சாடுகின்றனர். இதற்கான விலையை தமிழக மக்கள் விரைவில் கொடுக்க வேண்டியிருக்கும் என்று சாபம் விடுகின்றனர்.
இது ஒருபக்கம் என்றால், மற்றொரு பக்கம் விஜய் துதிபாடும் கூட்டமோ, “இது தங்களது தலைவரின் ‘உழைப்புக்கு’ கிடைத்த வெற்றி. மக்களுக்காக ‘அனைத்தையும்’ விட்டுவிட்டு வந்த விஜயை மக்கள் ஆதரித்திருக்கின்றனர். தனக்கு எதிராக திமுக, அதிமுக, பாஜக என எல்லாக் கட்சிகளும் சேர்ந்து வகுத்திருந்த வியூகங்கள் அனைத்தையும் விஜய் உடைத்தெறிந்திருக்கிறார். நடிகர் விஜய், தவெக எனும் கட்சியைத் தொடங்கிய போதே, இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றிட வேண்டும் என்ற நோக்கத்துடன் திட்டமிட்டுக் காய் நகர்த்தினார். மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சிகள் எத்தனை தடைகள் ஏற்படுத்தினாலும், அவற்றை முறியடித்து வெற்றி வாகை சூட வேண்டும் என உறுதியாகப் போராடிய விஜயின் அரசியலுக்குக் கிடைத்த வெற்றி இது” என்று பிரச்சாரம் செய்கின்றனர்.
விஜயின் வெற்றிக்குக் காரணமாக அவரது ஆதரவாளர்களால் கூறப்படுவது முற்றிலும் அபத்தமானது என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தான் கட்சி ஆரம்பித்த தினம் முதல் இன்றுவரை மக்கள் பிரச்சனைகள் குறித்து விஜய் எதுவுமே பேசியதில்லை. “மாலை ஆறு மணிக்குமேல் பிரச்சாரம் செய்ய மாட்டேன்; மக்களைச் சந்திக்க மாட்டேன்” எனப் பிடிவாதம் பிடிப்பவர் விஜய். கரூரில் 41 பேர் இறந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தபோது, அதற்கு முகம் கொடுக்கப் பயந்துகொண்டு ஒரு வாரம் வீட்டிற்குள் பதுங்கியிருந்தவர். தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடந்த ஆணவப் படுகொலைகள், சாதிவெறித் தாக்குதல்கள், காவி பாசிஸ்டுகளால் தூண்டப்பட்ட திருப்பரங்குன்றம் பிரச்சனை என தமிழக மக்களைப் பாதித்த எந்தவொரு பிரச்சனைக்கும் குரல் கொடுக்காதவர். இவ்வளவு ஏன், தனது ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகாமல் தடுக்கப்பட்ட போதும் கூட, அதற்கு எதிராகப் பேசத் துணியாதவர். இப்படிப்பட்ட நபர் “திமுக, அதிமுக, பாஜக என எல்லாக் கட்சிகளும் சேர்ந்து வகுத்திருந்த வியூகங்கள் அனைத்தையும் உடைத்தார்” எனக் கூறுவதை யாரும் நம்ப மாட்டார்கள்.
ஆனால் விஜயின் இந்தப் பலவீனங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் அம்பலமாகிவிட்டன. இருந்தும் மக்கள் ஏன் அவருக்கு வாக்களித்தனர்? திமுக ஆதரவாளர்கள் கூறுவது போல, அவரது கதாநாயகப் பிம்பத்தைப் பார்த்து அவருக்கு வாக்களித்த கூட்டம் ஒன்று இருக்கிறது. ஆனால் அது ஒரு சிறு கூட்டம் மட்டுமே. இத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பது, அதுவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட நட்சத்திரப் போட்டியாளர்கள் பலரும் முகம் தெரியாத தவெக வேட்பாளர்களிடம் தோல்வியைத் தழுவியிருப்பது ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, விஜயின் கதாநாயகப் பிம்பத்தைத் தாண்டி அவரைத் தேர்ந்தெடுத்திருப்பதற்கு நிச்சயமாக வேறு காரணங்கள் இருக்க வேண்டும்.
திமுக தனது பிரச்சாரம் முழுவதையும் தங்களது திட்டங்களை முன்னிறுத்திக் கொண்டு சென்றது. தங்களது ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையை உயர்த்தியிருப்பதாக அது பிரச்சாரம் செய்தது. ஆனால் அது உண்மையில்லை என்பது மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். இவர்கள் “வளர்ச்சி, வளர்ச்சி” என மார்தட்டுவதெல்லாம் வெறும் காகிதத்தில் உள்ள புள்ளிவிவரங்கள் மட்டுமே. “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்று கூறுகிறார்கள், ஆனால் கல்வி தனியார்மயம் ஆனதால், மக்கள் தங்களது குழந்தைகளின் படிப்புக்காக வாழ்நாள் முழுவதும் கடனாளியாக இருக்க வேண்டியிருக்கிறது. இலட்சக் கணக்கில் கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு, “கல்விக்கு உதவியதாக” தம்பட்டம் அடிக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் குடும்பங்களில் 80 சதவீத குடும்பங்களால் திடீரென ஏற்படும் சுகாதாரச் செலவுகளை ஈடுகட்ட முடியாத நிலையே இருக்கிறது. குடும்பத்தில் யாராவது ஒருவர் நோய்வாய்ப்பட்டுவிட்டால், அந்தக் குடும்பத்தின் மொத்த சேமிப்பும் கரைந்து, அவர்கள் கடன் வாங்க வேண்டிய அளவிற்கு மருத்துவச் செலவுகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளைக்கு வரம்பே கிடையாது. அவர்களுக்குக் கொடுக்கப் பணம் இல்லாமல், வேறு வழியில்லாமல்தான் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் அரசு மருத்துவமனைகளுக்கு மக்கள் செல்கிறார்கள்.
வெளிநாட்டிலிருந்து இத்தனை ஆயிரம் கோடிகளுக்கு மூலதனத்தை ஈர்த்துவிட்டோம், மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிவிட்டோம் எனத் தம்பட்டம் அடிக்கிறார்கள். ஆனால் சொற்ப கூலிக்கு ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே இன்றைய தமிழ்நாட்டு இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் பணியாற்றி வருகின்றனர். ஸ்விகி, ஜொமோட்டோ, ஓலா என புதிதாக உருவாகியிருக்கும் கிக் வேலைவாய்ப்புகள் இளம் தொழிலாளர்களுக்கு வாய்ப்பாக இருந்தாலும், அதிலிருந்து கிடைக்கும் வருமானம் ஒரு குடும்பத்தை நடத்துவதற்குப் போதுமானதாக இருப்பதில்லை. இதன் காரணமாகவே கிக் தொழிலாளர்களுக்குப் பெண் கொடுக்கக் கூட யாரும் இங்கே தயாராக இல்லை.
அதிகரித்து வரும் விலைவாசி, கல்விக் கட்டணங்கள், மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க வேண்டுமென்றால், ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளைச் செய்தால் மட்டுமே வாழ்க்கையை நகர்த்த முடியும் என்ற சூழலில் இளைஞர்களில் பலரும் இருக்கின்றனர். பகலில் கான்டிராக்ட் வேலை, இரவில் கிக் வேலை என்றே அவர்களது வாழ்க்கை நகர்கிறது.
சிறு, குறு தொழில் செய்பவர்களது நிலைமையோ இதைவிட மோசமாக இருக்கிறது. வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட வேண்டும், தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுக்க வேண்டும் என இருக்கும் பிரச்சனைகள் போதாதென்று, ஆண்டுக்கு ஒருமுறை அதிகரிக்கப்படும் மின்சாரக் கட்டணமும் சேர்ந்துகொண்டு சிறு, குறு முதலாளிகளைத் தற்கொலையின் விளிம்பில் நிறுத்தியிருக்கிறது. வாய்ப்புக் கிடைத்தால் தங்களது தொழிலை மூடிவிட்டு ஓடிப்போய்விட வேண்டும் என்ற நிலையில்தான் பெரும்பாலான சிறு, குறு முதலாளிகள் இருக்கின்றனர்.
இவையெல்லாம் கடந்த முப்பது ஆண்டுகளாக நம்மை ஆட்சி செய்த காங்கிரஸ், பாஜக, அதிமுக, திமுக என எல்லாக் கட்சிகளும் அமல்படுத்திய தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் புதிய பொருளாதாரக் கொள்கைகள் ஏற்படுத்தியிருக்கும் விளைவுகள். ஆனால் இவற்றையே சாதனைகளாகக் காட்டி மக்களிடம் ஓட்டுக் கேட்கிறார்கள்.
இந்த நிலை மாற வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். ஆனால் எவ்வாறு மாற்றுவது என அவர்களுக்கு வழி தெரியவில்லை. அவர்களுக்குச் சரியான வழியைச் சுட்டிக்காட்டவும் யாரும் இல்லை. மக்களின் விடுதலையைப் பேசுகின்ற அரசியல் நிறுவனங்கள் அனைத்தும் இன்றைக்குச் செயலிழந்துவிட்டன. தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடுகின்ற தொழிற்சங்கங்கள் இன்றைக்கு கூலி உயர்வுக்குப் பேரம் பேசும் இடைத்தரகர்களாகச் சீரழிந்துவிட்டன. இவ்வாறு தொழிற்சங்க இயக்கம் சீரழிந்து போனதற்கு சி.பி.ஐ., சி.பி.எம். போலிக் கம்யூனிஸ்டுகள் மிக முக்கிய காரணமாக இருக்கின்றனர்.
மக்களுக்காகப் போராடுகிறோம் என்று கூறிக்கொண்டிருந்த போலிக் கம்யூனிஸ்டுகள், திமுகவின் ஊழல்களுக்கு முட்டுக் கொடுக்கும் வேலையை மட்டுமே இத்தனை ஆண்டுகளாகச் செய்து வந்தனர். சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம், துப்புரவுத் தொழிலாளர் போராட்டம், இடைநிலை ஆசிரியர் போராட்டம் என அடுத்தடுத்து தொழிலாளர்கள் மீது திமுக அரசு கொடூரமான ஒடுக்குமுறையை ஏவிய போதும், அதனை எதிர்த்து நிற்காமல் திமுகவிற்குத் துணையாக நின்றனர்.
தொழிற்சங்க இயக்கம் இவ்வாறு காயடிக்கப்பட்டது என்றால், மாணவர் இயக்கமோ காணாமல் அடிக்கப்பட்டுவிட்டது. லிங்டோ கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில், கல்லூரிகளுக்கு அரசியல் இயக்கங்கள் நுழைவதைத் தடைசெய்வது தொடங்கி மாணவர் சங்கத் தேர்தல் நடத்துவதைக் கைவிடுவது வரை பல்வேறு அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. மாணவர்கள் மத்தியில் அரசியல் பரப்புரை செய்வதும், அவர்களை அணிதிரட்டுவதும் சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மாணவர்களை அரசியல்படுத்தும் முயற்சிகள் அனைத்தும் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டன. அதுமட்டுமின்றி, “படிக்கும் மாணவர்களுக்கு அரசியல் எதற்கு? நீ படித்து உனது குடும்பத்தைப் பார்” என்ற பிழைப்புவாதம் மாணவர்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றும் வகையில் பிரச்சாரம் செய்யப்பட்டது.
இவ்வாறு மக்களை அரசியல்படுத்தும் நிறுவனங்கள் எதுவும் இல்லாத நிலையில், எது மாற்று எனச் சிந்திக்கவும், அதனைத் தேர்வு செய்யவுமான வாய்ப்புகள் அற்றுப்போய்விட்டன. இதன் காரணமாகத் தமிழ்நாட்டு மக்கள், “இந்தக் கஷ்டங்களில் இருந்து தங்களை யாராவது கரை சேர்த்துவிட மாட்டார்களா? தங்களைக் காப்பாற்றிவிட மாட்டார்களா?” என்று காத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
திமுக, அதிமுக என இருக்கும் கட்சிகளை நம்பி மாறி மாறி வாக்களித்து ஏமாந்துகொண்டிருக்கிறோம் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இந்தக் கட்சிகளைச் சேர்ந்த சாதாரண வார்டு கவுன்சிலர் கூட ஓரிரு ஆண்டுகளில் பல நூறு கோடிகளுக்கு அதிபதியாக வலம் வருவதை, தங்களது கண்முன்னே நடப்பதைத் தினந்தோரும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
ரோடு கான்டிராக்டில் கொள்ளை, ஆற்று மணல் கொள்ளை, கிரானைட் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளை என அரசியல்வாதிகள் பல ஆயிரம் கோடிகளைக் கொள்ளையடித்துவிட்டுத் தங்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாயை வீசி எறிகிறார்கள் என்பதையும், அந்த ஆயிரம் ரூபாயும் கூட ராக்கெட் வேகத்தில் ஏறிவரும் விலைவாசி உயர்விலிருந்து தப்பிக்கப் போதுமானதாக இல்லை என்பதையும் மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
ஆனால் இதிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என மக்களுக்குத் தெரியவில்லை; யாரை நம்புவது எனப் புரியவில்லை. தங்களது கஷ்டங்களைத் தீர்க்கவும், அதிலிருந்து தங்களை விடுவிக்கவும் யாராவது வருவார்களா என எதிர்பார்த்திருந்தனர். அதன் விளைவைத்தான் நாம் இன்றைக்கு 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் அவர்கள் ஏன் விஜயை ஒரு மாற்றாகக் கருத வேண்டும்? விஜய் தனது எந்த வாக்குறுதியிலும் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வளிப்பதாக உறுதி கூறவில்லை. திமுக, அதிமுக கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளைப் பிரதியெடுத்து, அவர்களைப் போலவே “மாதாமாதம் பணம் கொடுக்கிறேன், இலவச சிலிண்டர் கொடுக்கிறேன்” என்றுதான் கூறியிருக்கிறார். அப்படியிருந்தும் ஏன் மக்கள் விஜயைத் தேர்ந்தெடுத்தார்கள்?
மாற்றம் தான் தேவை என்றால், மக்கள் ஏன் சீமானை ஆதரிக்கவில்லை? 2016 தேர்தலில் ஏன் மக்கள் நலக் கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை? கமலஹாசனுக்கு வாக்களிக்கவில்லை?
அங்கேதான் நடிகர் விஜய்க்குக் கொடுக்கப்பட்ட ஊடக வெளிச்சம் வருகிறது. சீமானுக்கும், கமலஹாசனுக்கும், மக்கள் நலக் கூட்டணிக்கும் கொடுக்கப்படாத ஊடக வெளிச்சம் நடிகர் விஜய்க்குக் கொடுக்கப்பட்டது. ஆனந்த விகடன் பத்திரிகைதான் விஜயின் முதல் அரசியல் மேடையை அமைத்துக் கொடுத்தது. அன்று தொடங்கி இன்று வரை விஜய்யை ஊடகங்கள் அனைத்தும் தொடர்ந்து ஒரு பெரிய அரசியல் சக்தியாகக் காட்சிப்படுத்தி வருகின்றன.
ஊடகங்கள் விஜயின் பிரச்சாரங்களுக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்தன. அவர் தூங்கி எழுந்தது, பல் துலக்கியது முதல் பிரச்சாரத்திற்குக் கிளம்பியது வரை நேரலையில் ஒளிபரப்பினார்கள். கரூர் சம்பவத்திற்குப் பிறகு தனது வீட்டிற்குள் பதுங்கிக்கிடந்த விஜயை அம்பலப்படுத்துவதற்குப் பதிலாக, ஊடகங்கள் அனைத்தும் அவரது வீட்டு வாசலில் விஜயின் தரிசனத்திற்காகக் காத்துக்கிடந்தன. விஜய்க்குக் கொடுக்கப்பட்ட ஊடக வெளிச்சத்தில் நூற்றில் ஒரு பங்கு கூட, தங்களை மாற்றுச் சக்திகளாக முன்னிறுத்திக்கொண்ட சீமானுக்கும், கமலஹாசனுக்கும் கொடுக்கப்படவில்லை. மொத்தத்தில், ஊடகங்கள் அனைத்தும் விஜயை “மக்களை இரட்சிக்க வந்த மீட்பராக”த் தமிழக மக்களிடம் கொண்டு சேர்ப்பதை வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கின்றன.
தினம் தினம் கீழ்நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தங்களுடைய வாழ்க்கை நிலையை மாற்றியமைத்திட, தமது சொந்தக் கரங்களால் போராட முடியாதபடி, தமிழ்நாட்டு மக்களின் கைகளை ஆளும் வர்க்கம் கட்டிப்போட்டுள்ளது. இந்நிலையில், அரசியல்மயப்படாத மக்கள், திடீரெனத் தோன்றும் ஒருவரை தன்னை மீட்கும் மீட்பராகக் கருதுவதில் வியப்பில்லை. ஏற்கெனவே நடிகர் விஜய்க்கு இருக்கும் நட்சத்திர பிம்பமும், கூடுதலாக கிடைத்திருக்கும் ஊடக ஆதரவும் அதனை நிலைநாட்ட உதவியிருக்கிறது. தமிழக மக்கள் நடிகர் விஜயைத் தேர்ந்தெடுத்திருப்பதற்கான காரணம் இதுதான்,
விஜயின் வெற்றியை கதாநாயக பிம்பத்திற்கு மக்கள் ஆட்பட்டுவிட்டார்கள் எனச் சுருக்கிப் பார்க்க முடியாது. பல பத்து ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் தேங்கிக்கிடக்கும் சமூக-பொருளாதார விரக்தியின் அரசியல் வெளிப்பாடாகவே இதனைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
மக்களின் எதிர்பார்ப்புகளை நடிகர் விஜய் நிறைவேற்றுவாரா என்றால், நிச்சயம் இல்லை என்றுதான் கூற முடியும். தனது சொந்த நலனுக்காகக் கூடப் போராட முன்வராதவர், மக்கள் நலனுக்காக தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தை எதிர்த்துப் போராடி மாற்றம் கொண்டுவருவார் என எப்படி நம்புவது? சினிமாப் படத்தின் டிக்கெட் விலையை ஆயிரக்கணக்கில் உயர்த்தி, பிளாக்கில் விற்றுத் தனது ரசிகர்களிடமிருந்து கொள்ளையடிக்கும்; தன்னைக் கடவுளாகக் காணும் ரசிகர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு இன்பம் காணும் நார்சிஸ்டான விஜய், மக்களின் வாழ்நிலையை மாற்ற வேண்டும் என எப்போதும் சிந்திக்கப் போவதில்லை. மக்கள் அரசியல்படுத்தப்படாத வரை, உண்மையான மாற்று என்ன என்று அவர்கள் உணராத வரை, அந்த மாற்றின் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படாத வரை, விஜய்கள் தோன்றிக்கொண்டுதான் இருப்பார்கள்.
- அழகு

விஜயை மக்கள் தேர்ந்தெடுக்க வெறும் ரசிக மனப்பான்மையும், பிரபலம் என்கிற தகுதி மட்டும் இல்லை… இந்த சமூகத்தில் ஏற்கனவே ஆண்ட கட்சிகளும், பொருளாதார கொள்கையும் மக்களை வாழமுடியாது சூழலுக்கு கொண்டுவந்து அதில் இருந்து எப்படியாவது வெளிவந்துவிட வேண்டும் என்று தவிப்பும் ஏக்கமும் கொண்ட மக்கள் விஜய் தேர்ந்தெடுத்து உள்ளார்கள் அதற்கு ஊடகமும் பெரும் பங்கு ஆற்றி உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி இதோடு உழைக்கும் மக்கள், இளைஞர்கள், மாணவர்கள், சமூக மாற்றத்தை உண்மையிலே விரும்ப கூடியவர்கள் எந்த பாதையில் செல்ல வேண்டும் எது உண்மையான மாற்று என்பதை விளக்கி இருந்தால் தீர்வை சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாகனிறும் இருக்கும். ( செங்கனலை தொடர்ந்து படிப்பவர்களுக்கு என்ன தீர்வு என்று தெரியும்… புதியவராக விஜய் அரசியல் குறித்து தெரிந்து கொள்ள வருகூடியவர்கள் இதை படிக்கும் பொழுது இப்படி ஒரு மாற்று உள்ளது என்பதை தெரிந்து கொள்ள.. அதை பற்றி தொடர்ந்து அறிந்து கொள்ள வசதியாக இருந்திருக்கும் என்பது என்னுடைய கருத்து)